ஈரான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈரான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 செப்டம்பர், 2011

ஈரானில் போதை மருந்து கடத்திய 184 பேருக்கு மரண தண்டனை!

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் போதை மருந்து கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்களுடன் சேர்த்து போதை மருந்து கடத்தியமைக்காக இந்த ஆண்டில் மட்டும் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மரணதண்டனைக்கு உள்ளானோரின் பெயர் விவரம் ஹமீத் கே, காசிம் பி, உசைன் ஜே, சியாமக் எம் என்று அரசு தெரிவிக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில்தான் அதிகம் பேருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு இது 179 ஆக இருந்தது. ஆனால் இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் உண்மையல்ல இவற்றைவிட அதிகம் பேர் மரண தண்டனைக்கு உள்ளாகின்றனர் என்று மனித உரிமைகள் அமைப்பு கூறுகிறது.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட மரண தண்டனை அவசியம், எங்கள் நீதிமன்றங்களில் விரைவாகவும் விரிவாகவும் விசாரணை நடத்திய பிறகே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்று ஈரானிய அரசு விளக்கம் அளிக்கிறது.

கொலை, பாலியல் பலாத்காரம், ஆயுதம் தாங்கியவர்கள் நடத்தும் கொள்ளை, போதை மருந்து கடத்தல், கள்ளத் தொடர்பு ஆகிய குற்றங்கள் புரிந்தால் நீதிமன்றத்தால் நன்கு விசாரிக்கப்பட்டு பிறகே மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்கிறது ஈரான்.

புதன், 5 ஜனவரி, 2011

ஈரானின் அணுசக்தி நிலையங்களை பார்வையிட வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு அழைப்பு

தெஹ்ரான்,ஜன.5:ஈரானின் அணுசக்தி நிலையங்களை பார்வையிட வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.

தங்களின் அணுசக்தித் திட்டங்களைக் குறித்து உலக வல்லரசுகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னோடியாக இந்நடவடிக்கையை ஈரான் மேற்கொண்டுள்ளது.

ரஷ்யா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் சில, அணிசேரா நாடுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்குத்தான் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதா? என்பதுக் குறித்து தெரியவில்லை. ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ராமின் மெஹ்மான் பரஸ்த் இதனை பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்தார்.

இம்மாதம் துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் ஈரான் பிரதிநிதிகளுக்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுடன் ஜெர்மனியின் பிரதிநிதிகளுடனும் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையின் முன்னோடியாக இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஜெனீவாவிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறவுள்ளது. ஏற்கனவே ஈரானின் அணுசக்தி குறித்து சர்வதேச அணுசக்தி நிலையம் பரிசோதனை நடத்தியிருந்தது. ஆனால், இம்முறை தூதரக ரீதியிலான வருகைதான் எனவும், பரிசோதனை அல்ல எனவும் பி.பி.சியின் ஈரான் செய்தியாளர் ஜெயிம்ஸ் ரினோல்ட் தெரிவிக்கிறார்.

அணுசக்தித் திட்டங்களை நிறுத்தவேண்டுமெனக் கோரி ஈரானின் மீது ஐ.நா நான்கு முறை தடை ஏற்படுத்தியிருந்தது. புஷ்ஹர், நதான்ஸ் ஆகிய இடங்கலிலுள்ள அணுசக்தி நிலையங்களை வெளிநாட்டு பிரதிநிதிக்குழு பார்வையிடும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

வியாழன், 30 டிசம்பர், 2010

ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது

டெஹ்ரான்,டிச.29:இஸ்ரேல் உளவு நிறுவனமான மொசாதிற்காக பணியாற்றிய இளைஞர் ஒருவருக்கு ஈரான் மரணத் தண்டனையை நிறைவேற்றியது.

டெஹ்ரானில் எவின் சிறையில்வைத்து அலி அக்பர் ஸியாதத் என்ற மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல வருடங்களாக மொசாதிற்காக பணிபுரிந்த ஸியாதத் முக்கிய விபரங்களை மொசாதிற்கு அளித்துள்ளார். ஈரானை விட்டு வெளியேற முயன்றபொழுது கடந்த 2008 ஆம் ஆண்டு கைதுச் செய்யப்பட்டார் ஸியாதத்.

ஈரானின் ராணுவ ரகசியங்களைக் குறித்த செய்திகளை இவர் மொசாதிற்கு அளித்ததை விசாரணையின் போது ஒப்புக்கொண்டார் என இர்னா செய்தி நிறுவனம் கூறுகிறது.

இதற்கு கூலியாக மொசாதிடமிருந்து ஸியாதத்திற்கு 60 ஆயிரம் டாலர் பணம் கிடைத்தது என இவர் புலனாய்வு அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

ராணுவ மையங்கள், போர் விமானங்கள், பயிற்சி விமானங்கள், ஏவுகணைகள் ஆகியன தொடர்பான விபரங்களை இவர் இஸ்ரேலுக்கு அளித்துள்ளார். ராணுவ ரகசியங்கள் இவருக்கு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து இர்னா தெரிவிக்கவில்லை.

துருக்கி, தாய்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வைத்து இவர் மொசாத் ஏஜண்டுகளுடன் சந்திப்பை நடத்தியுள்ளார். தேசத்தை காட்டிக்கொடுப்பது ஈரானின் சட்டப்படி மரணத் தண்டனை விதிக்கும் குற்றமாகும்.

மொசாதிற்காக பணியாற்றிய டெலிகாம் பொறியாளர் அலி அஷ்தரிக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு ஈரான் மரணத்தண்டனை விதித்திருந்தது.

ஈரான் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்திய பீப்பிள்ஸ் முஜாஹிதீன் ஆர்கனைசேசன் ஆஃப் ஈரான்(பி.எம்.ஒ.ஐ) உறுப்பினர் அலி ஸரேமிக்கும் நேற்று மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 6 நவம்பர், 2010

ஈரான்:அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய நினைவுதினம் கொண்டாடப்பட்டது

தெஹ்ரான்,நவ.5:ஈரானின் மாணவர்கள் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய 31-வது ஆண்டுவிழா ஈரானில் கொண்டாடப்பட்டது.

இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தெஹ்ரானில் முன்பு அமெரிக்க தூதரகம் அமைந்திருந்த கட்டிடத்தின் முன்னால் ஆயிரக்கணக்கான ஈரானியர்கள் ஒன்று கூடினர். பேனர்கள் மற்றும் கொடிகளுடன் வந்த மக்கள் திரள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கெதிராக கோஷங்களை எழுப்பினர்.

அமெரிக்க கைப்பாவையான ஷாவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து இஸ்லாமிய புரட்சி வெற்றிப்பெற்று ஒருவருடம் முடிவடையும் முன்பு 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஈரான் பல்கலைக்கழக மாணவர்கள் தெஹ்ரானில் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றினர்.

தேசத்துரோகிகள் சதித்திட்டம் தீட்டுவதற்காக பயன்படுத்தும் மையமாக அமெரிக்க தூதரகம் மாறிவிட்டது எனக் குற்றஞ்சாட்டித்தான் அதனை ஈரான் மாணவர்கள் கைப்பற்றினர்.

இஸ்லாமிய அரசை கவிழ்ப்பதற்கு அமெரிக்க தூதரகம் முயற்சி மேற்கொண்டதற்கான ஆதாரங்களை பின்னர் மாணவர்கள் வெளியிட்டனர். சர்வதேச சர்வாதிகாரத்திற்கெதிரான போராட்டத்தின் தினமாகத்தான் ஈரான் நவம்பர் 4 ஆம் தேதியை அனுஷ்டிக்கிறது.

ஈரான் இளைய தலைமுறையின் வீரத்தின் அடையாளம்தான் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றிய நிகழ்வு என ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காம்னஈ தெரிவித்துள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

வியாழன், 21 அக்டோபர், 2010

எதிரியின் நோக்கம் ஈரானும், இஸ்லாமுமாகும் - காம்னஈ

டெஹ்ரான்,அக்.21:ஈரானுடன் இஸ்லாமும் எதிரியின் லட்சியம் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் காம்னஈ தெரிவித்துள்ளார். கும் நகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்களிடம் உரை நிகழ்த்துகையில் காம்னஈ இதனை தெரிவித்தார்.

ஈரானின் புரட்சியை சீர்குலைக்க நாடுபவர்கள் குறிவைப்பது இரண்டாகும். ஒன்று ஈரான் மக்களின் மதமும் இரண்டாவதாக புரட்சியுடனான ஈரான் மக்களின் சமர்ப்பணமுமாகும்.

மத அடிப்படையில் அல்லாத புரட்சியால் எதிரிகளின் சதித் திட்டங்களை எதிர்த்து நிற்கமுடியாது என்பதை அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மதத்தின் அடிப்படையில் வார்த்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் நிர்பந்தங்களுக்கு அதிகாரத்தின் அகங்காரத்திற்கு அடிபணியாது என அவர்கள் புரிந்துக் கொண்டார்கள்.

ஈரான் மக்கள் புரட்சியை எப்பொழுதும் ஆதரித்தே வந்துள்ளனர். எல்லாத் துறையிலும் ஈரான் மக்களின் பரிபூரண ஆதரவும், அரசும் மக்களுக்குமிடையே ஐக்கியமும் தொடர்ந்து நீடிக்காவிட்டால் எதிரிகளின் சதித்திட்டங்களை எதிர்த்து முறியடிக்க முடியாது என்றும் காம்னஈ ஈரான் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

செவ்வாய், 19 அக்டோபர், 2010

அஹ்மது நிஜாத் லெபனானை விட்டு உயிரோடு போக கூடாது : இஸ்ரேல் எம்.பி.

ஜெருசலேம் : ஈரானை கடுமையாக எதிர்க்கும் இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்யேஹ் எல்தாட் இஸ்ரேல் ரேடியோவுக்கு அளித்த நேர்காணலில் லெபனானில் இருக்கும் ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத்தை லெபனானை விட்டு வெளியேறும் முன் எல்லையில் உள்ள வீரர்கள் எப்பாடுபட்டேனும் தங்கள் துப்பாக்கிகளை பயன்படுத்தி கொலை செய்ய வேண்டும் என்று பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லெபனானுக்கு அரச முறை பயணம் மேற்கொண்டுள்ள அஹ்மது நிஜாத் இஸ்ரேலின் எல்லையருகே நடந்த ஹிஸ்புல்லா பேரணியில் கலந்து கொண்டு இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது என்று பேசியது இந்நேரம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இச்சூழலில் இஸ்ரேல் எம்.பி. அஹ்மது நிஜாத்தை கொலை செய்ய வேண்டும் என்றும் அது ஹிட்லரை கொலை செய்வதற்கு ஒப்பானதாகும் என்றும் கூறியுள்ளார். தனக்கு பிடிக்காத உலக தலைவர்களை இஸ்ரேல் கொலை செய்வது புதிதல்ல என்பதும் தன் நலனுக்காக எந்தளவுக்கும் இஸ்ரேல் இறங்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும் என்றாலும் அஹ்மது நிஜாத் கொலை செய்யப்பட்டால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்பதால் அம்முடிவுக்கு இஸ்ரேல் செல்லாது என்றே அரசியல் பார்வையாளர்கள் அவதானிக்கின்றனர். சமீபத்தில் கூட பல நாட்டு போலி பாஸ்போர்ட்டுகளை வைத்து துபாயில் ஹமாஸ் தலைவரை கொலை செய்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது : அஹ்மது நிஜாத் ஆவேசம்

லெபனான் : இஸ்ரேலின் இறுதி காலம் நெருங்கி விட்டது என்றும் இஸ்ரேலியர்கள் தாங்கள் பூர்விக நாட்டிற்கே திரும்ப போகும் நேரம் வந்து விட்டது என்றும் இஸ்ரேலிலிருந்து 2 மைல் தொலைவில் உள்ள பின்ட் ஜிபில் எனுமிடத்தில் நடைபெற்ற ஹிஸ்புல்லாவின் பேரணியில் இஸ்ரேலின் கடும் எதிரியான ஈரான் அதிபர் அஹ்மது நிஜாத் கூறினார்.

2006-ல் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் நடைபெற்ற போரில் இஸ்ரேலின் குண்டு வீச்சில் ஏராளமான மக்கள் பின்ட் ஜிபிலில் கொல்லப்பட்டார்கள். அவர்களின் மறைவை நினைவு கூறும் வகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அஹ்மது நிஜாத் மக்களின் பலத்த கரகோஷங்களுக்கிடையே "பின்ட் ஜிபில் உயிரோடு உள்ளது. மலை போன்ற உறுதியுள்ள உங்களின் வீரத்தை பாராட்டுகிறேன். என்றும் உங்களுக்கு ஈரான் துணை நிற்கும்" என்று கூறினார்.

இஸ்ரேலுக்கு மிக அருகில் நடந்த ஹிஸ்புல்லா பேரணியில் அஹ்மது நிஜாத் கலந்து கொண்டது இஸ்ரேலுக்கு விடுக்கும் எச்சரிக்கையாகவே அரசியல் வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது. அஹ்மது நிஜாத்தின் அதிகாரபூர்வ லெபனான் வருகையை அமெரிக்கா, இஸ்ரேல் இரண்டும் கண்டித்ததுடன் இப்பயணத்தின் மூலம் லெபனானும் தீமைகளின் அச்சு நாடுகளில் இணைந்து விட்டதாக கூறினர்.

பின்னர் லெபனான் பல்கலைகழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அஹ்மது நிஜாத் ஈரானின் அணு ஆயுத திட்டத்தை ஆதரித்து பேசினார். மத்திய கிழக்கு நாடுகளில் எவ்வித அறிவியல் வளர்ச்சியும் பெற்று விட கூடாது என்பதில் அமெரிக்கா கவனமாக இருப்பதாக கூறிய அவர் தாம் விஞ்ஞானத்தை பரப்ப நினைப்பதாகவும் அமெரிக்காவோ அதை தடுத்து இருட்டில் ஆழ்த்த நினைப்பதாகவும் கூறினார்.

வியாழன், 14 அக்டோபர், 2010

ஈரான் அதிபர் நஜாதிற்கு லெபனானில் உற்சாக வரவேற்பு


பெய்ரூத்,அக்.14:ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாத் லெபனானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டில் நஜாதிற்கு உற்சாக வரவேற்பை அளித்தனர் லெபனான் மக்கள்.

முதன்முதலாக லெபனானுக்கு செல்லும் நஜாதை வரவேற்க விமான நிலையம் முதல் அதிபரின் மாளிகை வரை வழியோரங்களில் நூற்றுக்கணக்கான லெபனான் மக்கள் கூடியிருந்தனர். அதிபர் மாளிகைவரை திறந்த ஜீப்பில் சென்ற நஜாதை மக்கள் பூச்செண்டுக் கொடுத்து வரவேற்றனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது லெபனான் அதிபர் மைக்கேல் சுலைமான், பிரதமர் ஸஅத் ஹரீரி ஆகியோரை நஜாத் சந்தித்து பேசுவார். அதேவேளையில்,ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ்வுடனான சந்திப்பைத்தான் உலகம் உற்று நோக்குகிறது.

இஸ்ரேலுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் ஹிஸ்புல்லாஹ் மேற்கத்திய நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வருகிறது.

2006 ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் நடந்த போரில் ஹிஸ்புல்லாஹ்வுக்குத்தான் வெற்றிக்கிடைத்தது. இஸ்ரேலின் தாக்குதலால் தகர்க்கப்பட்ட பின்த் ஜுபைல், கன ஆகிய இடங்களுக்கும் நஜாத் செல்கிறார். ஹிஸ்புல்லாஹ் வலுவான நகரங்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், நஜாதின் வருகையில் மேற்கத்திய ஆதரவாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்புள்ளதாக பத்திரிகைகள் கூறுகின்றன.

லெபனான் அதிபருடனான உரையாடலின் போது அமெரிக்க அரசு நஜாதின் வருகைக் குறித்து கவலைத் தெரிவித்திருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,www.tehrantimes.com

செவ்வாய், 5 அக்டோபர், 2010

அமெரிக்காவை உதைத்து வெளியேற்றுவோம்….

Mahmoud Ahmadinejad

மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து அமெரிக்காவை உதைத்து வெளியேற்றுவோம் என்று ஆத்திரம் பொங்கப் பேசினார் ஈரான் அதிபர் அகமது நிஜாத். ஈரானின் எதிரிகளை நினைத்தாலே
ஆத்திரமாக வருகிறது என்றே அவர் பேசினார். அவர் குறிப்பிட்டது அமெரிக்காவைத்தான் என்பது அனைவருக்கும் நன்கு புரிந்தது.

“அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதால் அந்த நாட்டின் மீது அடுத்து என்ன நடவடிக்கை என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் பல்வேறு நடவடிக்கைகள் எங்கள் முன்னால் தேர்வுக்கு இருக்கின்றன” என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சமீபத்தில் பேசியிருந்தார். அதற்குப் பதிலடி தரும் வகையில் ஈரான் அதிபர் நிஜாத், தலைநகர் டெக்ரானில் வீட்டுவசதி திட்டத்தை நேற்று தொடங்கி வைக்கும்போது வெகு காட்டமாகப் பேசினார். அவர் மேலும் பேசியதாவது:-

அவர்களுக்கு (அமெரிக்கர்களுக்கு) என்ன துணிச்சல் இருந்தால் நம்மை (ஈரானை) இப்படி மிரட்டியிருப்பார்கள். நம்மை என்ன செய்யலாம் என்று தீர்மானிக்க அவர்களுக்கு பல முடிவுகள் மேசை மீது குவிந்து கிடக்கிறதாமே? உங்களுக்கு (அமெரிக்காவுக்கு) கடைசி காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. வெட்டியானுக்கு சொல்லி வையுங்கள். உலகம் முழுவதையும் வம்புச் சண்டைக்கு இழுத்து அப்பாவிகளை பலிவாங்கும் நீங்களே பலியாவதற்கு நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேற்கு ஆசியப் பகுதியை விட்டு வெளியேறுங்கள். இல்லாவிட்டால் இங்குள்ள எல்லா நாடுகளும் சேர்ந்து உதைத்து வெளியேற்ற வேண்டியதிருக்கும்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் நியூயார்க், வாசிங்டன் நகரங்களின் மீது அல் கொய்தா பயங்கரவாதிகள்தான் தாக்கினார்கள் என்று உலகையே நம்ப வைத்தீர்களே? அதிலே எங்களுக்கு இன்னமும் சந்தேகம் நீடிக்கிறது.

அது தொடர்பான ஆயிரம் கேள்விகளுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. இந்தக் கேள்விகளைக் கேட்பதிலிருந்து நாங்கள் ஓயமாட்டோம், திருப்திகரமான பதில்கள் கிடைக்கும்வரை ஓயமாட்டோம். 3,000 பேரை அந்தச் சம்பவங்களில் பலி கொடுத்துவிட்டதாக கூறுகிறீர்களே? உண்மையான கொலையாளிகளைக் கண்டுபிடித்து தூக்கில் போடுங்கள். அதற்கு நாங்கள் எல்லாவித உதவிகளையும் செய்யத்தயார். ஆனால் அதற்கு தகுந்த ஆதாரங்களை முதலில் தாருங்கள். ஜார்ஜ் புஷ்ஷாக இருந்தாலும் ஒபாமாவாக இருந்தாலும் இந்த கோரிக்கையை ஏற்கவே மாட்டார்கள் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.

அதிபர்கள் சொல்வதை அந்த நாட்டு மக்களே நம்பவில்லை, மற்றவர்கள் நம்புவது அப்புறம் இருக்கட்டும். இவ்வாறு அகமதி நிஜாத் பேசினார்.

திங்கள், 27 செப்டம்பர், 2010

ஈரான் அணு நிலையத்தின் செயல்பாட்டை தடுக்க கனிணி வைரஸ் தாக்குதல்

டெஹ்ரான்,செப்.27:ஈரான் அணு நிலையத்தின் செயல்பாட்டை தடுக்க 'ஸ்டக்ஸ்நெட் வார்ம்' என்ற சக்திவாய்ந்த வைரஸ் ஈரானின் முதல் அணு நிலையமான புஷேஹ்ர் நிலையத்தின் கணினிகளை தாக்கியுள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அணு நிலையம் போன்ற தொழில் நிறுவனங்களை வைரஸ் தாக்குவது இதுவே முதல் முறையாகும்.

ஸ்டக்ஸ்நெட் வைரஸ் கணினிகளை மட்டுமே பாதித்துள்ளதாகவும் இன்னும் ஓரிரு வாரங்களில் செயல்பாட்டிற்கு(Go Live) வரவுள்ள இந்த அணு நிலையத்தின் இயங்கு தளத்திற்கு(Operating System) இந்த வைரசால் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அணு நிலைய அதிகாரி மஹ்மூத் ஜெப்ரி தெரிவித்தார்.

தங்களது தொழில்நுட்ப குழு வைரஸ் பாதித்த கணினிகளை கண்டறிந்தது அதனை நீக்கும் பணியில் முழு வீச்சாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த மாதம் முதல் செயல்படவிருக்கும் அணு நிலையத்தை நிறுவும் தங்களது திட்டத்தில் இதனால் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஈரானின் மீது தொடுக்கப்பட்ட தொழிநுட்ப போர் ('Electronic war') என்றே இந்த வைரஸ் தாக்குதலை ஈரானின் தொழிற்துறை அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரி முஹம்மத் லியி தெரிவித்துள்ளார், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் கடந்த வாரம் அத்துறை தலைவர் முஹம்மத் லியி தலைமையில் கூடி இந்த வைரஸ் தாக்குதலை சமாளிப்பது குறித்து ஆலோசித்தனர், இதுவரை ஈரானில் 30,000 கணினிகளை தாக்கியுள்ளதாக முஹம்மத் லியி தெரிவித்தார்.

ஸ்டக்ஸ்நெட் வார்ம் வைரஸ் ஜெர்மனியின் சீமன்ஸ்(Siemens) நிறுவன தயாரிப்புகளை இலக்காக வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது இது மின் நிலையம், தண்ணீர் தேக்கிகள்,எரிவாயு மட்டும் எண்ணெய் குழாய்களின் வால்வுகளை கட்டுப்படுத்தும் கருவிகள் போன்ற சீமன்ஸ் நிறுவனத்தின் பெரும் தயாரிப்புகளில் உள்ள கட்டுமான மற்றும் வடிவமைப்பு குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரும் திறம் வாய்ந்தது என்றும் மேற்கத்திய வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் இந்த ஸ்டக்ஸ்நெட் வார்ம் வைரசை வடிவமைத்திருக்கக் கூடும் என்றும் மேற்கத்திய வல்லுனர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

புதன், 15 செப்டம்பர், 2010

அமெரிக்க பெண் உளவாளியை விடுவித்தது ஈரான்

தெஹ்ரான்,செப்.15:அந்நியநாடுகளை ஆக்கிரமித்து அங்குள்ள வளங்களை சுரண்டி பல லட்சம் மக்களைக் கொன்றுவித்ததோடு, நூற்றுக்கணக்கான அப்பாவிகளை குவாண்டனாமோ, அபுகரீப் போன்ற பாதாள சிறைகளில் அடைத்து சித்திரவதைப்படுத்திவரும் அமெரிக்காவிற்கு மனிதநேயம் என்றால் என்ன என்பதை கற்பிக்கும் விதமாக உலக நடைமுறையை மாற்றியமைக்கும் விதமாக ஈரானுக்குள் அத்துமீறி நுழைந்த உளவாளிகளில் ஒருவரான பெண் ஒருவரை விடுவித்து உலகிற்கு தன்னை முன்மாதிரியாக காண்பித்துள்ளது ஈரான்.

கடந்த ஆண்டு ஜுலை மாதம் ஈரானின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 3 அமெரிக்கர்கள் கைதுச் செய்யப்பட்டனர். அவர்களின் இருவர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார். இவர்களிடம் விசாரணையை மேற்கொண்டுவந்தது ஈரான். சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் குடும்பத்தினரை ஈரானுக்கு விசா அளித்து வரவழைத்து சந்திக்கவைத்தது ஈரான் அரசு.

இந்நிலையில் இரக்க உணர்வின் அடிப்படையில் மருத்துவக் காரணங்களுக்காக ஷாரா ஷொர்டு என்ற பெண்மணியை விடுவித்துள்ளது ஈரான். 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் ஷாரா. விடுவிக்கப்பட்ட ஷாரா, தனது விடுதலைக்காக முயற்சித்தவர்களுக்கும், குறிப்பாக ஈரான் அதிபருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். ஷாராவின் விடுதலையை வரவேற்றுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

ஈரான் அதிபரின் ஆலோசகர் மர்யம் ஷாராவிடம் கூறுகையில், "நாங்கள் உங்களின் நாட்டோடு எவ்வித உறவும் இல்லாமலிருந்தும் உன்னை உனது குடும்பத்தாரோடு தெஹ்ரானில் சந்திக்கவைத்தோம். கருணை உணர்வுக்கு இது சிறந்த உதாரணமாகும். இதனை நாங்கள் திருக்குர்ஆனிலிருந்து கற்றுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா இந்த நடைமுறையை எப்பொழுது கையாளப் போகிறது?இன்னொரு நாட்டை ஆக்கிரமிக்காமலிருந்தாலே போதும் என்பது நடுநிலையாளர்களின் கருத்து.

press tv செய்தியிலிருந்து

புதன், 8 செப்டம்பர், 2010

ஈரானை தாக்கினால் இஸ்ரேலுக்கு அழிவுதான்: அஹ்மத் நஜாத்ஈரானை தாக்கினால் இஸ்ரேலுக்கு அழிவுதான்: அஹ்மத் நஜாத்


தோஹா,செப்.8:இஸ்ரேல் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அது இஸ்ரேலின் அழிவுக்கு வழிவகுக்கும் என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கத்தர் நாட்டிற்கு சுற்றுப்பயணமாக வருகை புரிந்த அவர். ஈரானுக்கெதிராக இஸ்ரேல் செயல்பட்டால் அது சியோனிஷத்திற்கு நாசத்தை விளைவிக்கும் என்றார்.

கத்தர் நாட்டின் அதிபர் ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல்தானியுடன் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்த எச்சரிக்கையை விடுத்தார் அஹ்மத் நஜாத்.

மேலும் அவர் கூறியதாவது:"இப்பகுதியில் அணுசக்தி விவரங்களை வெளிப்படுத்தாமல் செயல்படும் ஒரேநாடான இஸ்ரேலின் தாக்குதலை தடுப்போம். அனுமதியில்லாமல் எந்தவொரு நாட்டையும் இப்பகுதியில் தாக்குவதற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும்
துணியுமென்றாலும் தற்போதைய சூழலில் அது சாத்தியமில்லை. தாக்குதல் தொடங்கினால் ஈரான் பலமாக பதிலடிக் கொடுக்கும். ஈரானுக்கெதிரான போர் என்பது மனோவியல் நிர்பந்த தந்திரமாகும். அமெரிக்காவின் முயற்சியில் ஃபலஸ்தீன்-இஸ்ரேல் சமாதானப் பேச்சுவார்த்தை ஒரு எதிர்பார்ப்பையும் வழங்கவில்லை. இது ஜீரணமான ஒன்றாகும்." இவ்வாறு நஜாத் தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

லெபனானுக்கு ராணுவ உதவி:ஈரான்

டெஹ்ரான்,ஆக31:இஸ்ரேலின் அச்சுறுத்தல் நீடிக்கும் சூழலில் லெபனானுக்கு ராணுவ உபகரணங்கள் வழங்கத் தயார் என ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி அறிவித்துள்ளார்.

ஈரானின் நீண்டதூர பீரங்கி நிர்மாண துவக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றும் பொழுது வாஹிதி இதனை தெரிவித்தார்.

லெபனானுக்கு ஆயுதமோ இதர ராணுவ உபகரணங்களோ வழங்கமாட்டோம் என பல நாடுகளும் அறிவித்துள்ளன.ஆனால் தாங்கள் எல்லா உதவிகளையும் அளிக்க தயாராக இருக்கிறோம். என வாஹிதி தெரிவித்தார்.

அரபு நாடுகளிடமிருந்தும்,ஈரானிடமிருந்தும் ராணுவ உதவியை கோரவேண்டும் என லெபனான் அரசுக்கு ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் கோரிக்கை விடுத்த சூழலில்தான் ஈரானின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

லெபனான் ராணுவத்தை நவீனப்படுத்த ஈரான் உதவவேண்டும் என ஏற்கனவே லெபனான் அதிபர் மைக்கேல் சுலைமான் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

லெபனானுக்கு ராணுவ உதவி:ஈரான்

டெஹ்ரான்,ஆக31:இஸ்ரேலின் அச்சுறுத்தல் நீடிக்கும் சூழலில் லெபனானுக்கு ராணுவ உபகரணங்கள் வழங்கத் தயார் என ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி அறிவித்துள்ளார்.

ஈரானின் நீண்டதூர பீரங்கி நிர்மாண துவக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு உரையாற்றும் பொழுது வாஹிதி இதனை தெரிவித்தார்.

லெபனானுக்கு ஆயுதமோ இதர ராணுவ உபகரணங்களோ வழங்கமாட்டோம் என பல நாடுகளும் அறிவித்துள்ளன.ஆனால் தாங்கள் எல்லா உதவிகளையும் அளிக்க தயாராக இருக்கிறோம். என வாஹிதி தெரிவித்தார்.

அரபு நாடுகளிடமிருந்தும்,ஈரானிடமிருந்தும் ராணுவ உதவியை கோரவேண்டும் என லெபனான் அரசுக்கு ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் கோரிக்கை விடுத்த சூழலில்தான் ஈரானின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.

லெபனான் ராணுவத்தை நவீனப்படுத்த ஈரான் உதவவேண்டும் என ஏற்கனவே லெபனான் அதிபர் மைக்கேல் சுலைமான் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

ஈரானின் புதிய ஆளில்லா விமானம் அறிமுகம்

டெஹ்ரான்,ஆக23:ஈரான் சுயமாக நிர்மாணித்த நீண்டதூர குண்டுவீசும் பைலட் இல்லாத விமானத்தை(ட்ரோன்) அறிமுகம் செய்தார் அந்நாட்டு அதிபர் அஹ்மத் நிஜாத். ஈரானின் எதிரிகளுக்கு மரணத்தின் தூதர்தான் இது என அறிமுக விழாவில் உரை நிகழ்த்தினார் நிஜாத்.

பாதுகாப்புத்துறையின் தேசிய தினத்தில்தான் கர்ரார்(முன் சென்று தாக்குவது) என்ற பெயரிடப்பட்ட நான்கு மீட்டர் நீளமுடைய இந்த குண்டுவீச்சு விமானம் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் கிலோமீட்டர் வரை பயணம் செய்ய இயலக்கூடிய இவ்விமானம் 250 பவுண்ட் எடையுள்ள இரண்டு குண்டுகளை தாங்கும் சக்திக் கொண்டது.

ராணுவத்தை பாராட்டிய நிஜாத், எதிரிகளுக்கு ஈரானை தாக்குவதற்கான ஆர்வம் முடியும் வரை இது தொடரும் என அறிவித்தார்.

ஈரான் தங்களின் முதல் அணுசக்தி நிலையத்தின் செயல்பாட்டை துவக்கிய மறுநாள்தான் இந்த புதிய சாதனையை படைத்துள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கியாம்-1 கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் சோதித்தது. 1980 களின் இறுதியிலேயே பைலட் இல்லாத கண்காணிப்பு விமானங்களை ஈரான் தயாரித்திருந்தது.

1992 ஆம் ஆண்டு முதல் சுயமாக டாங்குகளும், கவச வாகனங்களும், ஏவுகணைகளும், டார்பிடோக்களும் ஈரான் தயாரித்திருந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

ஈரானின் முதல் அணுசக்தித் தொழிற்சாலையில் எரிபொருள் நிரப்புதல் துவங்கியது

டெஹ்ரான்,ஆக22:ஈரானின் முதல் அணுசக்தித் தொழிற்சாலையான புஷஹரில் எரிபொருள் நிரப்பும் பணி துவங்கியது.

தெற்கு ஈரானில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் ரஷ்ய அதிகாரிகளின் முன்னிலையில் இப்பணித் துவங்கியது. ரஷ்யாவின் மேற்பார்வையில் நடைபெறும் இந்தத்திட்டத்திற்கு எரிபொருள் அளிப்பதும், கழிவுகளை சேகரிப்பதும் ரஷ்யாவாகும்.

அணுசக்தி செறிவூட்டுதல் திட்டத்தின் பெயரால் ஐ.நா நான்குமுறை ஈரானின் மீது தடையை ஏற்படுத்தியுள்ளது.பலமுறை ஒத்திவைக்கப்பட்ட பிறகு 35 ஆண்டுகள் செலவிட்டு புஷஹர் அணுசக்தி நிலைய நிர்மாணம் பூர்த்தியானது.

எல்லாவித நிர்பந்தங்களையும், தடைகளையும் தாங்கிக் கொண்டு ஈரானின் அமைதியான அணுசக்தித்திட்டம் துவக்கப்பட்டுள்ளதாக ஈரானின் அணுசக்திப்பிரிவு தலைவர் அலி அக்பர் ஸாலிஹி தெரிவித்தார்.

இஸ்லாமிக் குடியரசின் எதிரிகளுக்கெதிரான வெற்றியாக சிறப்பிக்கப்படும் இத்திட்டத்தின் துவக்கத்தை தேசிய திருவிழாவாகக் கொண்டாட நிகழ்ச்சிகள் ஏற்பாடுச் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு மாதத்திற்குள் அணுசக்தி நிலையத்திலிருந்து மின்சாரம் உற்பத்திச் செய்யப்படும் எனக் கருதப்படுகிறது.செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்துள்ள ஈரான் அணுகுண்டு தயாரிக்க இதனை பயன்படுத்தும் என அமெரிக்கா உள்ளிட்ட சில மேலைநாடுகள் பிரச்சாரம் செய்துவருகின்றன.

ஆனால், புஷஹரில் யுரேனியம் மூன்று சதவீதம் மட்டுமே செறிவூட்டப்படுகிறது.

மருத்துவ ஆராய்ச்சி ரியாக்டருக்காக 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தையும் ஈரான் துவக்கியுள்ளது.நதான்ஸ் ப்ளாண்டில் தேவையான செண்ட்ரிஃப்யூஜ்கள் நிறுவிவிட்டால் 30 டன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்திச் செய்யலாம் என ஸாலிஹி தெரிவிக்கிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

ஈரானின் அணுசக்தி ரியாக்டர் உடனடியாக செயல்படத் துவங்கும்

மாஸ்கோ,ஆக,14:ஈரானின் முதல் அணுசக்தி ரியாக்டரின் செயல்பாடு அடுத்தவாரம் துவங்கும் என ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்யன் ஸ்டேட் அட்டாமிக் கார்ப்பரேசனில் நிறுவப்பட்டுள்ள புஷ்ஹர் ரியாக்டரில் எரிபொருள் நிரப்புவதற்கான பணியை பொறியாளர்கள் உடனடியாக துவங்குவார்கள்.

ஆறுமாதம் முன்பே ரியாக்டர் செயல்படுவதற்கு தயாராக இருந்தது. 1992 ஆம் ஆண்டில்தான் ஈரானில் அணுசக்தி நிலையம் நிறுவ ரஷ்யா உதவத் துவங்கியது. 1974 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் உதவியுடன் இதற்கான முயற்சிகள் துவங்கிய பொழுதிலும், 1979 ஆம் ஆண்டு ஈரான் புரட்சியைத் தொடர்ந்து இத்திட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் ரஷ்யாவின் உதவியுடன் துவங்கிய அணுசக்தி ரியாக்டர் நிர்மாணம் 2007 ஆம் ஆண்டில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேகமாக நடைபெற ஆரம்பித்தது. இந்தமாதம் 21 ஆம் தேதி ரியாக்டரில் எரிபொருள் நிரப்பப்படும் என கார்ப்பரேசன் செய்தித் தொடர்பாளர் ஸெர்ஜி நோஸிக்கோவ் தெரிவித்துள்ளார்.

இத்துடன் ஈரானின் செறிவூட்டல் நெருக்கடிக்கு ஏறக்குறைய தீர்வாக அமையுமென்று எதிர்பார்க்கலாம். சர்வதேச அளவில் ஈரான் தனிமைப்படுத்தப்பட்ட சூழலுக்கிடையில் அபூர்வ சாதனை இது என ஈரான் மக்கள் கருத்துத் தெரிவித்ததாக பி.பி.சி கூறுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

சனி, 14 ஆகஸ்ட், 2010

ஈரான் அணு உலைகள் மீது 100 விமானங்களை அனுப்பி குண்டு வீச இஸ்ரேல் திட்டம்: அமெரிக்க பத்திரிகை தகவல்

ஆக,13:அமெரிக்காவின் தடை மற்றும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் ஈரான் தன் சொந்த தேவைக்காக அணுசக்தி தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

மேலும் ஈரான் அணுசக்தி மூலம் குண்டு தயாரித்தால் அதை இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்று இஸ்ரேல் பயப்படுகிறது. எனவே ஈரான் அணு குண்டு தயாரிப்பதை தடுத்து நிறுத்துங்கள் என்று இஸ்ரேல் அமெரிக்காவிடம் கூறியது. இதைத்தடுக்க அமெரிக்கா எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.

எனவே ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் நேரடியாக தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

முன்பு இதே போல ஈராக் அணுகுண்டு தயாரிக்க முயற்சித்தபோது இஸ்ரேல் விமானங்களை அனுப்பி ஈராக் அணு உலையை தகர்த்தது.

அதே போல இப்போது ஈரான் அணு உலைகளை அளிக்க இஸ்ரேல் தயாராகி இருப்பதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது. இதற்காக உயர்ரக 100 போர் விமானங்களை தயாராக வைத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த விமானங்களை சவுதிஅரேபியா அல்லது துருக்கி எல்லை வழியாக அனுப்பி ஈரான் அணு உலைகளை தாக்க திட்டமிட்டுள்ளனர்.

ஈரானில் நதான்ஸ், குவாம், எஸ்பகான், புஷேர் ஆகிய இடங்களில் அணுஉலை அமைக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் தாக்கி அழிக்கும் வகையில் விரிவான திட்டங்களை உருவாக்கி உள்ளனர். என்றும் அச்செய்தி கூறுகின்றது.

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இஸ்ரேலால் லெபனான்,சிரியா தாக்கப்பட்டால் அவ்விரு நாடுகளுக்கும் ஆதரவாக ஈரான் களமிறங்கும் - ஈரான் அமைச்சர்

டெஹ்ரான்,ஆக12:லெபனான்,சிரியா ஆகிய இரு நாடுகள் இஸ்ரேலால் தாக்கப்பட்டால், ஈரான் முழுமூச்சுடன் அவற்றுக்கு ஆதரவு அளிக்கும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் மனுசெஹர் மொட்டாகி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ஈரானில் பயணம் மேற்கொண்டுள்ள லெபனான் வெளியுறவு அமைச்சர் அலி அல்-ஷாமியுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, மோட்டாகி செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அண்மையில் நிகழ்ந்த மோதலை கண்டித்ததோடு, இஸ்ரேலின் இந்த செயல்பாடு, அதன் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது என்று மொட்டாகி குறிப்பிட்டார்.

பிரதேச மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளில்,ஈரானும் லெபனானும் பொது நிலைப்பாடுகளை கொள்கின்றன.நியாயமான சர்வதேச உறவுகளை அமைப்பதை இரு தரப்பும் ஆதரிப்பதாகவும், அவர் வலியுறுத்தினார்.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ஃபிடல் காஸ்ட்ரோவின் எச்சரிக்கை

ஆக,10:நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான நோய்களுடன் போராடுவதற்கு கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ பொது வாழ்க்கையிலிருந்து விலகியபொழுது மீண்டும் அவர் திரும்பிவருது கடினம் என்றே பலரும் கருதியிருந்தனர். அரை நூற்றாண்டிற்கு முன்பு அமெரிக்காவின் மூக்கிற்கு கீழே ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்திற்கு துணிச்சல் மிக்க படையை உருவாக்கிய காஸ்ட்ரோ பின்னர் ஒருபோதும் தனது முடிவில் எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்கவில்லை.

அதனால்தான், பலகாலமாக அமெரிக்க ஆட்சியாளர்களுக்கும், சி.ஐ.ஏவுக்கும் கண்ணில் விரல்விட்டு ஆட்டிக்கொண்டிருந்தார் இந்த தீரமிக்க புரட்சியாளர்.

உலக சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் காஸ்ட்ரோ மீண்டும் பொதுவாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். வயது அவருடைய புரட்சியின் வீரியத்தை சற்றும் குறைத்திடவில்லை.

நேற்று முன் தினம் கியூபா பாராளுமன்றத்தில் அவர் நடத்திய உரையினை உலக முழுவதுமுள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளிகள் ஆவேசத்துடன் கேட்டனர். இன்றைய சிக்கல்கள் மிகுந்த உலக சூழலில் காஸ்ட்ரோவின் வார்த்தைகளுக்கு மிக்க மதிப்புள்ளது.

ஈரானுக்கெதிராக அமெரிக்க நடத்திவரும் பொருளாதார தடைகளும், ராணுவ முன்னேற்பாடுகளும் ஈரானை தோல்வி அடையச்செய்யாது, மாறாக அமெரிக்காவின் வீழ்ச்சிக்கு இது வழிவகுக்கும் என காஸ்ட்ரோ எச்சரிக்கை விடுத்தார்.

அமைதியான முறையில் அத்தியாவசிய தேவைகளுக்காக அணுசக்தியை மேம்படுத்த ஈரான் நடத்திவரும் முயற்சிகளுக்கு தடைப்போடுவது என்ற பெயரில் உலகில் மீண்டும் ஒரு அணு ஆயுத போருக்கு வழிவகுக்கத்தான் அமெரிக்காவும்,இஸ்ரேலும் சேர்ந்து முயல்வதாக காஸ்ட்ரோ சுட்டிக்காட்டினார்.

அத்தகையதொரு போர் ஈரானோடு மட்டும் ஒதுங்கிவிடாது. மாறாக, அப்போர் மேற்காசியாவிலும், பின்னர் ஐரோப்பாவிலும் பரவும். அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும்.

தற்போதைய உலக கட்டமைப்பு முற்றிலும் வீழ்ச்சியை சந்திக்கும் வகையிலான சூழலுக்கு இத்தகைய பைத்தியக்காரத்தனமான கொள்கைகள் தள்ளும் என உலகத்திற்கு காஸ்ட்ரோ எச்சரிக்கை விடுத்தார்.

காஸ்ட்ரோவின் எச்சரிக்கை அமெரிக்கா அதிபர் ஒபாமாவை குறிவைத்து விடுக்கபட்டதாகும். உலகை அழிவுக்குக் கொண்டுசெல்லும் முயற்சிகளிலிருந்து விடுபடவேண்டும் என காஸ்ட்ரோ ஒபாமாவை வலியுறுத்தினார்.

அமெரிக்காவின் கடந்த கால நிலைப்பாடுகளும், ஈராக்கிலும், ஆஃப்கானிலும் இன்னும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் இன்றுவரை நடத்திவரும் ஆக்கிரமிப்பு போர்களின் வரலாற்றை உற்றுநோக்கினால் அந்த நாடு ஒருபோதும் நேரான வழியில் செல்லமுடியாது என்பதை உறுதிச்செய்ய இயலும்.

ஆனால் ஏகாதிபத்தியம் சுயமாக தோண்டிய குழியிலிருந்து எளிதாக கரையேற முடியாது. இந்த அனுபவங்களை முன்னிறுத்தி, உலகில் மீண்டும் ஒரு அணு ஆயுத போர் நடக்க வழி வகுக்காதீர்கள் என்ற காஸ்ட்ரோவின் எச்சரிக்கை முற்றிலும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். அதுதான் தற்காலத்தில் அமைதியை விரும்புவோரின் குரலாகும்.

விமர்சகன்