செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

உச்சத்தை அடைகிறது உணர்வு போராட்டம்!

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதிகளாகவே தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளில் பல்லாண்டுகாலமாக வாடிவரும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் குறிப்பாக பத்தாண்டுகள் கழித்துவிட்ட அனைவரையும் எதிர்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளின்போது பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டுமென்கிற கோரிக்கையை வலியுறுத்தி இன்றைக்கு தமிழகம் முழுவது இஸ்லாமிய சமுதாய அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் போராடி வரக்கூடியதை அறிவீர்கள்... இன்றைய‌ எழுச்சிக்கான விதை மார்ச் மாதம் 30 நாள் திருப்பூரில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தால் விதைக்கப்பட்டது... எப்போதுமில்லாத வகையில் இந்த நியாயமான கோரிக்கை இப்போது பரவலாக அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சட்டங்களால் நீதி மறுக்கப்படும்போது மக்கள் எழுச்சியே அதனை மாற்றியமைக்க இயலும் என்பதற்கு பல்வேறு உதாரணகள் உண்டு. சட்டங்கள் சாமானிய மக்களுக்கு சாத்தியமாக வேண்டுமென்பதுதான் ஜனநாயகம். ஆனால் இன்றைக்கு நாம் போராடி வரக்கூடிய கைதிகளுக்கு, சட்டம் தொடர்ந்து நீதியை வழங்க மறுத்து வருகிறது என்பதுதான் நிதர்சனம். நாம் வாழக்கூடிய நாட்டில் எல்லாமுமே அரசியலாகிவிட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்ரீதியாக பழி வாங்கப்படுகிறார்கள். கோவை கலவரத்தை காரணமாகக் கொண்டு கைது செய்யப்பட்ட பல அப்பாவிகள் இன்றைக்கு சுமார் பதினான்கு ஆண்டுகாலமாக சிறைக்கொட்டடிகளில் தங்களின் இளைமையை இனிமையான வாழ்க்கையை தொலைத்துவிட்டு நடைபிணங்களாக தங்களின் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் இம்மக்களை விடுவிக்க அரசின் கவனத்தை ஈர்க்க பொதுமேடையை அமைத்தது. இதில் மதமில்லை... சாதியில்லை... அரசியலில்லை... ஆம் ஆரம்பம் முதலாக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை ஒருங்கிணைத்து அப்பாவிகளின் விடுதலைக்காக ஒரே மேடையில் முழக்கமிட  செய்தது.
நீதி மறுக்கபட்ட முஸ்லிம்களுக்கு மட்டுமில்லாது சகோதரி நளினிக்காகவும் ராபர்ட் பயாசுக்காகவும் மாதையனுக்காகவும் இம்மேடைகள் முழங்கின. தூக்குக் கயிற்றின் அருகாமையில் நின்று நீதிப்போராட்டம் நடத்திவரும் தோழர்கள் மூவரின் மரண தண்டனைக்கு எதிராகவும் வீரியமான கருத்துக்கள் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்க மேடைகளில் பதிவுசெய்யப்பட்டது. இந்த புரட்சிப் பயணத்தில் ஆரம்பம் முதலாகவே ஆலோசனைகளையும் வற்றாத ஆதரவையும் வழங்கி வரும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் அய்யா கொளத்தூர் மணி அவர்களையும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களையும், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களையும் மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் அய்யா ப.பா.மோகன் அவர்களையும் இவ்வேளையில்  நன்றியுடன் நினைவுகூர வேண்டியது கடமை.
இதே கோரிக்கையை முன்னெடுத்து கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் இந்திய தேசிய லீக் கட்சியின் பணியும் மக்களிடம் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பதினேழாண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து குற்றமற்றவராக விடுதலையடைந்த தோழர் "தடா" ரஹீம், அநீதி சிறையின் அவலத்தை அனுபவரீதியாக உணர்ந்தவர் என்பதால் அவரது  இந்த கையெழுத்து இயக்கம் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்தது.
இந்த  உண்மையான கோரிக்கைக்காக உன்ன‌தமான இலட்சிய உணர்வுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத் தோழர்கள் மனதார பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களது இந்த விடுதலை பயணத்தின் இறுதி நிகழ்வு எதிர்வரும் ஆகத்து 31ம் நாள் தலைநகர் சென்னை மண்ணடியில் நடைபெறவுள்ளது. வழக்கம்போலவே இஸ்லாமிய இயக்கத் தலைவர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒருங்கிணைந்து விடுதலை முழக்கமிட இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கான இந்த அநீதியை இதுவரை ஒரு சமுதாயப்பிரசச்னையாக மட்டுமே பார்த்த தமிழக மக்கள் இப்போது இது ஒரு சமுதாயத்தின்  பிரச்சனையல்ல... அப்பட்டமான மனித உரிமை மீறல் என்கிற உண்மையை உணர்ந்துவிட்டார்கள்.
நெடுங்காலமாக சிறையில் வாடிவரும் இந்த அப்பாவிகளின் வாழ்க்கை மிக மிகக் கொடுமையானது. வயது முதிர்ந்த பெற்றோர்களை கவனிக்க வேண்டிய பிள்ளைகள் சிறையில்... பரிதாபத்திற்குரிய இப்பெற்றோரோ இன்றைக்கும் அஞ்சுக்கும் பத்துக்கும் கொடும் வெயிலில் கூலி வேலை செய்யும் பரிதாபம்... பெற்ற பிள்ளை இன்று வருவான் நாளை வருவான் என ஏங்கி ஏங்கியே இறந்துபோன தாய்மார்களும் தந்தைமார்களும் ஏராளம்... உன் தகப்பனார் என்ன செய்கிறார் என்கிற சக நண்பர்களின் கேள்வியை எதிர்கொள்ள இயலாமல் பள்ளிக்கே போகமாட்டோம் என அழுதிடும் அப்பாவி குழந்தைகள் ஏராளம்...
இந்த கொடுமைகளுக்கு ஒரு முடிவு எழுதப்படவேண்டும். அது அரசின் கருணையில்தான் இருக்கிறது. அந்த கருணையைப் பெறுவது நமது மக்கள் எழுச்சியில்தான் உள்ளது. ஆகவே எதிர்வரும் ஆகத்து 31ம் நாள் சென்னை மண்ணடியில் சங்கமித்து அப்பாவிகளின் விடுதலையை வென்றெடுக்க ஆயத்தமாகுங்கள். உங்களின் வருகையால்தான் அரசின் கவனத்தை ஈர்க்க முடியும். அதன்மூலமாகத்தான் கருணையை கட்டாயமாக்கிட முடியும்.
- வேங்கை.சு.செ.இப்ராஹீம் ( vengaiibrahim@yahoo.com)

+++++++++++++++++++++++++++++
prisoners_mannadi_640
prisoners_mannadi_641
prisoners_mannadi_643
prisoners_mannadi_642
 http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20937%3A2012-08-27-02-03-04&catid=902%3A2009-08-16-17-58-44&Itemid=268

கருத்துகள் இல்லை: