வியாழன், 9 பிப்ரவரி, 2012

ராமனை எலக்க்ஷன் ஏஜன்டாக பயன்படுத்தும் ப ஜ க ?

அயோத்தி: ஜாதீய காரணிகள் முடிவை தீர்மானிக்கும் உ.பி மாநில தேர்தலில் வகுப்புவாத பிரிவினை மூலமாக வாக்குகளை கவர பா.ஜ.க நடத்திவரும் முயற்சிகள் தோல்வியை தழுவும் என கருதப்படுகிறது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் புராண ராமனின் கோயிலை கட்டுவது, சிறுபான்மை இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு உள்ளிட்ட பா.ஜ.கவின் பிரச்சாரம் போதுமான சலனத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை.

உமாபாரதியை கட்சியில் சேர்த்ததும், ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிய பகுஜன் சமாஜ் தலைவர்களை கட்சியில் இணைத்ததும் முன்பு ஒருபோதும் இல்லாத அளவுக்கு பா.ஜ.கவில் உட்கட்சி பூசலை உருவாக்கியுள்ளது.

80 எம்.பிக்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் உ.பியில் பா.ஜ.கவின் நிலை பரிதாபமானால், 2014 ஆட்சி கனவு அதோகதிதான்! இதனை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க தலைமை உ.பி.யில் முகாமிட்டுள்ளது.

முன்னாள் மத்தியபிரதேச முதல்வர் உமாபாரதியை உ.பி அரசியல் களத்தில் இறக்கியதன் நோக்கம் வகுப்புவாத வெறியை தூண்டுவதற்காகும்.முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொண்டு பெரும்பான்மை உணர்ச்சியை தூண்டுவதும் பா.ஜ.கவின் திட்டமாகும். மேலும் அயோத்தியில் ராமனுக்கு கோயில் போன்ற ஹிந்துத்துவா அஜண்டாக்களையும் தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க வெளியிட்டது. ஆனால், இவையெல்லாம் அயோத்தியில் கூட பா.ஜ.கவுக்கு போதிய ஆதரவை பெற்றுத் தரவில்லை.

அயோத்தியின் டீ கடை பெஞ்சுகளில் கூட பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை குறித்துதான் மக்கள் விவாதிக்கின்றனர். அயோத்தி அடங்கிய ஃபைஸாபாத் மக்களவை தொகுதியில் கடந்தமுறை காங்கிரஸ் கட்சி எதிர்பாராத வெற்றியை பெற்றது. ஹிந்துத்துவா உணர்வை தூண்டிய பிறகும், அடித்தளமே ஆட்டம் கண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஃபைஸாபாத் மக்களவை தொகுதியில் மக்கள் அக்கட்சிக்கு அளித்தது பா.ஜ.கவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அயோத்தியா சட்டப்பேரவை தொகுதியில் ஐந்து தடவை வெற்றிபெற்ற லல்லுசிங் என்பவர்தாம் இம்முறையும் போட்டியிடுகிறார். ஆனால், கடுமையான போட்டி நிலவும் அயோத்தியில் லல்லுசிங் வெற்றி கேள்விகுறிதான். பல சன்னியாசிகளும் பா.ஜ.கவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ’தேர்தல் வரும் வேளையில் மட்டும் பா.ஜ.க ராமர் கோயிலை கூறி நாடகமாடும். ராமனை வெறும் எலக்‌ஷன் ஏஜண்டாக தரம் தாழ்த்திவிட்டது பா.ஜ.க’- என கொதிக்கிறார் ஆல் இந்தியா அகாடா பரிஷத் சேர்மன் மஹந்த் க்யான்தாஸ்.

கல்யாண் சிங்கைப் போல பிற்பட்ட மக்களின் பல்ஸை அறியும் தலைவர்கள் பா.ஜ.கவில் இல்லாதது அக்கட்சியின் வீழ்ச்சிக்கு காரணமாகும் என அயோத்தி மற்றும் அதன் சுற்று வட்டார பா.ஜ.க தொண்டர்கள் கருதுகின்றனர். கடந்த முறை 51 தொகுதிகள் மட்டுமே பா.ஜ.கவுக்கு கிடைத்தது. இம்முறை காங்கிரஸ் கட்சியை விட குறைவான இடங்களே கிடைக்கும் என்ற கவலை கட்சியை வாட்டுகிறது.

கருத்துகள் இல்லை: