புதன், 13 ஆகஸ்ட், 2014

நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் -யுவன் சங்கர் ராஜா




நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை.
யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்விக்கு முதன் முறையாக பதிலளித்திருக்கிறார் யுவன். இது குறித்து யுவன் கூறியிருப்பது:
"எனது தந்தை தீவிரமான இந்து. ஒரு கண்ணாடி உடைந்தாலும் ஜோசியரைக் கூப்பிடும் அளவுக்கு மூட நம்பிக்கை உடையவர். எனது பெற்றோர் பல சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தனர். ஆனால் எனது சிறுவயது முதலே இவற்றையேலாம் தாண்டி ஒரு அமானுஷ்யமான சக்தி உலகை கட்டுப்படுத்துகிறது என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.
எனது மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது எனது அம்மாவின் மறைவு தான். வேலையின் காரணமாக மும்பைக்கு சென்றிருந்தேன். சென்னைக்கு வந்தபோது, அம்மா கடுமையாக இரும்பிக் கொண்டிருந்தைக் கண்டேன். நானும் எனது சகோதரியும் அவரை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றோம். நான் கார் ஓட்டிச் சென்றேன். நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால், அடுத்த நொடி அவரது கை விழுந்தது, அவர் காலமானார். நான் அழுது கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த சில நொடிகளில் அம்மாவின் ஆன்மா என்னவாகியிருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன், ஏனென்றால் அவர் சில விநாடிகளுக்கு முன் தான் உயிரோடு இருந்தார்.
எனக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும்போது அல்லாவிடமிருந்து நேரடியாக அழைப்பு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஆன்மிக அனுபவம். எனது நண்பர் ஒருவர் அப்போது தான் மெக்காவிலிருந்து வந்திருந்தார். "நீ தற்போது மிகவுள் தளர்ந்துள்ளாய். இதிலிருந்து நீ மீண்டு வரவேண்டும்" எனக் கூறி ஒரு முசல்லாவை (பிரார்த்தனை செய்யும்போது பயன்படுத்தப்படும் பாய்) எனக்குத் தந்தார். "இந்தப் பாய் மெக்காவில் நான் அமர்ந்து பிரார்த்தனை செய்தது. இது மெக்காவை தொட்டு வந்த பாய். உன் மனது பாரமாக இருக்கும்போது இதில் உட்கார்ந்து பார்" என்றார். நான் அந்த பாயை எனது அறையின் ஒரு மூலையில் வைத்துவிட்டு மறந்துவிட்டேன்.
சில மாதங்கள் கழித்து எனது உறவினர் ஒருவருடன் அம்மாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த்போது மிகவும் பாரமாக உணர ஆரம்பித்தேன். எனது அறையில் நுழைந்தேன், எதேச்சையாக அப்போது அந்தப் பாயைப் பார்த்தேன். எப்படி இவ்வளவு நாள் இதை மறந்துபோனோம் என நினைத்தேன்.
முதல் முறையாக அதில் அமர்ந்தவுடனேயே நான் அழ ஆரம்பித்தேன். ’எனது பாவங்களை மன்னியுங்கள் அல்லா’ என்று வேண்டினேன். இது 2012-ஆம் ஆண்டு நடந்தது. குரானை படிக்க ஆரம்பித்தேன். அது என்னை சீக்கிரத்தில் ஆட்கொண்டது. இஸ்லாமை பின்பற்றி, தொழுகை செய்வதைக் கற்றுக் கொண்டேன். ஜனவரி 2014-ல் மதமாறுவதைப் பற்றி உறுதியாக முடிவு செய்தேன்.
படங்களில் யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரையே பயன்படுத்துவதால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எனது பாஸ்போர்ட் மற்றும் இதர கோப்புகளில் நான் எனது பெயரை மாற்றவில்லை. ஆனால் சில காலம் கழித்து அதைச் செய்வேன். இதைப் பற்றி எனது அப்பாவிற்குதான் நான் கடைசியாக தெரிவித்தேன். "நான் குரானை படிக்க ஆரம்பித்துள்ளேன். அது எனக்கு மன அமைதியைத் தருகிறது" என்றேன். அவர், "யுவன், நீ இஸ்லாமியனாக மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை" என்றார். ஆனால் எனது சகோதரரும் அவர் மனைவியும் எனக்கு ஆதரவளித்துள்ளனர்.
இது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் என் அம்மாவே என் கையைப் பிடித்துக் கொண்டு, "யுவன், நீ தனியாக இருக்கிறாய்.. இஸ்லாம் என்ற மரத்தின் கீழ் நீ நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என அவர் சொல்வதாக எனக்குப் பல முறை தோன்றியுள்ளது." என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: