ஞாயிறு, 11 மார்ச், 2012

14 ஆண்டுகள் சிறையில் சித்ரவதை... ஓர் அப்பாவி இளைஞரின் பரிதாபக் கதை


--மரியம் குமாரன்

நூறு குற்றவாளி தப்பித்தாலும் தவறில்லை, ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் நம்நாட்டு நீதி பரிபாலனத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் தப்பிப்பது நம் நாட்டில் சாதாரண நிகழ்வு. அதேபோல ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொடுமையாக தண்டிக்கப்படுவதும் இயல்பாகி விட்டது. தப்பிக்கின்ற ஆயிரக்கணக்கான குற்றவாளிகள் முஸ்லிம் அல்லாதவர்களாகவும், சிக்கிக்கொண்டு சிறைகளில் சீரழிக்கப்படுகிற ஆயிரக்கணக்கான அப்பாவிகள் முஸ்லிம்களாக இருப்பதும்தான் இதில் குறிப்பிடத்தக்கது.

டெல்லி குண்டுவெடிப்பில் 16 வயதில் கைது செய்யப்பட்டு 29 வயதில் ‘குற்றமற்றவர்’ என்று விடுதலை செய்யப்பட்டவர், 400 ரூபாய் திருட்டு வழக்கில் 8 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர் என ஏராள முஸ்லிம்களின் வரிசையில் முஹம்மது அமீர்கான் என்ற இளைஞரும் சேருகிறார். இந்திராணி பாசு, பிப்.11,2012 தேதியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் இவரைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்தபோது கண்கள் பனித்தன. ஆயிரக்கணக்கில் இதுபோன்ற அநியாயங்கள் நடக்கும் நாட்டில் இலட்சக்கணக்கான ஏன் கோடிக்கணக்கான மக்கள் மௌனம் காக்கும் கொடுமையை எண்ணும்போது, அழுகை ஆத்திரமாகியது.

1998ஆம் ஆண்டு பிப்.20ம் நாள் தலைநகர் டெல்லியில் இரவு சுமார் 10 மணியளவில், முஹம்மது அமீர்கான் என்ற 18 வயது இளைஞன், சிறுநீரகக் கல்லின் சித்ரவதை தாங்க முடியாமல், பகதூர்கரில் உள்ள யுனானி மருத்துவர் வீட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிறார். நடக்கப்போகிற பயங்கரங்கள் எதுவும் தெரியாமல், வலியில் துடித்தபடி வழியில் போகிறார் அந்த இளைஞர். ஒரு வெள்ளைநிற மாருதி ஜிப்சி அவர் அருகே வந்து நிற்கிறது. அதில் வந்தவர்கள் இவரை உள்ளே இழுத்துப் போடுகிறார்கள். வாகனம் சீறிக் கிளம்புகிறது. சாதாரண பெட்டிக் கடைக்காரரின் மகனை, பெரிய பணக்காரரின் மகன் என்று தவறாகக் கருதி கடத்துகிறார்களோ என்று சந்தேகம் வந்தது அமீர்கானுக்கு. கடத்திச் செல்பவர்களோ, சீருடைய அணியாத காவலர்கள். மறைவிடத்தில் உள்ள ஒரு சித்ரவதைக் கூடத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

பிறகு நடந்ததை அமீர்கான் சொல்கிறார்: ‘‘அந்த இடமே பயங்கரமாக இருந்தது. பேசினால் எதிரொலி கேட்டது. அங்கே வைத்து அவர்கள் என் ஆடைகளை முழுவதும் களைந்தார்கள். நேர்கோட்டில் என் இரு கால்களையும் அகலமாய் விரித்தார்கள். சிறுநீரக் கல்லால் சித்ரவதைப்பட்ட எனக்கு இந்தக் கூடுதல் சித்ரவதைக் கொடூரமாக இருந்தது. காலை உச்சகட்ட அகலத்திற்கு விரித்து, விலங்குகளை மாட்டி மீண்டும் சேர்க்க முடியாமல் செய்தார்கள். என் ஆணுறுப்பில் பெட்ரோலை ஊற்றினார்கள். தாறுமாறாக பிரம்பால் அடித்தார்கள். சோப்புத் தண்ணீரைக் குடிக்க வைத்தார்கள். ஆணுறுப்பில் மின்சாரம் பாய்ச்சினார்கள். மயங்கி விழுந்தேன். உடம்பின் மீது மிகக்கனமான இரும்பு உருளைகளை உருட்டி நசுக்கினார்கள். பலமணி நேரம் இந்த சித்ரவதை தொடர்ச்சியாக நடந்தது. கடைசியாக சில வெற்றுக் காகிதங்களில் கையெழுத்து வாங்கினார்கள். என்னுடைய உடைமைகளைப் பறிமுதல் செய்தார்கள். ஒருவாரம் நடந்த இந்தக் கொடுமையான சித்ரவதையில் நான் இளமையை முழுமையாக இழந்தேன்.

பிப்.20 முதல் என்னை அடைத்து வைத்துச் சித்ரவதை செய்த காவல்துறை, பிப்.27, 1998 அன்றுதான் என்னைக் கைது செய்ததாக அறிவித்தார்கள். 1996 முதல் 1997 வரை நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளுக்கு நான்தான் மூளையாக செயல்பட்டவன் என்று குற்றஞ்சாட்டி, 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.’’ 14 நீண்ட ஆண்டுகள் சிறையில் முஹம்மது அமீர்கான் வதைக்கப்பட்டார். 2012 ஜனவரி மாதம், 17 வழக்குகளிலிருந்து முஹம்மது அமீர்கான், ‘குற்றமற்றவர்’ என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். அமீர்கான் கைது செய்யப்பட்டதை மறுநாள் பத்திரிகை வாயிலாகத் தெரிந்துகொண்ட அவரது எளிய குடும்பம் அனலில் புழுவாய்த் துடித்துள்ளது. பெட்டிக் கடை வைத்து ஜீவனம் நடத்திக் கொண்டிருந்த அவரது வயதான தந்தை, தோள் கொடுக்க வேண்டிய ஒரே மகனை சட்டத்தின் சூதாட்டம் சிறையில் அடைத்து விட்டதையும், விடுதலைக்கான் வெளிச்சக்கீற்றே இல்லாததையும் அறிந்து, அதிர்ச்சியிலேயே இறந்துவிட்டார்.

பெட்டிக் கடையையும், இருந்த நகைகளையும், வீட்டின் தட்டுமுட்டுச் சாமான்களையும் விற்று, ஒரு குடும்பமும் ஜீவனம் நடத்தியது. “என்னை மீட்க விதவையான என் பாமரத் தாய் பெரும் பாடுபட்டார். நீதிமன்ற வளாகத்தில் 2007ம் ஆண்டு நான் போலீஸ் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த போது, கொட்டும் மழையில் நனைந்து கொண்டே என் தாய் வந்ததையும், அங்கே அவர் அலைக்கழிக்கப்பட்டதையும் பார்த்தபோது, இதைப் பார்ப்பதற்கு பதிலாக இறந்துவிடலாமே என்று தோன்றியது. என்னைப் பழைய டெல்லி ரயில் நிலையம் அருகே கைது செய்ததாகவும், அப்போது பயங்கர வெடிகுண்டுகளையும், ஆயுதம் செய்யும் கருவிகளையும், பள்ளிக்கூட நன்னடத்தைச் சான்றிதழையும் வைத்திருந்ததாக கதைவசனம் எழுதி இருந்தார்கள். இதனால் என்னை எல்லோரும் பயங்கரவாதியாகவே பார்த்தனர். ஒரு பயங்கரவாதி, பள்ளிக்கூடத்தின் நன்னடத்தைச் சான்றிதழை சூட்கேசில் வைத்துக்கொண்டு சுற்றுவானா- என்று யாரும் யோசிக்கவில்லை.

ஒரு ஹிந்தி பத்திரிகை, நான் பாகிஸ்தான்காரன் என்றும், இந்தியாவை சீர்குலைக்க அனுப்பப்பட்டவன் என்றும் எழுதிவிட்டது. எனவே எனக்குச் சரியான வழக்குரைஞர் கூட கிடைக்கவில்லை. எனது வழக்கை ஏற்று நடத்தவே எல்லோரும் அஞ்சினார்கள். இந்நிலையில், எனது நிலையை அறிந்து இரக்கப்பட்டு, மனிதஉரிமை ஆர்வலரும் வழக்குரைஞருமான என்.டி.பஞ்சோலி, எனது வழக்கை எடுத்து நடத்தினார். அவரது சட்டப் போராட்டம் அப்பாவியான என்னை 17 வழக்குகளிலிருந்து விடுவித்துள்ளது. மீதி இரு வழக்குகளிலிருந்தும் விரைவில் விடுதலைக் கிடைத்துவிடும் என்று நம்புகிறேன்.

எனது விதவைத் தாய் நடத்திய சட்டப் போராட்டத்தில் மனரீதியாக அவர்பட்ட சித்ரவதைகள் கொஞ்சமல்ல. மன உளைச்சலாலே அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். மூளையிலும் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. நான் செய்த குற்றம் என்ன? முஸ்லிமாகப் பிறந்ததுதான் என் குற்றமா?’’ என்கிறார் முஹம்மது அமீர்கான். தீர்ப்புரையில் நீதிபதி, காவல்துறையைக் கடுமையாகக் கண்டித்திருந்தனர். மிக பயங்கரமான குற்றச்சாட்டுகளை முஹம்மது அமீர்கான் மீது சுமத்திய காவல்துறை, எதையும் நிரூபிக்கவில்லை. 18 வயதில் சிறையில் அடைக்கப்பட்ட அமீர் 32 வயதில் விடுதலை செய்யப்படுகிறார். வாழ்வின் பொன்னான தருணங்களை யாரால் திருப்பித்தர முடியும். எனவே அமீர்கானுக்கு அரசு நஷ்டஈடு தரவேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஓர் அப்பாவி இளைஞன் மீது அபாண்டம் சுமத்தி, சிறையில் அடைத்து, சித்ரவதை செய்து, அவன் குடும்பத்தை சீரழித்ததுதான் அந்தக் காவல்துறை சட்டம்ஒழுங்கைக் காக்கும் லட்சணம்.

டிசம்பர் 1996 முதல் அக்டோபர் 1997 வரை நடந்த குண்டுவெடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் அமீர்கான் என்ற அப்பாவியைப் பலிகொடுத்து விட்டார்கள். அதேசமயம், அந்தக் குற்றங்களைச் செய்த உண்மைக் குற்றவாளிகளையும் காவல்துறை தப்பவைத்துவிட்டது.

இப்போது சிந்தித்துப் பாருங்கள். உண்மையான பயங்கரவாதிகள் யார்? என்று. மீண்டும் சிந்தித்துப் பாருங்கள். அநீதிகளுக்கு எதிராக மௌனம் காப்பது சரிதானா-? என்று.

கருத்துகள் இல்லை: