திங்கள், 16 பிப்ரவரி, 2009

TNTJ மாணவர் அணியின் காதலர்தின எதிர்ப்பு பிரச்சாரம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மாணவர் அணி சார்பாக பிப்ரவரி 14 ம் தேதியை கற்பு கொள்ளையர் தினம் என்று அறிவித்து மதுரையின் முக்கிய வீதிகளில் காதலர் தின சீர்கேடுகளை பற்றிய துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

காலையில் பெரியார் நிலையத்தில் நோட்டிஸ் விநியோகிக்கும் போது காவல் துறையினர் TNTJ வினரை கைது செய்தனர். காவல் நிலையத்தில் காவல் துறையினரிடம் TNTJ நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முடிவில் 2 மணி நேரம் கழித்து அணைவரையும் விடுவித்தனர். பின்பு மாலை 5 மணிக்கு மேல் மதுரையில் முக்கிய வீதிகளான ராஜாஜி பார்க், எக்கோ பார்க், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் பேனர் ஏந்தி துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கண்ட பொதுமக்கள் பலர் இப்பிரச்சாரம் அறிவிப்பூர்வமானது என்று பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ். இப்பிரச்சாரத்திற்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கலீல் ரஹ்மான் தலைமை தாங்கினார். காதலர் தினம் என்ற பெயரில் வாலிபர்கள் அதிலும் குறிப்பாக மாணவர்கள் செய்யும் ஒழுக்க சீர்கேடுக்களுக்கு மத்தியல் TNTJ வின் மாணவர் அணியினரின் இந்த வழிப்புணர்வு பிரச்சாரம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!.

நன்றி; த.த.ஜ. வலைத்தளம்.

ஞாயிறு, 15 பிப்ரவரி, 2009

வட்டி அழியும் !

அமெரிக்க மூலதன வங்கியின் திவாலில் உருவான பொருளாதார நெருக்கடி இப்போது அமெரிக்காவை மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறது பணக்காரர்கள் இழந்தது சில கோடிகள் என்றால் ஏழைகளும் நடுத்தர மக்களும் இழந்தது தங்களது ஒட்டு மொத்த வாழ்வையும் என்பதைப் பார்க்கும் போது உலகப் பொது முறைமையாக உலகத்தின் மீது ஏகாதிபத்திய நாடுகளால் திணிக்கப்பட்ட உலகமயமாக்கல் எந்த அளவுக்குக் கொடுமையானது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

உலகமயமாக்கல் தாராளமயமாக்கல் தடையில்லா வர்த்தகம் என்ற மாயவார்த்தைகளால் மக்களைக் கட்டிப்போட்டு பன்னாட்டுப் பேராசைக்காரர்கள் ஆடிய ஆட்டத்தின் விளைவாக இன்று எத்தனை உயிர்ப்பலிகள் ! உடைமை நஷ்டங்கள் உயிரோட்டமே நின்று போனது போன்ற மன உலைச்சல்கள் !

ஏன் இது நிகழ்ந்தது?

இதன் பின்னணி பெரியது சராசரி மூளைக்குள் புகமுடியாதது.

ஆனால் அதன் ஆணிவேர் வட்டி என்ற விஷம் சூதாட்டம் என்ற பங்குச் சந்தை யூகவணிகம் என்ற மோசடி !
அங்கிங்கெனாதபடி எங்கும் விரிந்த இந்த நெருக்கடிக்குள் உலகின் ஒரே ஒரு வங்கித்துறை மட்டும் சத்தம் போடாமல் அமைதி காக்கிறது என்பது வியப்புக்குரிய செய்தி அல்லவா?

ஆம் ! இஸ்லாமிய வங்கித்துறையை அது பெரிதாக பாதிக்கவில்லை பாதிக்கப்பட்ட ஒருசிலவும் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு இஸ்லாமிய வட்டத்தை விட்டு வெளியே வந்து செயல்பட்டவை என்பதுதான் இன்று உலகில் பரபரப்பினை ஏற்படுத்திவரும் உரத்த செய்தியாகும் ! இப்போது இஸ்லாமிய வங்கித்துறையின் நுணுக்கங்கள் பற்றி அதிகமான விசாரிப்புக்கள்.

அது ஒன்றும் மூடுமந்திரமான புரிந்துகொள்ள முடியாத வறட்டுத் தத்துவார்த்தம் அல்ல மிகமிக எளிய உபாயம் அதில்

*வட்டிக்கு இடமில்லை முற்றிலும் தடுக்கப்பட்டது

*ஊக வணிகத்துக்கு வழியில்லை

*கொடுக்கல் வாங்கலில் முழுமையான ஒப்பந்த முறை

*கடனுக்கு உடைமை உத்தரவாதம்

*மூலதனமிடுவோருக்கு லாபத்திலும் நஷ்டத்திலும் பங்குண்டு

*தங்களது பணம் எப்படி வங்கியால் மூலதனமிடப்படுகிறது என்பதை மூலதனமிட்டவர் தெரிய வாய்ப்பு வங்கியின் மார்க்க வல்லுநர்களின் கண்டிப்பான மேற்பார்வையில் வணிகம்

*வங்கி செயல்படும் நாட்டின் மேலாண்மைச் சட்டங்களின் முழுமையான மேற்பார்வைக்கு அனுமதி
இவைதான் இஸ்லாமிய வங்கிகளின் செயல்பாட்டுச் சட்டம்

இப்படி 75 நாடுகளில் 300 வங்கிகள் செயல்படுகின்றன அவற்றில் சுமார் 300 பில்லியன் டாலர்கள் வணிகப் புழக்கத்தில் இருக்கின்றது.

நம் நாட்டிலும் உள்ளன ! ( அல் அமீன் )
தமிழகத்திலும் உள்ளது ( செய்யது ஷரீ அத் ஃபைனான்ஸ் )

உலக முஸ்லிம்கள் அனைவரும் இந்த வங்கித் துறையில் பங்கேற்றிருந்தால் இன்னேரம் பல கோடி மடங்கு அதிகமாக இருந்திருக்கும்.
நாம்தான் மார்க்க விழுமியங்களை மதிப்பதில் மந்தமாயிற்றே?

இனியாவது விழித்துக் கொள்வோமா?

இதோ நமது வேதம் உரத்துச் சொல்கிறது

*நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம் ஆனால் பொறுமையுடையோருக்கு நபியே நீர் நற்செய்தி கூறுவீராக

*உங்களுக்கு முன் சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலே சொர்க்கத்தை அடைந்து விடலாம் என்று எண்ணுகிறீர்களா? அவர்களை வறுமையும் பிணியும் பீடித்தன தூதரும் அவருடன் விசுவாசம் கொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்று கூறும் வரை அலைக்கழிக்கப்பட்டனர் அல்லாஹ்வின் உதவி மிக சமீபத்தில் இருக்கின்றது. (2:214)

*ஈமான் கொண்டோரே இரட்டித்துக் கொண்டே போகும் வட்டியை உண்ணாதீர்கள் அல்லாஹ்வை அஞ்சி இதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (3:130)

*நீங்கள் உண்மை மூஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சி எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள் (2:278)
*கடன் வாங்கியவன் வசதி வந்து திருப்பித் தரும் வரை பொறுத்திருங்கள் அல்லது அதனைத் தர்மமாக தள்ளுபடி செய்து விடுங்கள். (2:280)

*அல்லாஹ் வட்டியை அழிக்கின்றான் தான தர்மங்களை பெருக்குகிறான்.

*எத்தகைய கஷ்டத்திலும் நீங்கள் பொறுமையைக் கைக்கொண்டு தொழுது இறைவனிடத்தில் உதவி தேடுங்கள் (2:45)

*ஒவ்வொரு கஷ்டத்திலும் ஒரு லேசும் இருக்கிறது (94:06)


( நர்கிஸ் டிசம்பர் 2008 இதழின் தலையங்கத்தில் இருந்து )

நர்கிஸ் மாத இதழ்



நிறுவனர் : மர்ஹூம் எம். முஸ்தபா ஹுசைன்


நிர்வாக ஆசிரியை : எம். அனீஸ் ஃபாத்திமா


கௌரவ ஆசிரியர் : டாக்டர் ஏ. சையத் இப்ராஹிம் எம்.பி.பி.எஸ். ( ஹிமானா சையத் )


துணை ஆசிரியை : எம். பர்வீன் ஃபாத்திமா



முகவரி :
54 மரியம் நகர்
மல்லிகைபுரம்
திருச்சிராப்பள்ளி 620 001
தொலைபேசி : 0431 2301255
அலைபேசி : 94 875 70135
மின்ன ஞ்சல் : aneesnargis@hotmail.com

தஜ்ஜாலின் அடையாளங்கள்!

'அவ்வாறன்று, அவர்கள் சீக்கிரமே அறிந்து கொள்வார்கள். மேலும் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள்'. (அல்குர்ஆன் 73:4-5)
உலக முடிவு நாள் மிகவும் நெருக்கத்தில் வரும் போது சில மகத்தான அடையாளங்கள் ஏற்படவுள்ளன.

புகை மூட்டம்,

தஜ்ஜால்,

(அதிசயப்) பிராணி,

சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது,

ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்கி வருவது,

யஃஜுஜ் மஃஜுஜ்,

கிழக்கே ஒன்று மேற்கே ஒன்று அரபு தீபகற்பத்தில் ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவது,

இவற்றில் இறுதியாக 'எமனி' லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல்,

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்

இந்த பத்து அடையாளங்களும் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்டவுடன் உலகம் அழிந்துவிடும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதன் மூலம் முன்னறிவிப்புச் செய்கிறார்கள். இவற்றில் மூன்று அடையாளங்கள் மிகவும் முக்கியமானவை.

இறைவனை மறுத்தவர்கள், இணைவைத்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தினால், இறைவன் மீது நம்பிக்கை கொண்டால் அதை இறைவன் ஏற்றுக் கொள்கிறான். அவர்களை மன்னிக்கிறான். ஆனால் அந்த மூன்று அடையாளங்களும் ஏற்பட்டு விடுமானால் அதன் பின் பாவமன்னிப்பு என்பது கிடையாது. அதன் பின்னர் ஈமான் கொண்டால் அந்த ஈமானுக்கு இறைவனிடம் மதிப்பேதும் இராது. இதிலிருந்து அந்த மூன்று அடையாளங்களும் எவ்வளவு முக்கியமானவை என்பதையும் அழிவு எந்த அளவு அண்மித்து விட்டது என்பதையும் அறியலாம்.

சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, தஜ்ஜால், (அதிசயப்) பிராணி ஆகிய மூன்று அடையாளங்கள் தோன்றி விடுமானால் அவற்றுக்கு முன்பே ஈமான் கொண்டிருந்தால் தவிர எவருக்கும் அவரது ஈமான் பயனளிக்காது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: முஸ்லிம், இப்னுமாஜா)

சூரியன் மேற்கிலிருந்து உதிக்கும் வரை அந்த நாள் வராது அவ்வாறு உதிப்பதை மக்கள் காணும் போது ஈமான் கொள்வார்கள். ஆனால் அது எவருக்கும் ஈமான் பயனளிக்காத நேரமாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா)

மகத்தான இம்மூன்று அடையாளங்களில் பயங்கரமான அடையாளம் தஜ்ஜாலின் வருகைதான். அவனது வருகையினால் உண்மை முஸ்லிம்கள் கூட ஈமானை இழந்து விடும் அபாயம் உள்ளது. தன்னைக் கடவுள் என்று பிரகடனம் செய்யும் அவனது மாயவலையில் முஸ்லிம்கள் விழுந்து விடக் கூடாது என்பதற்காக நபியவர்கள் அவனைப் பற்றி முழுமையாக எச்சரித்துள்ளனர். அவனது ஆற்றல், அங்க அமைப்பு, அவனது செயல்பாடுகள் உட்பட அனைத்தையும் நபியவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர்.

நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தனது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்பது நபிமொழி. (அறிவிப்பாளர்: அபூஉபைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி, அபூதாவூத்)

ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

அந்தப் பத்து அடையாளங்களையும் விரிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் முக்கியத்துவம் கருதி தஜ்ஜால் பற்றி நபியவர்கள் செய்த முன்னறிவிப்புக்களை முதலில் அறிந்து கொள்வோம்.

முஸ்லிம் சமுதாயத்தில் தஜ்ஜால் பற்றி பல விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. தஜ்ஜால் என்பது ஒரு தீயசக்தியைப் பற்றியது என்று சிலர் கூறுகின்றனர்.

பிரிட்டனின் கையில் பாதி உலகம் இருந்த போது வாழ்ந்த 'மார்டன்' மவ்லவிகள் பிரிட்டன் தான் தஜ்ஜால் என்றனர். இஸ்ரேலின் பிரதமர் மோஷே தயானையும் சிலர் தஜ்ஜால் என்றனர். ஜார்ஜ் புஷ் என்ற அமெரிக்க அரக்கனின் ஆட்சியை சந்தித்த நவீன கால அறிஞர்கள் தஜ்ஜால் என்பது 'ஜார்ஜ் புஷ்' தான் என்று அடித்துக் கூறியதும் உண்டு.

தஜ்ஜாலின் சில குணாதிசயங்கள் இவர்களிடம் இருந்திருக்கலாம், அவனைப் பற்றி எல்லா அறிவிப்புக்களையும் ஆராய்ந்தால் அவர்களின் கூற்று பொய்யென உணரலாம். தஜ்ஜால் பற்றிக் கூறப்படும் முன்னறிவிப்புக்களில் சில அறிவுக்குப் பொருத்தமாக இல்லாததால் அவர்களின் அறிவுக்கு ஏற்ற வகையில் தஜ்ஜாலுக்கு இவ்வாறு விளக்கம் தருகின்றனர்.

மார்க்கத்தைப் பற்றிய ஞானம் சிறிதும் இல்லாத சிலர் தஜ்ஜாலைப் பற்றி அதிகமாகக் கற்பனை செய்து கதைகள் புனைந்துள்ளனர். அவனது தலை வானத்துக்கும் கால் தரைக்குமாக இருப்பான். கடலில் அவன் நடந்து சென்றால் அவனது கரண்டைக் காலுக்குத் தான் கடல் நீர் இருக்கும். கடலில் மீனைப்பிடித்து சூரியனுக்கு அருகில் அதைக் காட்டி சுட்டுத் தின்பான். என்றெல்லாம் 'கடோத்கஜன்' கதையிலிருந்து காப்பியடித்துக் கூறுகின்றனர்.

இன்னும் சிலர் தஜ்ஜால் பற்றி எதுவுமே அறியாதவர்களாக உள்ளனர். இம்மூன்று சாராரின் அறியாமையையும் அகற்றுவதற்காக தஜ்ஜால் பற்றிய எல்லா முன்னறிவிப்புக்களையும் விரிவாக எடுத்து வைப்போம்.

தஜ்ஜாலின் அங்க அடையாளங்கள்

ஒரு கண் ஊனமுற்றவனாக அவன் அமைந்திருப்பான். அது எந்தக் கண் என்பதில் இரு விதமான ஹதீஸ்கள் வந்திருந்தாலும் அவனது ஒரு கண் ஊனமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
'நிச்சயமாக அல்லாஹ்வைப் பற்றி உங்களுக்குத் தெரியும், அல்லாஹ் ஒரு கண் ஊனமானவன் அல்லன். ஆனால் தஜ்ஜாலின் வலக்கண் சுருங்கிய திராட்சை போன்று ஊனமுற்றிருக்கும்' - நபிமொழி. (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

பெரும் பொய்யனாகிய ஒற்றைக் கண்ணனைப் பற்றி எந்த நபியும் தனது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் இருந்ததில்லை. நிச்சயமாக ஒரு கண் ஊனமுற்றவன். உங்கள் இறைவன் ஒரு கண் ஊனமுற்றவன் அல்லன் - நபிமொழி. (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

தஜ்ஜால் என்பவன் இடது கண் ஊனமானவன் என்பதும் நபிமொழி. (அறிவிப்பவர்: ஹுதைபா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

ஒற்றைக் கண்ணனாக இருப்பவனெல்லாம் தஜ்ஜால் என்று முடிவு செய்து விடக் கூடாது. அவனைப்பற்றி இன்னும் பல அடையாளங்களும் உள்ளன. அவற்றை அடுத்த இதழில் பார்ப்போம்.
- "Jazaakallaahu khairan" ADIRAI THAMEEM

சனி, 14 பிப்ரவரி, 2009

மானுட வசந்தம்,துபைவாசிகளே வாங்க!!

துபாய் ஈமான் அமைப்பு டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து ப‌ங்கு பெறும் மானுட‌ வ‌ச‌ந்த‌ம் நிக‌ழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 27.02.2009 வெள்ளிக்கிழ‌மை மாலை ஆறு ம‌ணிக்கு துபாய் இந்திய‌ க‌ன்சுலேட் அர‌ங்கில் ந‌ட‌த்த‌ இருக்கிற‌து.இந்நிக‌ழ்வில் இஸ்லாம் குறித்த‌ அனைத்து கேள்விக‌ளுக்கும் ப‌தில் அளிக்க‌ இருக்கிறார் டாக்ட‌ர் கே.வி.எஸ். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து.த‌மிழ‌ன் தொலைக்காட்சி வார‌ந்தோறும் தொட‌ர்ந்து ஒளிப‌ர‌ப்பு செய்யும் இந்நிக‌ழ்ச்சி துபாயிலும் ப‌திவு செய்ய‌ப்ப‌டுகிற‌து.இஸ்லாம் ப‌ற்றிய‌ உங்க‌ள‌து ச‌ந்தேக‌ங்க‌ளை எந்த‌ த‌ய‌க்க‌மும் இன்றி கேட்க‌லாம்.பார‌ப‌ட்ச‌மில்லாத‌ உங்க‌ள் உண‌ர்வுக‌ளை உன்ன‌த‌மாக‌ உண‌ர்த்த‌லாம்.ச‌கோத‌ர‌ ச‌முதாய‌த்தின‌ர் ச‌ம‌ர்ப்பிக்கும் கேள்விக‌ளை முன்னுரிமையாக்க‌லாம்.இந்நிக‌ழ்சி முழுவ‌தும் த‌மிழ‌ன் தொல‌க்காட்சியில் ஒளிப‌ர‌ப்பாக‌ இருக்கிற‌து.அனைத்து ச‌மூக‌த்தின‌ரும் அணி திர‌ண்டு வாரீர்

குறிப்பு : இர‌வு உண‌வு அனைவ‌ருக்கும் ஏற்பாடு செய்ய‌ப்பட்டுள்ள‌து.

தொட‌ர்புக்கு ஈமான் துபாய்
050 51 96 433 / 050 58 53 888 / 050 467 4399

முஸ்லீம் அல்லாத மாற்று மத நண்பர்களை அழைத்து செல்லுங்கள்,மார்க்கத்தை அழகிய முறையில் அறிமுகப்படுத்துங்கள்.

பிப்ரவரி 14 - ஆபாசதினம்!




ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் நாளிதழ்களில் அதற்கு முதல் நாள் (14 பிப்ரவரி) 'காதலர் தினம்' கொண்டாட(?)ப் பட்டதும் அதில் ஏற்பட்ட ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும். இன்று 'காதலர் தினம்' நாடு முழுதும் கொண்டாடப் பட்ட இலட்சணம் நாளைய நாளிதழ்களில் வெளியாகும்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளம் தலைமுறை என்பது மிகப் பெரிய சொத்தாகும். எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கை சிறந்ததாக அமைய அவர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் உயர்ந்ததாக அமைவதில் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அரசுகளின் கடமையாகும். வளரும் பருவத்தில் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படும் பாதையே அவர்களின் எதிர்கால வாழ்க்கையின் தரத்தினை நிர்ணயிக்கிறது.

ஆனால், நாகரீகத்தின் உச்சியில் உள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் இக்காலத்தில் பிள்ளைகளில் வாலிபப் பருவம் என்பது அவர்களின் பெற்றோரைத் தீக்கணலில் நிற்க வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அறிவியலின் முன்னேற்றத்தால் கண்டுபிடிக்கப்பட்டப் பல நவீன உபகரணங்கள், புதிய தலைமுறையினரின் பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்திலும் இளம் தலைமுறையைச் சீரழிக்கும் அனைத்து அம்சங்களும் கலந்து காணப்படுகின்றன.

இவற்றில், இந்தப் பிப்ரவரி 14 ஆம் நாளைக் கொண்டாடுவதற்குச் சூட்டப்பட்ட நாமகரணமும் ஒன்று. ஆசிரியர்களைக் கவுரவிக்க 'ஆசிரியர் தினம்', தாய்மார்களைக் கவுரவிக்க 'அன்னையர் தினம்', சுற்றுப்புறச் சூழலின் முக்கியத்துவத்தை உணர்ந்த 'சுற்றுப்புறச் சூழல் தினம்' என ஓராண்டில் கிட்டத்தட்டப் பாதி நாட்களுக்கு ஒவ்வொரு பெயரிட்டு நினைவு கூர்வதற்கு இடையில், காதலர்களை மகிமைப் படுத்தக் 'காதலர் தின'மாம்!

பொதுமக்களுக்குத் தீமை விளைவிக்கக் கூடியது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் "புகை பிடிப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு!" முத்திரையுடன் புகைப்பொருட்களை விற்கவும் தனி மனிதனுக்கும் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் சாபக்கேடானது என நன்றாகத் தெரிந்திருந்தும் "பார் வசதியுடன் கூடிய மது விற்பனைச் சாலைகளை" அரசே நடத்த ஏற்பாடு செய்தும் சமூக வாழ்வையே சீர்குலைக்கக்கூடிய மிகப்பெரிய உயிர்க்கொல்லி வைரஸ் தொழிற்சாலை எனத் தெரிந்திருந்தும் ரெட் லைட் ஏரியா என்ற பெயரில் லைசன்ஸ் கொடுத்து விபச்சாரம் செய்யவும் அனுமதி வழங்குகின்ற "மக்களைப் பாதுகாக்கும்(?) அரசு"கள்.

"என் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்" என்ற எதிர்பார்ப்புடன் தன் பிள்ளைகளின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்யும் பெற்றோர்கள்தாம் இவ்விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு மட்டுமின்றி, பண்பாட்டைப் பேணுகின்ற எந்தக் கலாச்சாரத்துக்கும் எவ்வகையிலும் ஒவ்வாத இந்த ஆபாச தினச் சிந்தனையில் உள்ள தீமைகளைக் குறித்த போதிய அறிவு பெற்றோர்களுக்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பள்ளிப்பருவத்தையும் விட்டு வைக்காத இந்தக் கேடுகெட்ட கலாச்சாரச் சீரழிவில் விழுந்து விடாமல் வளரும் தலைமுறையைக் காக்க இயலும்.

பண்டைய ரோமர்கள் கொண்டாடிய ஒரு பண்டிகையின் மாற்று உருவே 'வாலண்டைன்" என்ற ஒருவரின் பெயரால் இன்று கொண்டாடப்படும் இந்த ஆபாச தினம்.





ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவனுக்குக் கொண்டாடுவதற்கு இரு பண்டிகைகள் மட்டுமே உண்டு. இவையன்றி வேறு எதற்காகவும் எந்த ஒரு நாளையும் கொண்டாடுவது மார்க்கம் அனுமதிக்காத செயலே. மார்க்கம் அனுமதிக்காக ஒன்றைச் செய்பவன் அழிவை நோக்கிச் செல்கின்றான் என்பது தூதரது எச்சரிக்கையாகும்.

"மாற்றுமத கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்" எனவும் "மாற்றுக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் அவர்களாகவே மாறி விடுகின்றனர்" எனவும் அறிவுறுத்திய தூதரின் சொற்களை மனதில் இருத்துபவர்கள், இத்தகைய மார்க்கம் காட்டாத மாற்றாரின் கலாச்சாரத்திலிருந்து விலகியே இருப்பர்.

"அலீயே!, அன்னியப் பெண்ணைப் பார்க்கும் (இயல்பான) உமது முதல் பார்வை உம்முடையதாகும்; (கூர்த்த) இரண்டாவது பார்வை ஷைத்தானுடையதாகும்" என அந்நியப் பெண்களைப் பார்ப்பதைக்கூட தூதர் தடை செய்திருக்கும் பொழுது, மனைவியர் அல்லாத மாற்றுப் பெண்களுடன் இத்தகைய ஆபாச தினக் கொண்டாட்டங்களைப் பூங்கொத்துக் கொடுத்தும் வாழ்த்து அனுப்பியும் கொண்டாடும் இளைய தலைமுறைகள், ஷைத்தானுடன் ஒப்பந்தம் செய்து நரகத்தை நோக்கித் தமது பயணங்களை அமைத்துக் கொள்கின்றனர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அந்நியப் பெண்களுக்கு முன்பாக, "முஃமினான ஆண்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும்" என்பது படைத்தவனின் கட்டளையாகும். இத்தகைய உயர்ந்த, தூய்மையான வாழ்க்கை முறையைக் கற்பித்துத் தரும் இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகப் பின்பற்றும் முஸ்லிம்கள், அந்நியப் பெண்டிருடன் அனுமதியற்ற உறவுகளைக் கொள்ள வழிகோலும் இத்தகையக் கலாச்சாரச் சீரழிவுக் கொண்டாட்டங்களின் பக்கம் செல்லாமல் இருப்பதோடு, சமூகத்தைச் சீரழிக்கும் இத்தகைய அனுமதிகளுக்கு எதிராக போராடவும் முன்வரவேண்டும்.

"முஃமினான பெண்கள், அவர்களது தலை முந்தானைகளைக் கொண்டு மார்பை மறைத்துக் கொள்ளட்டும்", என்றும் "அவர்கள் கண்ணியமானவர்களாக அறியும் பொருட்டு, அவர்கள் (அவசியமின்றி) வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்" எனறும் அல்லாஹ் அறிவுரை பகர்கின்றான்.

"உலகில் செல்வங்களிலேயே மிக உயர்ந்த செல்வமாக நல்லொழுக்கப் பெண்ணை" இஸ்லாம் காண்கின்றது.

இவ்வாறு ஆண்களையும் பெண்களையும் கண்ணியமான வாழ்க்கை வாழப் பணிக்கும் தத்துவங்களை உள்ளடக்கிய இஸ்லாம், உலகின் அமைதியான வாழ்வுக்கும் சுபிட்சமான சமூக கட்டமைப்பிற்கும் உத்தரவாதம் வழங்கும் ஒரே மார்க்கம் எனலாம். இத்தகைய உயர்ந்த வாழ்க்கைத் தத்துவங்களை உள்ளடக்கிய இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்கள், தெரிந்துக் கொண்டே இந்த ஆபாசதினத்தை அங்கீகரிக்கவும் கொண்டாடவும் அதில் இணையவும் முன்வரக் கூடாது; முன்வரமாட்டார்கள்.

வியாழன், 12 பிப்ரவரி, 2009

மனிதநேய மக்கள் கட்சி மாநாடு முடிந்தவுடன் முதல் மனிதநேயம் அரங்கேறியது

மனிதநேய மக்கள் கட்சியின் முதல் மாநாடு முடிந்து வந்து கொண்டிருந்த போது, உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஆசனூர் என்னும் ஊரில், எங்களை முந்தி சென்று கொண்டிருந்த ஒரு டூரிஸ்ட் பஸ் மீது சரக்கு லாரி ஒன்று இடித்துவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. அதனால் டூரிஸ்ட் பஸ் நிலை தடுமாறி வலது பக்கமாக பள்ளத்தில் உருண்டு சகதி நிறைந்த கால்வாயில் தலைக்கீழாக சரிந்து புதைந்தது. இதனைக் கண்ட பின்னால் வந்து கொண்டிருந்த தமுமுக ஏர்வாடி பஸ்சும், தென்காசி தமுமுகவினர் வந்தி ருந்த பஸ்களும், வேன்களும் நிறுத்தப் பட்டு, தமுமுக தொண்டர்கள் சகதியில் குதித்து பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து மக்களை மீட்டனர். அதில் குழந்தைகள் உட்பட பலருக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. அவர்களை உடனடியாக தமுமுக சகோதரர்கள் மீட்டு உடனே அவசர போலீஸ் 100 எண்ணுக்கு தகவல் தெரிவித்தனர். உளுந்தூர்பேட்டை பல் மருத்துவமனை, சுப்புலெட்சுமி மருத்துவ மனையின் அவசர ஊர்திகள் வந்தன. அதன்மூலம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்டோர் தமுமுகவினரிடம் ''நாங்கள் மதுரையைச் சார்ந்த சௌராஷ்ட்ரா இனத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் கோயிலுக்குப் போய் திரும்பிக் கொண்டிருந்தோம். எங்கள் நிலையைப் பார்த்த பிறகும் பலர் வேடிக்கைப் பார்த்தவாறு போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் நீங்கள் மட்டும் இத்தனை வண்டிகளையும் நிறுத்தி உதவி செய்தீர்கள். நீங்கள் உதவி செய்யா விட்டால் நாங்கள் அனைவரும் இறந்திருப்போம். உங்கள் உதவிகளை நாங்கள் மறக்கவே மாட்டோம். உங்க ளுக்கு மிக்க நன்றி'' என்று கூறினர்.

மீட்புப் பணியில் வடசென்னை மாவட்டத் தலைவர் பி.எஸ்.ஹமீது, நெல்லை மாவட்ட துணைச் செயலாளர் எஸ். மிஸ்பாஹுல் ஹுதா, ஏர்வாடி நகர பொருளாளர் பகுர்தீன், தென்காசி நகர செயலாளர் அப்துல் ரஹ்மான், தென்காசி ஆம்புலன்ஸ் டிரைவர் சலீம் ஆகியோ ரும் தொண்டர்களுடன் சேர்ந்து களப் பணியாற்றினர்.

மனிதநேய மக்கள் கட்சி மாநாடு முடிந்தவுடன் முதல் மனிதநேயம் அரங்கேறியது.

அதுபோல் அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்த சகோதரர்கள் மாநாட்டுக்கு வரும்போது அதிகாலை 6:00 மணியள வில் சென்னையை நெருங்கும் போது லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதைக் கண்டனர். உடனே தலைக்குப்புற கவிழ்ந்த காரில் இருந்த நான்கு பேரை காப்பாற்றி ஆம்பூலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பினர். அந்த சேதுராமன் என்பவரது பிராமண குடும்பம் தமுமுகவினரை கட்டி அனைத்து நன்றி கூறியது.

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

நல்லவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவது நல்லதல்ல... தமுமுக தலைவர் உரை.


மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா மாநாட்டில் தமுமுக தலைவர் உரை.

சென்னை : "பண்புள்ளவர்கள் அரசியல் தளத்தில் இருந்து ஒதுங்கி இருப்பது, நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. நல்லொழுக்கம் உள்ளவர்களும் அரசியலுக்கு வந்து, மக்கள் சேவை ஆற்ற முடியும் என்பதை நிலைநாட்டவே மனிதநேய மக்கள் கட்சி உருவாக்கப்படுகிறது,'' என்று, மனிதநேய மக்கள் கட்சியின் துவக்க விழாவில் த.மு.மு.க., தலைவர் பேராசிரியர் எம்.ஹேச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பேசியதாவது.


தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நேற்று நடந்த மனிதநேய மக்கள் கட்சி தொடக்க விழா மாநாட்டில் த.மு.மு.க., தலைவர் பேராசிரியர் டாக்டர் MH ஜவாஹிருல்லா அவர்கள் பேசியதாவது:


தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஆறு தேசியக் கட்சிகள், 55 மாநிலக் கட்சிகள், 827 பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளன.நாள்தோறும் தேர்தல் ஆணையத்திற்குப் புதிதாகப் பதிவு செய்வதற்காக இரண்டாயிரம் விண்ணப்பங்கள் வருவதாக அறியப்படுகிறது. நாட்டில் அரசியல் கட்சிகளுக்குப் பஞ்சம் இல்லாத நிலையில், புதிதாக மனிதநேய மக்கள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி துவங்கப்பட்டுள்ளதற்குக் காரணம் உள்ளது. நமது மக்கள் இன்னும் பல தளங்களில் சுதந்திரத்தைப் பறிகொடுத்த நிலையில் உள்ளனர். தற்போதைய பார்லிமென்டில் உள்ள 522 உறுப்பினர்களில் 120 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர்களில் 40 பேர் மீது கொலை, பாலியல் பலாத் காரம் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், நல்லவர்கள், நல்ல பண்புள்ளவர்கள் அரசியல் தளத்தில் இருந்து ஒதுங்கியே இருக்க வேண்டுமென விரும்புகின்றனர். இது, நமது நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. நல்லொழுக்கமுள்ளவர்களும் அரசியலுக்கு வந்து மக்கள் சேவை ஆற்ற வேண்டும்; ஆற்ற முடியும் என்பதை நிலைநாட்டவே மனிதநேய மக்கள் கட்சி உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் வாழும் மக்களில் 45 கோடி பேர், அதாவது, மக்கள் தொகையில் 41.6 சதவீதம் வறுமைக் கோட்டின் கீழ் வாழ் வதாக உலக வங்கி புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

உலகில் உள்ள ஏழை மக்களில் 33 சதவீதம் பேர் இந்தியாவில் வாழ்கின்றனர். ஆனால், அதிக வருமானம் உடையவர்களில் முதல் 10 சதவீதத்தினர் மொத்த வருமானத்தில் 33 சதவீதத்தை அனுபவித்து வருகின்றனர்.நமது நாட்டின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கினர் வருவாய் நாளொன்றுக்கு 20 ரூபாயைத் தாண்டவில்லை. இந்த அவல நிலையை நீக்க, ஏழை எளிய மக்களின் தேவைகள், சட்டமியற்றும் அவைகளில் வலிமையாக ஒலிப்பதற்காகத் தான் மனிதநேய மக்கள் கட்சி உதயமாகிறது.நமது நாட்டு அரசு மக்களுக்குச் செய்யும் செலவில் ஒரு ரூபாய்க்கு வெறும் 15 பைசா மட்டுமே அடித்தட்டு மக்களைச் சென்றடைகிறது என்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி குறிப்பிட்டார்.

காந்தியடிகள், "இந்த உலகில் எல்லாருக்கும் தேவையானது போதுமான அளவு உள்ளது. ஆனால், பேராசைக்கு அளவே இல்லை' என்று குறிப் பிட்டார்.லஞ்சம் புற்றுநோய் போல் ஒரு சமுதாயத்தை வீழ்த்தி விடும். லஞ்சம் வாங்குபவர் அதைக் கொடுப்பவர் மற்றும் அதற்கு வழிவகுப்பவர் ஆகியோரை இறைவன் சபிப்பதாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நமது நாடு, கல்வி, காவல், நீதித்துறை, சுகாதாரம் உள்ளிட்ட மக்களுக்குச் சேவை செய்யும் அரசுத் துறைகளில் மட்டும் ஆண்டொன்றுக்கு லஞ்சத்தின் அளவு 21 ஆயிரத்து 68 கோடி ரூபாய் என்று இருப்பதாக, "டிரான்ஸ்பரன்சி இண்டர் நேஷனல்' அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த அவலப் போக்கை தலைகீழாக மாற்றி, லஞ்ச லாவண்யமற்ற இந்தியாவை உருவாக்குவதற்காகத் தான் மனிதநேய மக்கள் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.இவ்வாறு த.மு.மு.க., தலைவர் பேராசிரியர் எம். ‍ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.