புதன், 14 அக்டோபர், 2015

மாலேகான் குண்டுவெடிப்பு-இந்துத்துவா தீவிரவாதிகளை காக்க முயன்ற அதிகாரி பெயரை வெளியிட்ட வக்கீல் ரோகினி



டெல்லி: மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளான இந்துத்துவா தீவிரவாதிகளிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) அதிகாரி சுகாஷ் வார்கேதான் தமக்கு நெருக்கடி அளித்ததாக மகாராஷ்டிரா அரசின் சிறப்பு வழக்கறிஞர் ரோஹினி சாலியன் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை தேசிய புலனாய்வு ஏஜென்சி நிராகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் 2008-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 6 பேர் பலியாயினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்ததாக சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட இந்துத்துவா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி நடத்தி வருகிறது. இதில் மகாராஷ்டிரா அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞராக ரோஹிணி சாலியன் ஆஜராகி வந்தார். கடந்த ஜூன் மாதம் ரோஹினி ஊடகங்களுக்கு பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், மத்தியில் மோடி அரசு அமைந்த நிலையில் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரி ஒருவர் என்னிடம் தொடர்பு கொண்டார். அவர் இந்த வழக்கில் குற்றவாளிகளான இந்துத்துவா தீவிரவாதிகளிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார் எனக் கூறி இருந்தார். ஆனால் அந்த அதிகாரியின் பெயரை ரோஹினி வெளியிடவில்லை. அவர் அளித்த இந்த பேட்டியின் அடிப்படையில் மும்பை உயர்நீதிமன்றத்தில் சஞ்சய் பட்டேல் என்பவர் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது 3 மாதங்களாகியும் மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணை எதுவும் நடைபெறவில்லை. இதையடுத்து சஞ்சய் பட்டேல் உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில் தாம் கீழ்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணை நடைபெறவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இவ்வழக்கில் மும்பை உயர்நீதிமன்றத்தில் தற்போது வழக்கறிஞர் ரோஹிணி பிரமாண வாக்குமூலம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், தேசிய புலனாய்வு ஏஜென்சியில் பணியாற்றும் அதிகாரியான சுகாஷ் வார்கே மும்பை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். அவர்தான் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நீதித்துறையில் குறுக்கீடு செய்யும் விதமாக தலையிட்டார். கடந்த ஆண்டு இறுதியில் என்னைச் சந்தித்த அவர் தமக்கு மேலிடத்தில் இருந்து சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் கேட்டுக்கொண்டவாறு குற்றவாளிகளிடம் மென்மையாக நடந்து கொள்ளுமாறும் கூறினார். இந்த வழக்கில் எனக்கு பதிலாக வேறொரு வழக்கறிஞர் ஆஜர் ஆவார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். இவ்வாறு ரோஹினி வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Thanks :  http://tamil.oneindia.com/news/india/pp-rohini-alleges-nia-sp-asked-go-slow-malegaon-blast-case-237670.html

கருத்துகள் இல்லை: