ஹிஜாப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஹிஜாப் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஜூலை, 2011

”ஹிஜாப் என்னுடைய அணிகலன்! மும்பையில் ஒரு ’நிகாப்’ புரட்சி

afreen
மும்பையில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நின்று முனிசிபாலிட்டியின் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்து செல்வதில் ஒரு நிகாப அணிந்த சகோதரிக்கும் பங்குண்டு என்றால்...மிகை என்ன... மிக மிக மிகைதான் இல்லையா.


18 வயதிலேயே இஸ்லாத்திற்கு வந்ததோடல்லாமல் திருமணத்திற்கு பின் சமூகத்தில் சீர்திருத்தம் கொண்டு வரவும் மக்கள் பிரட்சினைக்காக பாடுபடவும் வேண்டும் என்றதும் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடும் இடத்தில் அக்கறையை மட்டும் மையமாக கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறார், சகோ.ஆஃப்ரீன்.

”ஹிஜாப் என்னுடைய அணிகலன், அதை அணிவதால் என் சமூகத்திற்கு பாடுபட எனக்கு எந்த வித தடையுமில்லை” என்கிறார் சகோதரி. நிகாபை அணிவதாலும், முஸ்லிமாய் இருப்பதாலும் இது வரை தடையெதுவும் கண்டதில்லை எனக்கூறும் இந்த சகோதரி, தன் வெற்றிக்கு முதல் காரணமாக அல்லாஹுத’ஆலாவையும், அதன் பின் தன்னுடைய ஒவ்வொரு அடியிலும் துணை நிற்கும் கணவனையுமே புகழ்கிறார். நிகாப் இருப்பதால் வேலை செய்யுமிடத்தில் ஏதேனும் இடையூறோ தயக்கமோ இருக்குமே என்றால், எல்லா நிலையிலும் இந்த மக்கள் எனக்கு துணை நிற்பதோடல்லாமல், சில சமயம் எதிர்பார்க்காத அளவிற்கும் ஒத்துழைப்பு நல்கின்றனர் என்கிறார்.

மராத்தி, ஹிந்தி, குஜராத்தி தவிர ஆங்கிலமும் தெரிந்த இவர், தேர்தலில் முக்கிய வாக்குறுதிகள் அளித்தது குடிநீர், ரோடு மற்றும் சுகாதார வசதிகளின் மேல்தான். அதனாலேயே பிரச்சார நேரத்தில் சில பிரச்சினைகளையும் சந்தித்துள்ளார். “அன்றைய தினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதி மக்களோ அதிகாலை 4 மணிக்கே எழுந்து குடிநீருக்காக லைனில் நிக்க வேண்டிய நிலை, எனவே அவர்களின் கோபாவேசத்தினாலும், அதில் ஏற்பட்ட சலசலப்பினாலும் கிட்டத்தட்ட என்னுடைய வாகனத்திலிருந்தே கீழே விழும் சூழ்நிலையாகி விட்டது” என்கிறார்.

தன்னுடைய பணியில் சாதனையாக சகோ.ஆஃப்ரீன் நினைப்பது, முனிசிபாலிட்டியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மசோதா. அப்படி என்ன மசோதா? பெண்ணின் உடலை போஸ்ட் மார்ட்டத்திற்கு கொண்டு போகும்போதும், போஸ்ட்மார்ட்டம் முடித்து வரும்வரையும் ஒரு பெண் டாக்டரும், உதவிக்கு ஒரு பெண்ணும் கட்டாயம் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்கிற ஆணையே அது. ஏன் இப்படி ஒரு மசோதா என்றால், சட்டென பதில் வருகிறது, சகோதரியிடமிருந்து. “ஓர் தடவை ஒரு 20 வயதுப்பெண் விபத்தில் இறந்து போனார். அவருடைய உடலை வாங்க மருத்துவமனைக்கு சென்றபோது ஒரு மனிதன் அந்தப்பெண்ணின் உடலில் போர்வை போர்த்தும் சாக்கில் அவளை அவசியமற்ற விதத்தில் தொடுவதைக் கண்டேன். அன்றெழுந்த முடிவு இது” என்கிறார்.

முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினையே கல்வியறிவில்லாததும், வேலைஞானமும் இல்லாததுதான் என்னும் சகோ.ஆஃப்ரீன், தன்னுடைய கணவரின் துணை கொண்டு மக்களுக்கென ரேஷன் கார்டு, பிசி, ஓபிசி பத்திரங்கள், வாக்காளர் அட்டை போன்ற அத்தியாவசிய அட்டைகளை பெறுவதற்கான வழிமுறை வகுப்புகளையும் அவ்வப்போது நடத்துகிறார். ”நம் முஸ்லிம் சமூகத்தில் இந்த மாதிரி தேவையான அட்டைகளை வாங்கும் வழிமுறைகள் தெரியாததே ஸ்காலர்ஷிப், அரசாங்க வேலை போன்ற பல அரசாங்க உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போக வைக்கிறது” என்கிறார். இதற்காக கோடை காலத்தில் மாதம் முழுக்கவும் கேம்ப்கள் நடத்துகிறார். இவரின் உதவியாளார்கள், வீட்டிற்கு வீடு சென்று கதவை தட்டியழைத்தும் வந்து இவற்றில் பங்கு பெற வைக்கின்றனர்.

அரசியலில் நுழைந்து விட்டால் ஆண்களின் ஆதிக்கத்தை சந்தித்துத்தானே ஆகவேணும் என்ற நிலையில், சட்டரீதியான, நுணுக்கமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அரசியல் ரீதியான பேச்சுக்களுக்கும், செயல்களுக்கும் தன் கணவரின் முடிவில் விட்டுவிடுகிறார்.

செய்தி மூலம், ஆங்கிலத்தில் படிக்க : - http://www.coastaldigest.com/index.php?option=com_content&view=article&id=26458:hijab-is-my-ornament-mumbai-corporator-afreen

THANKS TO ANNU
source :

திங்கள், 14 பிப்ரவரி, 2011

துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்...

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்

சகோதரி யுவான் ரிட்லி, பெயரை கேட்டாலே புத்துணர்ச்சி வருமளவு இன்றைய இஸ்லாமிய தலைமுறையினருக்கு பெரும் ஊக்கமாய் இருப்பவர் (இவரைப் பற்றிய கட்டுரையை படிக்க a href="http://ethirkkural.blogspot.com/2010/03/blog-post.html">இங்கே>> சுட்டவும்).

சமீபத்தில், துனிசிய புரட்சி குறித்து இவர் எழுதிய "துனிசியாவிற்கு திரும்புகின்றது ஹிஜாப்(1)" என்ற கட்டுரை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

"மக்கள் புரட்சிக்கு ஆதரவாக லண்டனில் உள்ள துனிசிய தூதரகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். அப்போது மிக அற்புதமான விஷயம் ஒன்று நடந்தது.

கண்களில் கண்ணீர் மல்க ஒரு பெண் எனக்கு பக்கத்தில் நின்றிருந்தார். தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் துனிசியா திரும்ப பாஸ்போர்ட் எடுக்க அன்று காலையிலிருந்து தூதரகத்தினுள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். அவரது முகம் எனக்கு ஏற்கனவே அறிமுகமான ஒன்றாக தெரிந்தது, ஆனால் எங்கு பார்த்தேனென்று நினைவுக்கு வரவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு வரை இவரை உள்ளே கூட அனுமதித்திருக்க மாட்டார்கள் தூதரக அதிகாரிகள். ஆனால் இன்றோ, தொலைந்து போன மகளை கண்டது போல சிகப்பு கம்பள மரியாதை கொடுக்கின்றனர். ஒரு அதிகாரி "தூதரை சந்திக்க விருப்பமா?" என்று கூட கேட்டிருக்கின்றார்.

நாங்கள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருக்க, இவரை நான் ஏற்கனவே சந்திருக்கின்றேன் என்ற எண்ணமும் அதிகரித்து கொண்டிருந்தது. ஆனால் எங்கே?

முன்னாள் துனிசிய சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பென் அலி மற்றும் அவரது மனைவி லீலா குறித்து பேச்சு திரும்பியது. தன்னுடைய கணவருக்கு பிறகு அதிபர் பதவியை அடைய லீலா திட்டமிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் மூலமாக ஏற்கனவே அறிந்திருந்தோம்.

இவர்களது தற்போதைய இருப்பிடம், இரண்டு புனித பள்ளிவாசல்களின் இருப்பிடமான சவூதி அரேபியா. இதனை எண்ணி நாங்கள் இருவரும் சிரித்தோம். ஐந்து வேலையும் பாங்கு(2) சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும் நாட்டில், அதனை தாங்கி கொண்டு பென் அலியும் லீலாவும் எப்படி இருக்கப்போகின்றார்கள்?

இவர்கள் இருவரும் தேசிய தொலைக்காட்சியில் பாங்கு சொல்லப்படுவதை தடை செய்தவர்கள், ரமலான் நோன்பை புறக்கணித்தவர்கள், அந்நிய நாட்டு கலாச்சாரம் என்று ஹிஜாபை தடை செய்தவர்கள். சுருக்கமாக சொல்லுவதென்றால், தாங்கள் விரும்பியது போல நடந்து கொண்டவர்கள். தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பத்வா(3) கொடுக்க தங்களுக்கு அடிபணிந்த அறிஞர்களையும் வைத்து கொண்டவர்கள்.

நாகரிகமற்ற தன்மைகளை தன்னிடத்தே கொண்டிருந்தவர் பென் அலி. சித்திரவதை, விசாரணை இல்லாமல் சிறையில் தள்ளுவது, அரசியல் மற்றும் மத ரீதியான அடக்குமுறை என இவை அனைத்தும் துனிசியாவில் சர்வ சாதாரணமாய் நடந்தவை. அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் பெண்களின் ஹிஜாப்கள் கிழித்தெறியப்பட்டதற்கும் காரணமாக இருந்தவர் பென் அலி. பள்ளிகள், மருத்துவமனைகள், பல்கலைகழகங்கள் என அனைத்து பொது இடங்களிலும் ஹிஜாப் அணிய தடை விதித்தவர் அவர்.

சிறைகளில் குரான் தடை செய்யப்பட்டிருந்தது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து வேறு நேரங்களில் தொழுதால் சிறைக்கைதிகள் துன்புறுத்தப்படுவார்கள்.

அவரையும், அவரது ஊழல் மிகுந்த அரசாங்கத்தையும் புகழ்த்து பேசும் இமாம்களை அவரது ஆட்சிமுறை கொண்டு வந்தது. இதன் மூலமாக அவர்கள் என்ன எதிர்ப்பார்த்தார்களோ அது நடந்தது. இறையச்சம் கொண்டோரை பள்ளிவாசல்களில் இருந்து அது தள்ளியிருக்கச் செய்தது.

வெள்ளிக்கிழமைகளில், முஸ்லிம் இளைஞர்கள் விரைவாக பள்ளிவாசலுக்கு செல்லாததில் ஆச்சர்யமொன்றுமில்லை. (ஏனென்றால்) குத்பாவின்(4) பாதி நேரத்தை, பென் அலி மற்றும் அவரது ஆதரவாளர்களின் புகழ் பாடி செலவழித்து கொண்டிருந்தவர்கள் அந்த இமாம்கள்.

முன்னாள் சிகை அலங்காரரான லீலாவை நினைத்து நானும் அந்த சகோதரியும் ஆச்சர்யப்பட்டோம். ஜித்தாவில் இருக்கும் தன்னுடைய புதிய வீட்டிலிருந்து ஒவ்வொருமுறை வெளியேறும் போதும் அவர் கருப்பு நிற அபாயா அணிய வேண்டுமே? இது குறித்த அவரது பார்வை எப்படியிருக்கும்? மார்க்க பற்றுள்ள சவூதி காவல்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நிச்சயம் நம்புகின்றேன்.

துனிசியாவில் இருந்து அவர்கள் புறப்படும் பொழுது, அவர்கள் சென்றடைய விருப்பப்பட்ட இடங்களின் பட்டியலில் நிச்சயம் சவூதி இருந்திருக்காது.

"சாரி, லண்டன், பாரிஸ், நியூயார்க், மொனாகோ அல்லது ஜெனிவாவில் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை, ஜித்தா எப்படி?" என்று அந்த கெட்ட செய்தியை விமானி அவர்களிடம் தெரிவித்த போது அவர்களது உணர்வுகள் எப்படி இருத்திருக்கும் என்பதை நான் பார்க்காமல் போய் விட்டேன்.

பென் அலியின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளும், மனித உரிமை மீறல்களுமே என்னை முதன் முதலாக, 2006ல், லண்டனில் உள்ள துனிசிய தூதரகத்தின் முன் நிற்க வைத்தது. இஸ்லாமை பின்பற்ற என்னுடைய சகோதரிகளுக்கு இருக்கக்கூடிய உரிமைகளுக்காக போராட வைத்தது.

அந்த மனிதரும், அவரது மனைவியும் தாங்கள் பிறந்த மார்க்கத்தையும், அதன் கோட்பாடுகளையும் மிகவும் அவமதித்தனர். துனிசியாவை செக்யூலர் நாடாக மாற்ற பெரிதும் முயன்றனர்.

எதற்காக இப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள்?, தங்களை திருப்திபடுத்தவா?, அல்லது தங்களுக்கு பாதுகாவலாய் விளங்கி வந்த, உற்ற நண்பர்கள் போல் நடித்து வந்த மேற்கத்திய சக்திகளை திருப்திபடுத்தவா?

பிப்ரவரி 2009ல், துனிசியாவில் நான் மேற்கொண்ட பயணத்தை நினைவு கூர்கின்றேன். அப்போது நூற்றுக்கணக்கான பென் அலியின் ஆதரவாளர்கள் நாங்கள் தொழுவதையும், வெள்ளிக்கிழமை தொழுகைகளில் நாங்கள் கலந்து கொள்வதையும் தடுக்க தங்களால் முடிந்த வரை முயன்று பார்த்தார்கள்.

நாங்கள் எங்கள் வாகனங்களை நடுரோட்டிலேயே நிறுத்தி அந்த தெருவிலேயே தொழுதோம். அப்போது அவர்கள் முகத்தில் ஏற்பட்ட மிரட்சி இருக்கின்றதே, அதனை என்னால் என்றென்றும் மறக்க முடியாது. இந்த சம்பவத்தை நினைவுபடுத்தி அந்த சகோதரியிடம் கூறிக்கொண்டிருந்தேன். பென் அலி மற்றும் லீலாவின் தற்போதைய நிலையை எண்ணி மீண்டும் சிரித்தோம்.

என்னவொரு உணர்ச்சிகர நிலை, மேற்குலகின் நிலையில்லாத நண்பர்களால் கைவிடப்பட்ட பிறகு இவர்களது உதவிக்கு வந்தவர்கள் முஸ்லிம்கள் தான். மன்னிப்பதென்பது இஸ்லாத்தில் ஒரு முக்கிய பண்பு. ஆனால், அந்த பண்பை இவர்களை நோக்கி காட்ட நினைக்ககூடிய நிலையில் கூட தற்போது துனிசியர்கள் இல்லை.

தங்கள் மக்களிடம் இவர்கள் காட்டாத கருணையை இன்று சில முஸ்லிம்கள் இவர்களிடம் காட்டியிருக்கின்றார்கள். இதற்கு நன்றியுள்ளவர்களாக இவர்கள் இருக்க வேண்டும்.

தன்னால் கொடுமைப்படுத்தப்பட்ட ஹிஜாப் அணிந்த பெண்கள், இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றிய சகோதரர்கள், மனித உரிமை இயக்கத்தினர் என இவர்கள் அனைவர் குறித்தும் பென் அலி தனக்குள்ளாக பிரதிபளித்து கொள்ள வேண்டிய தருணம் இது.

தன்னுடைய மக்களுக்கு இவர் கொண்டு சென்ற திரித்த, நீர்த்து போன இஸ்லாத்தை போலல்லாமல், இனியாவது இவர் தூய இஸ்லாத்தை கண்டெடுப்பாரா என்றெண்ணி அதிசயக்கின்றேன்.

அந்த சகோதரியை நோக்கி திரும்பி, இனியாவது ஹிஜாபின் மகிமையை லீலா புரிந்து கொள்வாரா என்று இன்னும் அதிகமாக ஆச்சர்யப்படுகின்றேன்.

இதனை கூறிக்கொண்டிருக்கும் போதே, என்னருகில் இன்று கொண்டிருக்கும் இந்த பெண் யாரென்று நினைவுக்கு வந்தது. நாங்கள் 2006ல், துனிசிய தூதரகத்துக்கு வெளியே ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது சந்தித்திருக்கின்றோம்.

சிறைக்காவலில் வைக்கப்பட்டு, பென் அலியின் குண்டர்களால் கொடுமைப்படுத்தப்பட்ட செய்திகளை என்னிடத்தில் அப்போது விவரித்தார் இவர். குரலில் நடுக்கத்துடன் அன்று இவர் சொன்ன வார்த்தைகள் இன்றளவும் எனக்கு நினைவிருக்கின்றது.
"லண்டனுக்கு வந்த பிறகும் என்னுடைய ஹிஜாப் இன்னும் என் சட்டைப்பையில் இருக்கின்றது"
இவருடைய கதையை கேட்டு அன்று நான் கண்கலங்கியது எனக்கு நன்கு நினைவிருக்கின்றது.

தற்போது இவர் துனிசியாவிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார், ஆனால் இந்த முறை நிமிர்ந்த தலையோடும், ஹிஜாப் அணிந்த பெருமிதத்தோடும்..."


அல்ஹம்துலில்லாஹ்....

யுவான் ரிட்லி போன்ற சகோதரிகளை நம் உம்மத்துக்கு(5) இறைவன் தொடர்ந்து தந்தருள்வானாக...ஆமீன்.

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக..ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. ஹிஜாப் - பல்வேறு அர்த்தங்களை கொண்டது. இங்கே, முகம் மற்றும் கை மணிகட்டுகளை தவிர்த்து உடல் முழுவதும் மறைக்கும் விதமாக உடையணியும் முறையை குறிக்கின்றது.
2. பாங்கு - தொழுகைக்காக பள்ளிவாசல்களிலிருந்து எழுப்பப்படும் அழைப்பு.
3. பத்வா - ஆழ்ந்த மார்க்க அறிவோடு கூறப்படும் கருத்து/அபிப்பிராயம்.
4. குத்பா - பிரசங்கம்/சொற்பொழிவு.
5. உம்மத் - நம்பிக்கையாளர்களின் சமூகம் (Community of Believers).

Sister Yvonne Ridley's official website:
i. http://yvonneridley.org

References:
i. Hijab Makes a Return in Tunisia - Yvonne Ridley, 25th January 2011. link.
ii. துனிசியா : மல்லிகை புரட்சியின் மறுபக்கம் - சகோதரர் முஹம்மது ஆஷிக். link.


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.

thanks to : ஆஷிக் அஹ்மத் அ.

புதன், 22 செப்டம்பர், 2010

ஆஸ்திரேலியாவில் ஹிஜாபிற்கு விதிக்கவிருக்கும் தடையை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் பேரணி.


சிட்னி,செப்.21:ஆஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் உட்பட பலர், அரசு விதிக்கவிருக்கும் ஹிஜாப் தடையை எதிர்த்து பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அரசுக்கு செனட் உறுப்பினர் கோரி பெர்னார்டி பரிந்துரைத்துள்ள 'ஹிஜாப்' என்னும் ஆடைக்கு விதிக்கவிருக்கும் தடையை எதிர்த்து பேரணியில் ஈடுபட்டனர்.

ஹிஸ்புத் தஹ்ரீர் (Hizbut Tahrir) என்னும் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சிட்னி சன்டே ஹெரால்ட் என்னும் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் "பெண்களை இஸ்லாம் சிறுமைப்படுத்துகிறது என்று திட்டமிட்டு பரப்பிவரும் அவதூறுகளை பரப்புவர்கள் நிறுத்திக் கொள்ளவேண்டும்" என்று கூறியுள்ளார். மேலும் "உலகம் முழுவதும் மதம் மாறும் பெண்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால், அதிகமாக அளவில் முஸ்லீம் மதத்தையே ஏற்றுக்கொண்டு, இஸ்லாம் அறிவுறுத்தும் கண்ணியமான ஆடை முறைகளையே விரும்பிப் பின்பற்றுகிறார்கள்" என்றும் கூறியுள்ளார்.

மேற்கு உலகம் நடைமுறைப்படுத்தும் சமத்துவத்தை விட, இஸ்லாம் போதிக்கும் மனித மதிப்பு சிறந்தது என்று சவால் விட்டுள்ளார்."தன்னுடைய உடலை அந்நிய ஆண்கள் பார்க்க கூடாது என நான் விரும்புவது எனது சுதந்திரம். இந்த ஆடையின் மூலம் சமுகத்தில் அந்நிய ஆண்கள் கண்களில் இருந்து எனது உடலை மறைத்து என்னால் சுதந்திரமாக செயல் பட முடியும்" என்று ஏழு தலைமுறைகளாக ஆஸ்திரேலியாவில் வாழ்ந்துவரும் உம்மு ஜமாலுதீன் என்ற பெண் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், பெண்கள் எப்படி தோற்றமளிக்க வேண்டும், கூடாது என்று நிர்ணயிக்கும் தற்போதைய ஆணாதிக்கத்தில் உள்ள நவீன ஆடை உலகத்திற்கு நாங்கள் அடிமையாக முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
செனட் உறுப்பினர் கோரி பெர்னார்டி பரிந்துரைத்த 'ஹிஜாப்' தடைக்கு ஆதரவு அளிக்காத மற்ற பெரும்பான்மை செனட் உறுப்பினர்களுக்கு இந்தப் பேரணியில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

ஹிஜாப் அணிந்த மம்தா:சர்ச்சையை கிளப்பிய ரெயில்வே விளம்பரம்

கொல்கத்தா,செப்.12:ஹிஜாப் அணிந்து ஈத் தொழுகையில் கலந்துக் கொள்ளும் மம்தாவின் விளம்பர புகைப்படம் மேற்குவங்காளத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ரெயில்வே விளம்பரத்தில்தான் மம்தாவின் புகைப்படம் வெளியானது. ஈதுல் ஃபித்ர் பெருநாளை முன்னிட்டு மேற்குவங்காளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள புதிய ரெயில்வே திட்டங்கள் தொடர்பாகத்தான் ரெயில்வே விளம்பரம் வெளியிட்டிருந்தது.

அடுத்த சட்டசபை தேர்தலில் மேற்குவங்காளத்தின் முதல்வராக துடிக்கும் மம்தா பானர்ஜி முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதற்காக போட்ட வேடம் என சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அரசுப் பணத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் நம்பிக்கையை ஏற்படுத்த மத்திய அமைச்சர் ஒருவர் மதச்சின்னங்களை தவறாக பயன்படுத்தியுள்ளதாக சி.பி.எம் தலைவர்களில் ஒருவரான முஹம்மது ஸலீம் குற்றஞ்சாட்டுகிறார்.

"அரசியல் தலைவர் என்ற முறையில் அவருக்கு எந்த ஆடையையும் அணியலாம். எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதுதான் அவருடைய பணி. இந்த செய்தியில் எனக்கு குழப்பம் ஒன்றும் தோன்றவில்லை" என கொல்கத்தாவில் திப்புசுல்தான் மஸ்ஜிதின் ஷாஹி இமாம் மவ்லான பர்கத்தி தெரிவித்துள்ளார்.

செய்தி:மாத்யமம்

சனி, 7 ஆகஸ்ட், 2010

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்தால் அடிப்படைவாதம், பெண்சுதந்திரம் பறிக்கப்படுகிறது : யூத பெண்கள் அணிந்தால், அணிய சொல்லப்பட்டால் அது மதநம்பிக்கை.

ஆக6:'ஹிஜாப்' அணிய 'பிரான்ஸ்' விதித்த தடை உலகம் முழுவதும் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.இது மத உணர்வை காயப்படுத்துவதாகவும், பிரான்சில் இஸ்லாம் மதம் பின்பற்றுபவர்கள் அதிகரிப்பதை தடுக்க அரசு இவ்வாறு தடை விதிக்கிறது என்ற கருத்து முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த யூத குருமார்கள், "யூத மதப்பெண்கள் கட்டாயம் 'ஹிஜாப்' அணிய வேண்டும்" என்று அறிவுரை வழங்கியுள்ளனர்.முஸ்லிம் பெண்கள் அணியும் அதே வகை 'ஹிஜாப்' களையே இவர்களும் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

'டெய்லி மாரிவ்' (Daily Mariv) என்ற யூத பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் யூத குருமார்கள் தங்கள் மத பெண்களை 'ஹிஜாப்' அணிய அறிவுறுத்தி வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக நகரம் முழுவதும் சுவரொட்டி கொண்டு விளம்பரம் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதில் பெண்கள் தலை முதல் பாதம் வரை முழுவதும் மறைத்து உடை அணியவும், தலைமுடியினை மறைத்துக்கொள்ளவும், ஒளி ஊடுருவுகிற (Transparent) ஆடைகள் மற்றும் இறுக்கமாக உடல் அங்கங்கள் தெரியும் உடைகள் அணிய கட்டுபாடுகள் விதித்தும், கறுப்பு நிற மேலங்கி உபயோகப்படுத்த வலியுறுத்தியும் விளம்பரம் செய்துள்ளனர். இவை பெண்களைப் பாவங்களில் இருந்து விடுபட செய்யும் செயல்கள் எனவும், மீறுவது யூத மத வேதம் டோராவிற்கு எதிரானது என்றும் அவர்கள் விளம்பரம் செய்துள்ளனர்.

இந்த மதகுருமார்கள் குட்டை பாவடை, நீச்சல் உடை மற்றும் வண்ணமயமான அலங்கார உடைகளை பெண்கள் உடுத்துவதற்கும் கட்டுபாட்டு ஆணைகள் இட்டு வருகின்றனர். டோரா வேத குருமார்கள் மத சம்பந்தப்பட்ட நடவடிக்கையில் மிகவும் கண்டிப்பானவர்கள். மற்றொரு பிரிவான ஹரேடிம் ஏற்கனவே இவற்றைப் பின்பற்றி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், பெண்கள் பொது இடங்களில் செல்போன் உபயோகிப்பதற்கும் தடை விதித்துள்ளனர். மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த விளம்பரங்கள் தெரிவிப்பதாக அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுயுள்ளது.

சிந்திக்க: முஸ்லிம்கள் ஒன்றும் முஸ்லிம் பெண்களை கட்டாயபடுத்தி ஹிஜாப் அணிய சொல்லவில்லை அப்படியிருக்க . முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்தால் அடிப்படை வாதம் பெண்சுதந்திரம் பறிபோகிறது என்று பேசும் இந்த மேலை நாட்டு கலாச்சார கபோதிகள் அவர்களுக்கு துணைபோகும் பத்திரிகை விபச்சாரம் நடத்தும் கயவர்கள் எல்லாரும் இதை பற்றி கண்டித்து ஒரு வரி கூட எழுதவில்லை. முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது கண்ணியத்தை தருகிறது என்று அவர்களே விரும்பி அணிகின்றனர்.

ஞாயிறு, 6 ஜூன், 2010

ஹிஜாப் அணிந்ததால் பள்ளியிலிருந்து மாணவி நீக்கம்! எதிர்த்து தொடுத்த வழக்கில் வெற்றி!


முஸ்லிம் பள்ளி மாணவி ஒருவர் தனது வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்த ஒரே காரணத்திற்காக டி.ஸி (Transfer Certificate) கொடுத்து பள்ளியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நடந்தது பிரான்ஸிலோ அல்லது டென்மார்க்கிலோ அல்ல. கேரளாவின் ஆலப்புழாவில் தான்.


இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கிற்கு எதிரொலியாக, பள்ளியின் பிரின்சிபலை சஸ்பெண்ட் செய்யுமாறு கடந்த சனிக்கிழமை, 05-06-2010 அன்று அழைப்பாணை (சம்மன்) அனுப்பி, கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் உள்ள ஆங்கிலப் பள்ளி ஒன்றின் பிரின்ஸிபலாகப் பணிபுரியும் மேரி ஜெஸிண்டா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேரி ஜெஸிண்டா எதிர்வரும் ஜுலை 31 ந்தேதிக்குள் நீதிமன்றத்திற்கு ஆஜர் ஆகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கேரள முதன்மை நீதிமன்றத்தின் குற்றவியல் நீதிபதியான முஹம்மத் வஸீன், இது தொடர்பான அழைப்பாணையைப் பிறப்பித்துள்ளார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன், நபலா என்ற பத்தாம் வகுப்புப் பயிலும் முஸ்லிம் மாணவி, தனது வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்த ஒரே காரணத்தால் டி.ஸி கொடுத்து பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார். நீக்குவதற்கு "பள்ளியின் சீருடைக்கு இது முரணாக உள்ளது" என்ற காரணம் காட்டப்பட்டது.

குறைந்த பட்சம் பத்தாம் வகுப்பு முடியும் வரையிலாவது தனது மகளைப் பள்ளியிலிருந்து நீக்க வேண்டாம் என்று எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் பள்ளி நிர்வாகம் கறாராக மறுத்து விட்டது என்கிறார் மாணவி நபலாவின் தந்தை நஜீர்.

இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவி நபலாவின் தந்தை நஜீர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததை அடுத்து நடைபெற்ற தொடர் விசாரணை மற்றும் சமர்ப்பிக்கப் பட்ட ஆதாரங்களுக்குப் பிறகு இந்த வழக்கு இ.பி.கோ 504 (அமைதியைக் குலைக்கும்படியான அவமதிப்பைச் செய்தல்) சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பள்ளியின் பிரின்ஸிபலை சஸ்பெண்ட் செய்ய நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

இவ்விஷயம் அதிக சர்ச்சைக்கு உள்ளானதால், தீர்வு காணும் பொருட்டு மாவட்ட ஆட்சியாளர் பி. வேணுகோபால் அவர்களின் முன்னிலையில் கடந்த மாதம், ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

தற்போது பிரின்சிபலை சஸ்பெண்ட் செய்தபிறகு, மாணவி நபலாவை மீண்டும் தமது பள்ளியில் இணைந்து கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பினை நிராகரித்துள்ள மாணவி நபலா தற்போது வேறு பள்ளியில் பயின்று வருகிறார்.

புதன், 27 ஜனவரி, 2010

ரசிக்கும் உரிமை கணவனுக்கே



Thanks to : சகோதரி. பாத்திமா ஜொஹ்ரா

பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைகளையும் தவிர மற்ற பாகங்களை அன்னிய ஆடவரிடமிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றது. இஸ்லாமிய வழக்கில் இது 'ஹிஜாப்' என்றும் நம் நாட்டில் பர்தா, புர்கா, துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றது.


முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் இதுவும் முக்கியமானதாகத் திகழ்கின்றது.

'ஹிஜாப் என்பது பெண்களுக்குக் கூடுதல் சுமையாகவும், அவர்களது உரிமையைப் பறிப்பதாகவும், அவர்களது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் அமைந்துள்ளது!' என்று முற்போக்குவாதிகளும் அறிவு ஜீவிகளும் கூறுகின்றனர். எப்படியும் வாழலாம் என்று கருதும் பெண்டிரும் இந்தப் போலித் தனமான சுதந்திரத்தில் மயங்கி விடுகின்றனர்.

'ஹிஜாப்' என்பது உண்மையில் பெண்களைக் கௌரவிப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்புக்காகவும் ஏற்படுத்தப்பட்டதே தவிர அவர்களது உரிமையைப் பறிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது அன்று.

இது பற்றி விளக்குவதற்கு முன்னால் இவர்களின் போலித்தனத்தையும் இவர்கள் தங்களின் கூற்றுக்குத் தாங்களே முரண்படுவதையும் இனம் காட்ட வேண்டியுள்ளது.

ஹிஜாபை எதிர்ப்பவர்களின் போலித்தனம் ஹிஜாப் என்பது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவது எனவும், கூடுதல் சுமை எனவும் கூறுவோர் தங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆடை விஷயத்தில் ஆண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதே சுதந்திரத்தை அவர்கள் பெண்களுக்கும் அளிக்க வேண்டும். ஆனால் சமத்துவம் பேசும் அவர்கள் கூட அவ்வாறு அளிக்கத் தயாராக இல்லை.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு ஆடவன் சட்டை பனியன் போன்ற மேலாடை எதுவுமின்றி வெறும் அரை நிக்கர் மட்டும் அணிந்து தனது வேலைகளைப் பார்க்கிறான். பலர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். அதே உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி மேலாடை ஏதுமின்றி பணிபுரியவோ, பலருக்கும் காட்சி தரவோ அனுமதிக்கப்படுவதில்லை. தம் மனைவியை, தம் தாயை, தம் சகோதரியைப் பிறர் முன்னிலையில் இந்த அளவு ஆடையுடன் காட்சி அளிக்க முற்போக்குவாதிகள் உட்பட எவரும் அனுமதிப்பதில்லை.

அது போல் நடுத்தர வர்க்கத்து, அல்லது மேல் மட்டத்து ஆடவன் ஒருவன் மேலாடை ஏதுமின்றி வெளியில் காட்சி தராவிட்டாலும் வீட்டிற்குள் குடும்பத்தினர் முன்னிலையில் இந்தக் கோலத்தில் இருக்கிறான். எல்லா நேரங்களிலும் இவ்வாறு இல்லா விட்டாலும் கடினமான வேலையின் போதும் கடுமையான கோடையின் போதும் இந்தக் கோலத்துடன் இருப்பதுண்டு. அதே வர்க்கத்துப் பெண்கள் இவ்வாறு இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

அன்னிய ஆடவர்கள் முன்னிலையில் மட்டுமின்றிக் குடும்பத்து ஆடவர்கள் முன்னிலையில் கூட இந்த நிலையில் பெண்கள் காட்சி தருவது கிடையாது. ஏன் குடும்பத்துப் பெண்கள் முன்னிலையில் கூட அவ்வாறு காட்சி தர அனுமதிக்கப்படுவது கிடையாது. முற்போக்குவாதிகள் உட்பட எவருமே இதை அனுமதிக்க மாட்டார்கள்.

'ஆண்களை விடப் பெண்களிடம் மறைக்கப்பட வேண்டிய பகுதிகள் கூடுதலாக உள்ளன என்பதை அப்பெண்களும் உணர்ந்துள்ளனர்; ஆண்களும் உணர்ந்து உள்ளனர்' என்பதற்கு இந்தப் போக்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

ஹிஜாபை விமர்சனம் செய்பவர்களிடம் நாம் கேட்கிறோம்; ஆணுக்குப் பெண் சரி நிகர் சமானம் என்பது இப்போது எங்கே போயிற்று? பெண்களின் சுதந்திரம் இப்போது என்னவாயிற்று? முழு அளவுக்கு இல்லையானாலும் ஓரளவுக்கு இவர்களும் ஹிஜாபை வற்புறுத்தவே செய்கின்றனர் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.

னெனில் அவர்களும் கூட ஆண்களுக்கு இருக்கும் அதே அளவு சுதந்திரத்தை இந்த விஷயத்தில் பெண்களுக்கு வழங்கி விடவில்லை.

பெண்களுக்கு பாதுகாப்பு இனி ஹிஜாப் எவ்வாறு பெண்களுக்குப் பாதுகாப்பாகவும், அவர்களைக் கவுரவிப்பதாகவும் அமைந்துள்ளது என்பதைக் காண்போம்.

பெண்களின் நிறம், அழகு, இளமை, அல்லது உறுப்புகளின் திரட்சி ஆகியவையே ஆண்களால் ரசிக்கப்படுகின்றன. இதன் காரணமாகத் தான் குறைந்த ஆடையுடன் அல்லது கவர்ச்சியை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான ஆடையுடன் பெண்கள் காட்சி தரும் போது அதை ஆண்கள் ரசிக்கின்றனர். திரும்பத் திரும்பப் பார்க்க விரும்புகின்றனர். விதி விலக்காக மிகச் சிலர் இருந்தாலும் பொதுவாக ஆண்களின் இயல்பு இது தான்.

ஆபாச சினிமாக்கள், புத்தகங்கள் ஆகியவை பெண்களின் நிர்வாணக் கோலத்தை வியாபாரமாக்குவதிலிருந்தும் கூட இதை அறியலாம்.

ஆண்களும், பெண்களும் கலந்து வாழ்கின்ற இவ்வுலகில் பெண்களின் விருப்பத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அவர்களின் ஆடையைத் தீர்மானிப்பது தவறாகும். இவர்களைப் பார்த்து ரசிக்கின்ற ஆண்களின் மனோ நிலையையும் கருத்தில் கொண்டே அவர்களது ஆடைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். இரு சாராரும் கற்புடனும், ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள இவ்வாறு கவனிப்பது மிக மிக அவசியமாகும்.

அழகான அன்னியப் பெண்ணிடம் எதை எல்லாம் பார்த்து ரசிக்க ஒரு ஆண் விரும்புகிறானோ அவை கண்டிப்பாக மறைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவளை முழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும். மற்றவர்களுக்கு இதில் எந்த உரிமையும் கிடையாது.

பார்ப்பதால் என்ன குறைந்து விடப் போகிறது என்ற கேள்வி தவறாகும். இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கவே செய்கிறோம். தம் மனைவியரை விட அதிக அளவு ரசிக்கத்தக்கவளாக ஒருத்தியைக் காண்பவர்களில் பலர் ரசிப்பதோடு நிறுத்திக் கொண்டாலும் சிலர் முறையின்றி அவளை அடையவும், அனுபவிக்கவும் முயல்வர். கற்பழிப்பு, கொலை வரை கூட இவர்கள் சென்று விடுவதைக் காண முடிகின்றது.

இவ்வளவு மோசமாக நடக்காதவர்கள் கூட மனதளவில் அவளது நினைவிலேயே மூழ்கி விடுகின்றனர். தம் மனைவியருடன் ஒப்பிட்டுப் பார்த்து மனைவியின் மேல் உள்ள ஈடுபாட்டைக் குறைத்துக் கொள்கின்றனர்.

ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.

இந்நிலையில் ஒரு ஆண் எவ்வளவு குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.

அவளது விருப்பத்திற்கு மாறாகப் பலவந்தமாக அவள் அனுபவிக்கப்படும் போது அவளது உரிமையும், பெண்மையும், தன்மானமும் பாதிக்கப்படுகின்றன. கற்பழித்த குற்றத்துக்காக தண்டிக்கப்படுவோம் என்று அஞ்சும் கயவர்கள் அவளைக் கொன்றும் விடுகின்றனர்.

ஹிஜாபைக் குறை கூறுவோர் இதைச் சிந்திப்பதில்லை.

பெண்ணுரிமை இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும் நாட்டில் தினந்தோறும் நடக்கும் கற்பழிப்புக்களையும் பெண்களுக்கெதிரான கொடுமைகளையும் கண்டிக்கின்றனர். 'இச்செயல்களில் ஈடுபடுவோரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்; அரபு நாட்டுச் சட்டம் இங்கும் வேண்டும்' என்றெல்லாம் கூறுகின்றனர்.

ஆனால் ஆண்களைத் தூண்டும் வகையில் பெண்களின் உடை அமைந்திருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். காரணத்தை மறந்து விட்டுக் காரியத்தை மட்டும் கண்டிக்கின்றனர்.

பெண்ணுரிமை இயக்கங்களும் முற்போக்குவாதிகளும் ஆபாச சினிமா மற்றும் சுவரொட்டிகளுக்கு எதிராகப் போராடுவதையும் ஆபாச சுவரொட்டிகளைக் கிழிப்பதையும், சாயம் பூசி மறைப்பதையும் நாம் காண்கிறோம். இது எதை உணர்த்துகிறது? பெண்கள் ஆண்களை விட அதிகப்படியாக உடலை மறைக்க வேண்டும் என்பதை இவர்களின் உள் மனது ஒத்துக் கொள்வதை உணர்த்தவில்லையா?

பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?

பெண்ணுரிமையைப் பயன்படுத்தியே அப்பெண் (நடிகை) அப்படிக் காட்சியளிக்கிறாள். அது அவளது சுதந்திரம்; அவளது ஒப்புதலுடன் தான் அக்காட்சி வெளியிடப்படுகிறது; அதை அவளும் பார்க்கிறாள் எனும் போது இப்படிப்பட்ட காட்சிகளைக் கண்டிப்பதும் கிழிப்பதும் இவர்கள் கூற்றுப்படி அப்பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திலும், உரிமையிலும் தலையிடுவதாகாதா?

பெண்ணுரிமை வெறி முற்றிப் போனது தான் அவள் இப்படி ஆபாசமாகக் காட்சியளிப்பதற்குக் காரணம் என்பதை இவர்கள் மறந்தது ஏனோ?

எனவே இவர்களது கூற்று இவர்களது செயல்களுக்கு முரணாகவே அமைந்துள்ளது. பெண்களின் உடல் மறைக்கப்பட்டாக வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதையே இவர்களது உள் மனதும் ஒப்புக் கொள்கிறது என்பதை இவர்களது செயல்களே காட்டுகின்றன.

இந்த நாட்டிலும் உலகின் பல நாடுகளிலும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், மாநில முதல்வர்கள் எனப் பல்வேறு பதவிகளை வகிக்கும் ஆண்கள் முகம், கை தவிர மற்ற பகுதிகளை முழுமையாகவே மறைத்துள்ளனர். ஆயினும் அவர்கள் பெரும் பதவிகளை வகிக்க இது தடையாக இருக்கவில்லை.

பெரும் பதவி வகிக்கும் எந்த ஆணும் இடையில் தொப்புள் மட்டும் தெரியும் வகையில் ஆடை அணிவதில்லை. முட்டுக்கால் வரை கவுன் அணிந்து கால்களைக் காட்டிக் கொண்டிருப்பதில்லை.

ஆனால் ஆண்களை விடக் குறைவான அளவு பெண்கள் மறைப்பதைச் சுதந்திரம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்?

அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.

இன்னொன்றையும் இங்கே நாம் சுட்டிக் காட்ட வேண்டும். ஹிஜாப் என்பது குறிப்பிட்ட நிறம், மற்றும் வடிவத்திலானது அல்ல. எந்த நிறத்திலும், எந்த வடிவத்திலும் இருக்கலாம். முகம், முன் கை தவிர மற்ற பகுதிகளை அது மறைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதே விதியாகும்.

கீழ்த்தரமான எண்ணம் கொண்ட ஆண்களிடமிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், சமூகத்தில் ஒழுக்கம் நிலை பெறவும் தான் ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. மேலை நாடுகளில் வழங்கப்பட்ட ஆடை சுதந்திரம் ஏற்படுத்திய விளைவுகளைக் கண்ட பிறகும் எவரும் ஹிஜாபைக் குறை கூற முடியாது

சனி, 23 ஜனவரி, 2010

மத வெறியர்கள்- போலி முற்போக்குவாதிகள் - ஹிஜாப்




சமீப காலமாகவே இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் எந்த வகையிலாவது களங்கப்படுத்திட வேண்டும் என வெறி பிடித்த சில கூட்டங்கள் இணைய தளத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் அலைந்து கொண்டிருப்பதை பல இணையதளங்களையும் பார்வையிடுவோர் மிக எளிதில் உணரலாம். இப்படி இஸ்லாத்தை விமர்சிக்க கிளம்பிய பல அறிவுஜீவிகள் (தங்களைத் தாங்களே அவ்வாறு தான் நினைத்துக் கொள்கின்றனர்) ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை முன்வைத்தால் அவர்களுக்கு பதில் சொல்லிவிடலாம். ஆனால் வெறுமனே தங்கள் மனதினில் ஊடுருவியிருக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு என்ற ஒற்றைத் தனத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து கருத்துகளை முன்வைக்கின்றனர். எந்த கருத்தை முன்வைக்கின்றனரோ அதில் இஸ்லாமிய நிலைப்பாடு என்ன என்பதைக் கூட அறியாத பல அறிவிலிகள் தான் இத்தகைய அறிவுஜீவி வேடம் தரித்து இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய அறிவிலிகளை இரண்டு வகையினராக மிக எளிதில் பிரித்து விடலாம். முதல் கூட்டம் மதக் காழ்ப்புணர்ச்சியுடன் திரிந்து கொண்டிருப்பவர்களை அடிப்படையாக வைத்து உருவானது. தாங்கள் பின்பற்றும் மதத்தினில் இருக்கும் பல பிற்போக்குத்தனங்களை மறைக்க வேண்டியோ அல்லது அதை நியாயப்படுத்த வேண்டியோ இஸ்லாத்தின் மீது அவதூறு சேற்றை அள்ளி இறைக்கின்ற வகையினர் இவர்கள். இரண்டாவது கூட்டம் மதங்களை புறக்கணித்து ஏதோ ஒரு மனித மூளையினில் உருவான சித்தாந்தத்தை வாழ்வின் வெற்றிக்கான உத்தியாக நினைத்துக் கொள்பவர்கள். இவர்கள் தங்களுடைய சித்தாந்தம் தான் சிறந்தது என நிரூபிக்க வேண்டி மற்ற மதங்களை போலவே இஸ்லாத்திலும் பிற்போக்குத்தனம் இருக்கின்றது என்ற ரீதியில் பொய்ப்பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இவர்களுடைய மதங்களும் சித்தாந்தங்களும் இவர்கள் கண்ணெதிரிலேயே பரிதாபகரமான தோல்வியை தழுவி நிற்பதை காண சகிக்காமல், அத்தகைய தோல்விக்கு காரணமாய் இருக்கின்ற இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் கறைப்படுத்தி விட வேண்டும் என இவர்களின் ஆழ்மனதில் படிந்து விட்ட இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியே அவ்வப்போது இணையத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு சகோதரி சுமஜ்லாவின் பதிவுகள் வரப்பிரசாதமாக அமைந்து விட்டன. என்னைப் பொறுத்தவரை சுமஜ்லா மிகவும் தைரியமான ஒரு மங்கை. அவர் மேல் வைக்கப்படும் அனைத்துக் கருத்துக்களுக்கும் அவர் தனி ஆளாக நின்றே பதில் கொடுக்கும் திறமை வாய்ந்தவர். என்னுடைய இந்த கட்டுரை தன்னுடைய பேசுபொருளாக முன்வைப்பது "ஹிஜாப்" என்ற பெண்களின் உடையைப் பற்றியது. ஹிஜாப் என்பது பெண்கள் தங்களுடைய முழுமுகம் மற்றும் முன்கைகள் இரண்டை தவிர மற்றதை மறைத்துக் கொள்ளும் வகையில் உடையனிதலாகும். வெறுமனே கருப்பு அங்கி மட்டும் ஹிஜாபல்ல. முகம் மற்றும் முன்கைகளை தவிர மற்ற பகுதிகளை மறைக்கும் வண்ணம் உடல் அங்கங்கள் வெளியே தெரியாத வண்ணம் இறுக்கமாக இல்லாமல் எந்த உடை அணிந்தாலும் அவை ஹிஜாப் என்றே அழைக்கப்படும். இந்த ஹிஜாபை தான் ஆணடிமைத்தனம் என்றும் பிற்போக்குத்தனம் என்றும் மதவெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் காட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாம் என்பது மதமன்று. பல மதங்கள், சித்தாந்தங்கள் போன்று ஒரு சிலவற்றை சொல்லிவிட்டு பலவற்றை சொல்ல தெரியாத, அப்படியே சொல்லியிருந்தாலும் இன்றைய வாழ்வியலுக்கு ஒத்துவராத கோட்பாடுகளை கொண்டவையுமல்ல. மாறாக வாழ்வியலின் அனைத்து நடைமுறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள வாழ்வியலுக்கான வழிகாட்டியாக விளங்கும் மார்க்கமாகும். ஒரு பெண் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டுமேயானால் அவளுடைய கண்ணியம் காக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் ஹிஜாப் என்னும் உடையின் மூலம் பெண்களை கண்ணியப்படுத்தி சமூகத்தில் வாழ செய்கின்றது இஸ்லாம். இல்லை நான் அரைகுறை ஆடை தான் அணிவேன் என ஒரு பெண் சொன்னால் தாரளாமாக அவற்றை அணிந்து கொள்ளலாம். ஏனெனில் இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை. "மார்க்கத்தில் நிர்பந்தம் என்பது இல்லை ...(குர்ஆன் 2:256 )".

தம்முடைய கண்ணியத்தையும் அடுத்தவர்களின் காமக் கண் கொடூர பார்வையையும் தவிர்க்க வேண்டும் என்று விரும்பும் எந்த பெண்ணாக இருப்பினும் அவர் ஹிஜாபை தெரிவு செய்து கொள்ளலாம். அதற்கு இஸ்லாமியராக தான் இருக்க வேண்டுமென்பதில்லை. இந்த உடை அணிவதினால் பெண்களுக்கு கண்ணியம் ஏற்படுகின்றது என்பதை ஹிஜாபை எதிர்க்கும் மத வெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் மறுப்பார்களா? இந்தியாவின் உயர்ந்த பீடத்தினில் இருக்கின்ற இன்றைய குடியரசுத்தலைவர் அவர்களே மிக அழகாக பெரும்பாலான நேரங்களில் ஹிஜாபை பேனுபவராகவே இருக்கின்றார். இஸ்லாம் பெண்களின் உடை விடயத்தினில் ஒரு அளவை மிகத் தெளிவாக சொல்லிவிட்டது. இதற்கு மாற்றுக் கருத்து சொல்லுபவர்கள் பெண்களின் உடை விடயத்தினில் எந்த ஒரு கருத்தையும் தெளிவாக சொல்லவில்லை. உடையணிதல் தனிப்பட்ட பெண்களின் உரிமையை சார்ந்த விடயம் என்று வாதிடும் இவர்கள் திரைப்படத்தினில் நடிகைகளின் அரைகுறை ஆடைகளை ஆபாசம் அருவெறுப்பு என்றும் எழுதுகின்றனர் என்பதுதான் நகைச்சுவையின் உச்சம். அப்படி அரைகுறை ஆடை அணிவது அந்த நடிகையின் தனிப்பட்ட உரிமை என்ற வாதத்தை அப்பொழுது வசதியாக மறந்து விடுகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை மதவெறி மற்றும் போலி முற்போக்காளர்களே?

வாரம் ஒரு வாலிபனுடன் வலம் வருவது கூட பெண்கள் சுதந்திரத்தின் அங்கமாகவே நினைக்கின்ற சில பெண்கள் இன்று உருவாகி விட்டனர். பெண் சுதந்திரம் என்ற அடிப்படையில் இவர்களை ஏற்றுக் கொண்டு இந்த மாதிரி பெண்களை திருமணம் செய்ய ஹிஜாபை எதிர்க்கும் மதவெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் தயாரா? தவறுகள் சர்வசாதரணமாக சமூகத்தில் உலா வரும் போது அவை தவறு என்ற எண்ணமே மறைக்கப்பட்டு விடும். இதற்கு சரியான உதாரணம் புகைப்பிடித்தலை சொல்லலாம். இதே மாதிரி தான் அரைகுறை ஆபாச உடை விடயத்தையும் கொண்டு வர சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு தடையாக இருப்பது ஹிஜாபே ஆகும். எனவே தான் இதற்கு எதிராக இவ்வளவு ஆக்ரோஷமாக கிளர்த்தெழுகின்றனர். இதில் போலி முற்போக்குவாதிகள் மத வெறியர்கள் என்ற வித்தியாசமெல்லாமில்லை.

அன்பின் சகோதரி சுமஜ்லா நீங்கள் கண்ணியம் வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள். ஆகவே ஹிஜாபை பேணுகின்றீர்கள். ஆனால் வாரம் ஒரு வாலிபனுடன் வலம் வந்த அல்லது வலம் வருவதை ஆதரிக்கின்ற அல்லது தங்கள் வீட்டு பெண்களை இத்தகைய கேடு கேட்ட நிலையினில் தள்ளப் போகின்றவர்கள் "கலகல" என ஏதாவது ஒன்றை கவிதை வரியினில் எழுதியதால் மனம் தளர வேண்டாம். நடிகைகள் தங்களுடைய அரைகுறை உடையினை ஆபாசம் என்று என்றைக்குமே ஏற்றுக் கொள்வதில்லை. அதைப் போன்றே இவர்களும் என விட்டுத் தள்ளுங்கள். ஹிஜாபின் கண்ணியத்தை உங்களைப் போன்ற பெண்கள் சொல்லுவதுதான் அதற்கு இன்னும் கண்ணியத்தைக் கொடுக்கின்றது. எழுத்தாளர் சகுந்தலா நரசிம்ஹன் கூட சமீபத்தில் ஹிஜாபின் கண்ணியத்தைப் பற்றி தன்னுடைய அனுபவத்தை மிகத் தெளிவாக எழுதியிருந்தார். மறைந்த மாபெரும் எழுத்தாளர் கமலா சுரையா கூட ஹிஜாபினால் தனக்கு எவ்வளவு தூரம் பாதுகாப்பு கிடைத்தது என்பதை பல தருணங்களில் நினைவு கூர்ந்திருக்கின்றார்.

ஹிஜாபை பேணுகின்ற சுமஜ்லா போன்ற பெண்களை மதவெறிப் பிடித்தவர்கள் என பொய்ப்பரப்புரை செய்ய உண்மையில் மதவெறி பிடித்து போய் திரிகின்றவர்களும், பிற்போக்குத்தனத்திலும் ஆணடிமைத்தனத்திலும் ஊறியவர்கள் இஸ்லாமியப் பெண்கள் என நிலைநாட்ட போலி முற்போக்கு கும்பல்களும் (ம.க.இ.க உட்பட) முயலுகின்றன. அதன் வெளிப்பாடு தான் கவிதை கட்டுரை பின்னூட்டமென சமீப காலத்தில் இவர்கள் எடுக்கும் அவதாரங்கள். இறுதியாக, நான் சமீபத்தில் படித்த ஒரு கவிதையை இங்கே நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகின்றேன். அந்த கவிதை எழுதியவருக்கு என்னுடைய நன்றிகள்.

பொன்னையும் பொருளையும்
பெட்டியில் பத்திரமாய்
பூட்டி வைத்து பாதுகாக்கும்
தன் எஜமானனிடம்
வேலியோரத்தில் சுதந்திரமாய்
விட்டெறியப்பட்ட
விளக்குமாறு ஒன்று
வீறுகொண்டு தன் கடுங்குரலில் அகவியதாம்,
"என்னைப்போல் அவற்றுக்கும் கொடு-விடுதலை"-என..!

பெட்டிக்குள்ளே
உள்ள'நற்குடிகளுக்கு'
தெரியாதா
'எது கண்ணியமான பாதுகாப்பு'-என்று..!

பாவம்...பரிதாபப்படுவோம்...
'விளக்குமார்கள் என்றாவதொருநாள்
விளங்குவார்கள் உண்மையை'
என நம்பிவைப்போம்
இப்போதைக்கு...!


பி.ஏ.ஷேக் தாவூத்

திங்கள், 2 நவம்பர், 2009

அமெரிக்க மருத்துவருக்கு ஹிஜாப் அணிய தடை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்று அங்கு பணியாற்றும் இஸ்லாமிய மருத்துவர்கள் தங்கள் தலைமுடியை ஸ்கார்ப் அணிந்து மறைப்பதற்கு தடை விதித்துள்ளது.

ஹீனா சாகி என்ற மருத்துவர், கேர் நவ் மருத்துவமனையின் இந்த கொள்கையினால், தான் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளேன் என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று கூறினார்.

29 வயது நிரம்பிய மருத்துவரான இவர் அந்த மருத்துவமனை ஹிஜாப் விசயத்தில் அவ்வாறு நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டு அந்த கொள்கையினையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அமெரிக்க இஸ்லாமிய உறவுகளின் மன்றம், "அந்த மருத்துவமனையின் ஹிஜாபிற்கு எதிரான இந்த கொள்கையினால் அந்த மருத்துவமனை அமெரிக்க சட்டத்தினை தெள்ளத் தெளிவாக மீறியுள்ளது" என்று கூறினர்.

அந்த மன்றத்தின் மனித உரிமை மேலாளரான கதிஜா அத்மான், "இது பச்சையான சட்ட மீறுதல் என்று கூறினார். இது வழிபாட்டு முறை தொடர்பான வழக்கு என்றும் அவர் ஸ்கார்ப் அணிவதால் அவரை பணியமர்த்தியவர்க்கு எந்த பாதிப்புகளும் வரபோவதாக தெரியவில்லை" என்று அவர் கூறினார்.

கேர் நவ் மருத்துவமனையின் தலைவர் இது பற்றி கூறும்பொழுது, "தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் அந்த மருத்துவமனை தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கின்றது என்றும் அவரைப் பொறுத்தவரையில் இனம், மதம், ஆண் - பெண், தேசியம் ஆகிய பாகுபாடுகளை தான் விரும்பவில்லை" என்றும் அவர் கூறினார்.

நன்றி,
ABNA.

ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

நல்ல உடைகளே நல்ல கலாச்சாரம

*மிஸ்பாஹி



அண்மையில் ஜெர்மனியிலும் பிரான்சிலும் ஹிஜாப் எனும் இஸ்லாமிய உடை அணிதலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் முஸ்லிம் பெண்களின் உடைநெறி சம்பந்தப்பட்ட கருத்துக்களை மீண்டும் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. இது சம்பந்தமாக பலவித விவாதங்களும் நடைபெருகின்றன. ஹிஜாப் என்பது இஸ்லாமிய மார்க்க கடமையா? அல்லது சுயவிருப்பின் பிரகாரம் அணியும் உடையா? இஸ்லாமிய உடைநெறி ஒரு குறிப்பான வடிவமைப்பை கருதுகிறதா? அல்லது எது கண்ணியமான உடையென கருதப்படுகிறதோ அதனை தன் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து அணியலாமா? எனப் பல கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.

ஹிஜாப் அல்லது ஹிஜாப் மற்றும் ஹிமார்(முக்காடு) என்பது இஸ்லாமிய கடமை அல்ல, மாறாக சுயவிருப்பின் பேரில் அணியும் உடையென முஸ்லிம்களில் சிலர் வாதிக்கின்றனர். பெண் கண்ணியத்தை பேணும் வகையில் இருக்குமேயானால் எவ்வித உடையையும் அணியலாம் என்பதே இவர்களின் வாதமாக இருக்கிறது. உதாரணமாக இஸ்லாம் குறித்த பல புத்தகங்களின் ஆசிரியரும், இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் (அல் இஹ்வானுல் முஸ்லிமூன்) ஸ்தாபகரின் சகோதரருமான எகிப்திய நாட்டைச் சார்ந்த கம்மல் பன்னா ''தலையை மறைத்தல் ஒரு கடமை அல்ல. இது குர்ஆன் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதன் விளைவாகும். ஹிஜாப் அணிவதோ அல்லது சிறு பாவாடை அணிவதோ தன் சுயவிருப்பத்திற்கேற்ப எடுக்கும் சுயமான முடிவே"" எனக் கூறுகிறார். மேலும் தனது விருப்பிற்கேற்ப உடை அணியும் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதாலேயே அத்தகைய ஹிஜாப்-எதிர்ப்புச் சட்டங்களை நான் ஆதரிப்பதில்லை என்றும் கூறுகிறார்.

.அண்மைக் காலங்களில் மேற்கத்திய சிந்தனைகளின் பாதிப்பிற்கு உள்ளானோரால் இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இத்தகைய வழிதவறிய கருத்துக்கள் கடந்த கால இஸ்லாமிய வரலாற்றில் இருந்திருக்கவில்லை. இஸ்லாமிய கட்டளைகளும், விலக்கல்களும், குர்ஆனிலும் சுன்னாவிலும் பதியப்பட்டுள்ளவற்றின் மூலமாகவே நாம் பெற முடியும். இவற்றை ஆராய்வதன் மூலம் அல்லாஹ்(சுபு)வின் கட்டளை யாதென அறியலாம். மகரம் அல்லாத வேறு ஆடவர் முன்னிலையில் 'ஹிஜாப்" அல்லது 'ஹிமார்" உதவியுடன் தலைமுடியை மறைப்பது கட்டாயம் என்பது இஸ்லாத்தில் விளக்கப்பட்டுள்ளது.அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

அவர்கள் தங்கள் முந்தானையால்(குமுர்) தங்கள் கழுத்தையும் மார்பையும் மறைத்துக்கொள்ளட்டும்.(24-31)

குமுர் என்பது முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தைய குறைஷியப் பெண்களால் அணியப்பட்டது. இது தலையை மறைத்து, கழுத்தையும் மார்புப் பகுதியையும் வெளிக்காட்டியவாறு உடலின் பின்புறமாக கீழ்நோக்கி விழுந்து காணப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் அருளப்பட்ட இவ்வசனம் வெளிக்காட்டப்படும் கழுத்தையும் மார்பையும் தலையுடன் சேர்த்து மறைக்குமாறு கட்டளையிடுகிறது.

ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.

அஸ்மா-பின்-அபுபக்கர் அவர்கள் மெல்லிய ஆடை அணிந்தவராக நபிகளார்(ஸல்) அவர்கள் முன் வந்தபோது, நபிகளார்(ஸல்) முகத்தை அப்பாற் திருப்பியவாறு 'ஏ அஸ்மாவே, ஒரு பெண் பருவ வயதை அடைந்தால் இதையும் இதையும் தவிர ஏனையவற்றை காண்பித்தல் ஆகுமானதல்ல" எனக்கூறி முகத்தையும் மணிக்கட்டையும் காண்பித்தார்கள்.

அதிர்ஷ்ட வசமாக பல முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் ஒரு கடமை என அறிந்திருந்தாலும்கூட அடிக்கடி குழப்பத்திற்கும் தவறான கருத்திற்கும் உள்ளாக்கப்பட்டு இஸ்லாமிய உடைநெறி யாதென விளங்காத நிலையில் காணப்படுகின்றனர். ‘துப்பட்டா’ என அழைக்கப்படும் மிக மெல்லிய துணி மூலம் தலைமுடியையும் கழுத்தையும் மறைப்பதே போதும் என எண்ணுகின்றனர். அத்துணியின் ஊடாக அப்பகுதிகள் தெupந்தாலும் தவறல்ல எனக் கருதுகின்றனர். வேறு சிலர் தலைமுடியின் ஒருபகுதி தெரியுமாறு தலைமுக்காடை தளர்த்தி அணிவது போதுமென எண்ணுகின்றனர். சிலரோ தலைமுடி, காது, கழுத்துப்பகுதி தெரியுமாறு 'பந்தனா" அணிகிறார்கள். ஒருசாரரோ தலைப்பகுதியை சரியாக மறைத்துப் பின்னர் உடலின் வடிவம் தெரியுமாறு டி-சர்ட் மற்றும் ஜீன்ஸ் அல்லது கணுக்காலுக்கு மேலான பாவாடையை கை கால் தெரியுமாறு அணிகின்றனர்.

பொது இடமானாலும் சரி தனிமையானாலும் சரி உடை சம்மந்தமான இஸ்லாமிய கட்டளைகள் சுயவிருப்பு, சுயகருத்து அல்லது கண்ணியம்பேணல் என்ற கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல. மாறாக அது அல்லாஹ்(சுபு)வின் கட்டளையாகும். அல்லாஹ்(சுபு) தொழுகையை கடைமையாக்கிய பின்னர் தொழும் முறையை அவரவர் விருப்பிற்கேற்ப விட்டுவைக்கவில்லை. தொழும் முறையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதைப்போன்றே உடலை மறைக்கும் உடை விசயத்திலும் அதைப்பற்றிய விவரங்கள் விளக்கப்பட்டுள்ளன. தொழுகையைப் போன்றே உடை விவகாரத்திலும் இறைவனின் கட்டளைப்படி நடப்பது அவசியமாகும். சுயசிந்தனையோ அல்லது சுயவிருப்போ எவ்வாறு தொழுகையில் ஆதிக்கம் செலுத்தவில்லையோ அதைப்போல உடை விவகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவது கூடாது.

அல்லாஹ்(சுபு) கூறுகிறான்.

“ உம் இறைவன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை தீர்ப்பளிப்பவராக ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்புச்செய்தது பற்றி எவ்வித அதிருப்தியையும் தங்கள் மனதில் கொள்ளாது முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வரையில் அவர்கள் உண்மை விசுவாசிகள் ஆகமாட்டார்கள்.”(4:65)

அல்குர்ஆன் வசனங்கள் மூலமும் நபி(ஸல்) அவர்களின் வாக்குகளாலும் தெளிவாக கூறப்பட்டிருப்பதற்கேற்ப ஒவ்வொரு பருவமடைந்த பெண்ணும் கை, முகம் தவிர்த்து ஏனைய பகுதிகளை மகரமற்ற ஆண்கள் முன்னிலையில் மறைத்தல் கடமையாகும். ஆடையானது தோல் தெரியும் அளவிற்கு மெல்லியதாகவோ உடற்கட்டமைப்பை வெளிக்காட்டும் வகையிலோ இருத்தலாகாது. மணிக்கட்டு வரையிலான கை, முகம்; தவிர்த்து, கழுத்து, முடி உட்பட பெண்ணின் முழு உடம்பும் 'அவ்ரா" ஆகும் (மறைக்கப்படவேண்டிய பகுதிகளாகும்).

சூரா அந்நு}ரில் அல்லாஹ்(சுபு) விவரிக்கின்றான்

“ முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம். மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.” (24:31)

இப்ன் அப்பாஸ் அவர்கள் 'வெளியில் தெரியக்கூடியவை" என்பதற்கு மணிக்கட்டு வரையிலான கைப் பகுதி மற்றும் முகம் என விளக்கமளித்துள்ளார்கள்.

மேலும் பெண்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது கிமாரையும் (தலை, கழுத்து, மார்புப் பகுதிகளை மறைக்கும் துணி) ஜில்பாபையும் (கழுத்திற்கு கீழ் உடலின் மற்ற அனைத்து பகுதிகளையும் மறைத்து மேலிருந்து நிலத்தை நோக்கி தொங்கும் ஒரு தனி ஆடை) அணியுமாறு கட்டளையிடப்பட்டுள்ளார்கள். அதாவது கிமாருடன் சட்டையும் பாவாடையுமோ அல்லது முழுக்கால் சட்டையுமோ அணிவது ஆகுமானதல்ல.

அல்லமா இப்ன்-அல்-ஹசாம் எழுதுகிறார்கள் ''நபி அவர்கள் காலத்திலிருந்த அரபிமொழியில் ஜில்பாப் என்பது முழு உடம்பையும் மறைக்குமாறு அமைந்திருக்கும் தனி உடையாகும். முழு உடம்பையும் மறைக்க முடியாத உடையை ஜில்பாப் எனக் கூறமுடியாது."" (அல்-முஹல்லா தொகுதி 3)
பெண்கள் இவ்விரு உடையையும் அல்லாமல் வேறு உடையணிந்து வெளியில் நடமாடுவார்களாயின் அவர்கள் அல்லாஹ்(சுபு)வின் கட்டளைக்கு மாறிழைத்து பாவத்திற்கு ஆளாவார்கள்.

ஜில்பாபுக்கான ஆதாரங்களை அல்லாஹ்(சுபு) சூரா "அல்-அஹ்சாப்" யில் கூறுகிறான்.

“நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் வெளி ஆடைகளால்(ஜிலாபீப்) முழு உடலையும் பாதுகாக்குமாறு கூறுவீராக.”(33:59)

மேலும் உம்மு அதியா(ரலி) கூறுகிறார்கள்
“அல்லாஹ்வின் து}தர் ஈத் பெருநாள் தினத்தன்று, இளம் பெண்கள், மாதவிடாய் பெண்கள், மற்றும் மறைப்பு அணிந்த பெண்கள் ஆகியோரை அழைத்து வர ஆணையிட்டார்கள். மாதவிடாய் பெண்கள் தொழும் இடத்திற்கு அப்பாலிருந்து பிரசங்கத்தை கேட்குமாறு அமரவைக்கப்பட்டார்கள். 'அல்லாஹ்வின் தூதரே ஜில்பாப் இல்லாத பெண்களின் நிலை என்ன" என வினவியதற்கு அவர்கள் கூறுகிறார்கள் 'ஏனைய சகோதரியிடம் ஒரு ஜில்பாபை இரவல் வாங்கி அணியட்டும்." என பதிலளித்தார்கள்.

ஆகவே நபி அவர்கள் ஜில்பாப் இல்லாவிட்டால் இரவல் வாங்கியேனும் அணியுமாறு கூறியுள்ளார்கள் என்பது அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறதல்லவா.

ஒரு முஸ்லிம் பெண் மேற்கத்திய பெண்களை ஒப்பாக்கி தாம் எதை அணியவேண்டும் என சுயமாக முடிவெடுத்தல் கூடாது. பனி-தமீம் இனத்தைச் சார்ந்த சில பெண்கள் மெல்லிய துணிகளை அணிந்து ஆயிஷா அவர்களை சந்தித்தபோது 'இது முஃமீனான பெண்ணிற்கு தகுந்த உடையல்ல. நீங்கள் முஃமீன்கள் இல்லாவிடில் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ளுங்கள்." என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்.

இன்றைய முஸ்லிம் பெண்கள் நபி (ஸல்) அவர்களின் மதிப்பிற்கும் அல்லாஹ்(சுபு)வின் பொருத்தத்திற்கும் ஆளான அன்றைய முஸ்லிம் பெண்களின் முன்மாதிரியை பின்பற்றி நடத்தல் அவசியம். அன்றைய நாளில் உடை சம்பந்தமான குர்ஆன் வசனம் இறக்கப்பட்ட போது அப்பெண்கள் ஒரு நிமிடமேனும் தாமதிக்காது கிடைத்தவற்றைக் கொண்டு அவ்ராவை மறைத்துக் கொண்டார்கள்.

சய்பாவின் மகளான சஃபீயா கூறியதாவது,
“ஆயிஷா(ரலி) அவர்கள் அன்சார் பெண்களை புகழ்ந்து நல்வார்த்தை கூறினார்கள். பின்னர் 'சூரா அந்நு}ர் வசனங்கள் இறங்கிய பொழுது அவர்கள் வீட்டிலுள்ள திரைகளை கிழித்து அதனை தலைமறைப்பாக்கிக் கொண்டார்கள்" எனக் கூறினார்கள். (சுனன் அபுதாவூத்)

ஆகவே ஹிஜாப் என்பது கண்ணியம் பேணுதலுக்கான உடை அல்ல. பாரம்பரிய நடைமுறை பழக்கவழக்கம் என்பவற்றிற்காக அணியும் ஆடையும் அல்ல. இது இஸ்லாத்தின் ஒரு கடமையாகும். அதற்குறிய சட்ட விதிப்படி உடை அணிதல் ஒவ்வொரு முஸ்லிம் பெண்ணின் மீதும் அல்லாஹ் (சுபு) விதித்துள்ள கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்(சுபு) எமது முஸ்லிம் பெண்களையும் நேர்வழியில் செலுத்துவானாக!