சனி, 14 மே, 2011

குடும்ப அரசியலுக்கு முடிவு!! ஹைதர் அலி!!

May 14, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள் வெளியிட்ட அறிக்கையாவது:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு தமுமுக சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க இருக்கும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஒரு குடும்பத்தினர் அடிமைப்படுத்தி அவர்களை சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தி வந்தனர்.

தங்களை எல்லா வகையிலும் வளப்படுத்திக் கொண்டவர்கள் தமிழக மக்களை மின்வெட்டு என்ற பெயரில் இருளில் தள்ளினர்.

மேலும் விலைவாசி உயர்ந்து மக்கள் துன்பம் அடைந்தபோது, மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது என எகத்தாளம் பேசினார் முதலமைச்சர் கருணாநிதி.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் அமர்ந்து கொண்டு ஸ்பெக்ட்ரம் முதல் மணல் கடத்தல் வரை அனைத்திலும் கொள்ளையடித்துக் கொண்டே "நாங்கள் நல்லாட்சி கொடுக்கிறோம்' என்று மக்களை முட்டாளாக்கி வந்தனர்.

பண பலத்தைக் கொண்டு மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற திட்டமிட்ட திமுகவிற்கு பாடம் புகட்டிய தமிழக மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.