வியாழன், 28 மார்ச், 2013

இணையதளம், ஃபேஸ்புக் பயன்பாடுகளும் முஸ்லிம்கள் அணுகவேண்டிய முறைகளும் - எம். தமிமுன் அன்சாரி

எழுத்தும், பேச்சும் மாபெரும் அறிவாயுதங் களாகும். இவ்விரு திறமைகளும் ஒருவருக்கு அமையுமானால் அவர் மிகச்சிறந்த தலைவராக வும், வழிகாட்டியாகவும், நிர்வாகியாகவும் உருவாக வாய்ப்புகள் உண்டு.

இரண்டையும் சரிவரப் பயன்படுத்தாதவர்களும், தவறாகப் பயன்படுத்துபவர்களும் வாய்ப்பு களை இழந்தவர்களின் பட்டியலில்தான் இடம் பெறுவார்கள்.

பேச்சாளர்களை விட நாட்டில் எழுத்தாளர்கள் அதிகம். கவிதை, கட்டுரை, இலக்கியம் என பல்வேறு தளங்களில் இவர்களின் பங்களிப்புகள் அமைகின்றன. சிறந்த பேச்சு ஏற்படுத்தும் தாக்கத்தைவிட, சிறந்த எழுத்து ஏற்படுத்தும் தாக்கம் அதிகமாகும்.

அது நின்று; நிதானித்து; யோசித்து; ஒரு மனிதனை நீண்டகால சிந்தனைப் போராட் டத்திற்கு வழிவகுக்கும்.

இன்று சமூக இணையதளங்கள் வந்தபிறகு அதைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் தங்களை எழுத்தாளர்களாக உருவாக்கிக் கொள்கிறார்கள். அத்தகைய நல்வாய்ப்பை இணையதளங்களும், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களும் வழங்குகின்றன.

ஒரு புத்தகம் அல்லது பத்திரிக்கையில் எழுதும் கருத்துகள் போய்ச் சேரும் வாசகர் எண்ணிக்கையை விடக் கூடுதலான இலக்கை இவைகள் அடைய வழிவகுக்கின்றன. அதுவும் விரைவாக!

இந்தியாவில்; தமிழகத்தில் சிறுபான்மை முஸ்லிம் சமூகம் ஒரு காலத்தில் தங்களது கருத்துக்களைப் பரப்பவும், வாதிடவும், தவறான கருத்துகளுக்கு பதில் சொல்லவும் வாய்ப்புகளும், வழிகளும் இல்லையே என ஏங்கியது.

அந்த ஏக்கத்தை இணைய தளங்களும், ஃபேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களும் ஓரளவு நிவர்த்தி செய்திருக்கின்றன. படித்தவர்களும், வேலை நிமித்தமாக வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழ்பவர்களும் இதில் பெரும் பங்காற்றுகிறார்கள்.

இதில் ஆறுதல் அடையும் அதேநேரம், துயரமடையச் செய்யும் சில நிகழ்வுகளும் நடக்கின்றன.

சில இளைஞர்கள் உணர்ச்சிப் போக்கில் கருத்துக்களைப் பதிகிறார்கள். சிலர் தாங்கள் ஏதோ ‘முஸ்லிம் நாடுகளில்’ வாழும் மன நிலையிலும் கருத்துக்களைப் பதிகிறார்கள். சிலர் தங்களது கருத்துக்களை முஸ்லிம்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்ற மனநிலையில் பதிகிறார்கள். சிலர் நடுநிலையாளர்களையும் எதிரிகளாக்கும் வகையில் பொறுப்பற்றத்தனமாக கருத்துக்களைப் பதிகிறார்கள்.

