முஸ்லிம் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முஸ்லிம் . லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 ஜனவரி, 2011

கமல்ஹாசனுக்குப் பகிரங்கக் கடிதம் மன்மதன் அம்பும், மதிகெட்ட வம்பும்


அன்புள்ள கமலஹாசன் அவர்களுக்கு,

தங்கள் மீது, ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் பொழியப்படவும், தாங்கள் நேர்வழி பெறவும், பிரார்த்தித்துக் கொள்கிறோம்.(மாற்றுக் கருத்துடையோர்க்கும் பிரார்த்திப்பது எங்கள் மரபு) வாசிப்பு வாசனையற்ற எத்தனையோ திரைக்கூத்தாடிகளுக்கிடையே, ஆழமான வாசிப்பாளராக, மனிதநேயராக, மதமாச்சரியம் அற்றவராக, சாதி கடந்தவராக, தங்களை அடையாளப் படுத்திக் கொள்கிறீர்கள். சினிமா, என்ற சக்திவாய்ந்த ஊடகத்தின் உச்சத்தில் இருக்கும் தாங்கள், சிதைக்கப்பட்டு, வதைக்கப்பட்டு, வாழ்வுரிமையே கேள்விக்குறியாக்கப்பட்டு வரும் ஒரு சிறுபான்மை சமுதாயத்தை மேலும், சிதைப்பதிலும், சீண்டுவதிலுமா உங்கள் கலைஞநானத்தையும், ஆற்றலையும் காட்ட வேண்டும்.



முஸ்லிம்கள் மீதான ஊடக வன்முறையின் உச்சகட்டமாக, உங்களது ‘உன்னைப்போல் ஒருவன்’ படம் அமைந்தது. தங்களை நேரில் சந்தித்து எங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தோம். சுமார் ஒரு மணிநேரம் நான் முஸ்லிம் எதிர்ப்பாளன் அல்ல என்று விளக்கினீர்கள்

‘கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த நன்றொன்று உள்ளக் கெடும்‘ (கொல்கிற அளவுக்குக் கொடுமை செய்தவரானாலும், அவர் செய்த ஒரு நன்மையை நினைத்துப் பார்த்து, மன்னிக்க வேண்டும், மறக்க வேண்டும், என்பார் வள்ளுவர்.)

‘உன்னைப்போல் ஒருவன்’ எங்களைக் காயப்படுத்திய படம் என்பது தான் இப்போதும் எங்கள் நிலை. ஆனால், பாபரி மஸ்ஜித் இடிப்பு நேரத்தில், மனிதநேயத்தோடு தாங்கள் வெளிப்படுத்திய கருத்துகளையும், மும்பை கலவரத்தின்போது அன்றைய பிரதமர் நரசிம்மராவை நேரில் சந்தித்து துணிவோடு குற்றம் சாட்டியதையும், நாங்கள் நினைத்துப் பார்த்தோம், நீங்களும் அதை நினைவூட்டினீர்கள்.

இப்போது, முதல்வர் கலைஞரின் பேரன் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் ‘மன்மதன் அம்பு’ வந்துள்ளது. உங்கள் அம்பு சரியாகவே பாய்ந்துள்ளது. அது தந்த வலிகளே இந்தக் கடிதம்..

‘அம்பு’ படத்தில் வாகன விபத்தில் இறந்துபோன உங்கள் முதல்மனைவி (ஜுலியட்) பற்றி, கதாநாயகியிடம் சொல்லும்போது, காஷ்மீரில் ‘லஷ்கர் இ தொய்பா’ பயங்கரவாதிகள் அந்தப் பெண்ணைக் கடத்தி வைத்திருந்ததாகவும், அவரை மீட்பதற்கு ராணுவ மேஜரான நீங்கள் இரண்டு வீரர்களை பலி கொடுத்ததாகவும் கூறுகிறீர்கள்.

என்ன சொல்ல வருகிறீர்கள் கமல்?

காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகள் வெளிநாட்டிலிருந்து அழகான பெண் வந்தால் கடத்தி வைத்துக் கொள்வார்கள். பெண்களைப் பெரிதும் மதித்து, துதித்துப் பெண்ணியம் போற்றும் (?) நமது பாதுகாப்புப் படையினர் கடத்தப்பட்டப் பெண்ணை உயிரைப் பணயம் வைத்து மீட்பார்கள்? என்று தானே சொல்ல வருகிறீர்கள்.

உங்கள் மீட்பர்களின் லட்சணத்தை உண்மை யிலேயே அறிந்துள்ளீர்களா? கமல்.

பேரா.அ.மார்க்ஸ், எழுதியுள்ள ‘காஷ்மீர் என்னதான் நடக்கிறது அங்கே, என்ற நூலைப் படியுங்கள்.

நட்சத்திர விடுதியில் குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு எழுதப்பட்ட எழுத்தல்ல அது, திகிலூட்டப்பட்ட காஷ்மீருக்கு, உண்மை அறியும் குழுவோடு நேரில் சென்று பார்த்த உண்மைகள் அவை.

காஷ்மீரில் தொடரும் துயரம் என்ற நூலையும் படியுங்கள்.

அருந்ததிராய், பேரா.கீலானி உள்ளிட்ட மனிதஉரிமைப் போராளிகளின் காஷ்மீர் குறித்த கருத்துகளை வாசியுங்கள்.

‘காஷ்மீரில் ஷோபியான் என்ற இடத்தில் முஸ்லிம் இளம்பெண்களை உங்கள் மீட்பர்கள் பாலியல் வன்மம் செய்து கொன்ற செய்தி எல்லா ஏடுகளிலும் தொடர்ந்து வெளிவந்ததே...

கலைஞானி அவர்களே.. கண்ணுறவில்லையா?

காஷ்மீரில், குறைந்தபட்சத் தண்டனையே மரண தண்டனைதான் என்பதையும், காஷ்மீரியாகப் பிறந்துவிட்டால், வாழ்க்கையே ஒரு தண்டனைதான் என்பதையும், இதற்கெல்லாம் காரணம் அந்த மீட்பர்கள் என்பதையும் அறியாமலா இருக்கிறீர்கள்? நிச்சயமாக அறியாமல் இருக்க மாட்டீர்கள் பிறகு ஏன்.?

லஷ்கர் இ தொய்பாவை திட்டினால் உங்களுக்கேன் வருத்தம்? என்று நீங்கள் கேட்கலாம். பாகிஸ்தான் என்ற நாசகர ஆக்ரமிப்பு சக்தியின் ஆதரவோடு காஷ்மீரில் இயங்கும் எந்த இயக்கத்தையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம். அதே நேரத்தில், தங்களது வாக்களிக்கப்பட்ட சுயநிர்ணய உரிமைக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடிவரும் காஷ்மீரிகளை கொச்சைப்படுத்தவும் மாட்டோம்.

காஷ்மீரி என்றாலே அவன் ‘லஷ்கர் இ தொய்பா’வைச் சேர்ந்தவன் என்று முத்திரைக் குத்திதான் ‘மீட்பர்களின் துப்பாக்கிகள்’ அந்த அப்பாவியைப் பலியிடுகின்றன. காஷ்மீர்ப் பெண்களை அன்றாடம் சூறையாடுகின்றன.

காஷ்மீரிகளின் வீடுகளை இடித்துத் தகர்க்கின்றன. சந்தேகத்தின் பேரில் சிறுவர்களையும் கொன்று குவிக்கின்றன.

காஷ்மீரிகளை, இந்த மீட்பர்கள் பொது இடங்களின் வைத்து பெண்களைப் பாலியல் வன்முறை செய்தாலும், அப்பாவிகளைப் படுகொலையே செய்தாலும் யாரும் கேட்க முடியாது.

மீட்பர்களை இப்படி ரட்சிக்கிறது ராணுவத்திற்கான சிறப்பு அதிகாரச் சட்டம். மாநில அரசு கூட இந்த சீருடைப் பயங்கர வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. மத்திய அரசின் அனுமதி பெற்றுத்தான் நடவடிக்கை எடுக்க முடியும். சீருடைக் கொடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை. 2009ம் ஆண்டு மட்டும் 350 முறை காஷ்மீர் மாநில அரசால் அனுமதி கேட்கப்பட்டு மத்திய அரசால் மறுக்கப்பட்டுள்ளது. இந்த அவலங்களையெல்லாம், சக்திவாய்ந்த ஊடகத்தின் சகலகலா வல்லவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

ஃபாரன்ஹீட் 9/11 போன்ற படம் எடுக்கும் கலைஞர்களும், ஹிட்லரையே மிரளவைத்த திரைக்கலைஞர் சார்ளி சாப்ளினும் தமிழகத்தில் இல்லையே...

மத்திய அமைச்சராக இருந்த முப்தி முகமது சயீதின் மகள் கடத்தப்பட்டதைப் பின்புலமாகக் கொண்டு உங்கள் மருமகன் மணிரத்னம் ‘ரோஜா’ படம் எடுத்தார். காஷ்மீரிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பொதுப் புத்தியில் பதிய வைத்தார்.

அன்றாடம் நூற்றுக்கணக்கான காஷ்மீர் இளம் பெண்கள் பாதுகாப்புப் படையால் கடத்தப்பட்டு, சிதைக்கப்படுகிறார்களே உங்கள வர்கள் அதைப்படமாக எடுத்த துண்டா?

நீங்கள் கறுப்பு சட்டைக்காரராகவும், இருக்கிறீர்கள், சமயத்தில் சிவப்புச் சிந்தனையும் பேசுகிறீர்கள். கறுப்பு, சிவப்போடு சேர்ந்தும், காட்சி தருகிறீர்கள், படமும் தருகிறீர்கள்.

யாரும் விரும்பிய வண்ணத்தை எங்கள் மீது பூசுவதற்கு வசதியாக நாங்கள் வெள்ளையாக, வெள்ளந்தியாக நிற்கிறோம்.

குடிபோதையின் உச்சத்தில் மகன் அம்மாவுக்கு தொலைபேசி.. நீங்கள் ஜீனியஸ், நாஸ்ட்ரா டாமஸ், கருநாக்கு தேவதை என்கிறான். அதற்கு அம்மா, “பார்ல இருக்கியா, போறுண்டா சாப்டது, வீசிங் வந்துரும், ஆத்துக்கு வந்துடு” என்கிறார்.

சிவப்புச் சிந்தனையாளரான மாவோ, சீனாவில் செய்தது கலாச்சாரப்புரட்சி, அன்பே சிவம் படத்தில் காம்ரேடாக ‘சிவப்புச் சிந்தனை’ பேசிய நீங்கள் ஒரு புதிய கலாச்சார புரட்சியைத் தமிழகத்தில் விதைக்கிறீர்கள்...

‘கட்டிக்கப் போறவனுக்குக் கடுக்காக் கொடுக்கும் பெண்களால்தான், சுனாமி, பூகம்பம், சூறாவளியெல்லாம், வருதுன்னு, இரான் நாட்டு இமாம் சொன்னதாக, உங்கள் குடிகாரக் கதாநாயகன் பேசுகிறார், ‘இதையே தான் எங்க அம்மாவும் சொன்னாங்க” என்கிறான் நண்பன், ‘உங்க அம்மா இமாமா? என்கிறார் கு.கா. ஹீரோ....

இரான் நாட்டு எந்த இமாம் இப்படி சொன்னார் என்பது கதை வசனம் எழுதிய கலைஞானிக்கே வெளிச்சம். இரான் நாட்டு இமாம் அல்ல, ஈஞ்சம்பாக்கத்து இமாமைக் கேட்டால் கூட ‘குடிப்பழக்கம் தான் பாவங்களின் ஊற்றுக்கண்” என்பார்.

இரான் நாட்டு இமாமின் கருத்தையெல்லாம் கவனித்து எழுதிய கலைஞானி(?)க்கு காஷ்மீர் மக்களின் கண்ணீரையும், கதறலையும், கண்டு கொள்ள முடியவில்லை என்பதுதான் வேதனை.

உங்களிடம் மானுடநேயத்தை விட ராணுவ நேயம் விஞ்சி நிற்கிறது. ஜெய்ஹிந்த் கொலைகாரத் துப்பாக்கிகள் நடத்துகிற ஷுட்டிங்காக இருந்தாலும், கலைகாரக் கேமராக்கள் நடத்துகிற ஷுட்டிங்காக இருந்தா லும், விளைவு என்னவோ ஒரே மாதிரிதான் இருக்கிறது...

-ஹாஜாகனி

வியாழன், 25 நவம்பர், 2010

இடஒதுக்கீட்டில் திமுக அரசு துரோகம்-? காவல்துறை பணி நியமனத்தில் முஸ்லிம்களுக்கு வஞ்சகம்!

தமிழக அரசின் காவல்துறையில் தற்போது கூடுதலாக பத்தாயிரம் பணி இடங்கள் நிரப்ப தேர்வுகள் நடைபெற்றன. அதில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் விரைவில் பணியில் சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.




பத்தாயிரத்துஅறுபது பணி இடங்களில் 1095 காவல்துறை உதவி ஆய்வாளர் களும் காவலர்கள் 8944 பேரும் சிறை காவலர்கள் பணிக்கு 486 பேரும் தீயணைப்பு படை வீரர்கள் பணிக்கு 630 பேரும் பணியில் சேரவிருக்கும் நிலையில் வழக்கம் போல் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு முறையில் துரோகம் இழைக் கப்பட்டதாக தகவல்கள் வெளி வந்ததை யடுத்து சமுதாய ஆர்வலர்கள் கொந்தளிக் கின்றனர்.2069 பணியிடம் ஆதி திராவிட சமூகத்தினருக்கும் 3343 பணியிடங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் பெண்கள் 2673 பேரும்தேர்வு செய்யப்பட்டனர்.

அந்தந்த சமூக மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டின்படி அவர்களுக்கு பணி இடங்கள் கிட்டத்தட்ட வழங்கப்பட்டு உள்ளன. உதாரணமாக அருந்ததியர் சமூக மக்களுக்கான பணியிடத்துக்கு 293 பேர் தேர்வாகியுள்ளனர்.

முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீதத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணியிடங்கள் எவ்வளவு தெரியுமா 263 தான்.

மூன்றரை சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு 350 பணியிடங்களுக்கு குறையாமல் அல்லவா இருக்கவேண்டும். கவனக்குறைவால் விளைந்த தவறாக இதனைக் கருதிவிட முடியாது. கணக்கில் பிழை செய்திருக்கிறார்கள். நாளை தேர்தலின் போது முஸ்லிம்கள் சரியான கணக்கு எது என நிரூபித்துக் காட்டுவார்கள்.

தவறை உடனடியாக சரி செய்து தமிழக அரசு அவப்பெயரில் இருந்து தப்புமா? நடவடிக்கை இருக்குமா?

-ஹபீபா பாலன்

புதன், 4 ஆகஸ்ட், 2010

இஸ்லாமிய உடை தொடர்பான மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி கல்வித்துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கொச்சி,ஆக4:இஸ்லாமிய முறைப்படி ஆடை அணிய உத்தரவு கோரும் மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி கேரள கல்வி அமைச்சருக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மலப்புரத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தொழிற்கல்லூரியில் இஸ்லாமிய முறையில் உடை அணிய அனுமதிக்கக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அவர் கல்வி அமைச்சரிடமும் மனு கொடுத்திருந்தார்.

பொறியியல் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று முஸ்லிம் இடஒதுக்கீடு கோட்டாவில் பாலக்காடில் ஒரு கல்லூரியில் சேர்க்கையும் பெற்றிருந்தார். கல்லூரி சீருடை சட்டத்தின்படி இஸ்லாமிய கலாச்சார உடையை அனுமதிக்கமுடியாது என்று கல்லூரி நிர்வாகிகள் கூறியுள்ளனர். உடனே தன்னை வேறு கல்லூரிக்கு மாற்றும்படி அந்த மாணவி கோரினார்.

சில கிறிஸ்தவ பள்ளிகள் முஸ்லிம் மாணவிகளுக்கு முக்காடு அணிய அனுமதி மறுத்ததிலிருந்து இஸ்லாமிய உடையும், முக்காடும் கேரளாவில் பரவலாக பேசப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முஸ்லிம் மாணவிகள் உயர்நீதிமன்றத்தை அனுகியுள்ளனர்.,
இவ்விசயத்தில் முஸ்லிம் மாணவிகளின் தனிப்பட்ட மற்றும் சமய உரிமைக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.