புதன், 7 மார்ச், 2012

பாஜகவை தூக்கிப் போட்ட அயோத்தி-முலாயமுக்கு ஜேஜே!

அயோத்தி: சர்ச்சைக்குரிய அயோத்தி தொகுதியை பாஜக இழந்து விட்டது. 1991ம் ஆண்டு முதல் தொடர்ந்து இங்கு வென்று வந்த பாஜகவுக்கு இந்த முறை அயோத்தி மக்கள் டாட்டா காட்டி விட்டனர். மாறாக, சமாஜ்வாடிக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

அயோத்தியிலிருந்துதான் தனது அரசியல் மறுமலர்ச்சியைத் தொடங்கியது பாஜக என்பது நினைவிருக்கலாம். அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை பாஜகவினரும், இந்து அமைப்புகளும் சேர்ந்து இடித்தது இன்று வரை இந்தியாவின் பெரும் கரும்புள்ளியாக திகழ்ந்து வருகிறது. அன்று முதல் அயோத்தியில், தொடர்ந்து பாஜகவே வென்று வந்தது. ஆனால் இந்த முறை அயோத்தி மக்கள் மாற்றி யோசித்து, ஓட்டை மாற்றிப் போட்டு விட்டனர். சமாஜ்வாடிக் கட்சி இங்கு வென்று விட்டது.

பாஜகவின் லல்லு சிங், தொடர்ந்து 1991ம் ஆண்டு முதல் இங்கு வென்று வந்தார். இந்த முறை அவர் இளம் சமாஜ்வாடி தலைவரான தேஜ் நாராயண் பாண்டேவிடம் 5700 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போய்விட்டார்.

கடந்த தேர்தலிலேயே லல்லு சிங் ஆடிப் போய்த்தான் வென்றார். அதாவது அவரது வெற்றி வித்தியாசம் 6500 மட்டுமே.

இப்போதைய தேர்தலில் லல்லுவுக்கு அயோத்தி நகர்ப் புறங்களில் முன்னிலை கிடைத்தது. அதேபோல வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளிலும் அவருக்கே அதிக ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. ஆனால் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் அவரைக் கவிழ்த்து விட்டு விட்டனர்.

அயோத்தி வேட்பாளராக பாண்டேவை அறிவித்த கையோடு முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் பலமுறை அயோத்தியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களை கவர ஆரம்பித்தார். அவரது அணுகுமுறைக்கு நல்ல பலனும் கிடைத்தது. இப்போது வெற்றியும் வந்து சேர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை: