ஸ்ரீநகரில் நடந்த போராட்டத்தின் போது 17 வயது சிறுவன் போலீஸ் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதையொட்டி முஸ்லிம் அமைப்புகள் பொது பந்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதனையொட்டி கடைகள், கல்விக்கூடங்கள் அலுவலகங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. இன்றும் பந்த் தொடர்கிறது.
ஸ்ரீநகரில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தின் போது போலீசுக்கும் பொது மக்களுக்கும் இடையில் நடந்த மோதலில் போலீஸ் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியது.ஒரு கண்ணீர் புகைக்குண்டு நேரடியாக சிறுவன் துஃபைல் அஹமதுவை தாக்கியதாக நேரில் பார்த்த சாட்சிகள் கூறின.
மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் முன்பே துஃபைல் அஹமதுவின் உயிர் பிரிந்துவிட்டது. இதனால் அங்கே பதட்டம் நிலவுகிறது.
பெமினா, நோவ்செரா, மகார்மல்பாஹ் மற்றும் சபாகடல் ஆகிய பகுதியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்பு படையினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
கனியார், ரைனாவரி நவ்கட், S.R.குஞ்ச் ஆகிய இடங்களின் காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 2-வது நாளாக கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சனிக்கிழமை நடந்த மோதலில் 48 பொதுமக்களும் 15 பாதுகாப்பு படையினரும் காயமடைந்தனர்.
போராட்டம் உருவாக காரணமான சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காரணமானவர்களை அடையாளம் காண ஜம்மு காஷ்மீர் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக