புதன், 9 பிப்ரவரி, 2011

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முஸ்லிம்களை கைதுச் செய்தது அநீதம் - தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர்



புதுடெல்லி,பிப்.9:மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சில முஸ்லிம் இளைஞர்களை கைதுச் செய்த நடவடிக்கை சரியல்ல என தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவராக பொறுப்பேற்றுள்ள வஜாஹத் ஹபீபுல்லாஹ் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கெதிராக எவ்வித ஆதாரமும் இல்லை. இனிமேலும் அவர்களை சிறையில் அடைத்திருப்பது அநீதமாகும் எனக் கூறிய ஹபீபுல்லாஹ், இது தனது தனிப்பட்டக் கருத்து எனக் குறிப்பிட்டார்.

சுவாமி அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்து அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களை விடுதலைச் செய்ய முயற்சி மேற்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஹபீபுல்லாஹ், "அக்காரியத்தைக் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன்" என பதிலளித்தார்.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதுக் குறித்து கேள்வி எழுப்பிய பொழுது, இடஒதுக்கீட்டினால் மட்டும் முஸ்லிம்களின் வாழ்க்கையை சீரமைக்க முடியாது. அரசு வேறு சில நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

ஒவ்வொரு மாநிலமும் சிறுபான்மை கமிஷனை உருவாக்க வேண்டுமென தெரிவித்தார் அவர்.

செய்தி:மாத்யமம்

திங்கள், 7 பிப்ரவரி, 2011

சங்க்பரிவா​ர் மற்றும் காங்கிரஸின் போராட்டத்தால் விடுதலைச் செய்யப்பட்ட 'சிமி' உறுப்பினர்​கள் மீண்டும் கைது


புதுடெல்லி,பிப்.7:குடியரசு தினத்தில் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலைச் செய்யப்பட்ட 5 'சிமி' இயக்க உறுப்பினர்களை வி.ஹெச்.பி-யின் போராட்டத்தைத் தொடர்ந்து மீண்டும் கைதுச் செய்துள்ளது மத்தியபிரதேச மாநில போலீஸ்.

33 மாத சிறைவாசத்திற்கு பிறகு இவர்களை விடுதலைச் செய்ய சிபாரிசுச் செய்த சிறைத்துறையின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் சிறை துணை சூப்பிரண்ட் ஆகியோருக்கெதிராக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சிறையிலிருந்து விடுதலையான 'சிமி' உறுப்பினர்களை மீண்டும் கைதுச் செய்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தை அணுகப்போவதாக எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் சவ்ராடியா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் காவி முகம்
'சிமி' உறுப்பினர்கள் விடுதலைச் செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய பிரதேச மாநில விசுவஹிந்து பரிஷத்தும், பஜ்ரங்தள்ளும் போராட்டம் நடத்தின. ஆனால், மதசார்பற்ற வேடம் புனையும் காங்கிரஸ் கட்சியும் 'சிமி' உறுப்பினர்களின் விடுதலையை எதிர்த்து போராட்டம் நடத்தியது அக்கட்சியின் போலி மதசார்பற்ற வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

சங்க்பரிவார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தைத் தொடர்ந்து 'சிமி' உறுப்பினர்களை மீண்டும் வெள்ளிக்கிழமை இரவு உஜ்ஜயினில் வைத்து போலீசார் கைதுச் செய்தனர்.

தேசவிரோத இலக்கியங்களை கைவசம் வைத்திருந்ததாகவும், ரகசியக் கூட்டம் நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டி 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஜாதில் பர்வஜ், அயாஸ் ரியாஸ் அஹ்மத், அக்பர் அஃப்ஸல் கான், மெஹ்ருத்தீன் ஷேக், இர்ஷாத் அலி ஆகியோர் கைதுச் செய்யப்பட்டனர். ஐந்து வருட சிறைத்தண்டனை இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

முன்னாள் வி.ஹெச்.பி உறுப்பினரான பாலகிருஷ்ண கேதார், ஸோனு ஷேக்வாத் ஆகியோர்தான் அரசுதரப்பின் முக்கிய சாட்சிகள். விசாரணையின் போது எதிர்தரப்பு வழக்கறிஞரின் கேள்விக்கு பதிலளித்த முக்கிய சாட்சிகளில் ஒருவரான பாலகிருஷ்ண கேதார் இந்தியாவை இஸ்லாமிய மயமாக்குவது தொடர்பான கூட்டத்தை 'சிமி' உறுப்பினர்கள் நடத்தியதை தான் காணவில்லை என தெரிவித்தார். ஆனாலும், நீதிமன்றம் 'சிமி' உறுப்பினர்களுக்கு அநியாயமாக தண்டனை வழங்கியது.

சிறை வாழ்க்கையில் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு சுதந்திரம் மற்றும் குடியரசு தினத்தின்போது கைதிகளை விடுதலைச் செய்வது வழக்கமாகும். அதனடிப்படையில் நன்னடத்தையைக் கருத்தில்கொண்டு 'சிமி' உறுப்பினர்கள் 5 பேரும் விடுதலைச் செய்யப்பட்டனர். இதற்கெதிராகத்தான் வி.ஹெச்.பி உள்பட சங்க்பரிவார பயங்கரவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூன்றுகோடி ரூபாய் பணத்தை சிறைத்துறை அமைச்சர் உள்பட பல லஞ்சமாக பெற்றுக்கொண்டு 'சிமி' உறுப்பினர்களை விடுதலைச் செய்ததாக போலி மதச்சார்பின்மை பேசும் காங்கிரஸ் போராட்டத்தில் குதித்தது. இதனைத் தொடர்ந்து உஜ்ஜையின் கச்சோட் சப்-ஜெயில் துணை ஜெயிலர் சஞ்சீவ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் சிறைத்துறை பொறுப்பை வகிக்கும் முதன்மை செயலாளர் சுதேஷ்குமார், சிறை டி.ஜி.பி வி.கெ.பவார் ஆகியோரை அத்துறைச் சார்ந்த பொறுப்பிலிருந்து மாற்றியது மத்தியபிரதேச பா.ஜ.க அரசு.

இதற்கிடையே, தேசத்துரோக குற்றம் சுமத்தி சிறையிலடைக்கப்பட்ட 'சிமி' உறுப்பினர்கள் 5 பேரை பணம் வாங்கிவிட்டு விடுதலைச் செய்ததாக குற்றஞ்சாட்டை எழுப்பி, இச்சம்பவத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், சிறைத்துறை அமைச்சர் ஜகதீஷ் தேவரை அப்பதவியிலிருந்து நீக்கவேண்டுமென மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.

பெரும் சதி இதில் நடந்துள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கெ.கெ.மிஷ்ரா கூறுகிறார். இச்சம்பவத்தின் தீவிரத்தை கவனத்தில் கொண்டு சி.பி.ஐ விசாரணைக்கு முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் சிபாரிசுச் செய்யவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டு அதிகாரிகளின் மீது குற்றத்தை சுமத்தியதிலிருந்து அரசின் இரட்டை வேடம் தெளிவானதாக அவர் கூறுகிறார்.

அப்பாவிகளை விடுதலைச் செய்ததற்காக கூப்பாடு போடும் காங்கிரஸ்தான் மத்தியிலும் ஆட்சி செய்கிறது. ஆனால், நாட்டில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் ஒருவரின் பெயர் வெட்ட வெளிச்சமான போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது அக்கட்சி தலைமையிலான அரசு.

நேற்று முன்தினம் பாகிஸ்தான், ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள இந்தியாவுக்கு துணிச்சல் இல்லை என குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கஷ்மீர் குறித்த ஆவணப் படத்திற்கு இந்திய சென்சாரில் போராட்டம்

பிப்.6:அஷ்வின் குமார் இயக்கிய கால்பந்து விளையாட்டு பற்றிய இந்திய ஆவணப் படத்திற்கு சென்சார் போர்டு சான்றிதழ் வழங்குவதில் போராட்டம் நடந்து வருகிறது.

கஷ்மீரில் பிறந்த பாஷ்ராத் என்கிற திறமையான கால்பந்து வீரர், பிரேசிலில் கால்பந்து பயிற்சி எடுக்க முயற்சி செய்யும் போது தான் கஷ்மீரி என்பதால் அவர் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை சொல்லும் படம்.

இந்த இயக்குனர் இதற்கு முன் இயக்கிய 'லிட்டில் டெரரிஸ்ட்' என்கிற குறும்படம் 2004 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதிற்கு பரிசீலனை செய்யப்பட்டது. இவர் ரோடு டு லடாக்(2003), தெ பாரெஸ்ட்(2008), டேஸ்டு இன் டூன் (2010) போன்ற படங்களை இயக்கியவர். ஆஸ்கருக்கு பரிசீலனை செய்யப்பட்ட இவரது 'லிட்டில் டெரரிஸ்ட்' உலகெங்கும் நூற்றி மூன்று திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.

இப்போது இவர் இயக்கி இருக்கும் 'இன்ஷா அல்லாஹ் புட்பால்' (Inshaallah football) என்று பெயரிடப்படுள்ள இந்த படம் கடந்த அக்டோபர் மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற புசான் சர்வதேசிய திரைப்பட விழா' (Pusan International Film Festival) மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்ற 'துபாய் சர்வதேச திரைப்பட விழா' (Dubai International Film Festival) ஆகியவற்றில் கலந்து கொண்டு பாராட்டுகளையும் விருதுகளையும் வென்றது.

ஆனால் இந்தியாவில் வெளியிட இந்திய சென்சார் போர்டை அனுகியபோது முதலில் இந்த படத்தை தடை செய்ததாகவும் அதன் பின் 'ஏ' சான்றிதழ் வழங்கியதாக சொல்லப்படுகிறது. அதாவது இந்த படத்தின் இயக்குனர் அஷ்வின் குமார் டிசம்பர் 23, 2010 அன்று தனது 'ட்விட்டர்' பக்கத்தில் இந்த படத்தை இந்திய சென்சார் போர்டு தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது, இருந்தும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பிற்கு காத்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். இதனை மறுத்து ஷர்மிளா தாகூர் மறுநாள் 'தி ஹிந்து' நாளிதழில் பேட்டி அளித்து இருந்தார். இரு முறை நிராகரிக்கப்பட்டு பிறகு இந்த படத்திற்கு இறுதியில் 'ஏ' சான்றிதழ் வழங்கியதாக சொல்லப்படுகிறது.

கால்பந்து ரசிகர்களுக்கு என்று எடுக்கப்பட்ட திரைப்படமான 'இன்ஷா அல்லாஹ் புட்பால்' படத்தில் சித்தரவதை செய்வதை விவரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் சென்சார் சான்றிதழ் கொடுக்க மறுக்கப்படுகிறது என்று 'அவுட்லுக்' செய்தி வெளியிட்டு இருக்கிறது.

'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பத்தை மறுத்து இந்திய சென்சார் போர்டிற்கு பெரிய நெடிய கடிதம் ஒன்றை இயக்குனர் அஷ்வின் எழுதி 'ஃபேஸ்புக்' மூலம் வெளியிட்டு இருந்தார். அதில் 'ஏ' சான்றிதழ் வழங்கியதால் பெரும்பாலான திரையரங்குகள், தொலைக்காட்சி சானல்கள், டி.டி.ஹெட்ச் போன்றவற்றால் நிராகரிக்கப்படுவதை குறிப்பிட்டு மறுபரிசீலனை செய்து 'U/A' சான்றிதழ் வழங்க முயற்சித்து இருந்தார்.

டெஹல்கா இதழ் பேட்டியின் போது இதை ஷர்மிளா தாகூரிடம் கேட்ட போது அந்த காட்சி நீக்கப்பட்டால் அந்த படத்திற்கு 'U/A' சான்றிதழ் வழங்கலாம் என்று பதில் அளித்து இருக்கிறார். இதற்கு அஷ்வின் குமார் "இது கற்பனை கதை அல்ல, கஷ்மீரிகளின் வாழ்கையில் தினமும் நடக்கும் உண்மை கதையை உலகம் அறிவதற்காகவே எடுக்கப்பட்டது" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

source:ஊடகம்,

குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடி குற்றவாளி - சிறப்பு புலனாய்வுக்குழு அறிக்கை

புதுடெல்லி,பிப்.5:2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு தெளிவான பங்கிருப்பதாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) கண்டறிந்துள்ளது. பாரபட்சமாக நடந்துக் கொண்டும், நடவடிக்கைகள் மேற்கொள்ளாமலும், பாதிக்கப்பட்டவர்களை புறக்கணித்தும் கலவரத்திற்கு உதவியதாக மோடி மீது குற்றஞ்சாட்டி எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

2010 ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதி விசாரணையை பூர்த்திச் செய்து முத்திரை வைக்கப்பட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி சமர்ப்பித்த அறிக்கையை டெஹல்கா பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதிலும், வகுப்புவெறியை தூண்டிவிட்ட பத்திரிகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதிலும் மோடி தோல்வியடைந்தார் என அவ்வறிக்கை கூறுகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநிலத்தில் சட்ட-ஒழுங்கு பிரச்சனை திருப்தியாக உள்ளதாக குஜராத் அரசு தவறான அறிக்கை வெளியிட்டதையும் இவ்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

மோடியை குற்றமற்றவராக்கி எஸ்.ஐ.டி அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. மோடியின் மீதான நம்பிக்கையை தகர்ப்பதற்கான முயற்சிகளுக்கு கிடைத்த பதிலடி இவ்வறிக்கை என அப்பொழுது அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

பா.ஜ.கவின் எதிர்பார்ப்புகளுக்கு கடுமையான பதிலடி தரும்விதத்தில் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடியின் பங்கைக் குறித்து எஸ்.ஐ.டியின் அறிக்கை விரிவாக கூறுகிறது.

வகுப்புவாத சிந்தனையோடு செயல்பட்டார், உணர்ச்சியைத் தூண்டும் உரைகளை நிகழ்த்தினார், முக்கியமான ஆதாரங்களை அழித்தார், சங்க்பரிவார உறுப்பினர்களை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமித்தார், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுத்தார், இனப்படுகொலை நிகழும் வேளையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைகளில் சட்ட விரோதமாக அமைச்சர்களை நியமித்தார். பாரபட்சமின்றி நடந்துக்கொண்ட அதிகாரிகளை தொந்தரவுச் செய்தார் ஆகிய காரியங்களில் மோடி குற்றவாளி என எஸ்.ஐ.டியின் அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.

அரசுத்துறைகள் ஒன்று செயலிழந்து போனது அல்லது கலவரத்தை மேலும் கொளுந்துவிட்டெரியும் விதத்தில் செயல்பட்டது என அறிக்கை விரிவாக கூறுகிறது.

தீங்கு விளைவிக்கக்கூடிய, குற்றகரமான விமர்சனங்களை முஸ்லிம்களுக்கு எதிராக தெரிவித்த மோடி உயர்ந்த பதவியிலிருந்துக் கொண்டு சிந்தனையற்ற பொறுப்பற்ற முறையில் நடந்துக் கொண்டார் என எஸ்.ஐ.டியின் அறிக்கை கூறுகிறது.

எஸ்.ஐ.டியின் அறிக்கையில் முக்கிய பகுதிகள்:
1.குல்பர்க் சொசைட்டி, நரோடா பாட்டியா உள்பட மாநிலம் முழுவதும் முஸ்லிம்கள் கொடூரமாக தாக்கப்பட்ட பொழுது யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்வரும், அரசும் நடந்துக்கொண்டது. எல்லா வினைகளுக்கும் எதிர்வினைகள் உண்டு என்று கூறி முஸ்லிம்களுக்கெதிரான கலவரத்தை நியாயப்படுத்தினார் மோடி. கோத்ராவிலும், அதன் சுற்று வட்டாரங்களிலும் குற்ற வாசனையுடையவர்கள் இருக்கின்றார்கள் என மோடி குற்றஞ்சாட்டியது ஹிந்து-முஸ்லிம் பிரிவினரிடையே மேலும் உணர்ச்சியை தூண்டிவிட்டது.

2.அசோக் பட், ஐ.கே.ஜடேஜா ஆகிய அமைச்சர்களை அஹமதாபாத் நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலும், மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறையிலும் நியமித்தார். இனப்படுகொலை நடைபெறும் பொழுது போலீஸ் நடவடிக்கைகளை இவர்கள் சீர்குலைத்ததற்கு காரணம் உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருந்த மோடியின் ஆசீர்வாதத்தோடுதான். அசோக் பட் தொடர்ந்து வி.ஹெச்.பி தலைவர்களுடன் தொடர்புக் கொண்டிருந்தார் என்பதை அவரது மொபைல் ஃபோன் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

3.இனப் படுகொலைகள் நடைபெறும் வேளையில் பாரபட்சமற்ற முறையில் செயல்பட்ட நேர்மையான அதிகாரிகளை முக்கியத்துவம் இல்லாத துறைகளுக்கு மாற்றம் செய்தார். பா.ஜ.க தலைவர்களின் சொல்லுக்கு கீழ்படியாததால்தான் உள்துறை அமைச்சகத்தின் கீழ் இந்த இடமாற்றங்கள் நடந்தேறின.

4.இனப்படுகொலை நடந்த வேளையில் பரிமாறப்பட்ட வயர்லெஸ் செய்திகள் அழிக்கப்பட்டன. இக்காலக்கட்டத்தில் சட்டம் ஒழுங்கைக் குறித்து ஒரு ஆவணமும் மீதம் வைக்காமல் அழிக்கப்பட்டன.

5.தலைநகரான அஹ்மதாபாத்தில் ஏராளமான முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலைச் செய்யப்பட்ட பகுதிகளுக்கு செல்லாமல், ஒரேநாளில் 300 கி.மீ பயணம் செய்து ரெயில் எரிக்கப்பட்ட கோத்ராவுக்கு சென்று பாரபட்சமாக நடந்துக் கொண்டார். இந்த செயலுக்கு மோடி எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

6.வி.ஹெச்.பி, ஆர்.எஸ்.எஸ் தொடர்புடையவர்களை அரசுதரப்பு வழக்கறிஞர்களாக நியமித்தார். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களெல்லாம் ஏதேனும் வகையில் சங்க்பரிவார்களுடன் தொடர்புடையவர்கள்.

7.2002 பிப்ரவரி 28-ஆம் தேதி வி.ஹெச்.பி அறிவித்த சட்டவிரோத முழு அடைப்பினை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. முழு அடைப்பிற்கு பா.ஜ.க ஆதரவு தெரிவித்தது.

8.பிப்ரவரி 28-ஆம் தேதி நரோடாவில் மதியம் 12 மணி தாண்டிய பிறகும், மேகானி நகரில் மதியம் இரண்டு மணிவரையும் போலீஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை. அப்பொழுது நிலைமை கைநழுவிப் போனது.

9.நரோடா, குல்பர்க் சொசைட்டி கூட்டுப் படுகொலைகளில் போலீஸ் ஆழமாக விசாரிக்கவில்லை. வி.ஹெச்.பி, பா.ஜ.க தலைவர்களின் ஃபோன் ஆவணங்களை பரிசோதிக்கவில்லை.

10.அமைச்சர்களான கோர்தான் ஸதாஃபியா, மாயாபென் கோட்னானி ஆகியோருக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

ரெய்டுகள் நடத்துவதற்கும், கைதுச் செய்வதற்கும் அதிகாரமில்லாததால் மோடி உள்ளிட்டவர்களின் வாக்குமூலத்தை பதிவுச்செய்து, ஆவணங்களை பரிசோதித்தும் அறிக்கை தயார் செய்ததாக எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.

இனப்படுகொலையை நடத்த மோடியின் வீட்டில் ரகசியக் கூட்டம்.

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து 2002 பிப்ரவரி 27-ஆம் தேதி இரவு முதல்வரின் வீட்டில் வைத்து குஜராத் மூத்த அரசு அதிகாரிகளின் கூட்டம் நடத்தப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு ((SIT Report)) உறுதிச் செய்துள்ளது.

இந்த ரகசியக் கூட்டத்தில் வைத்துதான் முஸ்லிம்களை அதிகமாக கொலைச் செய்வதற்கும், அதற்காக அரசு துறைகளை செயலிழக்க வைக்கவும் நரேந்திர மோடியும் அவரது கும்பலும் தீர்மானித்தது என குல்பர் சொசைட்டியில் கொடூரமாக் கொலைச் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், இதனை மோடி மறுத்து வந்தார்.

27.02.02 அன்று கோத்ராவுக்கு சென்று அஹ்மதாபாத் திரும்பிய பிறகு ரகசியக் கூட்டத்தை கூட்டினார் என ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை கூறுகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் நடத்திய விசாரணை விபரங்கள் இவ்வறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன.

மோடி, முதன்மைச் செயலாளரின் பொறுப்புவகித்த ஸ்வர்ணகாந்த்வர்மா, உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பேற்றிருந்த கூடுதல் முதன்மைச் செயலாளர் அசோக் நாராயணன், டி.ஜி.பி.கே.சதுர்வேதி, அஹ்மதாபாத் போலீஸ் கமிஷனர் பி.சி.பாண்டே, உள்துறைச் செயலாளர் கெ.நித்யானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளர் பி.கே.மிஷ்ரா, மோடியின் செயலாளர் அனில் முகிம் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஸ்வர்ணகாந்த் வர்மா, அசோக் நாராயணன் ஆகியோரை விசாரித்த பொழுது கேட்கப்பட்ட, ஹிந்துக்களுக்கு தங்களது கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டுமென முதல்வர் கட்டளையிட்டாரா? என்ற கேள்வியை ஒப்புக்கொள்ளவோ, மறுக்கவோ இருவரும் தயாராக இல்லை என எஸ்.ஐ.டியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு மிஷ்ராவை குஜராத் மின்சாரா வாரிய ஒழுங்குமுறை கமிஷனின் செயலாளராகவும், பி.சி.பாண்டேயை போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் தலைவராகவும் குஜராத் மோடி அரசு நியமித்தது.

தற்போதைய குஜராத் மாநில போலீஸ் வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநராக செயல்படுகிறார் நித்யானந்தம். முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு அசோக் நாராயணன் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். மோடி மற்றும் குஜராத் அரசுக்கெதிராக எதுவும் பேசாமலிருக்கத்தான் பாண்டே, மிஷ்ரா, அசோக் நாராயணன் ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டன.

இனப்படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து குஜராத் ரெவனியூ அமைச்சராக இருந்த ஹரண் பாண்டியா, நீதிபதி ஹோஸ்பேட் சுரேஷ், நீதிபதி பி.பி.சாவந்த் ஆகியோர் சுதந்திர தீர்ப்பாயத்திடம் வாக்குமூலம் அளித்தையும் எஸ்.ஐ.டியின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு மர்மமான முறையில் பாண்டே கொல்லப்பட்டிருந்தார்.

விசாரணையின் போது மோடி கூறியதெல்லாம் பொய்
முஸ்லிம் இனப்படுகொலையில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட குற்றங்களில் பங்குள்ளதாக கண்டறியப்பட்ட குஜராத் முதல்வர் மோடி; விசாரணையின்போது தெரிவித்ததெல்லாம் பொய் என எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் (SIT Report) கூறியுள்ளது.

ஆதாரங்களை முன்வைத்து கடந்த மார்ச் 28-ஆம் தேதி எஸ்.ஐ.டி காந்திநகர் அலுவலகத்தில் வைத்து விசாரணை அதிகாரி எ.கெ.மல்கோத்ரா கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறாமல் மழுப்பியும், மறந்துவிட்டதாக நடித்தும், பொய்களைக் கூறியும் நழுவினார் என எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.

கவ்ரவ் யாத்திரையின் ஒருபகுதியாக கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி மெஹ்ஸானா மாவட்டத்தில் பெச்சாரியில் மோடி நிகழ்த்திய உணர்ச்சியைத் தூண்டும் உரையின் ஆவணத்தை மேஜையின் வைத்துவிட்டு இதனைக் குறித்து மோடியிடம் மல்கோத்ரா கேள்வி எழுப்பினார்.

"ஏன் சகோதரர்களே நாம் அகதி முகாம்களை திறக்கிறோம்?குழந்தைகளை உற்பத்திச் செய்யும் மையங்களை திறக்கத்தான் வேண்டுமா? நாம் முன்னேற்றமடைய குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமா? நமக்கு ஐந்து அவர்களுக்கு இருபத்தி ஐந்தாகும். அவர்களை இதிலிருந்து விலக்கவேண்டும். அந்த மதத்தினரை நம்முடைய வழியில் கொண்டுவர வேண்டும். ஏன் ஏழைகளுக்கு பணம் சென்று சேரவில்லை?" -இந்த உரையின் பகுதியைத்தான் மோடியின் முன்னால் வைத்துவிட்டு இந்த உரை முஸ்லிம்களுக்கு எதிரானது அல்லவா? என்பது மல்கோத்ராவின் கேள்வியாகும். இது அரசியல் ரீதியான உரை என மோடி மழுப்பியுள்ளார்.

கோத்ரா கலவரத்தில் தேசம் நடுங்கி நிற்கும் வேளையில் அடிக்கு பதிலடி உண்டாகும் என 2002 மார்ச் ஒன்றாம் தேதி 'ஸீ' டி.விக்கு அளித்த பேட்டியில் மோடி கூறியதைக் குறித்து அடுத்த வினா தொடுக்கப்பட்டது.

கோத்ரா பகுதியிலுள்ளவர்கள் கிரிமினல் குணத்தைக் கொண்டவர்கள். ஏற்கனவே அவர்கள் ஒரு டீச்சரை கொலைச் செய்துள்ளனர். அதற்கு பதிலடிதான் அவர்கள் அனுபவிக்கிறார்கள் என தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த மோடி, தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து எட்டு ஆண்டுகள் கழிந்துள்ளதால் அன்று உபயோகித்த வார்த்தைகள் ஞாபகத்தில் இல்லை என தெரிவித்துள்ளார்.

கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மழுப்பலான நழுவும் விதமான பதில்களை கூறியுள்ளார் மோடி.

மோடிக்கு எதிராக ஒரு எஃப்.ஐ.ஆர் கூட பதிவுச் செய்ய எஸ்.ஐ.டியால் முடியவில்லை.

கோத்ரா கலவரத்தில் அமைச்சர்களின் பங்கு, சில போலீஸ் அதிகாரிகளின் தலையீடு, வி.ஹெச்.பி, பா.ஜ.க தலைவர்களுடன் மோடி நடத்திய உரையாடல், குல்பர்க் சொசைட்டி கொடூர கூட்டுப் படுகொலையின் வேளையில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி மோடியை அழைத்து உதவித் தேடியது உள்பட பல்வேறு கேள்விகளுக்கு மோடி தவறான பதில்களை அளித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

வி.எச்.பி. அகில உலகத் தலைவர் அசோக் சிங்காலின் பேட்டி!

விசுவ ஹிந்து பரிஷத்தில் அகில உலகத் தலைவர் அசோக் சிங்காலின் பேட்டி இவ்வார கல்கி ஏட்டில் (6.2.2011) வெளிவந்துள்ளது.

ஹைதராபாத் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்புகளிலும் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்தக் குண்டு வெடிப்பு விசாரணைகள் சரியான திசையில் போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென அசீமானந்தரைக் கைது செய்து வாக்கு மூலம் வாங்குகிறார்கள்.

அசீமானந்தர், குஜராத்தில் நடைபெற்ற கிறிஸ்துவ மதமாற்றத்தை அதிகம் தடுத்தவர். அவரை எப்படியாவது முடக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டது சோனியா அரசு. அதற்கு ஏற்ப கைது செய்து வாக்குமூலம் வாங்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில்கூட சோனியாவுக்குப் பங்கு உண்டு என்று நான் நம்புகிறேன் - என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைப் படிக்கிற விவரம் தெரிந்த எவரும் வாயால் சிரிக்க முடியாத அளவுக்குத் திணறுவார்கள். இன்னொரு பழமொழியும் எல்லோருக்கும் நினைவிற்கு வரும்.

பிடிச் சோற்றில் பூசனிக்காயை மறைக்கப் பார்க்கும் மோசடி இது என்பது எடுத்த எடுப்பிலேயே புரிந்துவிடும். அதுவும் காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் (?) ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதில்கூட சோனியாவுக்குப் பங்கு உண்டாம் - அப்படி அவர் நம்புகிறாராம்.
எந்த எல்லைக்கும் சென்று புளுகுவது, உண்மைகளை திரிப்பது என்பது இந்தத் திரிநூல் கூட்டத்துக்கு கைவந்த கலையாகும்.

அந்தப் பாணியிலேயே இந்த வி.எச்.பி. முதியவரும் மனம் போன போக்கில் பிதற்றியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள பிஜேபியினர், சங்பரிவார்க் கூட்டத்தினர்கூட ஜெயேந்திர சரஸ்வதியின் கைதுக்கு சோனியாதான் காரணம் என்று சொன்னதில்லை.

அமர்த்தியா சென்னுக்கு நோபல் பரிசு கிடைத்ததுகூட கிறிஸ்துவ சதி என்று சொன்னவர்கள் வேறு எப்படிதான் சொல்வார்கள் என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்.

அய்தராபாத் மக்கா மஸ்ஜித் 2007 மே 17ஆம் தேதி குண்டு வெடிப்புக்கு இலக்கானது. ஒன்பது பேர் பலியாகினர்.

தொடக்கத்தில் இந்தக் குண்டு வெடிப்புக்குக் காரணம், சிமி இயக்கத்தைச் சேர்ந்த முசுலிம் தீவிரவாதி கள்தான் என்று 70 பேர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.

அதன்பிறகுதான் காவி தீவிரவாதிகள்தான் இதற்குக் காரணமானவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டனர். இதில் ஒன்பது பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் மிக முக்கியக் குற்றவாளியான சுனில்ஜோஷி, அப்ரூவராக மாறி விடுவாரோ என்ற சந்தேகத்தின் பெயரில் சங்பரிவார்க் கும்பலாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிய வருகிறது.

ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் முக்கியக் குற்றவாளியான அசீமானந்தர் என்ற சாமியார் வசமாக சிக்கிக் கொண்டார்.

இந்தியன் குற்றவியல் சட்டம் (இ.பி.கோ.) 164ஆம் பிரிவின்கீழ் மாஜிஸ்டிரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தில் இந்தச் சாமியார் உண்மைகளைக் கக்கிவிட்டார். இந்தச் சதியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்றும் அடையாளம் காட்டியுள்ளார்.

ஆனால் வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் கூறுகிறார் - அசீமானந்தர் ஒன்றுமே தெரியாத பாப்பா மாதிரி அவரிடம் தவறாக வாக்குமூலம் வாங்கி விட்ட தாகக் கரடி விடுகிறார்.

மாலேகான் குண்டுவெடிப்பின் உண்மைக் குற்ற வாளிகளைக் கண்டுபிடித்த, மகாராட்டிர தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்துத்துவா காவி தீவிரவாதிகள் இருக்கின்றனர் என்று மத்திய அமைச்சர் அந்துலேயே கூறிடவில்லையா?

“Who Killed Karkare?’’ என்னும் விரிவான நூலினை மகாராட்டிர மாநில காவல்துறை முன்னாள் தலைவர் முஷ்ரப் எழுதியுள்ளாரே, இதுவரை மறுப்பு உண்டா?

தன் உயிருக்குக் குறிவைக்கப்பட்டுள்ளது என்று அவர் சுடப்படுவதற்குமுன்புகூட தம்மிடம் கூறியதாக திக் விஜய்சிங் அடித்துச் சொல்லியுள்ளாரே! கார்கரேயின் மனைவிக்கும் அந்த சந்தேகம் இருந்து வருகிறதே!

அஜ்மீர் தர்கா, அய்தராபாத் மெக்கா மசூதி, மகாராட்டிர மாநில மாலேகான்குண்டு வெடிப்பு - இவை மூன்றுக்கும் காரணமானவர்கள் ஒரே கும்பலைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக மத்தியப் பிரதேச மால்வா பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அத்தனைப் பேரும் இந்துத்துவா காவிக் கும்பல்காரர்கள் என்பதற்கான தடயங்கள் (உரையாடல்கள் உள்பட) வலுவாகக் கிடைத் துள்ளனவே.

இவற்றிற்குப் பிறகும்கூட விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் காவிக் கும்பலின் கற்புக்கு உத்தரவாதம் கொடுப்பது சொல்லுபவர்களின் யோக்கிய தாம்சத்தின் முகத்திரையைத்தான் கிழித்துக் காட்டும்.

காந்தியாரைப் படுகொலை செய்தவன் இந்து அல்ல - முசுலிம்தான் என்று பிரச்சாரம் செய்த கும்பல் அல்லவா! நாதுராம்கோட்சே என்ற அந்தக் கொலைகார மராட்டிய பார்ப்பான் தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டிருக்கவில்லையா?

அதே ரகத்தில்தான் சிங்கால் பேட்டி கொடுத்துள்ளார். இந்தப் பொய் முகங்களை மக்கள் அடையாளம் காண்பார்களாக!

nantri : http://www.kovainews24x7.com/2011/02/blog-post_8113.html


செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

முஸ்லிம்கள் தேர்வு எழுத அனுமதி மறுத்த தொல்லியல்துறைக்கு அபராதம்!

தொல்லியல்துறையில் பணியில் சேர்வதற்கான தேர்வு எழுத முஸ்லிம்களுக்கு அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அந்தத் துறைக்கு அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நல்ல முகமது என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:

தொல்லியல்துறையில் ஹஎபிகிராபிஸ்ட்' ஹகியூரேட்டர்' (காப்பாளர்) உள்ளிட்ட 4 பதவிகளில் சேர்வதற்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. நான்இ 4 பதவிக்கும் விண்ணப்பித்தேன். கியூரேட்டர் பதவிக்கு முன்னுரிமை அளித்திருந்தேன். ஆனால் அதற்கான தேர்வில் கலந்துகொள்ள முடியாதபடி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

நான் இந்து மதத்தை சேராதவர் என்பதால் எபிகிராபிஸ்ட் உள்ளிட்ட 3 பணிகளை வழங்க முடியாது என்றும்இ கியூரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றும் காரணம் கூறி எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர்.

இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 20.11.09 அன்று பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து தேர்வை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவுக்கு பதில் மனுவை தாக்கல் செய்த தொல்லியல்துறைஇ தொல்லியல்துறையில் இந்து சமயம் பற்றி தெரிந்திருந்தால்தான் எபிகிராபிஸ்ட் போன்ற பதவிகளுக்கு வரமுடியும். ஆனால் அவர் இஸ்லாமியர் என்பதால் அந்தப் பதவிக்கு அவரை ஏற்கவில்லை. கியூரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தோம் என்றும் கூறியிருந்தது.

இந்த வழக்கை நீதிபதி சந்துரு விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

தொல்லியல்துறைஇ இந்து சமய துறையின் கீழ் வருவதல்ல. அங்கு சில பணிகளுக்குத்தான் இந்து சமயத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். கிறிஸ்தவம்இ இஸ்லாமியம்இ புத்தமதம் ஆகிய மதங்களுக்கான தொல்லியல் விஷயங்களும் உள்ளன. எனவே தொல்லியல் பணிகளை இந்துக்களுக்குத்தான் என்று மதத்தின் அடிப்படையில் ஒதுக்க முடியாது.

கியூரேட்டர் பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று முன்கூட்டியே தெரிவிக்காமல் பிறகு அந்த காரணத்தை கூறி விண்ணப்பத்தை நிராகரிப்பது சரியல்ல. எனவே மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக 12 வாரங்களுக்குள் பிரதிவாதிகள் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். மனுதாரருக்கு வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரத்தை பிரதிவாதிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

துனிசியா : மல்லிகை புரட்சியின் மறுபக்கம்


மல்லிகை புரட்சி

நன்றி : சகோ. :

துனிசியாவின் தேசிய மலர் மல்லிகை. துனிசிய புரட்சிக்கு 'மல்லிகை புரட்சி' என்று முதன்முதலில் தன் வலைப்பதிவில் பெயரிட்டவர்... பிரபல ஊடகவியலாளரும் ஒரு பிரபல துனிசிய பதிவருமான ஜியாத் அல் ஹானி..! இந்த புரட்சி பற்பல வருடங்களாக உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்த நெருப்புதான்.

1956-ல் பிரான்ஸ் அரசு துனிசியாவிற்கு சுதந்திரம் கொடுத்து ஆட்சியை சுதந்திரம் கேட்ட ஒரு கட்சி RCD (Constitutional Democratic Assembly) -யின் தலைவர் ஹபீப் பொற்குய்பாவிடம் ஒப்படைத்து சென்றது. இவர் அதிபரானார். 1975-ல் இந்த கட்சி அரசு இவரை 'காலமுள்ளகாலம் வரை அதிபராக' நியமித்தது. பின்னர், 1987-ல் இவர் புத்தி சுவாதீனமற்று போய்விட்டதால், அப்போதைய பிரதமர் ஜைனுல் ஆபிதீன் பின் அலி அதிபரானார். முதலில் எதிர்க்கட்சி என்றபெயரில் உள்ள அனைவரையும் 'அப்புறப்படுத்தினார்'. அப்போது நன்கு வளர்ந்திருந்த பிரதான எதிர்க்கட்சியான 'நஹ்டா' என்ற இஸ்லாமிய கட்சிதான் அரசின் முக்கிய அழித்தொழிப்பு இலக்கு. அதன் தலைவர் ரஷித் கொன்னோச்சி நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டார். (23 ஆண்டுகள் கழித்து முந்தாநாள்தான் நாடு திரும்பியுள்ளார்)


அதன் பின்னர், அதிபர் அலி தேர்தலில் நின்றார். பல கட்சி போட்டி, மும்முனை போட்டி, இருகட்சி தேர்தல் மாதிரி அல்லாமல் இது ஒரு கட்சி தேர்தல் முறை. இவரின் பிரபலமான 'நமக்கு நாமே ஓட்டளிப்பு திட்டப்படி'...
99,27% ஓட்டுக்கள் 1989 தேர்தலிலும்,
99,91% ஓட்டுக்கள் 1994 தேர்தலிலும்,
99,45% ஓட்டுக்கள் 1999 தேர்தலிலும்,
99,49% ஓட்டுக்கள் 2004 தேர்தலிலும்,
89,62% ஓட்டுக்கள் 2009 தேர்தலிலும் பெற்று அமோக வெற்றி ஈட்டி தொடர்ந்து அதிகாரத்தில் அதிபராய் இருந்தார். முக்கியமான விஷயம் என்னவெனில் இவர் கட்சி ஒரு தொகுதியில் கூட தோற்றதில்லை..! இப்படிப்பட்ட ஒரு உன்னத மக்கள் ஆதரவு பெற்ற அதிபரை, ஒட்டுமொத்த மக்களும் சேர்ந்து ஓராண்டுக்குள் நாட்டை விட்டே வெளியேற்றியது உண்மையானால், அந்த அனைத்து தேர்தலிலும் அதிபர் 'வெற்றி(?)பெற்றது' எப்படி உண்மையாக இருக்கும்..?
2005-ல், உலக காட்சி ஊடகங்கள் மற்றும் ஐநா-வின் நேரடி மேற்பார்வையில் நேர்மையாக நடைபெற்ற பாலஸ்த்தீன ஜனநாயக தேர்தலில், எதிர்பாராத வகையில் ' மேற்கத்தியரின் நண்பர்கள்' ஃபதாவிற்கு, பதிலாக 'எதிரிகளான-பயங்கரவாத' ஹமாஸ் வெற்றி பெற்று விட அனைத்து வாக்குறுதிகளுடன் சேர்த்து மொத்த தேர்தலையே குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து 'இது செல்லாது' என்று அழுகுணி ஆட்டம் ஆடிய 'உலக ஜனநாயக காவலர்'களான அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் மற்றும் பலர், இன்று வரைக்கும் இந்த துனிசிய ஜனநாயக தேர்தல் படுகொலை பற்றி மூச்சு விட்டதில்லை. மாறாக, மற்ற அரபுலக நாடுகளுக்கு துனிசியா ஒரு முன்மாதிரி நாடு என்றுதான் பலமாக பலமுறை பாராட்டி இருக்கிறார்கள்.

ஏன்? என்ன காரணம்? அதிபர் அலியின் ஆட்சிமுறை மற்றும் இஸ்லாமிற்கு எதிராக அவர் இயற்றிய சட்டங்கள்தான் காரணம். ஒரு குஜராத் முஸ்லிமிற்கு கூட துனிசியாவில்... ஒருநாள் கூட வாழ பிடிக்காது. அப்படி என்னென்ன கடும் சட்டங்கள் அவை?
முதலில் மக்கள் யாரும் எங்கும் பொதுக்கூட்டம் போட முடியாது.

பத்திரிக்கைகள் காட்சி ஊடகங்களின் செய்திகள் உட்பட அனைத்தும் அரசு தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளிவரும்.

வீடுகளிலும் கூட்டமாகவோ குழுவாகவோ இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய முடியாது.
ஒரு முஸ்லிம்... ஒரே ஒரு பள்ளிவாசலை மட்டுமே பயன்படுத்த முடியும். ஐடி கார்டு பஞ்சிங் சிஸ்டம் உள்ளது. அவர் வேறு பள்ளிவாசல் சென்று தன் கார்டை தேய்த்தால் பள்ளிவாசல் கதவு திறக்காது. அதாவது மக்களுக்குள் புதியபழக்கம் ஏற்படாமல் தடுக்க இந்த ஏற்பாடு..!

தொழுகை நேரம் மட்டுமே பள்ளிவாசல் கதவு லாக் சிஸ்டம் திறந்திருக்க அனுமதி.

கொடுக்கப்பட்ட நேரத்திற்கு அதிகமாக பூட்டப்படாமல் தொழுகையில் ஈடுபட்டால் அடி-உதை.

வெள்ளிக்கிழமை ஜும்மா சொற்பொழிவில் கூட இமாம் அதிபரின் சாதனைகள் திட்டங்கள் பற்றி மட்டும்தான் புகழ்ந்து பேச வேண்டும்.

தொழுகைக்கு அழைக்க பாங்கு சொல்வதற்கும் கூட தடை.

ஒரு கணவன் இரண்டாவது திருமணம் செய்ய தடைச்சட்டம்.

கருக்கலைப்புக்கு ஆதரவாக அதை செய்ய வலியுறுத்தி சட்டம்.

நாட்டின் கடற்கரையை ஐரோப்பிய, அமெரிக்க மியாமி பீச் போல அனைத்து ஆபாச கூத்துக்களுக்கும் மதுக்கேளிக்கைகளுக்கும் திறந்து விடப்பட்டது.

பெண்களின் இஸ்லாமிய ஹிஜாப் ஆடைமுறைக்கு நாடெங்கும் தடை. மீறி அணிந்தால் தண்டனை.

முஸ்லிம் ஆண்கள் தாடிவைக்க, தொப்பி, தலைப்பாகை அணிய தடை. மீறினால் தண்டனை.

சிறைவாசிகள் குர்ஆன் ஓத, தொழ, நோன்புவைக்க தடை.

இஸ்ரேலுடன் கூட்டணி போட்டு அவர்களின் தூதரகம் துனிசியாவில் திறப்பு.

எங்கும் லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறை, ஒடுக்குமுறை, மனித உரிமை மீறல், காட்டுமிராண்டி தர்பார்.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு... (முக்கியமாய் அவர்கள் அனைவரும் அதிபரின் மனைவி மக்கள் மற்றும் உறவினர்) எக்கச்சக்க வருவாய்... எந்தளவு என்றால், நாட்டின் கடனை விட இவர்களின் இலாபம் அதிகம் எனும் அளவிற்கு..! (உபயம் விக்கிலீக்ஸ்)

வேலையின்மை, வறுமை என சாமானிய மக்கள் பசித்திருக்க, அதிபர் தன் ஆடம்பர உல்லாச பங்களாவில் புசித்திருக்க... நீண்ட காலமாய் கனன்று கொண்டிருந்த இந்த தீக்கங்கு திடீரென்று பற்றி எரிய ஆரம்பித்தது எப்போதெனில்... ஒரு வேலையில்லா பட்டதாரி தன் வயிற்றுப்பிழைப்பிற்காக பழக்கடை திறக்க, 'அதற்கு அரசு அனுமதி இல்லை' எனக்கூறி கடையை முதலுடன் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் நாசம் பண்ண, வெறுத்துப்போன இளைஞன் தனக்குத்தானே தீ வைத்துக்கொண்ட போதுதான்..!

முஸ்லிம்கள் இவ்வுலகில் வாழ்வதே மறுமைப்பேருக்காகத்தான். ஆனால், எவ்வளவோ மோசமான நிலையிலும் அம்மக்கள் சமாளித்து இவ்வுலகில் வாழக்கற்றிருந்தாலும், இப்போது 'முதலுக்கே மோசம்' என்பதுபோல, "உனது இந்நாட்டில் வாழ்வதை விட எனக்கு நரகம் எவ்வளவோ மேல்" என்று மருத்துவமனைக்கு பார்க்க வந்த அதிபரிடம் சொல்லாமல் சொல்லிவிட்டது அந்த இளைஞனின் தற்கொலை..!

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை !

[[[ ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஹதீஸ்: ஸுனன் நஸயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706) ]]] —இதில் இருக்கிறதே அழகிய முன்மாதிரி..!

ஒருவேளை அந்த முஸ்லிம் தலைவர் அல்லாஹ்வின் வேதத்தைக்கொண்டு மக்களை வழி நடத்தாமல், நபிவழியை பேணி வாழாமல், தன் மனம்போன போக்கில், அமெரிக்கா/பிரான்ஸ் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு ஹலாலை ஹராமாக்கி, ஹராமை ஹலாலாக்கி, மக்களை துன்புறுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்று குவித்துக்கொண்டு, இஸ்லாத்திற்கு எதிரான போக்கில் அடக்குமுறையினால் சர்வாதிகார ஆட்சி நடத்தினால்???

அந்த கேடுகெட்ட ஆட்சியாளர்களுக்கு கட்டுப்படவோ கீழ்ப்படியவோ அவசியமில்லை என்பதுதானே இஸ்லாமிய அடிப்படைவாதம்..!
'இனியும் பொறுமையுடன் இருந்தால்...முஸ்லிம்கள் என்ன... நாம் மனிதர்களே இல்லை' என்ற இறுதி நிலையில்தான் துனிசியா மக்களின் கிளர்ச்சி, இணையமும், உள்நாட்டு ஊடகமும் முற்றிலும் தடை செய்யப்பட்ட நிலையில், சேட்டிலைட் சேனலான அல்ஜசீரா மூலம் மாபெரும் எழுச்சியாக உருவெடுக்கப்பட்டு எல்லா மக்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு, புரட்சியாக மாறி அதிபரை பதவி இறங்க கோர வைத்தது.

மேலும், எங்கோ ஓர் இடத்தில் இரு ராணுவ வீரர்கள் புரட்சியாளர்களுடன் இணைந்து கட்டித்தழுவி முத்தமிடும் விடியோ கிளிப்பிங்கையும், இரு காவலர்கள் மக்கள் புரட்சியை பார்த்து ஆனந்தக்கண்ணீர் வடித்து அழுத விடியோ கிளிப்பிங்கையும் திரும்பத்திரும்ப அல்ஜசீரா டிவி போட்டுக்காட்டி, "ஓ மக்களே, உங்களுக்கு பின்னால் போலிசும் மிலிட்டரியும் உள்ளன, தைரியமாக போராடுங்கள்" என்ற கருத்து மக்கள் மனதில் ஊன்றப்பட்டது. இது இருதரப்பினரையும் சகோதரர்களாய் பார்க்க வைத்தது.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல ராணுவம் புரட்சியாளர்களுடன் சேர்ந்து காவலர்களை எதிர்க்கவும் புரட்சி முழுமைபெற்று, அதிபர் தம் குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓட வைத்த பெரும் மக்கள் புரட்சியாக மலர்ந்து 'மல்லிகை புரட்சி' எனும் பெயரில் வெற்றிகரமாய் இனிதே நிறைவுற்றது..! அதுவரை நாட்டை கொள்ளையடித்து சேமித்து வைத்திருந்த 1500 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளுடன் அதிபர் குடும்பம் தப்பியது மட்டுமே சிறு சறுக்கல்.

அதன் மறுபக்கம்

ஓட்டம் எடுத்த அதிபர் ஒவ்வோர் நண்பத்துவ நாடாய் சென்று யாரும் இடமளிக்கா நிலையில் இறுதியில் சவூதியில் தஞ்சம்..! என்ன கொடுமை..? எந்த பாங்கு ஒலியை கேட்கக்கூடாது என்று நினைத்தாரோ அதையே ஐந்து வேலை கேட்கும் ஒரு நாட்டில், முஸ்லிம்கள் மட்டுமில்லாமல் மற்ற சமய மக்களையும் ஹிஜாப் ஆடை பேணச்சொல்லும் ஒரு நாட்டில் மனைவியுடன் அதிபர் தஞ்சம் புகுந்திருக்கிறார். இதுதான் காலத்தின் கோலம்..!

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராகவோ அல்லது அவர்களின் நண்பர்களுக்கு எதிராகவோ, பொதுவாக முஸ்லிம்கள் எந்த எதிர்ப்பு செயலை செய்தாலும்... மேற்கத்திய ஊடகங்களால் அதற்கு இஸ்லாமிய சாயம் பூசப்படும். ஆனால், இந்த பிரம்மாண்ட புரட்சிக்கு "இஸ்லாமிய புரட்சி" என்றோ "முஸ்லிம்களின் எழுச்சி" என்றோ மறந்தும் கூட சொல்லவில்லை.

அதேபோல், இஸ்லாமிய நாடுகளில் ஏதும் ஒரு துப்பாக்கிச்சூடோ, மரண தண்டனையோ அரசால் நிகழ்ந்தால் உடனே அதை 'இஸ்லாமிய அடிப்படைவாதம்', என்பர். ஒரு நாட்டின் ராணுவத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராடினால் அவர்களுக்கு 'இஸ்லாமிய பயங்கரவாதிகள்' என்றும் பெயரிடுவர். இங்கே இதெல்லாம் காணோம். காரணம் 'மல்லிகை' என்ற முகமூடியுடன் அவ்வளவு சுத்தமாக தெளிவாக 'இஸ்லாமிய புரட்சி' நடந்திருக்கிறது.

தற்போது இடைக்கால அதிபராய் பதவி ஏற்றவறும் மற்றும் ஆளும் இடைக்கால அரசிலும் ஜைனுல் ஆபிதீன் பின் அலியின் அதே (RCD) கட்சியினர்தான் உள்ளனர். அதாவது கதவு வழியாக கழுத்தைப்பிடித்து வெளியே தள்ளப்பட்டோர் ஜன்னல் வழியாக மீண்டும் உள்ளே வந்திருக்கின்றனர். இது நிச்சயம் நிலைக்காது. பெருவாரியான மக்களுக்கு அந்த கொள்ளைகூட்ட கட்சியே பிடிக்க வில்லை. முழுமையான மாறுதலே சரியான முடிவாக இருக்கும்.

ஏனெனில், முன்னர் தடை செய்யப்பட்ட 'நஹ்டா' என்ற இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் இப்போது மீண்டும் துனிசியா வந்துள்ளார். வெவ்வேறு நாடுகளில் இருந்த அந்த இயக்கத்தினரும் தாயகம் திரும்புவதால் இயக்கம் மீண்டும் வலுப்பெறுகிறது. ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களால் விமான நிலையத்தில் 'அல்லாஹு அக்பர்' என்ற முழக்கங்களுடன் நேற்று முன்தினம் வரவேற்கப்பட்ட ரஷித் கொன்னோச்சி அளித்த பேட்டியில், "நான் அரபுலகம் அனைத்துக்குமாய் திரும்பி இருக்கிறேன். நான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. அனால், ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்துவதிலும், கட்சிகளை தடை செய்வதை நிறுத்தி, அதன்மூலம் ஒருகட்சி தேர்தல் முறையை மாற்றி இனி பல கட்சி தேர்தல் முறையை நிறுவி, ஊழலையும் அடக்குமுறையையும் தகர்ப்பதிலும் உதவுவதே லட்சியம்" என்று கூறினார்.

98% முஸ்லிம்கள் வாழும் நாட்டில், 'Secular Rule' என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிரான சர்வாதிகார ஆட்சி வீழ்ந்தது. நிச்சயம் இது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கும் முக்கியமாக இஸ்ரேலுக்கும் பெரிய அடி. இன்ஷாஅல்லாஹ், இனிதான் துனிசியா முஸ்லிம்களின் நாடாக மாறக்கூடும்.