இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் உருவப் படத்தையும் இஸ்லாம் பற்றி தவறான கருத்துகளையும் கொண்டிருந்த பாடப்பு த்தகத்தை நேபாள அரசு தடை செய்துள்ளது.
முஸ்லிம்களின் கடுமையான கண்டனத்தைத் தொடர்ந்து இது நடந்துள்ளது.
இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் உருவத்தை பெண்ணைப் போல் சித்தரித்து உருவத்தை வெளியிட்டுள்ளனர். அத்தோடு இஸ்லாம் குறித்து தவறான விளக்கங்களையும் அந்தப் பாடப் புத்தகத்தில் தந்துள்ளனர்.
நேபாள வரலாற்றில் இது முதன் முறையாக நடந்துள்ளது.
'சமூகவியலில் நவீன அணுகுமுறை' (A modrn approach to social studies) என்ற பாடப் புத்தகத்தில் வந்துள்ள மேற்கண்ட சர்ச்சைக்குரிய விசயங்களைப் படித்துக் கொடுக்க வேண்டாம் என்று நேபாள கல்வி அமைச்சகம் அனைத்து பள்ளிகளுக்கும் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
அனைத்து பாடப் புத்தகங்களையும் மேற்பார்வையிடும் துறை இந்தப் புத்தகத்திற்கு அனுமதி தரவில்லை என்றும், அது பள்ளிகளில் போதிக்கப்படக் கூடாதென்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் நேபாள முஸ்லிம் அமைப்பு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை தலைநகர் காத்மண்டுவில் நடத்தியது. அவ்வமயம் இது குறித்து கண்டனம் எழுப்பப்பட்டது.
முஸ்லிம் அமைப்பின் துணைத் தலைவர் முஹம்மத் நிஸாமுத்தீன் IANS என்ற செய்தி நிறுவனத்திடம் இவ்வாறு கூறினார் : "இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களை 'இஸ்லாத்தின் நிறுவனர்' என்று தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நாங்கள் இந்த பிரபஞ்சத்தைப் படைத்தது அல்லாஹ் என்று நம்புகிறோம். படைப்புகளின் தொடக்கத்திலேயே இஸ்லாம் உள்ளது என்று நம்புகிறோம். இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை விளக்குவதற்காகவும், நடைமுறைப் படுத்துவதற்காகவும் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்."
8ம் வகுப்பில் இந்தப் பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. இஸ்லாம் பற்றி தவறான விளக்கங்கள் இடம் பெற்றிருப்பது மட்டுமல்லாமல், இறைத் தூதரின் உருவப் படத்தை ஒரு பெண் போல் சித்தரித்து வெளியிட்டுள்ளனர்.
இஸ்லாம் தூதர்களை உருவகப்படுத்துவதைத் தடை செய்துள்ளது. அதேபோல் இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை.
இதேப்போல் சர்ச்சைக்குரிய விஷயங்களைக் கொண்டிருக்கும் வேறு இரு புத்தகங்களும் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
ஆத்ரை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள 'நேபாள சமூகவியல்'(Nepal social studies), ஏசியா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள 'ஆசியாவின் சமூகவியல்' (Asia's social studies) ஆகியன அந்த இரண்டு புத்தகங்கள்.
எதிர்காலத்தில் இப்படிப்பட்ட தவறுகள் நிகழாமல் இருக்க பாடப் புத்தக மேற்பார்வைக் குழு ஒன்றை அரசு ஏற்படுத்தும் என்று அரசு அறிவித்துள்ளதாகவும், தங்கள் முஸ்லிம் அமைப்பும் தொடர்ந்து கண்காணித்து வரப் போவதாகவும், மத விஷயங்களை எழுதும் பொழுது மிகக் கவனமாக ஆராய்ந்த பிறகே எழுதப்பட வேண்டும் என்று தாங்கள் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் நேபாள முஸ்லிம் அமைப்பின் துணைத் தலைவர் முஹம்மத் நிஸாமுத்தீன் கூறினார்.
நேபாளின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 4% இருப்பதாக 10 வருடங்களுக்கு முன் எடுத்த சர்வே கணக்கு தெரிவிக்கின்றது.
கடந்த 2006-ம் வருடம் வரை ஹிந்து அரசாங்கம் நேபாளை ஆண்டு வந்தது. அதன் பின் அது மதசார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. இப்பொழுது 20 லட்சம் முஸ்லிம்கள் நேபாளில் இருப்பதாக நிஸாமுத்தீன் கூறினார். இது நேபாள் மக்கள் தொகையில் 8-11 சதவீதம் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக