திங்கள், 10 செப்டம்பர், 2012

தமுமுக-மமக தலைமை செயற்குழு தீர்மானங்கள்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் 8.9.2012 அன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழுக் கூட்டத்தில் மூத்த தலைவர்கள் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ., செ. ஹைதர் அலி, தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, ம.ம.க. பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, பொருளாளர் ஒ.யு.ரஹ்மத்துல்லாஹ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம் 1: சிறைவாசிகளை விடுதலை செய்க
நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனைப் பெற்று பத்து ஆண்டுகள் தண்டனை முடித்த முஸ்லிம்கள் உட்பட அனைத்து சமூகங்களைச் சார்ந்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை தமிழக ஆளுநர், அரசியலமைப்புச் சட்ட உறுப்பு எண் 161ஐ பயன்படுத்தி, வரும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 2: இடஒதுக்கீடு
2011 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர், முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தற்போது வழங்கப்பட்டு வரும் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்தித்தர வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3: முழுமையான மதுவிலக்கு
தமிழகத்தில் அரசு மதுக்கடைகளால் மாணவர்கள், இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. எனவே, டாஸ்மாக் மதுவிற்பனை மூலம் வருமானத்தைப் பார்க்காமல், மக்களின் எதிர்கால நானைக் கருத்தில் கொண்டு மக்கள் நல அரசாக செயல்பட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 4: பட்டாசு தொழிற்சாலைகள்
கடந்த 5.9.2012 அன்று சிவகாசி அருகே முதலிப்பட்டி கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலை தீவிபத்தில் சிக்கி உயிர் இழந்த குடும்பங்களுக்கு இச்செயற்குழு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது. இத்தொழிற்சாலையின் உரிமம் முடிந்து ஒருவார காலமாகியும் தொழிற்சாலை இயங்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. மேலும், தமிழகத்தில் பாதுகாப்பு குறைபாடுள்ள அனைத்து பட்டாசு தொழிற்சாலைகளையும் மூடவேண்டுமெனவும் இச்செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5: அவதூறு வழக்குகளை திரும்பப் பெறுக
அரசியல் அமைப்புச் சட்டம் உறுப்பு எண் 19/1ஏ பேசுவதற்கும், கருத்துக்கள் வெளியிடுவதற்கும் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிராக அதைப் பறிக்கும் வகையில் திமுக தலைவர் கலைஞர், அதன் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு உள்ளிட்ட பொதுவாழ்வில் உள்ளவர்கள் மீதும் பத்திரிக்கைகள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 6: நிலத்தடி நீரைப் பாதுகாத்தல்
2003ஆம் ஆண்டு அதிமுக அரசு கொண்டு வந்த நிலத்தடி நீர் பாதுகாப்புச் சட்டத்தை அதில் உள்ள குறைகளை நீக்கி நடைமுறைப்படுத்துவதோடு குளம், கண்மாய் ஆகியவைகளை தூர்வாரி அதைப் பாதுகாப்பதோடு, ஆக்கிரமிப்புகளை செய்து கட்டிடங்கள் கட்டுவதைத் தடுக்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7: காவிரி நீர்
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசு இதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணையிட தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 8: ஆற்றுமணல், கிரானைட்
ஆற்றுமணல், கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்விஷயத்தில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படக் காரணமான அரசு அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 9: மின்சாரம்
தமிழக மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுத்திவரும் மின்தடையைப் போக்க நெய்வேலி உட்பட தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டுமென மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 10: மீனவர் நலன்
தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட நமக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கையிடமிருந்து திரும்பப்பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இதுவரை கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு இழப்பீடு பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 11: இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி
இலங்கையில் அப்பாவி ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த மற்றும் தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டவர்களின் படுகொலைக்கு காரணமான இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக்கூடாது என மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 12: கர்நாடக முஸ்லிம்கள்
கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு, அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கி அவர்கள் மீது பொய் வழக்குப் போடும் கர்நாடக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு இவ்வழக்குகளை நடுநிலையான அதிகாரிகளைக் கொண்டு பூர்வாங்க விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என இச்செயற்குழு மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 13: மத்தியில் இடஒதுக்கீடு
நீதிபதி ரெங்கநாத மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு இனியும் தாமதிக்காமல், சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும், இதர சிறுபான்மையினருக்கு 5 சதவீதமும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென இச்செயற்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 14: அஸ்ஸாம் முஸ்லிம்கள் மீது தாக்குதல்
அஸ்ஸாமில் அம்மாநில முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திவரும் போடோ தீவிரவாதிகளிடமிருந்து அதிபயங்கர ஆயுதங்களைக் கைப்பற்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 15: மியான்மர் முஸ்லிம்கள் மீது தாக்குதல்
மியான்மர் நாட்டில் முஸ்லிம்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதல்களை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசு, மியான்மர் நாட்டின் தூதரக அதிகாரியை உடனே இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 16: சமச்சீர் கல்வியில் சீர்திருத்தம்
சிறுபான்மை மொழிகளான உருது, அரபி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளை முதல் தாளாகப் படிக்கும் பள்ளி மாணவர்கள் அனைவருக்குமே தமிழ்ப்பாடம் பயில்வோருக்கு சமமான நிலை வழங்கப்பட வேண்டும். இதற்கு எதிராக கடந்த ஆட்சியில் போடப்பட்ட அரசாணை ரத்து செய்யப்பட வேண்டும் என இச்செயற்குழு கோருகிறது.

தீர்மானம் 17: காலிப் பணியிடங்களை நிரப்புதல்
சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதாக தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டு பல மாதங்கள் ஆகியும் அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கை கல்வி அமைச்சகங்களால் எடுக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் கல்வியும், சிறுபான்மையினரின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக கல்வித்துறை காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 18: கூடங்குளம் - அரச வன்முறை
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிவரும் மக்களை ஒடுக்கும் அரச வன்முறையை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கூடங்குளம் மக்களின் ஜனநாயகக் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இச்செயற்குழு கோருகிறது.

தீர்மானம் 19: வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்களுக்கான வாரியம்
சென்ற ஆட்சியில், வெளிநாட்டில் மற்றும் வெளிமாநிலத்தில் பணியாற்றும் தமிழர்களுக்கான வாரியம் அமைக்கப்பட்டு அது வெறும் பெயரளவில் மட்டும் உள்ளது. இந்த ஆணையத்திற்கான சட்ட விதிமுறைகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 20: எஸ்.எம்.ஜின்னா - பிரார்த்தனை
தமுமுகவின் மாநில துணைச் செயலாளராக சிறப்பாகப் பணியாற்றி சமீபத்தில் மரணமடைந்த சகோதரர் எஸ்.எம்.ஜின்னா அவர்களின் பணிகளை இச்செயற்குழு நினைவுகூர்கிறது. மேலும் அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டுமென அனைவரையும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை: