வியாழன், 7 ஏப்ரல், 2011

தமிழகத்தை மின் வெட்டு மாநிலமாக மாற்றியதே கருணாநிதியின் சாதனை: ஜெ., குற்றச்சாட்டு

கோவை: ""மின் மிகையாக இருந்த மாநிலத்தை, மின் வெட்டு மாநிலமாக மாற்றியது தான், கருணாநிதி அரசின், ஐந்தாண்டு கால சாதனை,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.


கோவை வ.உ.சி., மைதானத்தில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: நடைபெறவுள்ள தேர்தல், வெறும் ஆட்சி மாற்றத்துக்காக நடக்கும் சாதாரண தேர்தல் இல்லை; கொடுங்கோல் குடும்ப பாசிச ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல்; தமிழக மக்களுக்கு அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்றுத்தரும் தேர்தல். நாட்டை கொள்ளையடித்தவர்களுக்கும், குடும்ப ஆட்சி நடத்துவோருக்கும் தமிழக மக்கள் என்ன தண்டனை கொடுக்கப் போகின்றனர் என்பதை, நாடே கவனித்துக் கொண்டிருக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, சட்டம் ஒழுங்கும், மின்சார உற்பத்தியும் தான் முக்கியத் தேவை; இவை எப்படி உள்ளது என்பது உங்களுக்கே தெரியும். இவை இரண்டையும் சீர்குலைத்தவர் கருணாநிதி; இதனால் தான் தொழில்கள் தொய்வுற்று, விவசாயம் வீழ்ச்சி அடைந்து, விலைவாசி விஷம் போல் ஏறி விட்டது.சட்டம் ஒழுங்கை சீர் குலைத்தது கருணாநிதியும், அவரது குடும்பத்தினரும், அமைச்சர்களும் தான். கிருஷ்ணன் கொலை வழக்கு, பத்திரிகை அலுவலகம் எரிப்பு, துணை வேந்தர் தாக்குதல், நில மோசடி, ஆள்கடத்தலில் ஈடுபட்ட என்.கே.கே.பி.ராஜா, சென்னை இரட்டை கொலையில், மர்மமான முறையில் குற்றவாளி இறந்தது, தேசியக்கட்சி அலுவலகத்தை அமைச்சர் பரிதி தாக்கியது, கொலைக்குற்றவாளியை, வீரபாண்டி ஆறுமுகம், சிறையில் சந்தித்தது, ஹார்லிக்ஸ் திருட்டு என, எதிலுமே நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


எதையுமே தடுக்கத் திராணியற்ற கருணாநிதிக்கு, சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச தகுதியில்லை. மின் தேவைக்கும், மின் உற்பத்திக்குமான இடைவெளி அதிகரித்து, மின் வெட்டு அதிகமாகிக் கொண்டேயுள்ளது. மின் மிகையாக இருந்த மாநிலத்தை, மின் வெட்டு மாநிலமாக மாற்றியதுதான், கருணாநிதி அரசின் சாதனை. மின் வெட்டு அதிகரிப்பதாலும், சட்டம் ஒழுங்கு சீர் குலைவதாலும் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர், புதுத்தொழில் துவங்க ஆர்வம் காட்டுவதில்லை; வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டது; எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. இந்த ஆட்சி எப்போதுபோகும் என, எல்லாரும் ஏங்கும் அளவுக்கு கருணாநிதி ஆட்சி நடத்தியுள்ளார். திரைப்படத்தொழில், பத்திரிகை, கிரானைட், ரியல் எஸ்டேட், கேபிள் என, எல்லாத் தொழிலுமே அவரது குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் உள்ளன. மீதியுள்ள தொழில்களையும் அபகரிக்கும் நோக்கத்தில் தான், மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டுமென, கருணாநிதி உங்களைத்தேடி வருகிறார். ஏமாந்து விடாதீர்கள்.


"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்து இரண்டு ஆண்டுகளாகி விட்டது. தண்டிக்க வேண்டிய மத்திய அரசு, ஆட்சிக்காக வழக்கை தாமதப்படுத்துகிறது. கருணாநிதி குடும்பத்தை தண்டிக்கும் சக்தி, உங்களிடம் தான் உள்ளது. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவுக்கு, ஊழல் சாதனை செய்த தி.மு.க.,வை, கின்னசில் இடம் பெறும் அளவுக்கு அந்தக் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டிபாசிட் போகச் செய்ய வேண்டும். தமிழகத்திலிருந்து உங்களை விரட்ட நினைக்கும் கருணாநிதியை, நீங்கள் விரட்ட ஒரே வாய்ப்பு, தேர்தல் தான். அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், பல நல்ல வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை நிறைவேற்றும் தகுதி, அ.தி.மு.க.,வுக்கு மட்டுமே உள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், தமிழகத்துக்கு வீழ்ச்சியே கிடையாது; வளர்ச்சிதான் என்ற உத்தரவாதத்தையும் தருகிறேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். இரவு 8.15க்கு பேச்சைத் துவக்கிய ஜெயலலிதா, 8.40க்கு முடித்தார்.

source : dinamalar.com