இது சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. பண்பாடு இல்லாமல், நாகரீகம் இல்லாமல், ஒரு உன்னதமான சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்ற பொறுப்பு இல்லாமல் சிலர் வெளியிடும் கருத்துக்களும், ஆவேசமானப் பதிவுகளும் இதை கவனிக்கும் பிற சமூக மக்களை மட்டுல்ல; சொந்த சமூக மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

இவர்களிடம் பக்குவம் இல்லையா? பண்பாட்டுடன் கூடிய அறிவு இல்லையா? என பிறர் கேள்வி கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இயக்க வேறுபாடுகள் & மோதல்கள்

தலைவர்களின் மீதான எதிர் கருத்துக்கள்

பிற சமூகங்களைப் பற்றிய மதிப்பீடுகள்

அரசியல் தலைவர்கள் குறித்த விமர்சனங் கள்

பொது அரங்கில் நடைபெறும் சம்பவங்கள்

சர்வதேச நிகழ்வுகள்

போன்றவை குறித்து சிலர் பக்குவமில்லாமல் எழுதும் கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தின் மீதான மதிப்பீடுகளைக் குறைக்கிறது.

நாம் பன்முக சமூகங்கள் வாழும் உலகத்தில் வாழ்கிறோம் என்பதையும், நம்மைச் சுற்றிலும் நல்லெண்ணம் கொண்ட சமூக மக்கள் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்பதை யும், நாம் பதியும் கருத்துக்கள் எதிரிகளின் எண்ணிக்கையை கூடுதலாக உருவாக்கி விடக் கூடாது என்பதையும் மறந்து விடுகிறார்கள். அல்லது இதைப் புரியாமல் வாழ்கிறார்கள்.

அநாகரீகமான சொல்லாடல்களும், முரட்டுத்தனமான விமர்சனங்களும்; நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய ஆதரவுகளை ஒரு சமூகமே இழக்க வேண்டிய சூழல் உருவாவதை அப்படிப்பட்ட சகோதரர்கள் உணர வேண்டும்.

தாலிபான்கள் விவகாரமாக இருக்கட்டும்; திரைப்படங்கள் குறித்த சர்ச்சைகளாகட்டும்; விடுதலைப் புலிகள் குறித்த விமர்சனங்களாக இருக்கட்டும்; சவூதியில் தலை துண்டிக்கப்பட்ட இலங்கைச் சிறுமி ரிசானா விவகாரமாக இருக்கட்டும்; சமீபகாலமாக ஃபேஸ் புக்கில் பரிமாறப்படும் எதிர்வினைகள் முஸ்லிம் சமூகத்திற்கு வலுவான ஆதரவை ஏற்படுத்துவதற்கு பதிலாக, பெருவாரியான ஆதரவாளர்களை எதிர் முகாமுக்கு தள்ளியிருக்கிறது என்ற பொதுவான கருத்து குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்.

எதிரிகளிடம் விவாதம் புரியுங்கள். ஆனால் கண்ணியத்தை கடைப்பிடியுங்கள். நமது கருத்தை ஆழமாக வாதிடுங்கள். ஆனால் தரத்தைப் பின்பற்றுங்கள்.

அறிவை உணர்ச்சி வென்றுவிடக் கூடாது. கோபம் பண்பாட்டை குலைத்துவிட அனுமதிக்கக் கூடாது. விமர்சனங்கள் எல்லை மீறிவிடக் கூடாது. திருக்குர்ஆன் ‘உண்மையைப் பேசுக (3:17), நேர்மையாகப் பேசுக (33:70), நீதமாகப் பேசுக (6:152), நல்லதைப் பேசுக (2:83), மிக அழகியதைப் பேசுக (17:53), மரியாதையாகப் பேசுக (17:23)’ என மனிதர்களுக்கு அறிவுரை வழங்குகிறது. இதை சற்று எண்ணிப் பாருங்கள்.

நமது கருத்துப் பதிவுகள் எதிரிகளின் மனப்போக்கை மாற்றக் கூடியதாக இருக்க வேண்டும். நடுநிலையாளர்களை வியப்பில் ஆழ்த்தக் கூடியதாக இருக்க வேண்டும். பதிலடி களைக் கூட நிதானமாகவும், அறிவுப்பூர்வ மாகவும் பதியுங்கள்.

மாறாக, நமது கருத்துப் பதிவுகள் எதிரிகளுக்கு ஆதரவையும், அனுதாபத்தையும் ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துவிடக் கூடாது. நமது நியாயங்களை பலமிழக்க செய்துவிடக் கூடாது.

சமூக ஊடகங்களும், இணைய தளங்களும் அனைத்து தரப்பினராலும் கூர்ந்து கவனிக்கப் படுகிறது என்பதையும், நமது கருத்துக்கள் நம் சமூகத்தின் தரத்தை மதிப்பிடுவதாகவும் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

குழாயடிச் சண்டைகளை; உள்விவகாரங்களை; தனிநபர் தாக்குதல்களை; மூன்றாம் தர எழுத்துக் களை தயவு செய்து இணையங்களிலும், ஃபேஸ் புக் போன்ற சமூக ஊடகங்களிலும் பயன்படுத்தக் கூடாது. கோபத்தோடும், அவசரப் பட்டும், பொறுப்பில்லாமலும் கருத்துக் களைப் பதியாதீர்கள். பல சமூகத்தினரும் நம்மை கவனிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பெருந்தன்மை, கண்ணியம், தொலை நோக்கு, சமூகப் பொறுப்பு, மன்னிப்பு என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு ஊடக உலகில் பணியாற்ற வேண்டியுள்ளது.

தனது சிறிய தந்தை ஹம்ஸாவைப் படு கொலை செய்த ஹிந்தாவை மன்னித்த மானுட வழிகாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

நபிகள் நாயகத்தை உஹது போர் களத்தில் எதிர்த்த காலித் பின் வலீத் அவர்கள் பின்னாளில் இஸ்லாத்தை ஏற்று பல போர்களில் நபிகள் நாயகத்தோடு அணிவகுத்தார்கள்.

காலமெல்லாம் நபிகள் நாயகத்தை எதிர்த்தே வாழ்ந்திட்டவர் அபுஜஹல். அவரது மகன் இக்ரிமா அவர்கள் இஸ்லாத்தை ஏற்று நபிகள் நாயகத்தோடு பணியாற்றினார்.

இந்த வரலாறுகளுக்கு உரிய சமூகத்தின் உறுப்பினர்கள் நாம் என்பதை உணருங்கள்.

உயரிய அணுகுமுறைகள் பெரும் வெற்றி களைத் தருகின்றன. நாம் சார்ந்த சமூகத்திற்கு நன்மைகளை அளிக்கின்றன.

கருத்துக்களைப் பரப்பும் ஊடக உலகில் கவனமாகப் பணியாற்றுங்கள். நமது எழுத்துக் களால் ஏற்படும் நன்மைகளுக்கு இறைவனிடம் கூலி உண்டு என்பதைப் போலவே, நமது எழுத்துக்களால் ஏற்படும் விபரீதங்களுக்கும் நாளை மறுமை நாளில் விசாரணை உண்டு என்பதை உணருங்கள்.

நடுநிலையாக சிந்திப்பதும், நேர்மையாக செயல்படுவதும், உண்மையாக வாதிடுவதும் நமது இலக்கணங்கள் என்பதை மறவாதீர்கள்.

 ஜஸாகல்லாஹ் :http://www.facebook.com/m.thamimunansari


திங்கள், 25 மார்ச், 2013

கூத்தாநல்லூர் நகர தமுமுக மமக ஆலோசனைக் கூட்டம்




கூத்தாநல்லூர்  நகர தமுமுக மமக ஆலோசனைக் கூட்டம் 23-03-2013 அன்று மாலை 6 மணி அளவில் கூத்தாநல்லூர்  நகர தமுமுக அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட தமுமுக மமக தலைவர் K.H. நூர்தீன் அவர்கள் தலைமையிலும் தமுமுக மாவட்ட செயலாளர் A குத்துபுதீன், கூத்தாநல்லூர் மமக நகர செயலாளர் P.M.A  சீனி ஜெஹபர் சாதிக், கூத்தாநல்லூர் தமுமுக நகர செயலாளர் K.H.காதர் முஹைனுதீன் இவர்களது முன்னிலையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. 2-4-2013 அன்று காலை 10 மணி அளவில் லக்ஷ்மாங்குடி மதுக்கடை 9637ஐ  அகற்ற கோரி   மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் அனைத்து கட்சிகள் ஒன்று சேர்ந்து பொதுமக்களை திரட்டி சாலை மறியல் செய்வது.

2.29-03-2013 அன்று மாலை 4 மணி அளவில் கூத்தாநல்லூர் நகர தமுமுக மமக பொதுகுழு கூட்டம் நடத்துவது

3.பொதுகுழு கூட்டத்தில் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்வது

4.பொதுகுழு கூட்டத்தில் தமுமுக மமக மாணவர் இந்தியா ஆகியவற்றிற்கு வார்டு வாரியாக புதிய நிர்வாகிகள் மற்றும் புதியஅணி நிர்வாகிகள் தேர்தெடுப்பது

5. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது

6. இலங்கை போர்குற்றம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

கலந்து கொண்டவர்கள் விபரம்:
மாவட்ட வழக்கறிங்ஞர் அணி செயலார் N.R. பிரபு தாஸ் BA.BL.,
மன்னை ஒன்றிய மமக செயலாளர் M.A.ஜெஹபர் அலி
மக்கள் செய்தி தொடர்பாளர் : M .A அப்துல் வஹாப்.M A .,,
செயற்குழு உறுப்பினர்கள் :P .M. செய்யது அஹமது, K.ஹாஜா மைதீன் 
நகர மாணவரணி செயலாளர் K.H. அக்பர் சலீம்
நகர மாணவர் இந்தியா செயலாளர் S .A  நூருல் அமீன்
நகர இளைஞரணி  செயலாளர்: ஜபருல்லாஹ்
நகர தொண்டரணி செயலாள: N .S N ஹாரூன் ரசீது
மற்றும் 35 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
முடிவில் நகர தமுமுக துணை செயலாளர் M அபுதாஹிர் நன்றி கூறினார்.

சனி, 16 மார்ச், 2013

சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்ட்டர்


சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்ட்டர்

இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே!
மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்? அத்வானியின் ரத யாத்திரை நிறைவடைந்த நிலையில், மோடியின் ரத யாத்திரை நாடாளுமன்றம் நோக்கி பயணத்தைத் துவக்கிவிட்டது.
அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. புதிய தலைவரான ராஜ்நாத்சிங் பலத்த கரவொலிக்கிடையில் குஜராத் முதல்வர் மோடியை மேடைக்கு வரவழைத்தார். ஆளுயர மாலை அணிவித்து, அவரின் 'ஹாட்ரிக்' சாதனையை வானளாவப் புகழ்ந்திருக்கிறார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமருக்கான வேட்பாளர் மோடிதான் என்பதை 'சூசகமாக' தெரிவித்துள்ளார்கள். அல்லது நாம் சூசகமாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது!
"இது போன்ற முதலமைச்சரை நான் பார்த்ததில்லை" என ராஜ்நாத்சிங் வியந்து புகழ்ந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்தியாவில் குடிநீருக்கும் உணவுக்கும் பஞ்சம் வருகிறதோ, இல்லையோ பாரதப் பிரதமருக்கான பஞ்சம் நிறையவே வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இளையவர் ராகுல் காந்திதான் பிரதமருக்குரிய அனைத்துத் தகுதிகளோடும் அதற்கான அங்க அடையாளங்களோடும் தென்படுவதால் அவரை முன்னிறுத்துகிறார்கள். நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஏழைகளின் தலையில் விலைவாசி உயர்வும் பிரதமர் பற்றாக் குறையைத் தவிர்க்க நேரு குடும்பத்தின் வாரிசுகளில் யாராவது ஒருவரும் தேர்ந்தெடுக்கப் படலாம். அது அக்கட்சியின் மரபுரீதியிலான ஜனநாயகம்!
எரிக்கும் பூ! இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதற்கும் ஊழலைத் தடுத்து நிறுத்துவதற்கும் பி.ஜே.பி.யால்தான் முடியும் என அவர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால், ஏற்கெனவே பி.ஜே.பி.யின் ஆட்சியில் நடந்தேறிய ஊழல்களும் பயங்கரவாத சம்பவங்களும் அவர்களிடத்தில் அனுபவமாக நிறைய இருக்கிறது. அதை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவர, பி.ஜே.பி.யின் கண்களுக்கு மோடி இன்னொரு ராமராக காட்சி தருகிறார்.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதனைத் தொடர்ந்து நடந்த வகுப்புக்கலவரங்களை மிகத் தேர்ந்த முறையில் "கையாண்டு" வெற்றி பெற்ற மோடி போன்ற ஒரு முதலமைச்சரை ராஜ்நாத்சிங் பார்த்திருக்க முடியாதுதான். பவர்கட் இல்லாத மாநிலம், மது இல்லாத மாநிலம், என இந்தியாவில் குஜராத் ஒரு மாடல் மாநிலமாக ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கிவிட்டதால் நடந்து முடிந்த வகுப்புக் கலவரங்கள் வெற்றியின் மூலம் மறந்தே போனது அல்லது மறைக்கப்பட்டது.
மசூதி இடிக்கப்படுவதற்கு முன்புவரை அங்குள்ள இடத்தைச் சுத்தப்படுத்தி, சமதளமாக்கும் பணியில் ஈடுபடப் போவதாகவே நீதிமன்றத்தின் முன்னால் கூறிக்கொண்டிருந்தார்கள். இடித்த பிறகும் 'அதுவாக இடிந்துவிட்டது' என்றும் "கரசேவையின் வெற்றி" என்றும் "பூகம்பம் ஏற்பட்டால் சில அதிர்வுகள் இருக்கத்தானே செய்யும்" என்றும் கூறிக்கொண்டார்கள்.
ஆயிரம் முகமூடிகளை அணியும் அபூர்வ சிந்தாமணிகளான சங்பரிவார் அமைப்பினருக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி என்ற முகமூடி அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், குஜராத் அல்ல இந்தியா! எத்தனை முறை கோட்சே அவதாரம் எடுத்து மகாத்மாவைக் கொன்றாலும் மதச்சார்பற்ற இந்திய மக்களின் நல்லிணக்கத்தை அவர்களால் வீழ்த்த முடியாது.
பிரித்தாளும் முறையை அடிப்படையாகக் கொண்டு பெரும்பான்மை வாக்குப் பிரிவுகளை பலப்படுத்துவதில் குஜராத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள். இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியல் கட்டமைப்பை மதித்து நடக்கும் முதல் தகுதியை மோடி பெற்றிருக்கிறாரா? என்ற கேள்வியோடு குஜராத் அரசை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல மதங்களைக் கொண்ட மக்கள் அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் சம உரிமை பெறுவதற்கு சட்டப்பிரிவின் 25-வது விதி உதவுகிறது. ஆனால், குஜராத்தில் மோடியின் அரசு மதச் சுதந்திர சட்டம் என்ற பெயரில் அவ்வுரிமையை மறுத்து வருகிறது.
இன்றைக்கும் அங்கே கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களின்போது தேவாலயத்தின் கதவுகளும் சன்னல்களும் பாதி மூடப்பட்டு பிரார்த்தனை கீதங்கள் வெளியில் சென்றுவிடாமல் அமைதி காக்கப்படுகிறது. அரசு உத்தரவின் மூலம் கிறிஸ்துவ மக்களின் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்புக்கு உள்ளூர் காவல்நிலையங்களைப் பயன்படுத்துகிறது. ஜனநாயக நிர்வாக அமைப்புகளுக்குள் ஊடுருவுவதும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி தேர்தலில் ஆதாயம் பெறுவதே சங்பரிவாரத்தின் சூழ்ச்சியாகும்.
பசு வதை தடைச் சட்டம் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குகிறது. குஜராத்தில் இச்சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படுகிறது. பசு பாதுகாப்பு இந்துத்துவாவின் முக்கிய கொள்கையாகும். அதை மோடி அரசு உயர்த்திப் பிடித்துள்ளது.
முஸ்லிம், கிறிஸ்துவ மாணவர்களுக்கு சில பள்ளிகளில் சேர்க்கைக்கான அனுமதி கிடைப்பதில்லை. இந்து மக்கள் அதிகமாக வசிக்கும் நகர்களில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளுக்கும் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கும் இடையே பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிறது. வீட்டுக் கடன், வங்கிக் கடன், மாணவர்களுக்கான உதவித்தொகை இவற்றில் தலித், கிறிஸ்துவர், முஸ்லிம் ஆகியோருக்கு பாகுபாடு காட்டப்படுகிறது. அமைதியான முறையில் பிரித்தாளும் தந்திரங்கள் அங்கே நிறைவேற்றப்படுகின்றன.
இச்சாதனை இந்தியா முழுமைக்கும் தொடர நேர்ந்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவங்களுக்கு முன்னால் மோடி அணிந்திருந்த மதச்சார்பற்ற முகமூடி, அதன் பின்னால் தொடர்ந்த கலவரங்களின்போது கழன்று விழுந்தது. இஸ்லாமிய மக்களும் பெண்களும் குழந்தைகளும் கூட அடித்தும் உயிரோடு எரித்தும் கொல்லப் பட்டார்கள். வீடுகளும் கட்டடங்களும் எரித்து சாம்பலாக்கப் பட்டன.
கர்ப்பிணிப் பெண்ணைக் கொல்ல மனமில்லாமல் வயிற்றைக் கிழித்து உள்ளிருந்த சிசுவினை எடுத்து தன் காதில் அணிந்தபடி அசுரப் பெண்ணை போரில் அழித்ததாக தமிழக கிராமத்தின் வக்கிரகாளியம்மன் வழிபாட்டு புராணக்கதை கூறுகிறது.
ஆனால், இந்துக் கடவுள்களின் மீது நம்பிக்கை கொண்டதாகக் கூறிக்கொள்ளும் பி.ஜே.பி.யின் பெண் அமைச்சர் மாயா முன்னிலையில் இஸ்லாமிய கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவை நெருப்பிலே எரித்துக் கொன்ற சம்பவம் நீதிமன்றத்தின் கண்டனத்தையும் 28 ஆண்டு கால சிறைத் தண்டனையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இச்சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கி எடுத்தன.
பிரிட்டிஷ் ஆட்சியில் வகுப்புக் கலவரங்கள் நிறைந்த நகரமாக கொல்கத்தா விளங்கியது. ஆனால், கடந்த 34 ஆண்டுகால இடதுமுன்னணி ஆட்சியில் ஒரு வகுப்புக் கலவரச் சம்பவமும் நடைபெறவில்லை என்பது அந்த ஆட்சியின் மிகப் பெரிய சாதனையாகும். 5 முறை தொடர்ச்சியாகவும் 7 முறை ஆட்சியிலும் இடது முன்னணியே வெற்றிபெற்ற திரிபுராவில் எந்த கலவரச் சம்பவங்களும் இடம் பெறவில்லை. ஆனால், ஊடகங்களுக்கு இது ஒரு சாதனையாகத் தெரிவதும் இல்லை.
தொழில் வளர்ச்சியில் குஜராத் சாதனை என்று புகழப்படுகிறது. ஆனால், அருகில் இருக்கக்கூடிய மாநிலங்களோடு ஒப்பிட்டால் அதில் உண்மை இல்லை என்பது தெரிய வரும். 3.95% இருந்த குஜராத்தின் தொழில் வளர்ச்சி 12.65% ஆக உயர்ந்துள்ளது. ஒடிஸாவிலோ 6.04% ஆக இருந்த தொழில் வளர்ச்சி 17.53% ஆக உயர்ந்துள்ளதோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வங்கியின் வர்த்தக முதலீட்டில் குஜராத் முழுவதும் 4.7 % தான். ஆனால், ஆந்திராவில் 5.2 %, தமிழ்நாடு 6.2%. வங்கிக் கடன் வழங்கலில் குஜராத் 4.22 % ஆகவும், மகாராஷ்டிரா 26.6% ஆக கடன் வழங்கியுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனம் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மா பயிரிட்டுள்ளது. ரிலையன்ஸ் மேங்கோஸ் என்ற பெயரில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது. உருளைக்கிழங்கு, பருத்தி, எள், வெங்காயம், மாம்பழம் போன்ற பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள விவசாயிகள் இதைச் செய்யவில்லை. அக்ரோசெல், மெக்டொனால்ட், ஜெயின் போன்ற நிறுவனங்களே செய்கிறது. இதனால் சிறு குறு விவசாயிகள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள் . விவசாயத் தொழிலாளிகள் வேலை இழந்துள்ளார்கள். பட்டினியால் 166 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளார்கள் என குஜராத் முதல்வரே சட்டமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
வறுமை, பட்டினி, ஊட்டச்சத்தின்மை, பெண்கள், குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகம் பீடித்துள்ளது. இவைதான் குஜராத்தின் மறைக்கப்பட்ட சாதனைகளாக விளங்குகிறது. கள்ளச்சாராய சாவுகள் அங்கே நிகழ்ந்தபோது மோடி அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. காந்தியின் கொள்கையை இம்மாநில அரசு உறுதியாகப் பின்பற்றி வருகிறது எனவும் மதுவிலக்கை பூரணமாக அமல்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப் பட்டுள்ளது.
இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே! மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்?
பாலபாரதி MLA,.
 நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் (14-03-2013)
 நன்றி :   http://www.nidur.info

புதன், 6 மார்ச், 2013

தலிபான்களை தவறாகக் காட்டிய விஸ்வரூபம் தவறான படம்தான் - இயக்குநர் அமீர் பேச்சு


 
தன் நாட்டுக்காகப் போராடும் தலிபான்களைத் தவறாக சித்தரிக்கும் விஸ்வரூபம் தவறான படம்தான். விடுதலைப் புலிகளைப் போலத்தான் தலிபான்களும்... - இப்படிக் கூறியிருப்பவர் இயக்குநர் அமீர்!

விஸ்வரூபம் படம் பல்வேறு பரபரப்புகளை, சர்ச்சைகளைக் கிளப்பி, ஒருவழியாக வெளியாகி ஓடி முடிக்கும் சூழலில், மீண்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் இயக்குநர் அமீர்.

சமீபத்திய பேட்டி ஒன்றில், விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்படவில்லை. ஆனால் தலிபான் போராளிகள் தவறாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆப்கன் மக்களுக்காகவும், அவர்களின் உரிமைகளை மீட்கவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் ஒரு போராளியை விஸ்வரூபத்தில் தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

எப்படி ஈழத்திற்காகப் போராடிய போராளிகளான பிரபாகரனையும் அவரது கூட்டாளிகளையும் தவறாக சித்தரிச்சா என்ன வருமோ அதுதான் விஸ்வரூபம். எப்படி இந்த போராளிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக் கூடாதோ அப்படித்தான் தலிபான் போராளிகளையும் தீவிரவாதிகள் என்று காட்டக் கூடாது. ஆனால் இங்குள்ள அமைப்புகளோ, கட்சிகளோ இதை எதிர்க்காமல் விட்டு விட்டார்கள்.

இப்போது தான் அது பற்றிய விவாதத்தை வைத்திருக்க வேண்டும். யாரும் செய்யவில்லை. ஆக, விஸ்வரூபம் படத்தின் மூலம் தன் மண்ணுக்காகப் போராடும் தலிபான் போராளிகளை தவறாகச் சித்தரித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை," என்று கூறியுள்ளார்.