வியாழன், 10 ஜனவரி, 2013

சென்னையில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் மாநாடு நடத்த தடை காவல்துறைக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கண்டனம்

சென்னையில் இஸ்லாமிய கண்காட்சி மற்றும் மாநாடு நடத்த தடை: காவல்துறைக்கு தமுமுக கண்டனம்!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
சென்னையில் ஜனவரி 11 முதல் 20 வரை பீஸ் கண்காட்சி மற்றும் மாநாடு என்ற பெயரில் இஸ்லாமியக் கண்காட்சி மற்றும் மாநாடு நடத்துவதற்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்தவர்களைக் கொண்ட சென்னை பீஸ் கண்காட்சிக் குழு ஏற்பாடுகளை செய்திருந்தது. முதலில் பின்னி நிறுவனத்திற்குச் சொந்தமான திடலில் முறையாக உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்றன. ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை அடைந்த நிலையில் சென்னைப் பெருநகர காவல்துறை அளித்த நெருக்கடி காரணமாக கண்காட்சி மற்றும் மாநாடு நடத்தும் திடலை அளிக்க இயலாது என்று அதன் உரிமையாளர் அறிவித்துவிட்டார் என்று தெரிய வருகின்றது. இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஹாரூன் அவர்களின் குடும்பத்தினருக்குச் சொந்தமான உத்தண்டியில் உள்ள மைதானத்தில் கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கும் சென்னைப் பெருநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சென்னையில் பீஸ் கண்காட்சி மற்றும் மாநாடு இதுவரை 4 முறை பொங்கல் விடுமுறை காலத்தில் நடைபெற்று வந்துள்ளது. 2004 மற்றும் 2005ல் கோயம்பேட்டிலும், 2007ல் சென்னை அண்ணா சாலை மதரஸயே ஆஸம் பள்ளி மைதானத்திலும் 2010ல் நீலங்கரையிலும் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வுகளில் முஸ்லிம் அல்லாதவர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதிலிருந்தும் வந்து பங்குகொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் அறிஞர்கள் மட்டுமின்றி முஸ்லிம் அல்லாத அறிஞர்களும் இதில் பங்குகொண்டு உரையாற்றியுள்ளார்கள். சமூக நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக பீஸ் கண்காட்சி மற்றும் மாநாடு திகழ்ந்துள்ளது. சட்டம் ஒழுங்கிற்கு எவ்விதப் பாதகமும் இந்த நிகழ்வுகளில் ஏற்பட்டதில்லை. இருப்பினும் இம்முறை பீஸ் கண்காட்சி மற்றும் மாநாடு நடத்துவதற்கு சென்னைப் பெருநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ளதுடன் அதன் ஏற்பாட்டாளர்களை அலைக்கழிக்க வைத்துள்ளதையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். அரசியலமைப்புச் சட்டத்தின் 25ம் பிரிவு அளித்துள்ள அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில் சென்னைப் பெருநகர காவல்துறையின நடவடிக்கை அமைந்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான தனது போக்கை திருத்திக்கொண்டு உத்தண்டியில் பீஸ் கண்காட்சி மற்றும் மாநாடு நடத்துவதற்கு சென்னைப் பெருநகர காவல்துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு சென்னைப் பெருநகர காவல்துறைக்கு உரிய அறிவுரை அளித்து சிறுபான்மை மக்களின் ஜனநாயக உரிமையைப் பேண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவண்,
எம்.எச்.ஜவாஹிருல்லா

கருத்துகள் இல்லை: