இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 ஆகஸ்ட், 2014

நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் -யுவன் சங்கர் ராஜா




நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ் திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை.
யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்விக்கு முதன் முறையாக பதிலளித்திருக்கிறார் யுவன். இது குறித்து யுவன் கூறியிருப்பது:
"எனது தந்தை தீவிரமான இந்து. ஒரு கண்ணாடி உடைந்தாலும் ஜோசியரைக் கூப்பிடும் அளவுக்கு மூட நம்பிக்கை உடையவர். எனது பெற்றோர் பல சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தனர். ஆனால் எனது சிறுவயது முதலே இவற்றையேலாம் தாண்டி ஒரு அமானுஷ்யமான சக்தி உலகை கட்டுப்படுத்துகிறது என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.
எனது மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது எனது அம்மாவின் மறைவு தான். வேலையின் காரணமாக மும்பைக்கு சென்றிருந்தேன். சென்னைக்கு வந்தபோது, அம்மா கடுமையாக இரும்பிக் கொண்டிருந்தைக் கண்டேன். நானும் எனது சகோதரியும் அவரை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றோம். நான் கார் ஓட்டிச் சென்றேன். நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம். அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால், அடுத்த நொடி அவரது கை விழுந்தது, அவர் காலமானார். நான் அழுது கொண்டிருந்த அதே நேரத்தில், அந்த சில நொடிகளில் அம்மாவின் ஆன்மா என்னவாகியிருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன், ஏனென்றால் அவர் சில விநாடிகளுக்கு முன் தான் உயிரோடு இருந்தார்.
எனக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும்போது அல்லாவிடமிருந்து நேரடியாக அழைப்பு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஆன்மிக அனுபவம். எனது நண்பர் ஒருவர் அப்போது தான் மெக்காவிலிருந்து வந்திருந்தார். "நீ தற்போது மிகவுள் தளர்ந்துள்ளாய். இதிலிருந்து நீ மீண்டு வரவேண்டும்" எனக் கூறி ஒரு முசல்லாவை (பிரார்த்தனை செய்யும்போது பயன்படுத்தப்படும் பாய்) எனக்குத் தந்தார். "இந்தப் பாய் மெக்காவில் நான் அமர்ந்து பிரார்த்தனை செய்தது. இது மெக்காவை தொட்டு வந்த பாய். உன் மனது பாரமாக இருக்கும்போது இதில் உட்கார்ந்து பார்" என்றார். நான் அந்த பாயை எனது அறையின் ஒரு மூலையில் வைத்துவிட்டு மறந்துவிட்டேன்.
சில மாதங்கள் கழித்து எனது உறவினர் ஒருவருடன் அம்மாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த்போது மிகவும் பாரமாக உணர ஆரம்பித்தேன். எனது அறையில் நுழைந்தேன், எதேச்சையாக அப்போது அந்தப் பாயைப் பார்த்தேன். எப்படி இவ்வளவு நாள் இதை மறந்துபோனோம் என நினைத்தேன்.
முதல் முறையாக அதில் அமர்ந்தவுடனேயே நான் அழ ஆரம்பித்தேன். ’எனது பாவங்களை மன்னியுங்கள் அல்லா’ என்று வேண்டினேன். இது 2012-ஆம் ஆண்டு நடந்தது. குரானை படிக்க ஆரம்பித்தேன். அது என்னை சீக்கிரத்தில் ஆட்கொண்டது. இஸ்லாமை பின்பற்றி, தொழுகை செய்வதைக் கற்றுக் கொண்டேன். ஜனவரி 2014-ல் மதமாறுவதைப் பற்றி உறுதியாக முடிவு செய்தேன்.
படங்களில் யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரையே பயன்படுத்துவதால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எனது பாஸ்போர்ட் மற்றும் இதர கோப்புகளில் நான் எனது பெயரை மாற்றவில்லை. ஆனால் சில காலம் கழித்து அதைச் செய்வேன். இதைப் பற்றி எனது அப்பாவிற்குதான் நான் கடைசியாக தெரிவித்தேன். "நான் குரானை படிக்க ஆரம்பித்துள்ளேன். அது எனக்கு மன அமைதியைத் தருகிறது" என்றேன். அவர், "யுவன், நீ இஸ்லாமியனாக மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை" என்றார். ஆனால் எனது சகோதரரும் அவர் மனைவியும் எனக்கு ஆதரவளித்துள்ளனர்.
இது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் என் அம்மாவே என் கையைப் பிடித்துக் கொண்டு, "யுவன், நீ தனியாக இருக்கிறாய்.. இஸ்லாம் என்ற மரத்தின் கீழ் நீ நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என அவர் சொல்வதாக எனக்குப் பல முறை தோன்றியுள்ளது." என்று கூறியுள்ளார்.

சனி, 30 ஜூலை, 2011

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

இந்த இளம் கிரிக்கெட் வீரர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம், இரவு விடுதியில் அவர் நடந்துக்கொண்டவிதம். இன்றோ அவர் ஒரு துளி மதுவைக்கூட தொடுவதில்லை என்று அவரது அணி நண்பர்கள் ஆச்சர்யத்தோடு கூறுகின்றனர்.

இந்த மாற்றத்திற்கு காரணம், இஸ்லாம்.

இந்த இளைஞர் வேறு யாருமல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் பிரபல வீரரான வேன் பார்னெல் (Wayne Parnell) தான் அவர்.



ஒருவருக்குள் இஸ்லாம் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு இன்னொரு உதாரணம் சகோதரர் பார்னெல்.

இருபத்தி இரண்டு வயதாகும் பார்னெல், தான் இஸ்லாமை தழுவியதை நேற்று வெளிப்படையாக அறிவித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தின்போதே தான் இஸ்லாத்தை தழுவிவிட்டதாகவும், அதனை இதுநாள் வரை தனக்குள்ளாகவே வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் குறித்து அதிக காலம் ஆராய்ந்ததாகவும், அதன் பிரதிபலிப்பே தன்னுடைய இந்த முடிவு என்று குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய பெயரை "வாலீத்" என மாற்றிக்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வாலீத் என்றால் "புதிதாக பிறந்தவன்" என்று பொருள்.

பார்னெல்லின் முடிவு தென் ஆப்பிரிக்க (மற்றும் உலகளாவிய) முஸ்லிம்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், அவருடைய முடிவிற்கு சக தென்ஆப்பிரிக்க வீரர்களான ஹாசிம் அம்லாவோ அல்லது இம்ரான் தாஹீரோ காரணமல்ல என்று தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளரான முஹம்மது மூசாஜி குறிப்பிட்டுள்ளார்.

இதனை உறுதிப்படுத்தியுள்ள தென்ஆப்பிரிக்க வீரர்கள், பார்னெல்லின் மனமாற்றத்திற்கு ஹாசிம் அம்லா காரணமில்லாத அதே வேலையில், அம்லாவின் இஸ்லாம் மீதான பற்றைக்கண்டு தாங்கள் கவரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

பயணத்தின்போது கூட தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுவதும், மது பரிமாறப்படும் தங்களுடைய இரவு நேர கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளாமல் தவிர்ப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பொன்சர்களான Castle Lager (பீர் நிறுவனம்) கொடுக்கும் ஆடைகளை அணிந்துக்கொள்ள மறுப்பதும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் கூறுகின்றனர்.

அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.

தன்னுடைய முதல் ரமலானை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய முடிவு இந்த சிறப்பான நேரத்தில் மரியாதையுடன் பார்க்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா குறித்து பேசும்போது அஹ்மத் தீதத் அவர்களும், அவர் தொடங்கி வைத்த இஸ்லாமிய அழைப்பு அமைப்பான IPCI-யும் நினைவுக்கு வருகின்றது (இது குறித்த இத்தளத்தின் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்). தென் ஆப்பிரிக்காவில் ஒரு கட்டுக்கோப்பான இஸ்லாமிய சமூகத்தை இறைவனின் கிருபையால் உருவாக்கியவர் தீதத். அவர் தொடங்கிய IPCI இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு பலரையும் இஸ்லாமின்பால் கவர்ந்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்...

சகோதரர் பார்னெல்லின் இந்த பயணத்தை இறைவன் எளிதாக்கி வைப்பானாக...ஆமீன்.

சனி, 23 ஜூலை, 2011

கலாச்சாரங்களை ஒழித்துக்கொண்டிருக்கும் இஸ்லாம்


ஆதிமனிதர்களான ஆதம் மற்றும் அவர் மனைவி ஹவ்வா இருவரும் இவ்வுலகிற்கு படைத்தனுப்பப்பட்ட பின்னர், அவ்விருவரும் இப்படி இப்படித்தான் இம்மண்ணில் வாழ வேண்டும் என்று அவர்களுக்கு அன்றே இறைவனால் கொடுக்கப்பட்ட கலாச்சாரம்தான் இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறி. இதனை, தன் இறைத்தூதர் ஆதம் நபி(அலை)க்கும், அவர்மூலம் அவரின் மனைவி ஹவ்வா (அலை) அவர்களுக்கும் இறைவன் மூலம் பரிசளிக்கப்பட்டது. இதுவே- இந்த இஸ்லாமே- இவர்களின் வழித்தோன்றல்களும் கடைப்பிடித்தொழுக வேண்டிய வாழ்வியல் நெறி. அப்படி இருக்க, முதன்முதலில் இந்த நெறிக்கு எதிராக ஆதம் நபியின் மகன் தன் சகோதரனை கொலை செய்தார். முதல் மனித மரணம். கொலை. இப்படித்தான் இஸ்லாத்திற்கு எதிரான 'கலாச்சாரங்கள்' உலகில் ஆரம்பித்தன. கலாச்சாரம் என்றாலே.. ஒரு நாலுபேர் ஒரே மாதிரி செயல்படுவதும், அதையே அவர்களின் வழித்தோன்றல்கள் எக்கேள்வியும் இன்றி பின்பற்றுவதும் தானே..?!

இதுபோல் மனித குலத்துக்கு-மனித உரிமைக்கு-இஸ்லாத்திற்கு எதிரான பல கலாச்சாரங்கள் தீய மனிதர்களால் உருவாகின. அப்போது இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறி மக்கள் மறந்ததாலோ அல்லது பின்பற்றப்படாது போயிருந்ததாலோ, அந்த தீய கலாச்சாரங்கள் மிகுதியாகின. அப்போதெல்லாம் இந்த மனித சமுதாயத்துக்கு நன்மையை ஏவி, தீமையை தடுக்க அந்த மனிதர்களிலிருந்தே, ஒருவரோ இருவரோ இறைத்தூதராக இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆதிமனிதர் ஆதம் நபிக்கு அளிக்கப்பட்ட அதே... 'இஸ்லாம் எனும் வாழ்வியல் நெறி'யை அதே அடிப்படையுடன் அக்கால சூழலுக்கு ஏற்ப தேவையேற்படின் சில விஷயங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு மனிதகுலத்துக்கு மீண்டும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்த... இஸ்லாம் எனும் வாழ்வியல் கலாச்சாரத்தை- வாழ்க்கை நெறியை மக்கள் மனதில் புணரமைக்கும் வேலையை அவ்வப்போது இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல இறைத்தூதர்கள் தம் மக்களிடம் செய்து வந்தனர். ஒவ்வொரு மொழிக்கும் ஒரு இறைத்தூதர் வந்தார். அப்படி வந்தோரில்... ஒரு 25 இறைத்தூதர்களைப்பற்றியும் அவர்களின் வரலாற்று சம்பவங்களையும் கற்பதன் வாயிலாக இக்கால மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக வேண்டி, திருக்குர்ஆன் மூலம் இறைவனால் நமக்கு பயிற்றுவிக்கப்படுகிறது.

திருக்குர்ஆன் குறிப்பிடும் அந்த 25 இறைத்தூதர்கள்... ஆதம், இத்ரீஸ், நூஹ், ஹூத், ஸாலிஹ், இபுராஹீம், லூத், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாஃகூப், யூஸுஃப், அய்யூப், ஷுஐப், மூஸா, ஹாரூண், யூனுஸ், தாவூத், சுலைமான், இல்யாஸ், துல்கிப்லு, அல்யஸவு, ஜக்கரியா, யஹ்யா, ஈஸா, முஹம்மத் (இவர்கள் அனைவர் மீதும் இறைவனின் ஸலாம் உண்டாவதாக) ஆகியோர்..!

இவர்கள் அனைவருக்கும் இறைவானால் அருளப்பட்ட வாழ்வியல் நெறி ஒன்றுதான் -ஒரேகலாச்சாரம்தான்- அது இஸ்லாம்..! இதைத்தான், இவர்கள் தம் மக்களுக்கும் போதித்து... தாமும் அதன்படியே வாழ்ந்தும் காட்டும்படி இறைவனால் கட்டளையிடப்பட்டு கண்கானிக்கப்பட்டார்கள்.

இறுதியாக... ஒரு இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) என்றொருவர் தேவைப்படும் அளவுக்கு அப்போது அப்படியென்ன தீய கலாச்சாரங்கள் அந்த அரபிய மக்களிடம் மிகுந்திருந்தன..? அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

(பண்டையகால அரேபிய கொடிய காட்டுமிராண்டி கலாச்சாரம் )

பெண் குழந்தைகள் பிறந்தால் நம்மைப்போல நெல்மணிகளையோ, எருக்கம்பூவையோ, கள்ளிப்பாலையோ தேடி நேரத்தை விரயம் பண்ணமாட்டார்கள் அந்த காட்டரபிகள். பிறந்தவுடனேயே அந்த 'பச்சை மண்ணை' ஈவிரக்கம் இன்றி சுடும் பாலை மண்ணில் புதைத்து விடுவார்கள் அந்த கொலைபாதக காட்டுமிராண்டி அரபிகள்.

ஆனால், வெறும் 23 வருஷம்தான்..! முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இஸ்லாமிய புணரமைப்பின் மூலம் புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..! பிறகு அப்போதிருந்து இப்போது வரை, பெண் குழந்தை என்றால் அப்படியொரு சந்தோசம். இரண்டாவது பெண் குழந்தை என்றால் இரட்டிப்பு சந்தோசம். ஆவலாய் இருந்து நான்காவது ஐந்தாவது மாதமே ஸ்கேன் பண்ணிபார்த்து... மூன்றாவதும் பெண் குழந்தை என்று தெரிய வந்தால்... கேட்கவே வேண்டாம்... மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை அவர்களிடம்..! அன்றே சுவனம் சென்றுவிட்டது போன்ற பெருமகிழ்ச்சி அந்த இஸ்லாமிய கலாச்சார பெற்றோரிடம்..! என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..?

ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? ஸ்கேன் பண்ணிய டாக்டரிடம் யாராவது, 'என்ன குழந்தை' என்று கேட்டாலோ அல்லது எவராவது சொன்னாலோ.. போதும்..! போலிஸ் வரும்..! சட்டப்படி கைது செய்ய விலங்கோடு..!? கேவலம் இல்லையா இந்த சட்டமும் அதற்கான பின்னணியும்..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டி கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இதனை..?

அன்றைய அரபிகள் பெண்களை அடிமைபோல நடத்தினர். பகலிலும் இரவிலும் வேலை வாங்கினர். அதற்கு பிரதியாக சாப்பாடு போட்டனர். இதுதான் அபோதைய அரபி கலாச்சாரம். ஆனால், வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அம்மக்களிடம்..! இன்று அவர்களிடம், ஒரு பெண் மலையளவு பொற்குவியலையே தன் திருமணத்துக்காக கேட்டாலும், அதை மஹராக தரச்சொல்கிறது இஸ்லாமிய கலாச்சாரம்..! சமீபத்தில் என்னுடன் பணியாற்றும் ஒரு அரபி இரண்டு லட்சம் ரியால் (23 லட்சம் ரூபாய்) மஹர் கொடுத்து திருமணம் புரிந்தார். மேலும்... வாடகைஃபிளாட், ஃபர்னிச்சர், கார், சமையல் சாமான்கள், திருமணவிருந்து என அனைத்திற்குமாக சேர்த்து இன்னொரு இரண்டு லட்சம் ரியால் அவரே செலவு செய்தார். (இதுவே இவர்களிடம் ஒரு சராசரி திருமணமாம்..!) அந்த மஹர் முழுமைக்கும் நகைவாங்கி போட்டுக்கொண்டு அந்த அரபியபுதுமணப்பெண் கையை வீசிக்கொண்டு மஹாராணியாய் இல்வாழ்க்கையில் நுழைந்தார்..! என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..!

இஸ்லாமிய பெண்ணுரிமை..!?

ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? பெண்வீட்டாரிடம் வரதட்சிணை, நகை, சீதனம், திருமண விருந்து, மண்டபம், வரவேற்பு... இத்யாதி..இத்யாதி...! இதில், வரதட்சிணை மட்டும் சட்டப்படி குற்றம். எங்காவது போலிஸ் வருகிறதா கைது செய்ய விலங்கோடு..!? போலிஸ் ஐஜி அல்லது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி வீட்டு திருமணத்திலேயே இவையாவும் இருக்காதா..!? 'அஞ்சு பொட்டையை பெத்தா அரசனும் ஆண்டி' என்றல்லவா நம்முடைய பழமொழி சொல்கிறது..? கேவலம் இல்லையா இந்த நமது இந்த பெண்ணுரிமைக்கு எதிரான இந்திய கலாச்சாரம்..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய பெண்ணடிமைத்தன காட்டுமிராண்டி கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இதனை..?

அந்நாளில் அரபியரிடத்தில் விபச்சாரம் கொடிகட்டி பறந்தது. பெண்கள் ஆபாச உடை அணிந்திருந்தனர். ஆனால், வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..! பெண்கள் கண்ணியமான உடை அணிந்தனர். மதிக்கப்பட்டனர். விபச்சாரத்துக்கே அங்கே வேலையே இல்லை. என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..?

ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? சென்சார் கட் விழும் என்பதால் நடிகைகள் கூட போடாத ஆபாச ஆடையை இளம்பெண்கள் அணிவதும், சினிமா, டிஸ்கோத்தே, பஃப், நைட் பார்ட்டி, பார், டேட்டிங் என அனுமதி பெற்றும் பெறாமலும் விபச்சார வாசல் தாளாரமாய் இன்றய இளைஞர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இவை ஏதும் அரசாலும் சமூகத்தாலும் கண்டு கொள்ளப்படுவதும் இல்லை. திருமண உறவு இல்லாமல், விபச்சாரம் செய்து இருவர் மாட்டிக்கொண்டால், சட்டப்படி அங்கே பெண்தான் குற்றவாளி..! அப்போது பெரியமனது வைத்து அந்த ஆண், 'விரும்பித்தான் ஈடுபட்டோம்' என்றால் அது சட்டப்படி விபச்சாரமே அல்ல..! இன்னும், இப்போது 'கால்செண்டர் வாசல்களில் காண்டம் மெஷின் வைக்கிறார்கள்' என்கிறது சென்ற மாத செய்தி..! 'இந்திய தேவதாசி கலாச்சாரம்' இன்னும் இருப்பதாய் சென்றவாரம் ஒரு செய்தி..! கேவலம் இல்லையா இதெல்லாம்..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டி விபச்சார கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இவைகளை..?

இதேபோன்று, அப்போது மது அரபியரிடத்தில் ஆறாக ஓடியது. மற்ற தீயதை எல்லாம் ஒரேநாளில் சட்டம்போட்டு ஒழித்து வெற்றி நாட்டிய இறைநெறி, இங்கே மட்டும் இஸ்லாமிய கலாச்சார மாற்றம் படிப்படியாக மூன்று சட்டங்கள் மூலம் ஏற்பட்டது. அந்த அளவுக்கு மதுவில் மதிஇழந்து போயிருந்தனர் அந்த காட்டுமிராண்டி அரபிகள். ஆனாலும், வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..! பிறகு ஒரு சொட்டுகூட மது இல்லை..! என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..?

(மதுவை எதிர்த்து அரசிடம் கோரிக்கை மனுவுடன் செய்வதறியாது திகைக்கும் நாம்..!)

ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? அரசாங்கமே கொலை வெறியோடு மதுக்கடை வைத்து வியாபாரம் செய்யும் நிலையில் நாம் இதை யாரிடம் முறையிடுவது..? பள்ளி மாணவர்கள், பெண்கள் உட்பட எல்லாரும் மது குடிக்கிறார்கள். இதனால், நாட்டின் முன்னேற்றத்திற்காக சிந்திக்க வேண்டியவ படித்த பண்டிதர்கள் எல்லாம் சிந்தை மயங்கி செயலற்று வீழ்ந்து கிடக்கின்றனர். மதியிழந்து வாகனம் ஓட்டி அப்பாவி பாதசாரிகளை கொலை செய்கின்றனர். சொத்துக்கள் கொள்ளை இடப்படும்போது சிந்தை இழந்து செயலற்று போய் விடுகின்றனர். தன் குடும்பத்து (தாய்/சகோதரி) பெண்களிடமே பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். பல ஆண்டுகள் வாழ்வேண்டியவர்கள் அல்ப ஆயுசுகளில் நோய் வந்து இறக்கின்றனர். கேவலம் இல்லையா இந்த ஹரப்பா கால பழம்பெரும் சோமபான சுராபான பாரத கலாச்சாரம்..? தேவையா இந்த தமிழக டாஸ்மாக் கலாச்சாரம்..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டி குடிகார கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இவைகளை..?

அப்போது அறியாமைக்கால அரபியரிடத்தில், கணவனை இழந்த கைம்பெண்கள் என்றாலே விபச்சாரத்தில் தள்ளப்பட்டனர். வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..! புணரமைக்கப்பட்ட இஸ்லாமிய கலாச்சாரம் மூலம் கணவனை இழந்த கைம்பெண்கள் உடனடியாக மறுமணம் செய்விக்கப்பட்டனர், ஏகப்பட்ட மஹரும் பெற்றுக்கொண்டு..! மேலும் இவர்கள் மிகைக்கும் பட்சத்தில், ஒருதார மணமே சிறப்பு எனினும், பொருளாதாரமும் உடல்வலிமையும் அதிகம் இருக்கும் ஆண்கள் அதிபட்சம் நான்கு மனைவிகள் வரை திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டு விதவைகள் மறுவாழ்வு நிகழ்த்திக்காட்டப்பட்டது. என்னவொரு கலாச்சார மாற்றம் பாருங்கள் இவர்களிடம்..?

ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? இதோ சென்ற நூற்றாண்டில்தான் கைம்பெண்களை உடன்கட்டை ஏற்றும் நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரம் பல போராட்டங்களின் விளைவால் நீக்கப்பட்டு அதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இந்த ஆகம விதி சமய அடிப்படையில் நடக்கின்றனவே..? பூ, மஞ்சள், குங்குமம், தாலி, நகை, வண்ணப்புடைவை என்று திருமணம் மூலம் சுமங்கலி வேஷம் கொடுத்து, கணவன் இறந்துவிட்டால் அவை ஏதுமற்ற மொட்டைத்தலை அமங்கலி வேஷம் கட்டுதல் போன்ற நமது பாரம்பரியம் மிக்க இந்திய கலாச்சாரம் எல்லாம் கேவலம் இல்லையா..? இதனை கலாச்சாரம் எனக்கூறி கட்டிக்காக்க நமக்கு வெட்கமாக இல்லையா..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டி கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இதனை..?

கருப்பாக பிறந்தவன் என்றால் அடிமை என்ற நிலை. அரபி பேசாமல் வேறு எந்த மொழி பேசினாலும் அவர்கள் 'கால்நடைகள்' என்று புரிந்துணர்வில் வாழ்ந்துகொண்டிருந்த காட்டுமிராண்டி காலத்தில், இந்த நிறவெறியை மொழிவெறியை ஒழித்து 'எந்த நிறம், இனம், மொழி எனினும் அனைவரும் ஆதிமனிதர் ஆதம்-ஹவ்வா தம்பதிகளுக்கு பிறந்த ஒரு தந்தை-தாய் வயிற்று பிள்ளைகள் ஆகிய நாம் சகோதரர்களே' என்ற சமத்துவத்தை நிலைநாட்டியதே..! வெறும் 23 வருஷம்தான்..! புரட்சி நடந்தது அந்த மக்களிடம்..!
ஆனால், இங்கே நம் நாட்டின் நிலை என்ன..? இன்னும் பாப்பாபட்டி கீரிப்பட்டியில் தேர்தல் நடத்த வக்கில்லை நமக்கு. தீண்டாமை சுவரை கட்டுகிறான். பலத்த காவலுடன் இடித்தால், மீண்டும் கட்டுகிறான். இரட்டை குவளை. ஒரே மதம் என்றாலும் கோவிலில் அனுமதி இல்லை. சுடுகாட்டில் அனுமதி இல்லை. கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று பேசினால் தமிழ் பேசுகின்றவனுக்கு தண்ணீர் விடுவது இல்லை. கேவலம் இல்லையா இது..? இன்னுமா நாம் 1430 வருடங்கள் பின்தங்கிய அரபிய காட்டுமிராண்டிகால மொழிவெறி, இனவெறி கலாச்சாரத்தில் வாழ்கிறோம்..? ஒழிக்க வேண்டமா இவைகளை..?

இதேபோலத்தான்... நாமே செய்த சிலைகளை வணங்குதல், கல், மண், மரம், காற்று, நெருப்பு, மழை, சூரியன் என கண்டதையெல்லாம் காக்கும் இறைவன் என கருதி வணங்குவது, வட்டி, சூதாட்டம், ஓரினச்சேர்க்கை, பில்லி, சூனியம், மந்திரம், ஜோசியம், அதிர்ஷ்டக்கல், சகுனம், ஜாதகம், தோஷம், மூடநம்பிக்கைகள், தானாக செத்ததையும், கண்டதையும் உண்ணுதல், முறைதவறி திருமணம் செய்தல், பெண்களுக்கு சடங்கு சம்பிரதாயம் என்று அலப்பறை, மரம் வளர்ப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிராக இறந்தோரை எரித்தல், யாரோ எவரோ தன் சுயநலனுக்காக எப்போதோ ஏற்படுத்திய மணுதர்மம் எனும் சாதிய சதியை இன்னும் நாம் பிடித்துக்கொண்டு நமக்குள் அடித்துக்கொண்டு இருப்பது போன்ற இத்தனை பாரம்பரிய கலாச்சாரத்தையும் கட்டிக்காக்க வேண்டுமா அல்லது மனித குலத்துக்கு ஏற்ற சிறந்த கலாச்சாரத்தை---இவ்வுலகுக்கு ஏற்ற வாழ்வியல் நெறியை --இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றுவதா என்று 20 கோடி இந்தியர்கள் இன்று யோசிப்பது போலவே உலகில் இருக்கும் மூன்றில் ஒருபங்கு மக்களும் யோசிக்கின்றனர்.

சகல கலாச்சாரத்தையும் சீர்தூக்கி நன்மை தீமைகளை தீர ஆலோசித்ததன் முடிவு, இறுதியில் இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்கின்றனர். இது தம் 'உயர்ந்த இருப்பை' பாதிக்கும் என்போர் மட்டும் 'கலாச்சாரகாவலர்(?)' வேஷம் போட்டு இஸ்லாத்தையும் அதனை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்வோரை(முஸ்லிம்களை)யும் வீம்புக்காக எதிர்க்கின்றனர். ஆனால், உண்மையில் இப்படி எதிர்ப்பவர்கள் தங்கள் சொந்த வாழ்வில் மட்டும் அறிந்தோ அறியாமலோ 'இதுதான் சரி' என்று ஒன்றை விரும்புகின்றனர். 'அதுதான் இஸ்லாம்' என்று பின்னாளில் அறிய வரும்போது அவர்களும் தங்கள் போலி வேஷத்தை கலைத்துவிட்டு முஸ்லிம் ஆகின்றனர். இறைவனுக்கே எல்லாப்புகழும்.

ஆக, இப்படித்தான்... உலகில் மனித குலத்துக்கு எதிராக நாம் உருவாக்கி வைத்துள்ள நமது பல தீய கலாச்சாரங்களை மட்டும் ஒழித்து மக்களின் வாழ்வியல் நெறியை செம்மை படுத்திக்கொண்டிருக்கிறது இஸ்லாம். பிற மனிதர்க்கு நன்மை பயக்கும் நல்ல கலாச்சாரங்களை இஸ்லாம் என்றுமே எதிர்த்ததுமில்லை; அழித்ததுமில்லை. எனவே, நல்ல கலாச்சாரங்களை எவர் சொன்னாலும் எடுத்துக்கொள்வோம். நம்மிடம் இருக்கும் தீய கலாச்சாரங்களை விட்டொழிப்போம். அதை இஸ்லாமும் எதிர்க்கிறது என்பதற்காக கட்டிக்காப்பாற்ற முனைவது சமுதாயக்குற்றம்.

இதை நான் சொல்வதற்கு காரணம், நான் பின்பற்றும் "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"...என்ற நல்ல தமிழ் கலாச்சாரம்..! இதுவேதான்... நான் பின்பற்றும் "உனக்கு எதை நாடுகிறாயோ அதையே உன் சகோதரருக்கும் நாடு" என்ற இஸ்லாமிய கலாச்சாரம்..!

'தீய கலாச்சாரம்'

"இஸ்லாம்தான் நம் நாட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வந்திருக்கிறது" என்ற நச்சுக்கருத்தை சிலர் பரப்புகிறார்கள். இஸ்லாம் பற்றிய இன்றைய 'கலாச்சார காவலர்(?)களுடையது' முற்றிலும் தவறான புரிதல் ஆகும். இதை இவர்கள் உணரவேண்டும். எவ்வளவு விரைவாக உணர்கிறார்களோ அது அவர்களுக்கும் மற்றோருக்கும் மகத்தான நன்மை. ஆதலால், தீய கலாச்சாரங்களை தூக்கி தூர வீசி எறிந்து விட்டு நல்ல கலாச்சாரத்தை நம் வாழ்வினில் கைக்கொள்வோம் சகோ..!

மனித சமுதாயத்திடம் உள்ள தீய கலாச்சாரங்களைத்தான் இஸ்லாம் ஒழித்துக்கொண்டிருக்கிறது..!

நன்றி : http://pinnoottavaathi.blogspot.com/2011/06/blog-post_17.html#more

திங்கள், 14 பிப்ரவரி, 2011

துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்

சகோதரி யுவான் ரிட்லி, பெயரை கேட்டாலே புத்துணர்ச்சி வருமளவு இன்றைய இஸ்லாமிய தலைமுறையினருக்கு பெரும் ஊக்கமாய் இருப்பவர் (இவரைப் பற்றிய கட்டுரையை படிக்க a href="http://ethirkkural.blogspot.com/2010/03/blog-post.html">இங்கே>> சுட்டவும்).

சமீபத்தில், துனிசிய புரட்சி குறித்து இவர் எழுதிய "துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்(1)" என்ற கட்டுரை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

"மக்கள் புரட்சிக்கு ஆதரவாக லண்டனில் உள்ள துனிசிய தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அப்போது மிக அற்புதமான விஷயம் ஒன்று நடந்தது.

கண்களில் கண்ணீர் மல்க ஒரு பெண் எனக்கு பக்கத்தில் நின்றிருந்தார். தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் துனிசியா திரும்ப பாஸ்போர்ட் எடுக்க அன்று காலையிலிருந்து தூதரகத்தினுள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அவரது முகம் எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்றாக தெரிந்தது, ஆனால் எங்கு பார்த்தேனென்று நினைவுக்கு வரவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு வரை இவரை உள்ளே கூட அனுமதித்திருக்க மாட்டார்கள் தூதரக அதிகாரிகள். ஆனால் இன்றோ, தொலைந்து போன மகளை கண்டது போல சிகப்பு கம்பள மரியாதை கொடுக்கின்றனர். ஒரு அதிகாரி "தூதரை சந்திக்க விருப்பமா?" என்று கூட கேட்டிருக்கின்றார்.

நாங்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்க, இவரை நான் ஏற்கனவே சந்திருக்கின்றேன் என்ற எண்ணமும் அதிகரித்து கொண்டிருந்தது. ஆனால் எங்கே?

முன்னாள் துனிசிய சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பென் அலி மற்றும் அவரது மனைவி லீலா குறித்து பேச்சு திரும்பியது. தன்னுடைய கணவருக்கு பிறகு அதிபர் பதவியை அடைய லீலா திட்டமிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் மூலமாக ஏற்கனவே அறிந்திருந்தோம்.

இவர்களது தற்போதைய இருப்பிடம், இரண்டு புனித பள்ளிவாசல்களின் இருப்பிடமான சவூதி அரேபியா. இதனை எண்ணி நாங்கள் இருவரும் சிரித்தோம். ஐந்து வேலையும் பாங்கு(2) சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும் நாட்டில், அதனை தாங்கி கொண்டு பென் அலியும் லீலாவும் எப்படி இருக்கப்போகின்றார்கள்?

இவர்கள் இருவரும் தேசிய தொலைக்காட்சியில் பாங்கு சொல்லப்படுவதை தடை செய்தவர்கள், ரமலான் நோன்பை புறக்கணித்தவர்கள், அந்நிய நாட்டு கலாச்சாரம் என்று ஹிஜாபை தடை செய்தவர்கள். சுருக்கமாக சொல்லுவதென்றால், தாங்கள் விரும்பியது போல நடந்து கொண்டவர்கள். தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பத்வா(3) கொடுக்க தங்களுக்கு அடிபணிந்த அறிஞர்களையும் வைத்து கொண்டவர்கள்.

நாகரிகமற்ற தன்மைகளை தன்னிடத்தே கொண்டிருந்தவர் பென் அலி. சித்திரவதை, விசாரணை இல்லாமல் சிறையில் தள்ளுவது, அரசியல் மற்றும் மத ரீதியான அடக்குமுறை என இவை அனைத்தும் துனிசியாவில் சர்வ சாதாரணமாய் நடந்தவை. அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்கள் கிழித்தெறியப்பட்டதற்கும் காரணமாக இருந்தவர் பென் அலி. பள்ளிகள், மருத்துவமனைகள், பல்கலைகழகங்கள் என அனைத்து பொது இடங்களிலும் ஹிஜாப் அணிய தடை விதித்தவர் அவர்.

சிறைகளில் குரான் தடை செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து வேறு நேரங்களில் தொழுதால் சிறைக்கைதிகள் துன்புறுத்தப்படுவார்கள்.

அவரையும், அவரது ஊழல் மிகுந்த அரசாங்கத்தையும் புகழ்த்து பேசும் இமாம்களை அவரது ஆட்சிமுறை கொண்டு வந்தது. இதன் மூலமாக அவர்கள் என்ன எதிர்ப்பார்த்தார்களோ அது நடந்தது. இறையச்சம் கொண்டோரை பள்ளிவாசல்களில் இருந்து அது தள்ளியிருக்கச் செய்தது.

வெள்ளிக்கிழமைகளில், முஸ்லிம் இளைஞர்கள் விரைவாக பள்ளிவாசலுக்கு செல்லாததில் ஆச்சர்யமொன்றுமில்லை. (ஏனென்றால்) குத்பாவின்(4) பாதி நேரத்தை, பென் அலி மற்றும் அவரது ஆதரவாளர்களின் புகழ் பாடி செலவழித்து கொண்டிருந்தவர்கள் அந்த இமாம்கள்.

முன்னாள் சிகை அலங்காரரான லீலாவை நினைத்து நானும் அந்த சகோதரியும் ஆச்சர்யப்பட்டோம். ஜித்தாவில் இருக்கும் தன்னுடைய புதிய வீட்டிலிருந்து ஒவ்வொருமுறை வெளியேறும் போதும் அவர் கருப்பு நிற அபாயா அணிய வேண்டுமே? இது குறித்த அவரது பார்வை எப்படியிருக்கும்? மார்க்க பற்றுள்ள சவூதி காவல்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நிச்சயம் நம்புகின்றேன்.

துனிசியாவில் இருந்து அவர்கள் புறப்படும் பொழுது, அவர்கள் சென்றடைய விருப்பப்பட்ட இடங்களின் பட்டியலில் நிச்சயம் சவூதி இருந்திருக்காது.

"சாரி, லண்டன், பாரிஸ், நியூயார்க், மொனாகோ அல்லது ஜெனிவாவில் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை, ஜித்தா எப்படி?" என்று அந்த கெட்ட செய்தியை விமானி அவர்களிடம் தெரிவித்த போது அவர்களது உணர்வுகள் எப்படி இருத்திருக்கும் என்பதை நான் பார்க்காமல் போய் விட்டேன்.

பென் அலியின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளும், மனித உரிமை மீறல்களுமே என்னை முதன் முதலாக, 2006ல், லண்டனில் உள்ள துனிசிய தூதரகத்தின் முன் நிற்க வைத்தது. இஸ்லாமை பின்பற்ற என்னுடைய சகோதரிகளுக்கு இருக்கக்கூடிய உரிமைகளுக்காக போராட வைத்தது.

அந்த மனிதரும், அவரது மனைவியும் தாங்கள் பிறந்த மார்க்கத்தையும், அதன் கோட்பாடுகளையும் மிகவும் அவமதித்தனர். துனிசியாவை செக்யூலர் நாடாக மாற்ற பெரிதும் முயன்றனர்.

எதற்காக இப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள்?, தங்களை திருப்திபடுத்தவா?, அல்லது தங்களுக்கு பாதுகாவலாய் விளங்கி வந்த, உற்ற நண்பர்கள் போல் நடித்து வந்த மேற்கத்திய சக்திகளை திருப்திபடுத்தவா?

பிப்ரவரி 2009ல், துனிசியாவில் நான் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்கின்றேன். அப்போது நூற்றுக்கணக்கான பென் அலியின் ஆதரவாளர்கள் நாங்கள் தொழுவதையும், வெள்ளிக்கிழமை தொழுகைகளில் நாங்கள் கலந்து கொள்வதையும் தடுக்க தங்களால் முடிந்த வரை முயன்று பார்த்தார்கள்.

நாங்கள் எங்கள் வாகனங்களை நடுரோட்டிலேயே நிறுத்தி அந்த தெருவிலேயே தொழுதோம். அப்போது அவர்கள் முகத்தில் ஏற்பட்ட மிரட்சி இருக்கின்றதே, அதனை என்னால் என்றென்றும் மறக்க முடியாது. இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி அந்த சகோதரியிடம் கூறிக்கொண்டிருந்தேன். பென் அலி மற்றும் லீலாவின் தற்போதைய நிலையை எண்ணி மீண்டும் சிரித்தோம்.

என்னவொரு உணர்ச்சிகர நிலை, மேற்குலகின் நிலையில்லாத நண்பர்களால் கைவிடப்பட்ட பிறகு இவர்களது உதவிக்கு வந்தவர்கள் முஸ்லிம்கள் தான். மன்னிப்பதென்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய பண்பு. ஆனால், அந்த பண்பை இவர்களை நோக்கி காட்ட நினைக்ககூடிய நிலையில் கூட தற்போது துனிசியர்கள் இல்லை.

தங்கள் மக்களிடம் இவர்கள் காட்டாத கருணையை இன்று சில முஸ்லிம்கள் இவர்களிடம் காட்டியிருக்கின்றார்கள். இதற்கு நன்றியுள்ளவர்களாக இவர்கள் இருக்க வேண்டும்.

தன்னால் கொடுமைப்படுத்தப்பட்ட ஹிஜாப் அணிந்த பெண்கள், இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றிய சகோதரர்கள், மனித உரிமை இயக்கத்தினர் என இவர்கள் அனைவர் குறித்தும் பென் அலி தனக்குள்ளாக பிரதிபளித்து கொள்ள வேண்டிய தருணம் இது.

தன்னுடைய மக்களுக்கு இவர் கொண்டு சென்ற திரித்த, நீர்த்து போன இஸ்லாத்தை போலல்லாமல், இனியாவது இவர் தூய இஸ்லாத்தை கண்டெடுப்பாரா என்றெண்ணி அதிசயக்கின்றேன்.

அந்த சகோதரியை நோக்கி திரும்பி, இனியாவது ஹிஜாபின் மகிமையை லீலா புரிந்து கொள்வாரா என்று இன்னும் அதிகமாக ஆச்சர்யப்படுகின்றேன்.

இதனை கூறிக்கொண்டிருக்கும் போதே, என்னருகில் இன்று கொண்டிருக்கும் இந்த பெண் யாரென்று நினைவுக்கு வந்தது. நாங்கள் 2006ல், துனிசிய தூதரகத்துக்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது சந்தித்திருக்கின்றோம்.

சிறைக்காவலில் வைக்கப்பட்டு, பென் அலியின் குண்டர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட செய்திகளை என்னிடத்தில் அப்போது விவரித்தார் இவர். குரலில் நடுக்கத்துடன் அன்று இவர் சொன்ன வார்த்தைகள் இன்றளவும் எனக்கு நினைவிருக்கின்றது.
"லண்டனுக்கு வந்த பிறகும் என்னுடைய ஹிஜாப் இன்னும் என் சட்டைப்பையில் இருக்கின்றது"
இவருடைய கதையை கேட்டு அன்று நான் கண்கலங்கியது எனக்கு நன்கு நினைவிருக்கின்றது.

தற்போது இவர் துனிசியாவிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார், ஆனால் இந்த முறை நிமிர்ந்த தலையோடும், ஹிஜாப் அணிந்த பெருமிதத்தோடும்..."


அல்ஹம்துலில்லாஹ்....

யுவான் ரிட்லி போன்ற சகோதரிகளை நம் உம்மத்துக்கு(5) இறைவன் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக..ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. ஹிஜாப் - பல்வேறு அர்த்தங்களை கொண்டது. இங்கே, முகம் மற்றும் கை மணிகட்டுகளை தவிர்த்து உடல் முழுவதும் மறைக்கும் விதமாக உடையணியும் முறையை குறிக்கின்றது.
2. பாங்கு - தொழுகைக்காக பள்ளிவாசல்களிலிருந்து எழுப்பப்படும் அழைப்பு.
3. பத்வா - ஆழ்ந்த மார்க்க அறிவோடு கூறப்படும் கருத்து/அபிப்பிராயம்.
4. குத்பா - பிரசங்கம்/சொற்பொழிவு.
5. உம்மத் - நம்பிக்கையாளர்களின் சமூகம் (Community of Believers).

Sister Yvonne Ridley's official website:
i. http://yvonneridley.org

References:
i. Hijab Makes a Return in Tunisia - Yvonne Ridley, 25th January 2011. link.
ii. துனிசியா : மல்லிகை புரட்சியின் மறுபக்கம் - சகோதரர் முஹம்மது ஆஷிக். link.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.

thanks to : ஆஷிக் அஹ்மத் அ.

சனி, 12 பிப்ரவரி, 2011

தீவிரவாதத்​தை இஸ்லாம் உருவாக்கவி​ல்லை - அப்துல் கலீம்

தீவிரவாதத்தை இஸ்லாம் உருவாக்கவில்லை என்னும் செய்தியை மக்களிடம் சேர்ப்பிப்பது தான் தனது முக்கியப் பணி, என 2007 மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் உண்மைச் சம்பவங்களை வெளியே கொண்டுவர காரணமாக மாறிய அப்துல் கலீம் கூறினார். கலீமின் மாசற்ற உள்ளத்தையும் நிரபராதி என்பதையும் உணர்ந்து, குண்டு வெடிப்புக்குப் பின்னால் செயல்பட்ட ஆர் எஸ் எஸ் தலைவர் சுவாமி அசிமானந்தா விசாரணைக் குழுவிடம் உண்மையை ஒப்புக் கொண்டார்.

நிரபராதிகளைக் கொலை செய்வதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்காது. மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பின் பொறுப்பை ஏற்றுக் கொள்ள மிகப்பெரிய துன்புறுத்தல்கள், கொடுமைகள் சகித்துக் கொண்டே மேலே கூறிய வார்த்தைகளை, விசாரணைக் குழுவிடம் கூறினேன். என்று கலீம் தெளிவுபடுத்தினார்.

சாலிடாரிட்டி இளைஞர் இயக்கம், கேரளாவில் ஏற்பாடு செய்த பயங்கரவாத எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த கலீம், கொச்சியில் செய்தியாளர்களிடம் பேசும்போது மேற்கண்டவாறு கூறினார்.

குற்ற உணர்வில் சுவாமி அசிமானந்தா தவறை ஒப்புக்கொண்டபோது முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல ஒட்டு மொத்த நாடே தப்பித்துக் கொண்டது. நாட்டின் முக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் சந்தேகப்படுகின்ற நிலைமை நாட்டின் வளர்ச்சியையே பாதித்துள்ளது.

நாட்டின் எந்த பகுதியில் குண்டு வெடிப்பு ஏற்ப்பட்டாலும் அதற்குப்பின்னால் முஸ்லிம் தீவிரவாதிகள்தான் உள்ளனர் என பொய் பிரச்சாரம் செய்கின்ற மிகப்பெரியதொரு குழு நாட்டில் செயல்பட்டு வருகிறது.

நான் மட்டும் சிறையிலிருந்து வெளியே வந்ததில் எந்த பலனும் கிடையாது, செய்யாத குற்றங்களுக்காக நூறுக்கணக்கான நபர்கள் நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கேரளமும் விதிவிலக்கல்ல. செய்யாத குற்றத்துக்காக பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மதானி மீண்டும் சிறைச்சென்றதும் இவ்வாறுதான். மதானியின் விடுதலைக்கான போராட்டத்தில் தன்னால் இயன்ற முறையில் பங்கேற்பேன். சிறையிலுள்ள நிரபராதிகளின் விடுதலைக்காக பாடுபடுவதுதான் மீதமுள்ள வாழ்நாட்களின் எனது லட்சியம் என கலீம் கூறினார்.

மக்கா மஸ்ஜிது குண்டு வெடிப்பின் பெயரால் 2007 ல் கைது செய்யப்பட்டேன். அப்போது எனக்கு வயது 19 . மருத்துவம் படித்துக் கொண்டிருந்தேன் 18 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகுதான் விடுதலையானேன். மருத்துவப்படிப்பை தொடர்வதற்கான முயற்சியையும் அதிகாரிகள் தடைசெய்தனர். நான் குண்டு வெடிப்புக்காகப் புறப்பட்டவன் என்று கல்லூரி நிர்வாகிகளிடம் போலீசார் கூறினர், அத்தோடு படிப்பு முடங்கிப்போனதால் சட்டக்கல்லூரியில் சேர்ந்தேன். அதற்கிடையில் சிறையிலுள்ள ஒரு சகோதரனை சந்தித்தபோது சிம் கார்டை கொடுத்ததாக ஒரு பொய் வழக்கைச் சுமத்தி மீண்டும் கைது செய்தனர்.

என்னை சிறையில் தள்ளியது மட்டுமல்லாமல் எனது குடும்பத்தை வாடகை வீட்டிலிருந்து வெளியேற்றினர். படுத்து உறங்குவதற்கு கூட இடமின்றி தவித்தார் எனது தாய்.
தண்டனை அனுபவிப்பவர்களின் விடுதலைக்காக சட்டப்படிப்பு தொடர்ந்து படிக்கிறேன் எனவும் அப்துல் கலீம் கூறினார்.

சனி, 20 நவம்பர், 2010

சிங்களவராக இருந்து முஸ்லிமாக மாறிய பெண் எழுத்தாளர் எட்டு மாதமாக சிறையில்

சிங்கள பௌத்தராக இருந்து இஸ்லாமியராக மாறி இருக்கும் சர்ச்சைக்கு உரிய எழுத்தாளர் சரா மாலினி பெரேரா துரதிஷ்டமாக இம்முறையும் பெருநாளை சிறையில் கழிக்க வேண்டியவர் ஆகி விட்டார்.


இவர் பஹ்ரெய்னில் குடும்பத்துடன் வசித்து வந்தார். பௌத்தராக இருந்து இஸ்லாமியராக மாறியமை எப்படி? என்பதை From Darkness to Light என்கிற நூலில் விபரமாக எழுதி இருந்தார்.

சுமார் எட்டு மாதங்களுக்கு முன் இலங்கை வந்திருந்தபோது நாட்டுக்கும், அரசுக்கும் எதிராக செயற்பட்டார், தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் சிறையில் கழித்த இரண்டாவது பெரு நாள் இதுவாகும். இவருக்கு எதிரான வழக்கு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றது. எதிர்வரும் 27 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படுகின்றது.

நேற்றைய பெருநாளின்போது இவரின் பிரிவை கடுமையாக உணர்ந்த குடும்பத்தினர் இவரின் விடுதலைக்காக இறைவனிடம் மன்றாடுகின்றனர்.

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

பிரிட்டனில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும்: சாயீதா வார்சி

லண்டன்,ஆக8:பிரிட்டனில் உள்ள இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது எந்த வகையிலும் அவர்களின் சுதந்திரத்தை பாதிக்காது. எனவே இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார் முதல் முஸ்லிம் காபினட் அமைச்சரான சாயீதா வார்சி.

பர்தா முகத்தை மூடும் படியான ஆடையாக இருப்பதாலும் ஆண்கள் கட்டுப்படுத்துவதாலேயே இஸ்லாமிய பெண்கள் அதனை அணிகின்றனர் என கடந்த மாதம் பிரிட்டனில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டதில் பெரும்பான்மையானோர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் பெல்ஜியம், பிரான்ஸ் நாடுகளை தொடர்ந்து பிரிட்டனிலும் பொது இடங்களில் பர்தா அணிய தடை வரக் கூடும் என்ற சர்ச்சை நிலவி வந்தது. பின்னர் பிரிட்டன் அமைச்சர் டேமியன் கிரீன் பிரிட்டனில் பர்தா அணிய தடை விதிக்கப்படாது என அறிவித்ததன் மூலம் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆண்கள் கட்டாயத்தின் பேரில் மட்டும் பெண்கள் பர்தா அணிவதில்லை. பல இஸ்லாமிய பெண்கள் பர்தாவை விரும்பியே அணிகின்றனர். எனவே பர்தா அணிய தடை விதிக்கக் கூடாது என்று இஸ்லாமிய அமைச்சர் ஒருவரே தற்போது நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளதன் மூலம் இந்த விசயம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

கஷ்மீரை சற்று கண்ணைத் திறந்து பாருங்கள்!

வானமே இடிந்து தலையில் வீழ்ந்தாலும்கூட கவலைப்படாத ஐ.நா பொதுச்செயலாளர் பான்கிமூன் கூட கவலைப்படுமளவுக்கு கஷ்மீரில் நடந்துவரும் நிகழ்வுகள் காரணமாகியுள்ளன.

கஷ்மீரின் கட்டுப்பாடு ஆட்சியாளர்களின் கையிலிருந்து நழுவிக் கொண்டிருக்கிறது என்பதை அங்கிருந்துவரும் செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.

கடந்த ஜூன் 11 ஆம் தேதி துவங்கிய மோதலும், இரத்தக்களரியும் ஆட்சியாளர்களின் செப்பிடி வித்தைகளால் கட்டுப்படுத்த முடியாத நிலைமையில் உள்ளன.

கடந்த ஆறுவாரங்களுக்கிடையே போலீஸின் துப்பாக்கிச்சூட்டில் மரணித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு டஜனாகும்.

முப்பதைத்தாண்டாத 18 வயதிற்கும் 19 வயதிற்குமிடைப்பட்ட இந்த தேசத்தின் குடிமகன்கள் தங்கள் இன்னுயிரை பறிகொடுத்துள்ளனர்.

மோதல் மற்றும் போராட்டம் காரணமாக கஷ்மீரின் முக்கிய நகரங்களெல்லாம் ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிக்கிடக்கின்றன. போராட்டக்காரர்களை நோக்கி உமர் அப்துல்லாஹ்வின் போலீஸ் நடத்தும் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டால் நிலைமை மேலும் மோசமாகிவருகிறது.

தற்போதைய நிகழ்வுகளுக்கு என்னக்காரணம்? தினமணி போன்ற பத்திரிகை உலக பாசிஸ்டுகள் ஏ.சி அறையில் உட்கார்ந்துக் கொண்டு எழுதுவதுபோல் பாகிஸ்தானிலிருந்து வீசப்படும் கரன்சி நோட்டுகளா? நிச்சயமாக இல்லை எனலாம்.

கஷ்மீரின் இத்தகையதொரு சூழலுக்கு காரணமே எச்சில் துண்டுகளுக்காகவும், பதவி உயர்வுக்காகவும் மூன்று அப்பாவி இளைஞர்களை தயவுதாட்சணியமில்லாமல் சுட்டுக் கொன்றதாகும்.
அத்தோடு அவர்களுக்கு பயங்கரவாத முத்திரைக் குத்தி குழித்தோண்டி புதைக்கவும் செய்தனர். ஆனால் உண்மைகள் வெளியானபொழுது போலீசின் வாதங்கள் பொய்த்துப் போயின.

சில்லரைகளைக் கொடுத்தும் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலையை ஆசைக்காட்டியும் பிரச்சனையை சமாளித்துவிடலாம் என திட்டமிட்டவர்களின் எண்ணத்தில் மண் விழுந்தது.

நாள்தோறும் கூடுதலான இளைஞர்கள் அரசுக்கெதிராகவும், பாதுகாப்பு படையினருக்கு எதிராகவும் போராட்டக்களத்தில் குதித்து வருகின்றனர்.

கஷ்மீரின் பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவரத் தெரியாத முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் கையாலாகத்தனத்தால் ராணுவத்தின் பொறுப்பில் கஷ்மீர் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கஷ்மீர் வந்தபொழுதும் நிலைமை சீராகவில்லை என்பதைத்தான் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய மோதல் சூழல் நமக்கு உணர்த்துகிறது.

கஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அழைத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கஷ்மீர் பள்ளதாக்கில் ஓரளவு செல்வாக்குள்ள அமைப்புகள் கூட கலந்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்ற குரல் எழுப்பியது மீர்வாய்ஸ் ஃபாரூக்கோ அல்லது சையத் அலிஷா கிலானியோ அல்ல. மாறாக, கஷ்மீரின் முதல்வர் உமர் அப்துல்லாஹ்தான் அந்த நபர்.

உண்மையில் பிரிவினைவாதிகள்தான் கஷ்மீர் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்பதை சொல்லாமல் சொல்லுவதுதான் உமர் அப்துல்லாஹ்வின் கோரிக்கை வெளிப்படுத்தும் உண்மையாகும்.

டெல்லியில் இருந்துக் கொண்டு கஷ்மீரின் திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கும் பாதுகாப்பு வல்லுநர்கள் இதனை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.

துப்பாக்கிக் குண்டுகளால் ஒரு சமூகத்தை அச்சுறுத்தி அடிபணியவைக்க முடியாது என்ற உண்மையை ஒரு ஜனநாயக அரசை புரியவைக்க வேண்டியுள்ளது துரதிர்ஷ்டவசமானதாகும்.

இஸ்ரேலின் அட்டூழியத்திற்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் காஸ்ஸாவை சற்று ஏறெடுத்துப் பாருங்கள் மேலே கூறியவற்றின் உண்மை புரியவரும்.

விமர்சகன்

திங்கள், 14 ஜூன், 2010

இஸ்லாம் ஓர் அதிசயம்

ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால்நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா.

ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா? அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை.. திருக்குர்ஆன் சரியில்லை என்று அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும். ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.

எல்லா பத்திரிகைகளும் பத்தி பத்தியாக செய்திகள் வெளியிடும். அப்பாவி முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு கொதித்தெழுவார்கள். துப்பாக்கி சூடுகளுக்குப் பழியாகி பிணமாவார்கள். இஸ்லாத்தை விமர்சித்த அந்த பெயர் தாங்கி முஸ்லிமுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிடும்.

ஒரு சிலர் ஆத்திரப்பட்டு கொலை மிரட்டல்கள் விடுவார்கள். உடனே அவனுக்கு பாஸ்போர்ர்ட் இல்லாமலேயே உலகப் பயனம் மேற்கொள்ளும் தகுதி கிடைத்துவிடும். அவனுக்காக அடைக்கலம் தர பெரிய பெரிய நாடுகள் முன் வருவார்கள். வல்லரசுகளின் அதிபர்கள் எல்லாம் அவனுக்கு விருந்துகளும், விருதுகளும் தந்து கெளரவிப்பார்கள்.

முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை; விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் இல்லை; கருத்து சுதந்திரம் இல்லை; முஸ்லிம்கள் என்றாலே அது ஒரு வெறிப் பிடித்த கூட்டம்; தீவிரவாத கூட்டம் என்றெல்லாம் உலக அரங்கில் பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.

இஸ்லாத்தை எதிர்ப்பதுதான் கெளரவமான செயல் என்பதை நிலை நாட்டத்தான் இத்தனை ஆதரவுகள் தரப்படுகின்றன. இஸ்லாத்தை முஸ்லிம்களே எதிர்க்க வேண்டும் என்று சில முஸ்லிம் அதிருப்தியாளர்களை தூண்டத்தான் இத்தனை வஞ்சக நாடகங்களும் நடத்தப்படுகின்றன. ஆக அனைத்து மீடியாக்களும் ஒன்று சேர்ந்து அல்லும் பகலும் பிரச்சாரம் செய்கின்றன. ஆனாலும் இஸ்லாம் தேய்பிறையாக மாறாமல் வளர் பிறையாக மின்னுகிறது. இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளிலேயே அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்லாம் வளருகின்றது.

எதிர்ப்புகள் வளர வளர, அப்படி இஸ்லாத்தில் என்னதான் குறைகள் இருக்கின்றன; நாமும் பார்ப்போமே என்று, இன்று இஸ்லாத்தை ஆராய முன் வருகிறார்கள். அவர்களுடை மனக்கண்கள் திறக்கின்றன. உலகில் இப்படி மனித குலத்தை ஒருங்கிணைக்கும் மார்க்கம் ஒன்று இருக்கின்றதா? அடடா இதுவரை எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்கள்.

ஒரு தூய்மையான மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே என்று வருத்தப்படுகிறார்கள். உண்மை என்னவென்று தெரிந்த பிறகு உடனே அதை அரவணைத்துக் கொள்கிறார்கள். இன்று இஸ்லாத்தை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் தங்களுக்கு தெரியாமல் இஸ்லாம் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்கள். எதிர்ப்புகளையும், எதிர்ப்பாளர்களையும் வைத்தே இஸ்லாம் பரவுகின்றதென்றால் இது ஒரு அதிசயமல்லவா?

பத்திரிகைகள், சினிமா தொலைக்காட்சி, இசை இவை இல்லாமல் இன்று உலகில் எதுவும் பரவ முடியாது. இது இன்றைய உலக நிலை. மற்ற மதங்கள் அழகான பெண்களைக் காட்டி சீரியல் நாடகங்களையும் நடத்தி பட்டி மன்றங்களையும், திருவிளாக்களையும், தெருக்கூத்துகளையும் காட்டி இசையுடன் சேர்ந்த பாடல்களை பாடி பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தங்கள் மதங்களை வளர்க்க முயற்சிக்கின்றன. ஆனால் இத்தனைக்குப் பிறகும் இவைகளைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த மதத்தில் இணைந்ததாக செய்திகளை நாளிதல்களில் பார்க்க முடிகிறதா?

ஒரு மதம் பரவ வேண்டுமானால் சிலைகள் அவசியம் வேண்டும். மதச் சின்னங்களைப் பரப்ப வேண்டும். இவையில்லாமல் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. ஆனால் சிலைகளும் இல்லாமல்; சின்னங்களும் இல்லாமல் இஸ்லாம் பரவுகின்றதே! இது ஆச்சயரியமில்லையா?

இன்றைய பிரச்சார சாதனங்களுக்கு மூலதனமே பெண்கள்தான். விளம்பரத்தின் திறவுகோலும் தோற்று வாயுமாக இருக்கின்ற பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பிற்குத் திரைப்போட்டு மூடிவிட்டு இஸ்லாம் வளருகின்றதேஸ இசை கூத்துக்கு இங்கே இடமேயில்லை. மனிதன் விரும்பும் மனம்போல் வாழ இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை. மனம்போன போக்கில் ஒரு முஸ்லிம் வாழ முடியாது, இங்கு கட்டுப்பாடுகள் அதிகம். மக்கள் விரும்பும் விபச்சாரம், சூதாட்டம், மதுபானம், வட்டி இந்த நான்கையும் அறவே தடுப்பது இஸ்லாம் ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே.

முஸ்லிம்களிடம் வல்லரசுகள் இல்லை. .நா சபையில் ஆதிக்கம் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லை. எங்கே பார்த்தாலும் முஸ்லிம்கள் தம் வீடுகளிலிருந்து துரத்தப்படுகிறார்கள், முஸ்லிம் என்று சொன்னாலேயே ஆபத்து வலிய வருகின்றது. ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே. முஸ்லிம்களின் கடவுளோ கண்களுக்குத் தெரியாது. அவர்களுடைய தலைவரின் (இறைத்தூதர்) படம்கூட அவர்கள் பார்த்ததில்லை.

முஸ்லிம்கள் தொழுவதற்கு கைகால் கழுவ வேண்டும். சிறு நீர் கழித்தாலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குளிப்பு கடமையானால் (முழுக்கு) குளித்து விட்டுத்தான் இறை ஆலயத்திற்குள் நுழைய வேண்டும். தினந்தோறும் ஐந்து வேளை கட்டாயம் தொழ வேண்டும். இத்தனை சிரமங்கள், இத்தனை கஷ்டங்கள் இருப்பினும் இஸ்லாம் பரவுகின்றதே.

தர்மம் செய்துதான் தீரவேண்டும் என்று எந்த மதத்திலும் கட்டாயமில்லை. ஆனால் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வருடா வருடம் ரூபாய்க்கு இரண்டரை சதவீதம் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து ஏழைகளுக்குக் கொடுத்தே தீர வேண்டும். இந்த சுமையையும் ஒரு முஸ்லிம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இஸ்லாத்தில் குற்றங்களுக்கு தண்டனை மிக கடுமையானவை. ஆனாலும் இஸ்லாம் பரவுகின்றதே! இது எப்படி சாத்தியமாகின்றது?

இறைவன் தன்னுடைய திருமறையில் இப்படி கூறுகின்றான்;

يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

"அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)

உலகில் உள்ள மதங்கள் கடவுளுக்காக அல்லாமல், மதங்களுக்கே கடவுளை பயன்படுத்துகின்றன. கடவுளின் சட்டங்கள், கடவுளின் ஆட்சி வரவேண்டும் என்று கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும்தான். மாற்று மதத்தினர் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகத்தான் கடவுளை வணங்குகிறார்களே தவிர, கடவுளின் விருப்பங்கள் நிறைவேற அவர்கள் ஆசைப்படுவதில்லை. கடவுளை தங்கள் இனத்திற்கும் மதத்திற்கும் சொந்தமாக்க முயற்சி செய்கின்றார்களே தவிர, கடவுளை எல்லோருக்கும் பொதுவாக்க அவர்கள் விரும்புவதில்லை.

Universal god என்ற பரந்த நோக்கை குறுகிய மனப்பான்மையோடு, கடவுளையே சிறுமைப்படுத்த முயல்கின்றார்களே தவிர, இவர்கள் கூறும் மதங்களால் கடவுளுக்குப் பெருமையில்லை. மனித குலத்திற்காக மதம் சேவையாற்ற வேண்டுமே தவிர, மதங்களுக்காக மனித குலத்தைக் கூறு போடக்கூடாது. ஆக உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதை தவிர வேறு வழி கிடையாது.

இஸ்லாம் ஒன்றுதான் கடவுளை பெருமைப்படுத்தும் மதமாக (மார்க்கமாக) இருக்கின்றது. அது மட்டும்தான் தனக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ கற்றுத் தருகின்றது. கடவுளை அடைய அது ஒன்றுதான் வழியாய் இருக்கின்றது. போலிப் பொருள்களுக்குத்தான் போலியான விளம்பரங்கள் தேவை. சர்க்கரையை யாரும் விளம்பரம் செய்ய அவசியமில்லை. அதன் இனிப்பு சுவைத்தவர்களுக்கு நன்கு தெரிகின்றது. விளம்பரம் இல்லாமல் அது தானே விற்பனையாகிறது. அது போலத்தான் இஸ்லாமும். நாம் சர்க்கரை உள்ள இடத்தைக் காட்டினால் போதும். மக்கள் தானே அதைப் பெற்றுக் கொள்வார்கள். இன்பம் அடைவார்கள்.

புதன், 19 மே, 2010

மால்கம் எக்ஸ் என்ற மனித உரிமைப் போராளி

இன்று மே பத்தொன்பது. மால்கம் எக்ஸ் வாழ்ந்திருந்தால் எண்பத்தி ஐந்தாவது பிறந்த தினமாக இருந்திருக்கும். நாற்பது வயது பூர்த்தியாகும் முன்பே துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார் அவர்.

யார் இந்த மால்கம் எக்ஸ்?
இஸ்லாம் என்னும் வாழ்வியல் கொள்கை தந்த ஊக்கத்தால் உந்தப்பட்டு அமெரிக்காவிலும், ஆப்ரிக்காவிலும் கறுப்பு நிறத்தவர்களின் உரிமைகளுக்காக போராடிய மாவீரன்.

அமெரிக்காவில் நிழலுக தாதாக்களை உருவாக்கும் ஹார்லமில் ஒரு சுவிஷேசகரின் மகனாக பிறந்தார் மால்கம் எக்ஸ். மால்கம் லிட்டிலின் பாலப்பருவம் வன்முறைகள் நிறைந்ததாக இருந்தது. தந்தை கொல்லப்பட்டார். தாய் மனநிலை பாதிக்கப்பட்டார். பள்ளிப்படிப்பு நின்று போனது. போதைப் பொருள்தான் வாழ்க்கை என்றானது மால்கம் எக்ஸிற்கு.

வழிப்பறி வழக்கில் சிறைக்குச் சென்றார். சிறை வாழ்க்கையின் போதுதான் மால்கம் லிட்டிலின் வாழ்வில் வசந்தம் எலிஜா முஹம்மதுவின் நேசன் ஆஃப் இஸ்லாம் மூலம் தேடிவந்தது.

பின்னர் மால்கம் லிட்டில் மால்கம் எக்ஸாக மாறினார். எலிஜா முஹம்மதுவின் நம்பிக்கையுரிய நபரானார் மால்கம் எக்ஸ். மால்கம் எக்ஸின் சிந்தனையைத் தூண்டும் உரையும், அர்ப்பணிப்பும் நேசன் ஆஃப் இஸ்லாம் அமைப்பிற்கு புகழைத் தேடித் தந்தது.

பின்னர் எலிஜா முஹம்மதிடமிருந்து அகன்று வேறோரு அமைப்பை உருவாக்கினார் மால்கம் எக்ஸ். அதுதான் இன ரீதியான நேசன் ஆஃப் இஸ்லாமிலிருந்து உண்மையான இஸ்லாத்தை நோக்கிய மால்கம் எக்ஸின் பயணமாக இருந்தது.

அதனைத் தொடர்ந்துதான் 1965 ஆம் ஆண்டு உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பொழுது மால்கம் எக்ஸ் அக்கிரமக்காரர்களால் சுடப்பட்டு மரணமடைந்தார்.

மால்கம் எக்ஸ் கொலைவழக்கில் கைதான குற்றவாளி தாமஸ் ஹாகன் சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையானார். இவர் நேசன் ஆஃப் இஸ்லாமின் உறுப்பினராவார். இன்று இவர் தனது பாவச் செயலுக்காக வருத்தப்பட்டாலும் மால்கம் எக்ஸின் கொலைக்குப் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகள் இன்னும் முழுமையாக அவிழ்க்கப்படவில்லை.

கறுப்பு நிறத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக கருதும் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மால்கம் எக்ஸை கொலைச் செய்ய எஃப்.பி.ஐ பலமுறை முயற்சிச் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மால்கம் எக்ஸ் அமெரிக்காவில் ஏற்றி வைத்த இஸ்லாம் என்னும் வாழ்வியல் வெளிச்சத்தை அணைத்திட அமெரிக்க ஏகாதிபத்தியம் கடுமையாக முயற்சிச் செய்கிறது. ஆனாலும் இஸ்லாம்தான் வெற்றிபெறும் என்பது வரலாறு கூறும் நிதர்சனமாகும்.

மால்கம் எக்ஸ் கூறிய முக்கியத்துவம் வாய்ந்த கூற்று இங்கு நினைவுக் கூறத்தக்கதாகும்- "சொந்த வரலாற்றை மறந்த சமுதாயம் வரலாறை படைக்க இயலாது' இது அமெரிக்க கறுப்பு நிறத்தவர்களுக்கு மட்டுமல்ல ஆக்கிரமிப்பிற்கும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படும் சமூகங்களுக்கும் இது பொருந்தும்.

சனி, 23 ஜனவரி, 2010

மத வெறியர்கள்- போலி முற்போக்குவாதிகள் - ஹிஜாப்




சமீப காலமாகவே இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் எந்த வகையிலாவது களங்கப்படுத்திட வேண்டும் என வெறி பிடித்த சில கூட்டங்கள் இணைய தளத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் அலைந்து கொண்டிருப்பதை பல இணையதளங்களையும் பார்வையிடுவோர் மிக எளிதில் உணரலாம். இப்படி இஸ்லாத்தை விமர்சிக்க கிளம்பிய பல அறிவுஜீவிகள் (தங்களைத் தாங்களே அவ்வாறு தான் நினைத்துக் கொள்கின்றனர்) ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை முன்வைத்தால் அவர்களுக்கு பதில் சொல்லிவிடலாம். ஆனால் வெறுமனே தங்கள் மனதினில் ஊடுருவியிருக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு என்ற ஒற்றைத் தனத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து கருத்துகளை முன்வைக்கின்றனர். எந்த கருத்தை முன்வைக்கின்றனரோ அதில் இஸ்லாமிய நிலைப்பாடு என்ன என்பதைக் கூட அறியாத பல அறிவிலிகள் தான் இத்தகைய அறிவுஜீவி வேடம் தரித்து இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய அறிவிலிகளை இரண்டு வகையினராக மிக எளிதில் பிரித்து விடலாம். முதல் கூட்டம் மதக் காழ்ப்புணர்ச்சியுடன் திரிந்து கொண்டிருப்பவர்களை அடிப்படையாக வைத்து உருவானது. தாங்கள் பின்பற்றும் மதத்தினில் இருக்கும் பல பிற்போக்குத்தனங்களை மறைக்க வேண்டியோ அல்லது அதை நியாயப்படுத்த வேண்டியோ இஸ்லாத்தின் மீது அவதூறு சேற்றை அள்ளி இறைக்கின்ற வகையினர் இவர்கள். இரண்டாவது கூட்டம் மதங்களை புறக்கணித்து ஏதோ ஒரு மனித மூளையினில் உருவான சித்தாந்தத்தை வாழ்வின் வெற்றிக்கான உத்தியாக நினைத்துக் கொள்பவர்கள். இவர்கள் தங்களுடைய சித்தாந்தம் தான் சிறந்தது என நிரூபிக்க வேண்டி மற்ற மதங்களை போலவே இஸ்லாத்திலும் பிற்போக்குத்தனம் இருக்கின்றது என்ற ரீதியில் பொய்ப்பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இவர்களுடைய மதங்களும் சித்தாந்தங்களும் இவர்கள் கண்ணெதிரிலேயே பரிதாபகரமான தோல்வியை தழுவி நிற்பதை காண சகிக்காமல், அத்தகைய தோல்விக்கு காரணமாய் இருக்கின்ற இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் கறைப்படுத்தி விட வேண்டும் என இவர்களின் ஆழ்மனதில் படிந்து விட்ட இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியே அவ்வப்போது இணையத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு சகோதரி சுமஜ்லாவின் பதிவுகள் வரப்பிரசாதமாக அமைந்து விட்டன. என்னைப் பொறுத்தவரை சுமஜ்லா மிகவும் தைரியமான ஒரு மங்கை. அவர் மேல் வைக்கப்படும் அனைத்துக் கருத்துக்களுக்கும் அவர் தனி ஆளாக நின்றே பதில் கொடுக்கும் திறமை வாய்ந்தவர். என்னுடைய இந்த கட்டுரை தன்னுடைய பேசுபொருளாக முன்வைப்பது "ஹிஜாப்" என்ற பெண்களின் உடையைப் பற்றியது. ஹிஜாப் என்பது பெண்கள் தங்களுடைய முழுமுகம் மற்றும் முன்கைகள் இரண்டை தவிர மற்றதை மறைத்துக் கொள்ளும் வகையில் உடையனிதலாகும். வெறுமனே கருப்பு அங்கி மட்டும் ஹிஜாபல்ல. முகம் மற்றும் முன்கைகளை தவிர மற்ற பகுதிகளை மறைக்கும் வண்ணம் உடல் அங்கங்கள் வெளியே தெரியாத வண்ணம் இறுக்கமாக இல்லாமல் எந்த உடை அணிந்தாலும் அவை ஹிஜாப் என்றே அழைக்கப்படும். இந்த ஹிஜாபை தான் ஆணடிமைத்தனம் என்றும் பிற்போக்குத்தனம் என்றும் மதவெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் காட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாம் என்பது மதமன்று. பல மதங்கள், சித்தாந்தங்கள் போன்று ஒரு சிலவற்றை சொல்லிவிட்டு பலவற்றை சொல்ல தெரியாத, அப்படியே சொல்லியிருந்தாலும் இன்றைய வாழ்வியலுக்கு ஒத்துவராத கோட்பாடுகளை கொண்டவையுமல்ல. மாறாக வாழ்வியலின் அனைத்து நடைமுறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள வாழ்வியலுக்கான வழிகாட்டியாக விளங்கும் மார்க்கமாகும். ஒரு பெண் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டுமேயானால் அவளுடைய கண்ணியம் காக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் ஹிஜாப் என்னும் உடையின் மூலம் பெண்களை கண்ணியப்படுத்தி சமூகத்தில் வாழ செய்கின்றது இஸ்லாம். இல்லை நான் அரைகுறை ஆடை தான் அணிவேன் என ஒரு பெண் சொன்னால் தாரளாமாக அவற்றை அணிந்து கொள்ளலாம். ஏனெனில் இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை. "மார்க்கத்தில் நிர்பந்தம் என்பது இல்லை ...(குர்ஆன் 2:256 )".

தம்முடைய கண்ணியத்தையும் அடுத்தவர்களின் காமக் கண் கொடூர பார்வையையும் தவிர்க்க வேண்டும் என்று விரும்பும் எந்த பெண்ணாக இருப்பினும் அவர் ஹிஜாபை தெரிவு செய்து கொள்ளலாம். அதற்கு இஸ்லாமியராக தான் இருக்க வேண்டுமென்பதில்லை. இந்த உடை அணிவதினால் பெண்களுக்கு கண்ணியம் ஏற்படுகின்றது என்பதை ஹிஜாபை எதிர்க்கும் மத வெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் மறுப்பார்களா? இந்தியாவின் உயர்ந்த பீடத்தினில் இருக்கின்ற இன்றைய குடியரசுத்தலைவர் அவர்களே மிக அழகாக பெரும்பாலான நேரங்களில் ஹிஜாபை பேனுபவராகவே இருக்கின்றார். இஸ்லாம் பெண்களின் உடை விடயத்தினில் ஒரு அளவை மிகத் தெளிவாக சொல்லிவிட்டது. இதற்கு மாற்றுக் கருத்து சொல்லுபவர்கள் பெண்களின் உடை விடயத்தினில் எந்த ஒரு கருத்தையும் தெளிவாக சொல்லவில்லை. உடையணிதல் தனிப்பட்ட பெண்களின் உரிமையை சார்ந்த விடயம் என்று வாதிடும் இவர்கள் திரைப்படத்தினில் நடிகைகளின் அரைகுறை ஆடைகளை ஆபாசம் அருவெறுப்பு என்றும் எழுதுகின்றனர் என்பதுதான் நகைச்சுவையின் உச்சம். அப்படி அரைகுறை ஆடை அணிவது அந்த நடிகையின் தனிப்பட்ட உரிமை என்ற வாதத்தை அப்பொழுது வசதியாக மறந்து விடுகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை மதவெறி மற்றும் போலி முற்போக்காளர்களே?

வாரம் ஒரு வாலிபனுடன் வலம் வருவது கூட பெண்கள் சுதந்திரத்தின் அங்கமாகவே நினைக்கின்ற சில பெண்கள் இன்று உருவாகி விட்டனர். பெண் சுதந்திரம் என்ற அடிப்படையில் இவர்களை ஏற்றுக் கொண்டு இந்த மாதிரி பெண்களை திருமணம் செய்ய ஹிஜாபை எதிர்க்கும் மதவெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் தயாரா? தவறுகள் சர்வசாதரணமாக சமூகத்தில் உலா வரும் போது அவை தவறு என்ற எண்ணமே மறைக்கப்பட்டு விடும். இதற்கு சரியான உதாரணம் புகைப்பிடித்தலை சொல்லலாம். இதே மாதிரி தான் அரைகுறை ஆபாச உடை விடயத்தையும் கொண்டு வர சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு தடையாக இருப்பது ஹிஜாபே ஆகும். எனவே தான் இதற்கு எதிராக இவ்வளவு ஆக்ரோஷமாக கிளர்த்தெழுகின்றனர். இதில் போலி முற்போக்குவாதிகள் மத வெறியர்கள் என்ற வித்தியாசமெல்லாமில்லை.

அன்பின் சகோதரி சுமஜ்லா நீங்கள் கண்ணியம் வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள். ஆகவே ஹிஜாபை பேணுகின்றீர்கள். ஆனால் வாரம் ஒரு வாலிபனுடன் வலம் வந்த அல்லது வலம் வருவதை ஆதரிக்கின்ற அல்லது தங்கள் வீட்டு பெண்களை இத்தகைய கேடு கேட்ட நிலையினில் தள்ளப் போகின்றவர்கள் "கலகல" என ஏதாவது ஒன்றை கவிதை வரியினில் எழுதியதால் மனம் தளர வேண்டாம். நடிகைகள் தங்களுடைய அரைகுறை உடையினை ஆபாசம் என்று என்றைக்குமே ஏற்றுக் கொள்வதில்லை. அதைப் போன்றே இவர்களும் என விட்டுத் தள்ளுங்கள். ஹிஜாபின் கண்ணியத்தை உங்களைப் போன்ற பெண்கள் சொல்லுவதுதான் அதற்கு இன்னும் கண்ணியத்தைக் கொடுக்கின்றது. எழுத்தாளர் சகுந்தலா நரசிம்ஹன் கூட சமீபத்தில் ஹிஜாபின் கண்ணியத்தைப் பற்றி தன்னுடைய அனுபவத்தை மிகத் தெளிவாக எழுதியிருந்தார். மறைந்த மாபெரும் எழுத்தாளர் கமலா சுரையா கூட ஹிஜாபினால் தனக்கு எவ்வளவு தூரம் பாதுகாப்பு கிடைத்தது என்பதை பல தருணங்களில் நினைவு கூர்ந்திருக்கின்றார்.

ஹிஜாபை பேணுகின்ற சுமஜ்லா போன்ற பெண்களை மதவெறிப் பிடித்தவர்கள் என பொய்ப்பரப்புரை செய்ய உண்மையில் மதவெறி பிடித்து போய் திரிகின்றவர்களும், பிற்போக்குத்தனத்திலும் ஆணடிமைத்தனத்திலும் ஊறியவர்கள் இஸ்லாமியப் பெண்கள் என நிலைநாட்ட போலி முற்போக்கு கும்பல்களும் (ம.க.இ.க உட்பட) முயலுகின்றன. அதன் வெளிப்பாடு தான் கவிதை கட்டுரை பின்னூட்டமென சமீப காலத்தில் இவர்கள் எடுக்கும் அவதாரங்கள். இறுதியாக, நான் சமீபத்தில் படித்த ஒரு கவிதையை இங்கே நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகின்றேன். அந்த கவிதை எழுதியவருக்கு என்னுடைய நன்றிகள்.

பொன்னையும் பொருளையும்
பெட்டியில் பத்திரமாய்
பூட்டி வைத்து பாதுகாக்கும்
தன் எஜமானனிடம்
வேலியோரத்தில் சுதந்திரமாய்
விட்டெறியப்பட்ட
விளக்குமாறு ஒன்று
வீறுகொண்டு தன் கடுங்குரலில் அகவியதாம்,
"என்னைப்போல் அவற்றுக்கும் கொடு-விடுதலை"-என..!

பெட்டிக்குள்ளே
உள்ள'நற்குடிகளுக்கு'
தெரியாதா
'எது கண்ணியமான பாதுகாப்பு'-என்று..!

பாவம்...பரிதாபப்படுவோம்...
'விளக்குமார்கள் என்றாவதொருநாள்
விளங்குவார்கள் உண்மையை'
என நம்பிவைப்போம்
இப்போதைக்கு...!


பி.ஏ.ஷேக் தாவூத்

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

ரஜினி தேடும் ஆன்மிகம் இதோ!


கேள்வி: நடிகர் ரஜினி காந்தின் செயல்பாடுகள் அவரை பற்றிய குழப்பமான மதிப்பீடுகளைத்தான் ஏற்படுத்துகின்றன. அவர் ஆன்மீக வாதியா? சினிமாகோமாளியா? வகுப்புவாதியா?

பதில்: நடிகர் ரஜினிகாந்த் இந்து மதத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவை பின்பற்றும் பக்தர். அவர் வகுப்புவாதியுமல்ல. கோமாளியுமல்ல, உண்மையான ஆன்மீகத்தை அவர் தேடி அலைகிறார். அவரது மனம் அமைதியை நோக்கி அலை பாய்வதால்தான் அவர் இமயமலைக்கு அடிக்கடி செல்கிறார். அவருக்கு சரியான வழிகாட்டல்கள் இதுவரை கிடைக்கவில்லை. அவர் இஸ்லாத்தை தூயவடிவில் புரிந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டால்,அவரது தேடலுக்கு விடைகிடைக்கும். ரஜினிகாந்தை போன்ற உண்மையான ஆன்மீகத்தை தேடி அலைபவர்களுக்கு திருக்குர்ஆனில்தான் தெளிவான வழிகாட்டல்கள் இருக்கின்றன.


நன்றி- மக்கள் உரிமை வார இதழ்

திங்கள், 14 செப்டம்பர், 2009

மேற்கத்திய நாடுகளில் இஸ்லாம்

மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்



உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைகளும் மக்களை குழப்பிப் பார்க்கின்றன. ஆனால், இவற்றுள் இஸ்லாம் என்ற மார்க்கம் - கொள்கை, மிகப் பழமையானதும் அதே நேரம் மிக இளமையானதும் ஆகும்.
பழமையானது - உலகின் முதல் மனிதன் தொடங்கி உலகில் தோன்றிய அத்துணை நபிமார்களும் ஓரிறைக் கொள்கையையே போதித்தனர். ஆதலால், உலகின் பழமையான மார்க்கம் இஸ்லாமே.
இளமையானது - முகமது (ஸல்) அவர்கள் தான் இவ்வுலகிற்கு வந்த இறுதி நபி. அவர்களே முந்தைய நபிமார்களை மெய்ப்படுத்தி, ஓரிறைக் கொள்கையை அழுத்தமாகவும், ஆதாரபூர்வமாகவும் எடுத்து மக்களுக்கு போதித்தார். ஆதலால், இஸ்லாமே அனைத்திலும் இளமையானது.
1400 ஆண்டுகளுக்கு முன்பு, அரேபியப் பாலைவனத்தில் ஊறத் தொடங்கிய இஸ்லாம் எனும் சத்திய ஊற்று, இப்போது உலகம் முழுவதும் கடலென பரவிக் கிடக்கின்றது. வாளால் பரவிய மார்க்கம் என்று ஊடகங்கள் ஓயாது ஒலித்தாலும், அதற்கான பதிலை தன்னகத்தே பிரதிபலித்துக் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது பெரிய மதமாக (மார்க்கம்) இருந்த இஸ்லாம், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க்கமாக கத்தோலிக்க கிறிஸ்துவத்தை தாண்டி வளர்ந்துள்ளது.




உலக மக்கள் தொகையில், 19.2 விழுக்காடு முஸ்லிம்கள் எனவும், 17.4 விழுக்காடு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகைக்குட்பட்ட வாடிகன் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது. உலக மக்கள் தொகையில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 113 கோடி மக்களாவர்; முஸ்லிம்களின் எண்ணிக்கை 130 கோடி எனவும் அப்பத்திரிகை தெரிவிக்கின்றது. வாடிகன் 2008 க்கான ஆண்டுப்புத்தகம் (Year Book) -இல் வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளி விபரத்தை மேற்கத்திய உலகின் பெரும்பாலான செய்தி ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இச்செய்தி உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் (Fastest-growing religion) என்பதை நமக்கு ஆதாரத்தோடு தருகின்றது.

பல்கேரியாவில் தொழுகை

இத்தாலியில் தொழுகை
இத்தாலியில் தொழுகை
சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன. அதாவது ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள்; ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன. பிரபல அமெரிக்க செய்தி ஊடகம் சி.என்.என். (CNN) இந்த தகவலை நமக்குத் தருகின்றது.
குறிப்பாக அமெரிக்காவில் வாழும் கறுப்பின அமெரிக்கர்கள் மத்தியில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகின்றது. சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கும் அவர்கள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுவதை கண்டு வெதும்பி இஸ்லாம் கூறும் சமத்துவத்தை நாடி இஸ்லாத்தை தழுவுகின்றனர்.
அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பாவிலும் இதே நிலைதான். கிறிஸ்துவத்தின் மீது நம்பிக்கை குறைந்து சர்ச்சுகளுக்கு கூட்டம் வருவது குறைந்து கொண்டே செல்கின்றது. இங்கிலாந்தில், சர்ச்சுகள் மூடப்பட்டு “பார்” களாக மாற்றப்படுகின்றன; அதே நேரம் பல சர்ச்சுகள் முஸ்லிம்களால் முழு நேர வாடகைக்கு எடுக்கப்பட்டு பள்ளிவாசல்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நாமே அதுமாதிரியான பள்ளிவாசலில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் சென்றிருக்கும் போது, அங்கே ஜூம்ஆ தொழுதுள்ளோம்.
இஸ்லாம் தனி மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பினும், ஓர் எல்லைக்குட்பட்டே வழங்கி உள்ளது; தனி மனித உரிமைகளை விட சமுதாயத்தின் உரிமைகளுக்கு முதலிடம் கொடுக்கின்றது. ஆனால், மேற்கத்திய உலகமோ சமுதாயத்தின் உரிமைகளை கண்டு கொள்வதே இல்லை. இதனை கீழ்க்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் விளங்கலாம். ஒரு பெண் தனக்குப் பிடித்த ஆடையை அணிவது அவளுடைய தனி மனித உரிமை என்கிறது மேற்கு. அது, உடலின் பாகங்களை அசிங்கமாக வெளிப்படுத்தினாலும் சரியே; ஆனால், இஸ்லாமோ கீழ்த்தரமாக ஆடை அணியும் பெண்ணால், சமுதாயத்திற்கு தீங்கு விளையும்; தவறான செயல்களுக்கு தூண்டுதலாக அமையும்; அதனால், அப்பெண்ணின் தனிமனித உரிமையும் பாதிக்கப்படும்; ஆகவே மறைக்க வேண்டிய பாகங்கள் மறைக்கப்பட்டு, ஒரு பெண் இயங்குவதில் தவறில்லை என்று பொது நன்மையை நாடி கூறுகின்றது. இதே போன்றே ஓரினச் சேர்க்கையை ஆதரிப்போர் இதனை தனி மனித உரிமை என்கின்றனர்; ஆனால், இதனால் சமூக கட்டமைப்பு கெட்டு, சமுதாய ஒழுக்கம் தவறி, மாபெரும் அநீதி இழைக்கப்படுவதை அவர்கள் உணர்வதில்லை. ஆனால், இஸ்லாம் ஓரினச் சேர்க்கையை வேரோடு சாய்க்கின்றது. சமூக உரிமைகளை மதிக்கும் இஸ்லாத்தின் இக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மேற்கத்திய உலகம் மிக வேகமாக இஸ்லாத்தினை நோக்கி நெருங்கி வந்து கொண்டுள்ளது.


ஃபிரான்ஸில் ஹிஜாஜுபுக்கான போராட்டக் காட்சி)
இவ்வாறு இஸ்லாத்தினை நோக்கி முஸ்லிமல்லாதோர் வரும் இவ்வேளையில், மேற்கத்திய முஸ்லிம்களிடையேயும் வெகுவாக விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஃபிரான்ஸில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய முறைப்படி, தலையை மறைத்துக் கொண்டு (Headscarves) வருவதைத் தடுக்க சட்டம் இயற்றிய போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் இறங்கி தமது உரிமைக்குரிலை எழுப்பினர். பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளான எகிப்து, குவைத், ஈராக், லெபனான் மட்டுமன்றி மேற்கத்திய உலகம் முழுமையாக, ஸ்வீடன், கனடா, பிரிட்டன், அமெரிக்கா என பல நாடுகளிலும் முஸ்லிம்கள் குறிப்பாக பெண்கள் போராட்டங்கள் நடத்தினர்.
“ நமக்குத் தேவை மாற்றம்” – (Change We need) என்ற தேர்தல் கோஷத்தை முன் வைத்து, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பராக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த கறுப்பின முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த தந்தைக்கும், வெள்ளை அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவராவார் இவர். இவர் முஸ்லிமாக வாழவில்லை எனினும், முஸ்லிம்களை எல்லாம் தீவிரவாதிகளாக சித்தரித்த மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவிற்கு முஸ்லிம் பின்னணியிலிருந்து, அதுவும் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் முதல் குடிமகனாக ஆகியுள்ள நிகழ்வு கண்டிப்பாக மாற்றம் ஏற்பட்டுள்ளதையே காட்டுகின்றது.

(நீதிமன்றம் மூலம் ஹிஜாம் அணிய போராடி வெற்றி பெற்ற இங்கிலாந்து முஸ்லிம் பெண் சபீனா பேகம்)
முஹம்மது (ஸல்) -வைப் போன்று ஒருவர் இவ்வுலகின் சர்வாதிகாரியாக பொறுப்பேற்பாரானால், உலகின் அனைத்து பிரசினைகளையும் களைவதில் வெற்றி பெற்று, உலக மக்கள் வெகுவாக எதிர்பார்க்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியும் என்ற ஜார்ஜ் பெர்னாட் ஷா வின் கூற்றுக்கிணங்க, இன்ஷா அல்லாஹ், அமெரிக்க வெள்ளை மாளிகையை ஒரு சீரிய இஸ்லாமிய சிந்தனையுள்ள முஸ்லிம் ஒருவர் அலங்கரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.