செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

முப்பது ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி! - தமுமுக-மமக முயற்சியால் சித்தாலப்பாக்கம் கபரஸ்தானுக்கு இடம் ஒதுக்கித் தந்தது அரசு!

சென்னை அருகே மேடவாக்கம் அருகிலுள்ள சித்தாலப்பாக்கத்தில் இஸ்லாமிய மக்கள் முப்பது ஆண்டுகளாக அடக்கஸ்தலம் (கபரஸ்தான்) இன்றி, இறந்தவர்களின் உடல்களை 5 கிலோமீட்டர் தூரமுள்ள மேடவாக்கத்திற்கும், சிலர் ராயப்பேட்டைக்கும் கொண்டு சென்று அடக்கம் செய்துவந்தனர். இந்தக் கஷ்டத்திற்கு ஒரு முடிவுகட்ட கடந்த முப்பது ஆண்டுகளாக முயற்சி செய்தும் பலனின்றி இருந்த நிலையில், 2008-ம் ஆண்டு, சித்தாலப்பாக்கத்தில் தமுமுக கிளை நிறுவப்பட்டது. அதன்பின் கிளைத் தலைவர் கௌஸ்பாஷா, இம்தியாஸ், இமாம்பாஷா மற்றும் கிளை நிர்வாகிகள் இப்பிரச்சனையைக் கையிலெடுத்தனர்.
இந்நிலையில், ஊராட்சித் தலைவரிடத்தில் முறையிட்டு மனு கொடுத்தனர். அதனடிப் படையில் 19.08.2008 அன்று ஊராட்சியில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு (தீர்மான எண்.40) சர்வே எண் 12/3ல் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை கபரஸ்தானுக்காக ஒதுக்கினார்கள். அந்த நிலத்தைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைக்க ஜமாத் சார்பில் வசூல் செய்யப்பட்டு ஆறு இலட்சம் ரூபாய் செலவில் காம்பவுண்ட் சுவர் அமைக்கப்பட்டது. 90 சதவீத வேலை முடிந்த தருவாயில் சில புறம்போக்கு நில வியாபாரிகளும், இந்துத்துவ பாசிஸ்ட்டுகளும் இணைந்து வருவாய்துறையில் பொய்யான புகார் அளித்ததன் பேரில், அதிகாரிகள் அந்த காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளிவிட்டனர். இந்நிலையில், கடந்த சட்டசபைத் தேர்தலின் போது சித்தாலப்பாக்கம் தமுமுக கிளை நிர்வாகிகள் காஞ்சி வடக்கு மாவட்ட மமக செயலாளர் யாக்கூபிடம் முறையிட்டனர். யாகூப், கால்நடைத்துறை அமைச்சர் சின்னையாவை நேரில் சந்தித்து முறையிட்டார். அமைச்சர், மாவட்ட அதிகாரிகளையும், ஆர்.டி.ஓ.வையும் வருவாய்த்துறை அமைச்சரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இப்பிரச்சினையை விரைந்து, சுமூகமாக முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அமைச்சரின் உதவியாளர் அதிகாரிகளிடம் தொடர்ந்து தொடர்புகொண்டு பேசி வந்தார்.
மேலும் மூத்த தலைவரும் எம்.எல்.ஏ.வுமான பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள், எம்.எல்.ஏ கந்தன் அவர்களையும், வருவாய்த்துறை அமைச்சரையும், அமைச்சர் சின்னையா அவர்களிடமும் இப்பிரச்சினையை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதன்பின்னர் வருவாய்த்துறை அலுவலர், தாசில்தார், பள்ளிக்கரணை காவல் உதவி ஆணையர் ஆகியோர் நடவடிக்கை எடுத்து பீஸ் மீட்டிங் போட்டு 12/3 சர்வேயுள்ள இடம் நீர்நிலை ஆதாரப் பகுதி என்றும் எனவே, புதிய இடத்தைத் தேர்வு செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. இம்முடிவை மமக மாவட்டச் செயலாளர் யாக்கூப் அவர்களும், கிளைத் தலைவர் கௌஸ்பாஷா மற்றும் நிர்வாகிகள், ஜமாத்தார் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதன்பின்னர் இரு இடங்களைப் பார்த்து அதில் ஒரு இடத்தில் சர்வே எண் 12/1ல் சுமார் 30 சென்ட் இடத்தை ஒதுக்கிய தாசில்தார், இந்த இடம் இஸ்லாமியர்களின் இடுகாட்டுக்கு (கபரஸ்தானுக்கு) ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவிப்புப் பலகையும் வைத்துவிட்டுச் சென்றார்.
ஆனால் சில விஷமிகள் இதை மறைமுகமாக தடுத்து வந்தனர். இடத்தை செயல்பாட்டுக்கு விடாமலே இருந்தது வருவாய்த்துறை. தாம்பரத்தில் நடந்த இரட்டைக்கோரிக்கை பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜே.எஸ். ரிபாயீ அவர்கள் இப்பிரச்சினைப் பற்றி கண்டித்துப் பேசிய செய்திகள் தினத்தந்தி, தினகரன், தமிழ்முரசு, மாலைமலர் ஆகிய நாளிதழ்களில் வெளிவந்தது. இது அதிகாரமட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து யாக்கூப் தலைமையில் மாவட்ட செயற்குழு சித்தாலப்பாக்கத்தில் கூடி விவாதிக்கப்பட்டு அதில், வரும் வாரம் தமுமுக மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது அவர்கள் தலைமையில் தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு முற்றுகைப் போராட்டத்திற்காக போஸ்டர்களும், சுவர் விளம்பரமும் செய்யப்பட்டது. இதையடுத்து தாசில்தார், 27.07.2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு தாம்பரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பீஸ் மீட்டிங் நடத்தி பிரச்சினையை சுமூகமாக முடித்திட அழைப்பு விடுத்தார்.
ஆர்.டி.ஓ. எட்டியப்பன் தலைமையில் நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில், தாசில்தார், ஆர்டி.ஓ., பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர், காவல் துணை ஆணையர், ஊராட்சித் தலைவர் மற்றும் ஒன்பது வார்டுகளைச் சேர்ந்த கவுன்சிலர்களும், மமக மாவட்டச் செயலாளர் யாக்கூப், சலீம்கான், சௌகத் அலி மற்றும் நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். பிரச்சினை காரசாரமாக தொடங்கி, சுமூகமான முடிவுக்கு வந்தது.
12/1 சர்வே எண்ணில் வட்டாட்சியர் ஒதுக்கிய இடத்தில் மாற்றுவழியாக (கோத்தாரி கார்டன் வழியாக) இஸ்லாமிய சமூகத்தினர் அடக்கஸ்தலத்தை அமைத்துக்கொள்ள இறுதி முடிவு எடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒப்புதல் கடிதத்திற்குப் பிறகு இவ்விடம் முழுமையான பயன்பாட்டிற்கு வந்து விடும். (எல்லாப்புகழும் ஏக இறைவனுக்கே) இதன்மூலம் ஒருவழியாக முப்பதாண்டு கால பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

ஆஸாத் காமில்

கருத்துகள் இல்லை: