சனி, 1 செப்டம்பர், 2012

நரோடா பாட்டியா கொலைகள்-குஜராத் பெண் எம்எல்ஏவுக்கு 28 ஆண்டு சிறை, விஎச்பி தலைவருக்கு ஆயுள்

 Naroda Patiya Case 32 Convicts Including Bjp Maya
அகமதாபாத்: நரோடியா பாட்டியா கலவர வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. மாயா கோட்னானிக்கு 10 மற்றும் 18 ஆண்டுகள் சிறை தண்டனையும், விஹெச்பி தலைவர் பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
கோத்ராவில் நடந்த ரயில் எரிப்புக்குப் பின்னர் குஜராத் மாநிலத்தில் இந்து அமைப்புகள் பெரும் வன்முறையில் இறங்கின. ஊர் ஊராக முஸ்லீம்களைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த கொடும் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர். பலரை உயிருடன் தீயில் போட்டுக் கொடூரமாகக் கொன்றனர்.
நரோடா பாடியா என்ற இடத்தில் நடந்த மிகப் பெரிய வன்முறைச் சம்பவத்தில் 97 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் 2002ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி நடந்தது. அதற்கு முதல் நாளில் தான் கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்டது. நரோடா பாட்டியா வழக்கு அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நடந்து வந்த வழக்கில் கடந்த 29ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில், முன்னாள் விஹெச்பி தலைவர் பாபு பஜ்ரங்கி, நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். அதேசமயம், 29 பேரை விடுவித்து அவர் உத்தரவிட்டார். மாயா கோட்னானி தற்போது பாஜக எம்.எல்.ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 32 பேருக்கு என்ன தண்டனை என்பதை நீதிமன்றம் இன்று அறிவித்தது. மாயா கோட்னானிக்கு 10 மற்றும் 18 ஆண்டுகள் என மொத்தம் 28 ஆண்டுகள் சிறை தண்டனையும், பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 7 பேருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பஜ்ரங்கி தனது வாழ்நாளை சிறையிலேயே கழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட அனைவருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: