திங்கள், 15 ஜூன், 2009

சாதியை ஒழிக்குமா சமத்துவபுரம்...?

தமிழகத்தில் நீங்கள் பஸ்ஸில் பயணம் செய்யும்போது ஜன்னல்வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக தீப்பட்டி அடுக்கிவைத்து போன்று காட்சி தருபவைகள்தான் தொகுப்புவீடுகள் என்று அழைக்கப்படும் சமத்துவ புரங்கள். இந்த சமத்துவபுரங்கள் சாதியை ஒழிக்கவந்த பெரியாரின் பெயரால், பெரியார் வழிவந்த முதல்வர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டவை . சாதியை ஒழிக்க சமத்துவபுரம் என்று சொன்ன அரசு அந்த சமத்துவபுரத்தில் யாருக்கு இடமளிக்கவேண்டுமேனில், சாதி இல்லை என்று சொல்லக்கூடிய சாதியை மறுக்கக்கூடிய மக்களுக்கு தான் இடமளிக்கவேண்டும். அப்போதுதான் இந்த சமத்துவ புரங்கள் தோற்றுவிதத்தில் அர்த்தம் இருக்கும். ஆனால் அரசு செய்தது என்ன? சாதியை ஒழிக்க உருவாக்கப்பட்ட தொகுப்பு வீடுகளை சாதி அடிப்படையில் ஒதுக்கீடு செய்தது.

ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் ஆதிதிராவிடர்களுக்கு 40 வீடுகள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 வீடுகள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 வீடுகள், பிராமணர்கள் உள்பட இதர சாதியினருக்கு 10 வீடுகள் என 100 வீடுகள் வீதம், மொத்தம் 145 சமத்துவபுரங்களிலும் 14 ஆயிரத்து 500 வீடுகள் அனைத்து அடிப்படை வசதிகளுடனும் கட்டப்பட்டு, அந்தந்த சாதியினர்க்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.[இது முதல்வர் கூறியதாக பத்திரிக்கையில் வந்த பட்டியல்தான்] இதில்லிருந்தே விளங்கிக்கொள்ளலாம் சமத்துவ புரங்கள் சாதியை ஒழிக்கவில்லை. மாறாக சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரு அபார்ட்மென்டில் பலதரப்பட்ட சாதியினர் வசிப்பார்களே அதே போன்று தான் சமத்துவபுரங்களும் என்பதுதான் உண்மை. இதற்காக அரசின் பலகோடி ரூபாய்கள் விழலுக்கு இறைத்த நீரானதுதான் மிச்சம்.

மேலும், பெரியார் வாழ்ந்த 95 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் பெரியார் பெயரால் மேலும் 95 சமத்துவபுரங்களை அமைத்து, அங்கே பெரியாரின் சிலைகளையும் நிருவப்போகிறாராம் முதல்வர். ஏற்கனவே கட்டப்பட் சமத்துவ புரங்கள் சில இடங்களில் மக்கள் குடியேறாமல் சிதிலமடைந்து காட்சி தருகிறது. மக்கள் குடியேறிய சமத்துவ புறங்களில் 99 சதவிகிதம் தலித் மக்கள்தான் வாழ்கின்றனர். வேறு எந்த சாதியினரும் அங்கு குடியேற விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. பிராமணர்கள் உள்பட இதர சாதியினருக்கு 10 வீடுகள் என்றார்! நாமறிந்தவரை எந்த சமத்துவபுரத்திலாவது பிராமணர்கள் வசிப்பதுண்டா?

மேலும்,ஏற்கனவே வீடு இருக்கும் நிலையில் சமத்துவ புறங்களில் வீடு பெற்றுக்கொண்ட சிலர் அதை உள் வாடைகைக்கு விடுவதாகவும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். எனவே சாதிகளை சமத்துவ புரங்கள் ஒருபோதும் ஒழித்துவிடாது. சாதி ஒழிய வேண்டுமெனில் இடமாற்றம் தேவையில்லை .தேவை மனமாற்றமே! பெரியார் சொன்னாரே! 'இன[சாதி]இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என்று. அந்த இஸ்லாத்தால் மட்டுமே இனவெறியையும், மதவெறியையும், சாதிவெறியையும் ஒழித்து சமத்துவத்தை உருவாக்கமுடியும். அதைவிட்டு அரசு பள்ளியில் பாலகனை சேர்க்கப்போனால் படிவத்தில் என்ன சாதி? என்று கேட்டுக்கொண்டு, மறுபுறம் சாதியை ஒழிக்க சமத்துவ புரங்கள்! என்றால் கேலிக்கூத்தன்றி வேறென்ன!

சமத்துவ புரங்கள் அரசியலுக்கு உதவும்! ஆனால் சாதியை ஒழிக்க உதவாது என்பதை புரிந்துகொண்டு இந்த திட்டத்திற்கு ஒதுக்கும் தொகைகளை வேறு பயனுள்ள திட்டங்களுக்கு ஒதுக்க அரசு முன் வரவேண்டும் என்பதே மக்களின் அவா!

கஷ்மீரில் தொடரும் போராட்டம்

கஷ்மீரிலுள்ள ஷோஃபியானில் இரண்டு முஸ்லிம் இளம் பெண்களை சி.ஆர்.பி.எஃப் ஐச்சார்ந்த வெறியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துகொன்ற நிகழ்வை கண்டித்து நடக்கும் போராட்டங்கள் மூலம் கஷ்மீர் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது.
ஆயிரக்கணக்கான பெண்கள் குறிப்பாக மாணவிகள் பெருந்திரளாக வீதிகளில் கூடி நீதிக்காகவும் கஷ்மீரிலிருந்து இந்திய ராணுவத்தின் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
அமைதியான முறையில் நடைபெறும் இந்த போராட்டங்களை இந்திய ராணுவமும் காவல்துறையும் இணைந்து அநீதமான முறையில் அடக்கிவருகின்றனர். மீடியாக்கள் இச்செய்திகளை மறைத்துவருகின்றன. உள்ளூர் கேபிள் சேனல்களில் இச்செய்திகளை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதான் ஜனநாயகம்! இதுதான் நீதி! அவமானம்! எங்கே போய்விட்டது காந்தியின் அகிம்சை?

கஷ்மீர் இந்தியாவிலுள்ள மாநிலம் என்று கூறுபவர்கள் வேறு மாநிலத்தவர்கள் கஷ்மீரைப்பற்றி பேசினாலேயே அதை தேசதுரோகம் என்று கருதும் வெட்கக்கேடான போக்கு. தொடர்ந்து பல ஆண்டுகளாக தொடரும் அநீதம்! உயிரையும் மானத்தையும் உறவுகளையும் சொத்துகளையும் இழந்தபின்னரும் அநீத்த்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடும் கஷ்மீர் மக்கள் பாராட்டுக்குரியவர்கள்.

இலண்டன் மாநாட்டில் தமுமுக, ஜாக் தலைவர்கள்!

இலண்டன் இஸ்லாமிய அழைப்பு பணி மையம் சார்பாக உலக அமைதிக்கு வழி…ஓரிறை கொள்கை ஒன்றே!

எனும் தலைப்பில் இஸ்லாமிய மாநாடு பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடப்பெற்றது.
மநாட்டில் தமிழ்நாடு JAQH அமைப்பின் அமீர் மெளலவி S. கமாலுதீன் மதனி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் Dr, M.H. ஜவஹிருல்லாஹ் மெளலவி ஹாபிழ் யஹ்யா அஷ்ஷெய்க் M. மன்சூர் நளீமி மெளலவி முஹம்மது இஸ்மாயில் மற்றும் உலமா பெருமக்கள் கலந்துக்கொண்டு

உலக அமைதிக்கு இஸ்லாமிய கொள்கை,

இஸ்லாமிய வட்டியில்ல கடன்,

படைத்தவனை வனங்கு;படைப்பினங்களை வனங்காதே!

என்ற தலைப்புகளில் பேசினார்கள்.
பலப்பகுதிகளில் இருந்து திரலாக கலந்துக்கொண்டனர்.

யுஜெஎன் வட்ட மேசை அமர்வில் த.மு.மு.க தலைவர்




தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் ஹெச் ஜவாஹிருல்லாஹ் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குக் கொள்வதற்காக கடந்த ஜுன் 7ம் தேதி இரவு லண்டன் வந்தார். லண்டன் ஹூத்ரோ விமான நிலையத்தில் அவரை தைக்கால் ஜாகிர் ஹூசைன், காரைக்கால் டாக்டர் கபீர், லால்பேட்டை இல்யாஸ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
யுஜெஎன் வட்ட மேசை அமர்வில் த.மு.மு.க தலைவர்
ஜுன் 8 முதல் 10 வரை லண்டன் மைதன்வேல் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்ற யுனிவர்சல் ஜஸ்டிஸ் நெட்வர்க் (சர்வதேச நீதி இணையம்) – யுஜெஎன் அமைப்பின் வட்ட மேசை அமர்வில் தமுமுக தலைவர் கலந்துக் கொண்டார். கடந்த ஆண்டு மலேசியாவில் உள்ள பினங்கு நகரத்தில் யுஜெஎன் அமைப்பு தொடங்கப்பட்டது.


சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் தமுமுக
உலகின் பல்வேறு பகுதிகளில் மனித உரிமைகளுக்காக இயங்கும் முஸ்லிம் அரசு சாரா அமைப்புகளின் ஒரு இணைப்பு அமைப்பாக யுஜெஎன் உருவாக்கப்பட்டது. இதில் தமுமுகவும் இணைந்து செயல்படுகின்றது.



3 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உலகில் பல்வேறு நாடுகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக இலங்கை வட கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்னையை தமுமுக தலைவர் விரிவாக எடுத்துரைத்தார். ஐ.நா. உட்பட சர்வதேச அரங்குகளில் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சனை முன்னெடுத்துச் செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது. பிரிட்டன், மலேசியா, இந்தோனேசியா, பிரான்சு, டென்மார்க், நார்வே, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்குக் கொண்டார்கள்.

ஐ.நா. வினால் அங்கிகரிக்கப்பட்ட மனித உரிமை அமைப்பான இஸ்லாமிக் ஹூமைன் ரைட்ஸ் கமிசன் மற்றும் சிட்டிசன் இன்டர்நேசனல் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

பிரிட்டனில் உள்ள லீஸ்டர் நகரில் இயங்கும் இஸ்லாமிக் பவுன்டேசன் நிறுவனத்திற்கு கடந்த வெள்ளி (ஜுன் 11) அன்று தமுமுக தலைவர் வருகை புரிந்தார் 1973ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பிரட்டனில் மிக சிறப்பாக இஸ்லாமிய பிரச்சாரப் பணிகளை செய்து வருகின்றது.

ஆங்கிலத்தில் முன்னூருக்கும் மேலான நூல்களை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை இயக்குனர் மனாசிர் ஹசன் தமுமுக தலைவரை வரவேற்று நிறுவனத்தின் பணிகளை விளக்கியதுடன் தமுமுகவின் சேவைகளையும் கேட்டறிந்தார். மதிய விருந்தும் அளித்தார் இந்த நிறுவனத்தின செயல் இயக்குனரான சென்னையை சேர்ந்த இர்சாத் பாகியும் இந்த சந்திப்பின் போது உடனிருந்தார்.

இந்த நிறுவனத்தின் சார்பாக ஒரு உயர் கல்வி நிறுவனமும் இயங்கி வருகின்றது. அங்கு இஸ்லாமிய வங்கியியல் குறித்த முதுகலை பட்டப்படிப்பும் டாக்டர் பட்டத்திற்காக பல்வேறு ஆய்வு பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. தமுமுக தலைவருடன் தைக்கால் ஜாகிர் ஹூசைனும் பிரபல மருத்துவர் டாக்டர் அஜ்மலும் உடன் சென்றிருந்தார்கள்.

லீஸ்டரில் வெள்ளி மாலை அங்கு வாழும் தமிழக மற்றும் இலங்கை சகோதர்கள் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில தமுமுக தலைவர் பங்குக் கொண்டார். இலங்கை மவ்லவி இஸ்மாயில் நளீமி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில் தமிழக நிலவரங்கள் மற்றும் இலங்கை நிலவரங்கள் குறித்து மிக ஆர்வமாக பங்குக் கொண்டோர் தமுமுக தலைவரிடம் கலந்துரையாடினர்.

தேர்தல் முடிவுகள் உண்மையானவை: இரானிய அதிபர் அகமதிநிஜாத்

வெற்றி ஊர்வலத்தில் அகமதிநிஜாத் ஆதரவாளர்கள்

இரானில் அதிபர் மஹ்மூத் அகமதிநிஜாத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைக் கொண்டாடும் முகமாக தெஹ்ரானில் நடந்துவரும் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெற்றுவருகிறார்கள்.

முன்னதாக செய்தியாளர் கூட்டம் ஒன்றில் பேசிய அகமதிநிஜாத், இந்தத் தேர்தல் முடிவுகள் சுதந்திரமானது, உண்மையானது என்று கூறினார்.

தேர்தல் ஒரு கால்பந்து ஆட்டம்போன்றது, தோற்பவர்கள் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அகமதிநிஜாத்தை எதிர்த்துப் போட்டியிட்ட முக்கிய வேட்பாளரான மீர் ஹொசைன் முஸாவி, தேர்தல் முடிவுகளுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக புகார் கொடுத்துள்ளார். அமைதியான வழியில் போராட்டங்கள் நீடிக்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்றிரவு பொலிசார் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் டஜன் கணக்கானோரை கைதுசெய்திருந்தனர். முன்னாள் அதிபர் முகமது கடமியின் சகோதரரும் அவர்களில் ஒருவர். அவர்களில் சிலர் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

ஞாயிறு, 14 ஜூன், 2009

இந்த ஆண்டு 81 அமெரிக்க ராணுவ வீரர்கள் தற்கொலை

US soldier
வாஷிங்டன்: அமெரிக்க ராணுவத்தில் இந்த ஆண்டு மட்டும் 81 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியி்ட்டுள்ளது.

கடந்த 2008ல் தற்கொலை செய்து கொண்ட அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை வெறும் 31 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு துவங்கி முதல் 6 மாதங்கள் கூட முழுமையாக முடியாத நிலையில் இதுவரை 81 அமெரிக்க ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு ஜனவரியில் மட்டும் 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து 1980க்கு பின் இந்த ஆண்டு தான் அதிக அமெரிக்க ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக் தெரிகிறது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போரில் பங்கேற்ற பின்னர் தான் வீரர்களிடம் இந்த தற்கொலை பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பணப் பற்றாக்குறை, நிதி நெருக்கடி, மனைவியை விட்டுப் பிரிந்தது, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவையும் இந்த தற்கொலை அதிகரிப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க வீரர்களின் தற்கொலை அதிகரிப்பு குறித்து அமெரிக்க ராணுவத்தின் துணைத் தளபதி பீட்டர் சியாரெலி கூறுகையில், தற்கொலைத் தடுப்பு திட்டங்கள் உரிய முறையில் பலன் அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஏன் அது தோல்வி அடைந்தது என்பது குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும் என்றார்.

ஷார்ஜாவில் சிறப்பாக நடைப்பெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஓட்டுரிமை பற்றிய கருத்தரங்கு

எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரடேனிடி ஃபாரம் (Emirates India Fraternity Forum) நேற்று வெள்ளிக்கிழமை 12.06.2009 அன்று ஷார்ஜாவிலுள்ள இந்தியன் அசோசியேசன் ஹாலில் NRI க்களுக்கு ஓட்டுரிமை வழங்குவது பற்றிய கருத்தரங்கை சிறப்பாக நடத்தியது.

நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட இக்கருத்தரங்கு சரியாக இரவு7.50க்கு துவங்கியது. EIFF-ன் சகோதரர் அப்துல் கனி அவர்கள் EIFF அமைப்பை அறிமுகப்படுத்தி அதன் பல்வேறு பணிகளை விவரித்துக்கூறினார். நிகழ்ச்சியை அழகுற தொகுத்து வழங்கியதும் அவரே.ஏன் NRI களுக்கு ஓட்டுரிமை வழங்கப்படவேண்டும் என்பது குறித்து பல புள்ளிவிவரங்களை அழகுற எடுத்துக் கூறி அடுத்து உரையாற்றினார் EIFF இன் பேச்சாளர் செய்யத் அலீ. NRI கள் இங்கே பல அல்லல்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர். அவர் தம் துயர் துடைக்கப்படவேண்டுமெனில் அவர்களுக்கு ஓட்டுரிமை வேண்டும். அப்பொழுதே Bargaining Power என்கிற நமது உரிமைகளைக் கோரும் அதிகாரம் நமக்குக் கிடைக்கும் என்று தனது உரையில் கூறிய அவர் இது குறித்து தெளிவாகப் புரியும்படி இன்னும் பல கருத்துகளைக் கூறினார்.

அடுத்து உரையாற்றிய EIFF-ன் சகோதரர் ரஷீத் மாஸ்டர் அவர்கள் வெள்ளிக்கிழமை 12.06.2009 அன்று நடைபெற்ற ஈரான் பாராளு மன்ற தேர்தலில் யு.ஏ.இ இல் வசிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈரான் குடிமக்களுக்கு அந்நாடு தமது தூதரகங்களில் வாக்குரிமையை பதிவுச்செய்ய வாய்ப்பு ஏற்படுத்துக்கொடுத்ததை குறிப்பிட்டார். ஆனால் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வெளிநாடுகளில் வாழும் 3 கோடி இந்தியர்களுக்கு வாக்குரிமையை மறுப்பதை ஆதங்கத்தோடு குறிப்பிட்டார். பஹ்ரைனைச்சார்ந்த ஷிஹாஸ் பாபு என்பவர் கடந்த மாதம் கேரள உயர்நீதிமன்றத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமையை மறுப்பதை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளதை பாராட்டிய அவர் ஷிஹாஸ் பாபு தொடுத்த வழக்கில் மனுதாரராக இணைய Emirates India Fraternity Forum திட்டமிட்டுள்ளது என்பதையும் தெரிவித்தார்.

அதன் பின்னர் கலந்துகொண்டோரின் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆர்வமுடன் பலர் மேடைக்கு வந்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.அடுத்ததாக சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றிய துபாய் கார்ப்ரேட் பாங்கிங் துணைத்தலைவர் சகோதரர் ஜாஃபர் அலீ, ஏராளமான நாடுகள் வெளிநாடுகளில் வாழும் தங்களது குடிமக்களுக்கு வாக்குரிமையை வழங்கியுள்ளதை தனது உரையில் குறிப்பிட்டார். அவர் இந்திய அரசு நினைத்தால் இந்த உரிமையை தனது குடிமக்களுக்கு வழங்கமுடியும் என்பதற்கு உதாரணமாக ராணுவத்தில் பணியாற்றும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு (Proxy) பகர ஆள் மூலம் வாக்குரிமை பதிவுச்செய்யும் சட்ட மசோதாவை இயற்றியுள்ளதையும் குறிப்பிட்டார்.மேலும் அவர் தமது உரையில் EIFF நடத்திய இந்த கருத்தரங்கில் கலந்துக்கொண்ட பொதுமக்களுக்கும் தங்களது கருத்துக்களை கூற வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததை வேறு எந்த நிகழ்ச்சியிலும் நடைபெறாத ஒன்று என்று பாராட்டினார்.

இறுதியாக EIFF-ன் சகோதரர் பொறியாளர் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் நிறைவுரை ஆற்றினார். EIFF இந்தப் பிரசாரப் பணியை மூன்று கட்டங்களாக நடத்தவிருக்கிறது. முதல் கட்டமாக பிரசாரக் கூட்டங்களை வளைகுடா நாடுகளில் நடத்தி வருகிறது. இரண்டாம் கட்டமாக புதிய அரசு அமைந்தவுடன் அதன் கவனத்தை ஈர்க்கும் விதமாக மும்பை, சென்னை, கொல்கத்தா, கோழிக்கோடு போன்ற நகரங்களில் இது குறித்து மாநாடுகளை நடத்தவிருக்கிறது. அரசு செவி சாய்க்கவில்லை எனில் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவிருக்கிறது. அதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை எனில் மூன்றாம் கட்டமாக சட்ட ரீதியான முயற்சிகளில் EIFF இறங்கும். உச்ச, உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கொண்ட ஒரு சட்டக் குழுவை உருவாக்கி அதன் மூலமாக இறுதி வரை EIFF போராடும் என்று அவர் EIFF இன் போராட்ட வழிமுறைகளை விளக்கமாக குறிப்பிட்டார்.

சகோதரர் ஆஷிக் அவர்கள் நன்றியுரை நவில நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. கலந்துகொண்டோர் நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துகளை கொடுக்கப்பட்ட Feedback Form இல் பதிவு செய்தனர். எல்லாப் புகழும் இறைவனுக்கே!