திங்கள், 9 ஜூலை, 2012

முஸ்லிம்களுக்கு வாடைக்குக் கூட வீடுகள் இல்லை – தலைநகர் டெல்லியில் அவலம்!


டெல்லி, july 9: இந்தியாவின் தலைநகரமாம் டெல்லியில் வீடு வாடகைக்கு கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கும் வேளையில் முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில்லை என்று ஹிந்து நாளிதழ் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
டெல்லியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் மற்றும் தரகர்கள் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வீடு தர மறுக்கின்ற அவலம் தொடர்கிறது என்று ஹிந்து பத்திரிக்கை ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற அவலங்கள் படித்தவர்கள் அதிகம் வசிக்கக் கூடிய நியூ பிரண்ட்ஸ் காலனி, வசந்த் கன்ஜ், ஜன்க்புரா மற்றும் ரோகினி ஆகிய பகுதிகளில் நடந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நியூ பிரண்ட்ஸ் காலனியிலுள்ள குடியிருப்புகளின் ஏஜென்ட் ஒருவரோ இங்கு “இந்தியர்களுக்கு மட்டுமே இடமுண்டு முஸ்லிம்களுக்கு அல்ல” என்று கூறியுள்ளார். இதே காலனியில் இன்னொரு முஸ்லிம் நபருக்கும் இதேப்போன்று அனுபவம் ஏற்பட்டுள்ளது. அவர் முஸ்லிம் என்பதால் அவரிடம் வீடு வாடகைக்கு எடுக்க அனைத்து வசதிகள் இருந்தும் வீட்டின் உரிமையாளர்கள் வீடு தர மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிந்து நிருபர்கள் புதுமணத் தம்பதிகள் போன்று வேடமிட்டு ரோஹினியின் செக்டார் 8-ல் வீடு வாடகைக்கு கேட்டனர். ஆனால் அதன் உரிமையாளர்களோ இங்கு ஹிந்துக்கள் வசிப்பதால் முஸ்லிம்களுக்கு தர முடியாது என்றதுடன். இந்தப் பகுதியில் எங்கும் முஸ்லிம்களுக்கு வீடு கிடைக்காது என்று கூறியுள்ளனர்.
அதுவும் தனியாக வாழும் பெண்கள் என்றால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். ஹிந்து நாளிதழின் நிரூபர் கணவன் இல்லாத பெண்ணாக வீடு கேட்டபோது கணவன் இல்லாதவள் என்று முதலில் கரிசனம் காட்டிய தரகர்கள் பின்னர் முஸ்லிம் என்றவுடன் வீட்டு உரிமையாளர்களிடம் கேட்டு சொல்கிறேன் என்று மழுப்பியுள்ளனர்.
இதனை உற்று கவனிக்கும் போது மத ரீதியாக பிளவுகளை ஏற்படுத்த அதிகாரமற்ற குழு ஒன்று டெல்லியில் இயங்கி வருவதை அறியமுடிகிறது. மேலும் முஸ்லிம்களுக்கு கஷ்மீரிகள் மற்றும் ஆஃப்கானிஸ்தானின் அகதிகள் தங்கும் இடத்தின் அருகில் வீடுகளை கட்டுவது டெல்லியில் வழக்கமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்தின் பேராசிரியரான ரிஸ்வான், கைசர் சகட் மற்றும் முனிர்கா ஆகிய பகுதிகளில் வீடு கிடைப்பதில் தமது பெயர் பெரிய இடைஞ்சலாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.
இதுபோன்ற செயல்கள் குறித்து வழக்கறிஞர் அசோக் அகர்வால் கூறுகையில்; இதுபோன்ற செயல்கள் சட்டப்படி தவறு என்றாலும் சமூகத்தில் இதுபோன்ற செயல்களை அடையாளம் காணுவது கடினம் என்று கூறினார். மேலும் அரசு இதனை சரி செய்வது இயலாத காரியம் என்றும் கூறினார்.
மேலும் வீட்டு விவகாரங்களில் மலாய், சைனீஸ் மற்றும் இந்திய மக்களிடையே பொது ஒதுக்கீடை அமுல்படுத்தியிருக்கும் சிங்கப்பூர் போன்ற நாடுகளை உதாரணமாகக் கொண்டு இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு தரப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் தலித்துகளே இது போன்ற பிரச்சனைகளுக்கு ஆளானார்கள். ஆனால் அவர்களின் பெயரின் மூலம் உடனடியாக அவர்களின் ஜாதி தெரியவராது என்பதால் அவர்களுக்கு பிரச்சனைகள் குறைவு என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: