இஸ்லாமிய சிறைவாசிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாமிய சிறைவாசிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

உச்சத்தை அடைகிறது உணர்வு போராட்டம்!

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதிகளாகவே தமிழகத்தின் அனைத்து மத்திய சிறைகளில் பல்லாண்டுகாலமாக வாடிவரும் முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கைதிகளையும் குறிப்பாக பத்தாண்டுகள் கழித்துவிட்ட அனைவரையும் எதிர்வரும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளின்போது பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவேண்டுமென்கிற கோரிக்கையை வலியுறுத்தி இன்றைக்கு தமிழகம் முழுவது இஸ்லாமிய சமுதாய அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் போராடி வரக்கூடியதை அறிவீர்கள்... இன்றைய‌ எழுச்சிக்கான விதை மார்ச் மாதம் 30 நாள் திருப்பூரில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தால் விதைக்கப்பட்டது... எப்போதுமில்லாத வகையில் இந்த நியாயமான கோரிக்கை இப்போது பரவலாக அரசின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சட்டங்களால் நீதி மறுக்கப்படும்போது மக்கள் எழுச்சியே அதனை மாற்றியமைக்க இயலும் என்பதற்கு பல்வேறு உதாரணகள் உண்டு. சட்டங்கள் சாமானிய மக்களுக்கு சாத்தியமாக வேண்டுமென்பதுதான் ஜனநாயகம். ஆனால் இன்றைக்கு நாம் போராடி வரக்கூடிய கைதிகளுக்கு, சட்டம் தொடர்ந்து நீதியை வழங்க மறுத்து வருகிறது என்பதுதான் நிதர்சனம். நாம் வாழக்கூடிய நாட்டில் எல்லாமுமே அரசியலாகிவிட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் அரசியல்ரீதியாக பழி வாங்கப்படுகிறார்கள். கோவை கலவரத்தை காரணமாகக் கொண்டு கைது செய்யப்பட்ட பல அப்பாவிகள் இன்றைக்கு சுமார் பதினான்கு ஆண்டுகாலமாக சிறைக்கொட்டடிகளில் தங்களின் இளைமையை இனிமையான வாழ்க்கையை தொலைத்துவிட்டு நடைபிணங்களாக தங்களின் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் இம்மக்களை விடுவிக்க அரசின் கவனத்தை ஈர்க்க பொதுமேடையை அமைத்தது. இதில் மதமில்லை... சாதியில்லை... அரசியலில்லை... ஆம் ஆரம்பம் முதலாக இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை ஒருங்கிணைத்து அப்பாவிகளின் விடுதலைக்காக ஒரே மேடையில் முழக்கமிட  செய்தது.
நீதி மறுக்கபட்ட முஸ்லிம்களுக்கு மட்டுமில்லாது சகோதரி நளினிக்காகவும் ராபர்ட் பயாசுக்காகவும் மாதையனுக்காகவும் இம்மேடைகள் முழங்கின. தூக்குக் கயிற்றின் அருகாமையில் நின்று நீதிப்போராட்டம் நடத்திவரும் தோழர்கள் மூவரின் மரண தண்டனைக்கு எதிராகவும் வீரியமான கருத்துக்கள் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்க மேடைகளில் பதிவுசெய்யப்பட்டது. இந்த புரட்சிப் பயணத்தில் ஆரம்பம் முதலாகவே ஆலோசனைகளையும் வற்றாத ஆதரவையும் வழங்கி வரும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் அய்யா கொளத்தூர் மணி அவர்களையும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் திருமாவளவன் அவர்களையும், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களையும் மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் அய்யா ப.பா.மோகன் அவர்களையும் இவ்வேளையில்  நன்றியுடன் நினைவுகூர வேண்டியது கடமை.
இதே கோரிக்கையை முன்னெடுத்து கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் இந்திய தேசிய லீக் கட்சியின் பணியும் மக்களிடம் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பதினேழாண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து குற்றமற்றவராக விடுதலையடைந்த தோழர் "தடா" ரஹீம், அநீதி சிறையின் அவலத்தை அனுபவரீதியாக உணர்ந்தவர் என்பதால் அவரது  இந்த கையெழுத்து இயக்கம் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்தது.
இந்த  உண்மையான கோரிக்கைக்காக உன்ன‌தமான இலட்சிய உணர்வுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத் தோழர்கள் மனதார பாராட்டப்பட வேண்டியவர்கள். அவர்களது இந்த விடுதலை பயணத்தின் இறுதி நிகழ்வு எதிர்வரும் ஆகத்து 31ம் நாள் தலைநகர் சென்னை மண்ணடியில் நடைபெறவுள்ளது. வழக்கம்போலவே இஸ்லாமிய இயக்கத் தலைவர்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒருங்கிணைந்து விடுதலை முழக்கமிட இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கான இந்த அநீதியை இதுவரை ஒரு சமுதாயப்பிரசச்னையாக மட்டுமே பார்த்த தமிழக மக்கள் இப்போது இது ஒரு சமுதாயத்தின்  பிரச்சனையல்ல... அப்பட்டமான மனித உரிமை மீறல் என்கிற உண்மையை உணர்ந்துவிட்டார்கள்.
நெடுங்காலமாக சிறையில் வாடிவரும் இந்த அப்பாவிகளின் வாழ்க்கை மிக மிகக் கொடுமையானது. வயது முதிர்ந்த பெற்றோர்களை கவனிக்க வேண்டிய பிள்ளைகள் சிறையில்... பரிதாபத்திற்குரிய இப்பெற்றோரோ இன்றைக்கும் அஞ்சுக்கும் பத்துக்கும் கொடும் வெயிலில் கூலி வேலை செய்யும் பரிதாபம்... பெற்ற பிள்ளை இன்று வருவான் நாளை வருவான் என ஏங்கி ஏங்கியே இறந்துபோன தாய்மார்களும் தந்தைமார்களும் ஏராளம்... உன் தகப்பனார் என்ன செய்கிறார் என்கிற சக நண்பர்களின் கேள்வியை எதிர்கொள்ள இயலாமல் பள்ளிக்கே போகமாட்டோம் என அழுதிடும் அப்பாவி குழந்தைகள் ஏராளம்...
இந்த கொடுமைகளுக்கு ஒரு முடிவு எழுதப்படவேண்டும். அது அரசின் கருணையில்தான் இருக்கிறது. அந்த கருணையைப் பெறுவது நமது மக்கள் எழுச்சியில்தான் உள்ளது. ஆகவே எதிர்வரும் ஆகத்து 31ம் நாள் சென்னை மண்ணடியில் சங்கமித்து அப்பாவிகளின் விடுதலையை வென்றெடுக்க ஆயத்தமாகுங்கள். உங்களின் வருகையால்தான் அரசின் கவனத்தை ஈர்க்க முடியும். அதன்மூலமாகத்தான் கருணையை கட்டாயமாக்கிட முடியும்.
- வேங்கை.சு.செ.இப்ராஹீம் ( vengaiibrahim@yahoo.com)

+++++++++++++++++++++++++++++
prisoners_mannadi_640
prisoners_mannadi_641
prisoners_mannadi_643
prisoners_mannadi_642
 http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20937%3A2012-08-27-02-03-04&catid=902%3A2009-08-16-17-58-44&Itemid=268

செவ்வாய், 1 மே, 2012

இஸ்லாமிய சிறை வாசிகளை விடுதலை செய்ய கோரி கோவையில் கவன ஈர்ப்பு மாநாடு



இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் ஒருங்கினைக்கும் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி தொடர் பொதுக்கூட்டம் ஏப்ரல் 29 கோவையில் நடைபெற்றது.
இதில் சட்ட போராளி ப.பா.மோகன் அவர்கள் தலைமை தாங்கினார். இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய கோரி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் விடுதலை உரையாற்றினார். அவரை தொடர்ந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர் அவர்களும், மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்களும், SDPI-ன் மாநில பொது செயலாளர் ரபீக் அஹமத் அவர்களும் விடுதலை உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களும், சிறைவாசிகளின் குடும்பத்தினர்களும், இஸ்லாமிய இயக்க சகோதரர்களும் கலந்துகொண்டனர்.





தீர்மானங்கள்

1.10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய இக்கூட்டம் வலியுருத்துகிறது.

2. மத பேதம் பாராமல் இசுலாமிய ஆயுள் சிறைவாசிகளை எதிர்வரும் செப்டம்பர்15 அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய கோருகிறோம்.

3. இசுலாமிய சிறைவாசிகள்10 ஆண்டுகள் கழித்து விடுதலைக்கு தகுதியிருந்தும் கடந்த ஆட்சியின் பாரபட்ச போக்கால் விடுதலை செய்யப்படவில்லை கடந்த ஆட்சியின் தவறுகளை கழைந்து இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய இக்கூட்டம் கோருகிறது.

4.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையில் மட்டும் பாரபட்சம் ஏன் தமிழக சிறைகளில் உள்ள இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய இக் கூட்டம் கோருகிறது.

5. மற்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் முடிவில்லா சிறைவாசம் இல்லாமல் 7.10, ஆண்டுகளில் விடுதலை செய்வதைப்போல் தமிழகத்திலும் வாழும் உரிமையை ஆயுள் சிறைவாசிகளுக்கு அளிக்கவேண்டும் என இக்கூட்டம் கோரிக்கைவைக்கிறது.

6.அனைது சிறைவாசிகளுக்கும் இருப்பது போல் வழிகாவல் இல்லாமல் இசுலாமிய சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு அளிக்கவேண்டும் என இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

7.இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு தடையாக முந்தைய ஆட்சியாளர்கள் பாரபட்சத்தோடு பிரப்பித்த அனைத்து அரசானைகளையும் ரத்து செய்ய இக்கூட்டம் தமிழக அரசை வழியுருத்துகிறது.

8.சிறையில் இனம்புரிய சிறைநோயில் தினம் செத்துக்கொண்டிருக்கும் அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்து அவருக்கு உரிய மருத்துவ வசதிகள் செய்ய இக்கூட்டம் வளியுருத்துகிறது.

9. சாதிய வண் கொடுமைக்கு எதிராக போராடி சிறைபட்டிருக்கும் தோழர் துரைபாண்டி,ஜோதி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சிறையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட,தமிழ்தேசிய விடுதலைப் போராளிகளை விடுதலை செய்ய இக்கூட்டம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது

10.சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழீழ அகதிகளை சிறையைவிடகொடுமையான முகாம்களை அடைத்துவைத்துளதை கைவிட்டு, உடனடியாக விடுதலை செய்ய இக்கூட்டம் வலியுருத்துகிறது. செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்துவரும் ஈழ தமிழர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலித்து அவர்களை அவர்களின் குடும்பத்துடன் சேர்ந்து சுதந்திரமாக வாழ அவர்களை அனுமதிக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுருத்துகிறது.

11.சிறைமாற்றம் என்ற பெயரில் இசுலாமிய சிறைவாசிகளை தங்களது சொந்த ஊரில் சிறையில் இருந்து பிடிங்கி அவர்களுக்கும், குடும்பங்களுக்கும் துன்பம் விளைவிப்பதை கைவிட இக்கூட்டம்தமிழக அரசை கேட்டுகொள்கிறது. சிறைமாற்றம் செய்யப்பட்ட இசுலாமிய சிறைவாசிகளை உடனடியாக கோவை சிறைக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசை வேண்டுகிறோம்.

மேற்கண்ட தீர்மாணங்கள் மக்களின் எழுச்சி முழக்கத்துடன் நிறைவேற்றப்பட்டது.

எமது சிறைவாசிகளை மீட்கும் போராட்டம் தொடரும்.

சிறைவாசிகளின் மீட்பு பணியில்
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.
தமிழ்நாடு