சனி, 1 அக்டோபர், 2011

பரபரப்பான பரமக்குடியும்; பார்ப்போர் இல்லாத கோவையும்!

ரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு நாள் அஞ்சலி நிகழ்ச்சியை அடுத்து ஏற்பட்ட மோதலில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு ஏழுபேர் பலியாயினர். இந்த சம்பவம் நடந்த மாத்திரமே தமிழக அரசு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தார்க்கும், காயமடைந்தோருக்கும் நிவாரண உதவி அறிவித்தது. அதோடு ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.
மேற்படி சம்பவம் நடந்த நாள் முதல் பரமக்குடி பரபரப்புக் குடியாக மாறிவிட்டது. திமுக பொருளாளர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், வைகோ, உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட வடநாட்டு தலைவர்கள் உள்பட பலரும் பரமக்குடியை நோக்கி படையெடுத்தனர். கலவரத்தில் கொல்லப்பட்டவர் குடும்பத்தாரையும், சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் சொல்லியதோடு, உதவித்தொகையும் சில தலைவர்களால் வழங்கப்பட்டுள்ளது.
அதே போல் இந்த சம்பவம் நடந்த மாத்திரமே சட்டமன்றத்திலும், வெளியிலும் பல்வேறு கட்சிகள் கண்டனக் குரல்கள் எழுப்பின. மேலும் மதவாத பாஜக, இப்பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்புவோம் என்று சொல்கிறது. கட்சிகளின் இந்த ஆதங்கத்தையும், ஆர்வத்தையும் அப்படியே வரவேற்கிறோம். கொல்லப்பட்டவர் குடும்பத்தாருக்கு நீதியும், நிதியும், காயமடைந்தோருக்கு நிதியும், நிவாரணமும் கிடைத்திட இக்கட்சிகள் முயற்சிக்க வேண்டும் என்று நாமும் கேட்டுக் கொள்கிறோம்.
அதே நேரத்தில், சில ஆண்டுகளை பின்னோக்கி நமது நினைவை செலுத்தி கோவைக்கு சென்றால், அங்கே செல்வராஜ் என்ற காவலர் கொல்லப்பட்டதையடுத்து,
இந்துத்துவ சக்திகளோடு கைகோர்த்துக்கொண்டு காவல்துறை குருவியை சுடுவது போன்று 19 முஸ்லிம்களை சுட்டுக் கொன்றதே? அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதியோ, அவரது மகனோ, அல்லது இன்றைக்கு பரமக்குடியை நோக்கி படையெடுத்த அரசியல் கட்சித் தலைவர்களோ திரும்பிக் கூட பார்க்கவில்லையே? இன்றைக்கு போலீசாரின் சில தவறான நடவடிக்கையால் ஏழு உயிர்கள் போனதை கண்டிப்பவர்கள், அன்றைக்கு இதே போலீசாரின் காவி சிந்தனையால் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை கண்டிக்க வில்லையே? இது குறித்து சட்டமன்றத்திலோ, பாராளுமன்றத்திலோ, ஏன் வெளியில் கூட சன்னமான குரலைக் கூட இக்கட்சிகள் வெளிப்படுத்த வில்லையே?
பரமக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் சகோதரர்களை சகோதர வாஞ்சையோடு போய் பார்த்தது இந்திய தவ்ஹீத் ஜமாஅத். ஆனால் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் சமுதாய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட அன்று கோவைக்கு வந்து ஆறுதல் சொல்ல முன்வரவில்லையே? இதெல்லாம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால், ஆட்சியாளருக்கும் சரி- அரசியல்வாதிகளுக்கும் சரி அது பெரிய தாக்கத்தை உண்டாக்குவதில்லை என்பதை காட்டுகிறதல்லவா? இன்றுவரை அந்த கோவையில் போலீசாரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதியும்- நிதியும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறதே? ஏன் இந்த மாற்றந்தாய் மனப்பாண்மை? இது ஒழியவேண்டும். எங்கு யார் அநியாயமாக பாதிக்கப் பட்டாலும் அவர்களுக்கு உரிய நீதி கிடைத்திட ஆளும் வர்க்கமும், அரசியல்-சமூக அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல்கொடுக்க முன்வர வேண்டும் என்பதே நடுநிலை பேணும் அனைவரின் எண்ணமாக உள்ளது.

நம்பிக்கையாளர்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செலுத்துங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.[அல்-குர்'ஆன் 5 ;8 ]
http://mugavai-abbas.blogspot.com/

கருத்துகள் இல்லை: