ஞாயிறு, 27 ஜூன், 2010

பிரபல இஸ்லாமிய பிரசாரகர் பிலால் பிலிப்ஸுக்கும் லண்டனில் நுழைய தடை


லண்டன் : உலக அமைதிக்காக பிரபல இந்திய இஸ்லாமிய பிராசரகர் ஜாகிர் நாயக் வருடந்தோறும் பீஸ் எனும் பெயரில் கருத்தரங்கத்தை இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடத்தி வருகிறார். அப்படி ஒரு மாநாடு கடந்த வாரம் லண்டனில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஜாகிர் நாயக் மறைமுகமாக தீவிரவாதத்திற்கு துணை போவதாக கூறி இங்கிலாந்து அரசாங்கம் அவருக்கு தடை விதித்திருந்ததை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

தற்போது அக்கருத்தரங்குக்கு வருகை தரவிருந்த பல இஸ்லாமிய பிராசரகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக தென் ஆப்பிரிக்காவிலிருந்து அரீப் இஸ்லாம் எனும் பிரசாரகருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது போல் கனடாவை சேர்ந்த தற்போது கத்தாரில் வசிக்கும் பிரபல இஸ்லாமிய பிராசரகரான பிலால் பிலிப்ஸூம் லண்டன் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜாகிர் நாயக்குக்காவது வருவதற்கு முன் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் தான் கடந்த சனிக்கிழமை காலை 8 மணிக்கு விமான நிலையத்தில் இறங்கியதாகவும் பின் காலை 11 மணிக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் கூறினார். மேலும் தங்களின் அமைதிக்கான மாநாட்டை தடை செய்வதன் மூலம் அவ்வெற்றிடத்தை தீவிர போக்குடையவர்கள் ஆக்கிரமிப்பதிற்கு இவர்களே காரணமாக இருக்கிறார்கள்.

தங்கள் கால்களை தாங்களே சுட்டு கொள்வதாக சொன்ன பிலால் பிலிப்ஸ் ஒரு விதத்தில் இதுவும் நன்மைக்கே என்றும் இவர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூரணமாக்கி வைப்பான் என்றும் கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்த ஒரு இணைய தள நிபுணர் கூகுள் தேடலில் ஜாகிர் நாயக் மற்றும் பீஸ் மாநாடு அதிகம் பார்க்கப்படுவதற்கும் இஸ்லாத்தை குறித்த தேடல்கள் இணையத்தில் அதிகரிப்பதற்குமே இது உதவும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: