அயோத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அயோத்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 மார்ச், 2012

பாஜகவை தூக்கிப் போட்ட அயோத்தி-முலாயமுக்கு ஜேஜே!

அயோத்தி: சர்ச்சைக்குரிய அயோத்தி தொகுதியை பாஜக இழந்து விட்டது. 1991ம் ஆண்டு முதல் தொடர்ந்து இங்கு வென்று வந்த பாஜகவுக்கு இந்த முறை அயோத்தி மக்கள் டாட்டா காட்டி விட்டனர். மாறாக, சமாஜ்வாடிக் கட்சிக்கு வாக்களித்துள்ளனர்.

அயோத்தியிலிருந்துதான் தனது அரசியல் மறுமலர்ச்சியைத் தொடங்கியது பாஜக என்பது நினைவிருக்கலாம். அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை பாஜகவினரும், இந்து அமைப்புகளும் சேர்ந்து இடித்தது இன்று வரை இந்தியாவின் பெரும் கரும்புள்ளியாக திகழ்ந்து வருகிறது. அன்று முதல் அயோத்தியில், தொடர்ந்து பாஜகவே வென்று வந்தது. ஆனால் இந்த முறை அயோத்தி மக்கள் மாற்றி யோசித்து, ஓட்டை மாற்றிப் போட்டு விட்டனர். சமாஜ்வாடிக் கட்சி இங்கு வென்று விட்டது.

பாஜகவின் லல்லு சிங், தொடர்ந்து 1991ம் ஆண்டு முதல் இங்கு வென்று வந்தார். இந்த முறை அவர் இளம் சமாஜ்வாடி தலைவரான தேஜ் நாராயண் பாண்டேவிடம் 5700 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போய்விட்டார்.

கடந்த தேர்தலிலேயே லல்லு சிங் ஆடிப் போய்த்தான் வென்றார். அதாவது அவரது வெற்றி வித்தியாசம் 6500 மட்டுமே.

இப்போதைய தேர்தலில் லல்லுவுக்கு அயோத்தி நகர்ப் புறங்களில் முன்னிலை கிடைத்தது. அதேபோல வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளிலும் அவருக்கே அதிக ஓட்டுக்கள் பதிவாகியிருந்தன. ஆனால் முஸ்லீம்கள் அதிகம் உள்ள பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் அவரைக் கவிழ்த்து விட்டு விட்டனர்.

அயோத்தி வேட்பாளராக பாண்டேவை அறிவித்த கையோடு முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் பலமுறை அயோத்தியின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வாக்காளர்களை கவர ஆரம்பித்தார். அவரது அணுகுமுறைக்கு நல்ல பலனும் கிடைத்தது. இப்போது வெற்றியும் வந்து சேர்ந்துள்ளது.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

பாபர் மஸ்ஜித். நீதியை தேடும் பயணங்கள் உரை: பேரா. அருணன்

அயோத்தி பாப்ரிம‌சூதி தீர்ப்பு கட்டப்பஞ்சாயத்து, நாட்டாண்மை தீர்ப்பை விட படுகேவலமானது.

அயோத்தியில் ராமர் கோயிலே இடிக்கப்படவில்லை. ஏனென்றால் அயோத்தியில் ராமர் கோயில் என்று ஒன்று இருந்ததே இல்லை.

இல்லாத கோயிலை சொல்லி இருந்த மசூதியை இடித்தார்கள். ராமர் பெயரை சொல்லி நாட்டிலே கலவரத்தை தூண்டுவதே குறிக்கோள்.

பாபர் மஸ்ஜித். நீதியை தேடும் பயணங்கள்
உரை: பேரா. அருணன்
தலைவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தமுமுக சார்பில் டிசம்பர்-06 அன்று நடைபெற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் பேரா. அருணன் ஆற்றிய உரை.

Prof.Arunan Speech Part-01 உரை பகுதி -01







ஞாயிறு, 28 நவம்பர், 2010

அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும் – கருத்தரங்கம்-புகைப்படங்கள்

தமுமுக தென் சென்னை சார்பில் நவம்பர் 25 அன்று சென்னையில் “அயோத்தி தீர்ப்பும் மதசார்பின்மையும் – கருத்தரங்கம்” சென்னை தியாகராயர் நகரில் உள்ள பி.டி.தியாகராயர் அரங்கில் (கண்ணதாசன் சிலை அருகில்) 25.11.2010 வியாழனன்று, மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.

தமுமுக தலைவர் பேராசிரியர் எம்..ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமைத் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினார். தமுமுக தென் சென்னை மாவட்டத் தலைவர் ஜெ.சீனி முகமது வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கத்தை பேரா.ஜெ.ஹாஜாகனி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கோ.முத்துக்கிருஷ்ணன், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தின் நிர்வாகி கென்னடி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.



இறுதியாக தமுமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜனாப் முகமது அபுபக்கர் (எ) கோரி நன்றியுரை கூறினார்.


புதன், 20 அக்டோபர், 2010

பாப்ரி மஸ்ஜித் நில விவகாரம்:ஜெயேந்திர,விஜேந்திரருடன் இணைந்து வக்பு வாரியத்துடன் பேச்சு நடத்த இந்து மகாசபை முடிவு

சென்னை,அக்.20:அயோத்தி நிலவிவகாரம் குறித்து வக்பு வாரியத் தலைவர்களுடன் வரும் 28-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக இந்து மகா சபை தேசிய தலைவர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

ராம ஜென்மபூமி இந்துக்களுக்கு உரியது. 1949-ம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக முதன் முதலாக வழக்கு தொடர்ந்ததும் இந்து மகாசபை தான்.

அயோத்தி இடத்தை மூன்றாகப் பிரித்திருப்பதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த இடத்தை முழுமையாக இந்து மகா சபையிடம் ஒப்படைத்திருந்திருக்க வேண்டும். இந்த தீர்ப்பு எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எனவே, இதை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம்.

ராமஜென்மபூமி முழுவதுமாக எங்களுக்கு கிடைத்தவுடனே ராமர் கோவில் கட்டும் பணியை துவங்குவோம். அங்கு ராமர் கோவில் கட்டுவது உறுதி.

இந்த விவகாரம் குறித்து வரும் 28-ம் தேதி வக்பு வாரியத் தலைவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். இதற்காக ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் நானும் டெல்லி செல்கிறேன். அங்குள்ள மீனாட்சி கோவிலில் வைத்து தான் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம்.

இதில் ஏற்படும் உடன்பாட்டை பொருத்தே எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும், என்றார்.

சனி, 16 அக்டோபர், 2010

அயோத்தி தீர்ப்பு: முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் சிறப்பு ஆலோசனை கூட்டத்தில் தமுமுக தலைவர் பங்குக் கொள்கிறார்

அயோத்தி பாபரி பள்ளிவாசல் வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பிரிவு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் வரும் 16ம் தேதி லக்னோவில் நடைபெறுகின்றது.

இந்த கூட்டத்தில் பங்குக் கொள்வதற்காக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் நாளை லக்னோவிற்கு செல்கிறார். அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் இந்த கூட்டத்தில் அயோத்தி வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தீர்மானிக்கப்படும். அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள் மற்றும் மதநிறுவனங்களில் பிரதிநிதித்துவ அமைப்பாகும்.

சனி, 9 அக்டோபர், 2010

இடிக்கப்பட்ட இடத்திலேயே மசூதியை அமைப்பதைத் தவிர வேறு எதையும் முஸ்லிம்களால் ஏற்க முடியாது-தில்லி இமாம் புகாரி உறுதி!

புதுதில்லி,அக்.7: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இடிக்கப்பட்ட இடத்திலேயே மசூதி கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று தில்லி ஜாமா மஸ்ஜித் தலைமை இமாம் மெüலானா சையத் அகமது புகாரி திட்டவட்டமாக அறிவித்தார்.
தில்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மத அறிஞர்கள் தில்லியில் வியாழக்கிழமை கூடி அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விரிவாக விவாதித்தார்கள்.

அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுதாக நிராகரிப்பதாகவும் மசூதி கட்டுவது தொடர்பாக எந்தவித சமரசத் தீர்வையும் ஏற்பதற்குத் தயாராக இல்லை என்றும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

"அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் நிராகரிக்கிறோம்; இந்தத் தீர்ப்பு தொடர்பாக தன்னுடைய நிலை என்ன என்பதை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தெளிவாக விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதி அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டிருக்கிறோம்.

மசூதிக்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சிதான் நேரடியான காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். பாபர் மசூதி பிரச்னை தொடங்கியது முதல் அலாகாபாத் உயர் நீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்புவரை அனைத்துமே காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளால் அமைந்தவைதான்.

முஸ்லிம்களுக்கு உற்ற நண்பனைப் போல பேசியே ஏமாற்றிக்கொண்டு, வகுப்புவாத சக்திகளுக்குத்தான் காங்கிரஸ் துணைபோய்க்கொண்டிருக்கிறது.இன்றைய கூட்டத்தில் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. முஸ்லிம்கள் தனிச்சட்ட வாரிய உறுப்பினர்கள் சிலர் தாங்களாகவே சமரசத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு புறக்கடை வழியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் விரும்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. எந்த மாதிரியான சமரசத் தீர்வை அவர்கள் காணப் போகிறார்கள்? இடிக்கப்பட்ட இடத்திலேயே மசூதியை அமைப்பதைத் தவிர வேறு எதையும் முஸ்லிம்களால் ஏற்க முடியாது.இந்த விஷயத்தில் முஸ்லிம் சமூகத்தை ஆதரிக்கும் எவருடைய ஆதரவையும் நாங்கள் வரவேற்கிறோம். இன்றைக்கு தில்லியில் கூடிய நாங்கள் எங்களுடைய அமைப்பு வாயிலாக, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்' என்றார் சையத் அகமது புகாரி.

நன்றி;தினமணி.

புதன், 6 அக்டோபர், 2010

வரலாற்றை நிராகரிக்கும் தீர்ப்பு

கட்டுரையாளர்:பிரபல வரலாற்றாய்வாளர் ரொமீலா தாப்பர்
அயோத்தியாவில் பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு ஒரு அரசியல் தீர்ப்பாகும். ஆட்சியாளர்களால் பல வருடங்களுக்கு முன்பாகவே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய ஒரு தீர்மானம் மட்டுமே அந்த தீர்ப்பில் தெளிவாக காணக்கிடைக்கிறது.

நிலத்தின் உரிமை யாருக்கு? என்பதுதான் வழக்கிய முக்கிய பிரச்சனை. தகர்க்கப்பட்ட மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் ஒரு புதிய கோயிலை கட்டுங்கள் என்பதுதான் அத்தீர்ப்பின் முக்கிய பலன்.

சர்ச்சைக்குரிய இவ்விவகாரம் சமகால அரசியலிலும், மதரீதியான பிளவுகளிலும் மூழ்கிக் கிடக்கிறது. வரலாற்று ரீதியான ஆவணங்களின் அடிப்படையிலேயே இவ்வழக்கில் தீர்ப்புக்கூற வேண்டும் என உரிமைக் கோரப்பட்டது. ஆனால் இதனை நீதிமன்றம் பரிசீலித்திருந்தும்கூட தீர்ப்பு கூறும் வேளையில் அதனை முற்றிலும் புறக்கணித்து விட்டதாகவே காணமுடிகிறது.

ஒரு நீதிபதி கூறியுள்ளது என்னவெனில், தெய்வீக அம்சம் பொருந்திய நபர் ஒருவர் இந்த சர்ச்சைக்குரிய நிலத்தின் துல்லியமான ஒரு இடத்தில் பிறந்தார் என்பதாகும். அதனால்தான், கோயிலை அவ்விடத்தில்தான் கட்டவேண்டும் என கூறுகிறார்.

நாட்டு மக்களின் நம்பிக்கையையும், எண்ணங்களையும்தான் நீதிமன்றம் இவ்விவகாரத்தில் கவனத்தில் கொண்டுள்ளது. ஆனால்,இதனை நிரூபிக்க தேவையான எத்தகையதொரு ஆதாரமும் இல்லை. ஆகையால்தான், இந்த நீதிமன்றத்திலிருந்து எதிர்பார்த்தது இத்தகையதொரு தீர்ப்பை அல்ல.

ஹிந்துக்கள் ராமனை தெய்வமாக கருதி வழிபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், அதன் பெயரால் மட்டும் ராமனின் பிறந்த இடம் தொடர்பான, நிலத்தின் உரிமைத் தொடர்பான தீர்மானங்களை ஒரு நீதிமன்றத் தீர்ப்பில் ஏற்றுக்கொள்வது சரியா?

அதுமட்டுமல்ல, இவ்விடத்தை கைப்பற்றுவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச் சின்னம் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு தகர்க்கப்பட்டுள்ளது என்பதும் நினைவுக் கூறத்தக்கது.

நீதிமன்றம் கூறுகிறது, 12-ஆம் நூற்றாண்டில் இவ்விடத்தில் ஒரு கோயில் இருந்ததாம். அது தகர்க்கப்பட்ட பிறகே அங்கு மஸ்ஜித் கட்டப்பட்டதாக தீர்ப்பில் கூறப்படுகிறது. அதனாலேயே, அங்கு ஒரு கோயிலை கட்டுவதற்கான நியாயமும் தீர்ப்பில் முன்வைக்கப்படுகிறது.

இதுத்தொடர்பாக அகழ்வாராய்ச்சித்துறை (ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா) நடத்திய ஆய்வுகளும் அவர்களுடைய அனுமானங்களும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால், அகழ்வாராய்ச்சித் துறையின் அனுமானங்களை, ஏராளமான பிரபல அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் கடுமையான கேள்வி எழுப்பியதும், நிராகரித்ததுமாகும்.

இவ்விஷயங்கள் அந்தந்த துறைகளின் வல்லுநர்களின் நிலைப்பாடுகளுடன் தொடர்புடையதாகும். அதில், பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகள் தற்பொழுதும் உள்ளன. ஆனால், நீதிமன்றமோ ஒரு தலைப்பட்சமான இந்த நிலைப்பாட்டை, பெரிய அளவிலான பரிசீலனைக்கு உட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே இத்தீர்ப்பில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இதனை கருதவியலாது.

இன்னொரு நீதிபதி கூறுகிறார், தான் ஒரு வரலாற்று அறிஞர் இல்லை என்பதால் இவ்வழக்கின் வரலாற்று ரீதியான விவகாரங்களில் தலையிட முடியாது என. ஆனாலும், அவர் கண்டறிந்தது, இந்த வழக்குகளை தீர்மானிப்பதில் வரலாறோ, அகழ்வாராய்ச்சி அறிவியலோ முற்றிலும் தேவையல்ல என்பதாகும். ஆனால்,இங்கு சர்ச்சைக்குரிய விஷயம் என்னவெனில் நிலம் தொடர்பான உரிமைக்கோரல்களில் வரலாற்றுரீதியான சாத்தியம் என்ன என்பதாகும்.

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இங்கு நிலைப் பெற்றிருந்த வரலாற்றுரீதியான சிதிலங்கள்தான் இங்கு ஆய்வுக்குரிய விஷயம். அங்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மஸ்ஜித் ஒன்று நிலைப்பெற்றிருந்தது. அது, இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் முக்கிய பகுதியாக விளங்கியது. ஒரு அரசியல் கட்சியின் தலைவர்களின் உணர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கைகளின் காரணமாக ஒரு கும்பல் வேண்டுமென்றே அதனை இடித்துத் தள்ளியது.

ஆனால், இவ்வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் இதுவரைக் கிடைத்த பக்கங்களில் எந்த ஒரு இடத்திலும் இந்த மஸ்ஜித் தகர்க்கப்பட்ட சம்பவம் நம்முடைய பாரம்பரியத்திற்கு எதிரானது என்றோ அல்லது கண்டிக்கத்தக்க சம்பவம் என்றோ கூறப்படவில்லை. இனி வரவிருக்கும் ராமர்கோயில் என்பது ராமன் பிறந்ததாக நம்பப்படும் இடத்தில் ஒரு இடிக்கப்பட்ட மஸ்ஜிதின் சிதிலங்களின் மீது கட்டப்பட்டது எனக் கூறப்படும்.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் எப்பொழுதோ நடந்ததாக கூறப்படும் கோயில் இடிப்பு நீதிமன்றத் தீர்ப்பில் கண்டிக்கப்படுகிறது. அதுவே, புதிய கோயில் கட்டுவதற்கான நியாயமாகவும் தீர்ப்பில் கூறப்படுகிறது. அங்கே நிலைப்பெற்றிருந்த மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் இந்தளவிற்கு தீர்ப்பில் கண்டிக்கப்படவில்லை. மிகவும் வசதியாக, இவ்வழக்கின் எல்லைக்கு வெளியேதான் மஸ்ஜிதை தகர்த்த சம்பவம் என நீதிமன்றம் தீர்மானித்திருக்கும் என தோன்றுகிறது.

நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை நமக்கு தருகிறது. அதாவது, ஏதேனும் ஒரு புனிதர் பிறந்தார் எனக்கூறி ஏதேனும் ஒரு மதப்பிரிவினர் ஏதேனும் ஒரு நிலத்தின் மீது உரிமைக்கோரலாம் என்பதாகும். இனி இத்தகையதொரு ஏராளமான ஜென்மபூமிகள் நாட்டின் பல பகுதிகளிலும் எழும்பும். தமது வசதிக்கேற்ப பொருந்திய ஒரு இடத்தை கண்டறிந்து அதற்கு தேவையான சில உரிமை வாதங்களையும், சர்ச்சைக்குரிய விஷயங்களையும் உருவாக்கினாலே போதும்.

இங்கே நடந்த வரலாற்றுச் சின்னத்தின் இடிப்பை நீதிமன்றம் கண்டிக்காத சூழலில் எதிர்காலத்தில் வழிபாட்டுத்தலங்களை இடிக்க பலரும் கிளம்பினால் அதனை எவ்வாறு தடுக்க இயலும்?

வழிப்பாட்டுத்தலங்களின் நிலையை மாற்றுவதை தடைச்செய்யும் 1993 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் பெரிதாக ஒன்றும் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இதுவரையிலான நமது அனுபவம் எடுத்தியம்புகிறது.

வரலாற்றில் நிகழ்ந்ததெல்லாம் நிகழ்ந்ததுதான். அவற்றையொன்றும் இனி மாற்றவியலாது. ஆனால், உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை ஆவணங்கள் பரிசோதிக்கவும், அதன் நம்பிக்கைக்குரிய ஆதாரங்களை கண்டறியவும் நம்மால் இயலும்.

இன்றைய சமகால அரசியல் விருப்பங்களுக்காக வரலாற்றை மாற்றவியலாது. வரலாற்றின் மீதான மரியாதையை சீர்குலைத்து, அதற்கு பதிலாக மதநம்பிக்கையை நிலைநிறுத்துகிறது நீதிமன்றத்தின் தீர்ப்பு.

ஆனால், சமூகத்தில் நல்லிணக்கமும், அமைதியும் நிலைப்பெற வேண்டுமானால், நமது நாட்டின் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதற்கு முக்கியமாக தேவை என்னவெனில், நீதிமன்றங்கள் தங்களின் தீர்ப்பை வழங்குவதற்கு மதத்தையும், நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொள்ளக்கூடாது. மாறாக, ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கவேண்டும். இந்த உணர்வு மக்களிடையே ஏற்படவேண்டும்.

நன்றி:தி ஹிந்து, தேஜஸ் மலையாள நாளிதழ்,

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

அயோத்தி தீர்ப்பை வெளியிட சுப்ரீம் கோர்ட் அனுமதி-நாளை அல்லது மறுநாள் தீர்ப்பு வெளியாகும்

அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
இந்த வழக்கை முடித்து விட்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய லக்னெள பெஞ்ச் செப்டம்பர் 24ம் தேதி தீர்ப்பை அளிப்பதாக இருந்தது.

ஆனால், இதை எதிர்த்து திரிபாதி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தீர்ப்பை ஒத்தி வைக்குமாறும், பிரச்சனையை பேசித் தீர்க்க உத்தரவிடுமாறும் கோரினார்.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 24ம் தேதி தீர்ப்பளிக்க லக்னெள நீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்து தீர்ப்பு வெளியாகவில்லை.

இந்த மனு மீதான விசாரணை [^] இன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது.

இன்றைய முதல் நிகழ்வாக இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் அப்தாப் ஆலம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

அயோத்தி நில உரிமை தொடர்பாக மொத்தம் நான்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நான்கிலும் தீர்ப்பு தயாராக உள்ளது. இவற்றை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இப்போது தீர்ப்பை வெளியிடுவது உகந்ததாக இருக்காது என்பது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதியின் வாதமாகும்.

இதுதொடர்பாக மத்திய அரசு [^] விளக்கம் அளிக்கவும், சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் [^] உத்தரவிட்டிருந்தது.

இதன்படி மத்திய அரசு உள்பட அனைத்துத் தரப்பினரும் இன்று உச்சநீதிமன்ற பெஞ்ச்சிடம் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.

மத்திய வக்பு வாரியம், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், அகில இந்திய இந்து மகா சபா ஆகியவை தீர்ப்பை தள்ளி வைக்கக் கூடாது என்று கோரின. அதேபோல சன்னி மத்திய வக்பு வாரியமும் தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என்று கோரியது.

தீர்ப்பை வெளியிடுமாறு மத்திய அரசு கோரிக்கை:

இன்றைய விசாரணையின்போது தீர்ப்பைக் கூறலாமா, சிறிது அவகாசம் தரலாமா என்பது குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரான அட்டர்னி ஜெனரல் வாஹனாவதியிடம் உச்ச நீதிமன்றம் ஆலோசனை கேட்டது.

அப்போது 60 ஆண்டு காலமாக நீடிக்கும் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருமாறு அவர் கூறிவிட்டார். மேலும் அவர் கூறுகையில், பிரச்சனையை பேசித் தீர்த்து சுமூக உடன்பாட்டை எட்ட முடியும், அதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றால் அதை மத்திய அரசு மனம் திறந்து வரவேற்கும்.

அதே நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக நிலையற்றதன்மை நிலவுவதை அரசு விரும்பவில்லை. அதே போல நாட்டின் சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் நிலையற்ற தன்மை நிலவுவது சரியல்ல. இதனால் தீர்ப்பை வெளியிட்டு இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதே சரி.

மேலும் அயோத்தி தீர்ப்பை அறிவிக்க வேண்டிய மூன்று நீதிபதிகளில் ஒருவரின் பதவிக்காலம் அக்டோபர் 1ம் தேதி முடிவடைகிறது. அவருக்கு பதவி நீடிப்பு கொடுப்பது என்பது மத்திய அரசின் கையில் இல்லை. அதை முடிவு செய்ய வேண்டியது அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிதான் என்றார் வாஹனாவதி.

இதையடுத்து பகல் 2 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரத்தி்ல தனது தீ்ர்ப்பை வழங்கியது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில், அயோத்தி நில விவகாரத்தில் தீர்ப்பை வழங்க அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னெள கிளைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்படுகிறது என்று அறிவித்து திரிபாதியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் லக்னெள உயர் நீதிமன்ற கிளை நாளையோ அல்லது நாளை மறுநாளோ தீர்ப்பளிக்கலாம் என்று தெரிகிறது.

தீர்ப்பை அளிக்க காத்திருக்கும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சில் இடம் பெற்றுள்ள ஒரு நீதிபதி அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். எனவே அதற்குள் தீர்ப்பை அளித்தாக வேண்டும். இல்லாவிட்டால் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம்.

எனவே அக்டோபர் 1ம் தேதிக்கு முன்னதாக நாளையோ அல்லது நாளை மறுதினமோ தீர்ப்பை லக்னொ நீதிமன்றம் வெளியிடலாம்.

அயோத்தி தீர்ப்பை வெளியிட உத்தரவு கிடைக்குமா? - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

டெல்லி,செப்,28:நாடே பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அயோத்தி தீர்ப்பை வெளியிட அனுமதி கிடைக்குமா அல்லது தள்ளிப் போடப்படுமா என்பது இன்று தெரிய வரும். இதுத் தொடர்பான அப்பீல் மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் இன்று விசாரிக்கவுள்ளது.

அயோத்தி நிலம் யாருக்குச் சொந்தம், அங்கு முன்பு கோவில் இருந்ததா என்பதுதான் இந்த 60 ஆண்டு கால வழக்கின் முக்கிய அம்சம். இந்த வழக்கை முடித்து விட்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய லக்னோ பெஞ்ச் செப்டம்பர் 24ம் தேதி தீர்ப்பை அளிப்பதாக இருந்தது.

ஆனால் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க செப்டம்பர் 23ம் தேதி இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தீர்ப்பு வெளியாகவில்லை.

இருப்பினும் தீர்ப்பை தள்ளி வைக்கக் கோரும் அப்பீல் மனுவின் விசாரணை செப்டம்பர் 28ம் தேதியான இன்றைக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்ற இரு நபர் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

இன்றைய முதல் நிகழ்வாக இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் அப்தாப் ஆலம், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு எடுக்கவுள்ளது.

அயோத்தி நில உரிமை தொடர்பாக மொத்தம் நான்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. நான்கிலும் தீர்ப்பு தயாராக உள்ளது. இவற்றை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், காமன்வெல்த் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இப்போது தீர்ப்பை வெளியிடுவது உகந்ததாக இருக்காது என்பது அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ள ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ரமேஷ் சந்த் திரிபாதியின் வாதமாகும்.

இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கவும், சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசு இன்று உச்சநீதிமன்ற பெஞ்ச்சிடம் தனது கருத்தை தெரிவிக்கவுள்ளது. மற்ற மனுதாரர்கள் பதில்களைத் தாக்கல் செய்து விட்டனர்.

மத்திய வக்பு வாரியம், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், அகில இந்திய இந்து மகா சபா ஆகியவை தீர்ப்பை தள்ளி வைக்கக் கூடாது என்று கோரியுள்ளன. அதேபோல சன்னி மத்திய வக்பு வாரியமும் தீர்ப்பை அறிவிக்க வேண்டும் என கோரியுள்ளது.

தீர்ப்பை அளிக்க காத்திருக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச்சில் இடம் பெற்றுள்ள ஒரு நீதிபதி அக்டோபர் 1ம் தேதி ஓய்வு பெறவுள்ளார். எனவே அதற்குள் தீர்ப்பை அளித்தாக வேண்டும். இல்லாவிட்டால் சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே உச்சநீதிமன்ற பெஞ்ச் இன்று உறுதியான, இறுதியான தீர்ப்பை தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

அயோத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு நரசிம்மராவ் முக்கிய பங்காற்றினார்- அசோக் சிங்கால்

ஹைதராபாத்,ஆக19:அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில தற்காலிகமாக ராமர் கோவில் கட்டுவதற்கு மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் முக்கிய பங்காற்றியதற்தாக விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலகத் தலைவர் அசோக் சிங்கால் அவரைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் டிச-6 1992 அன்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை நிறைவேற்றினார் என பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறினார்.

ராமர் கோவில் கட்டுவதில் நரசிம்மராவின் பங்களிப்பில் எந்தவித சந்தேகத்துக்கும் இடமில்லை அவரின் பங்கு மறைக்க முடியாதது. பிரதமர் நரசிம்மராவ் பாபரி மஸ்ஜிதை இடிப்பதை தடுக்கும் நடவடிக்கைகளில் எவ்வித முயற்சிகளும் எடுக்கவில்லை மேலும் உடனே அதே இடத்தில ராமர் கோவில் கட்டுவதையும் தடுக்கவில்லை.

பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில மீண்டும் பள்ளியைக் கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுத்ததை நினைவில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் அவர் ராமர் கோவில் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டி உள்ளார். மேலும் எல்லா ஹிந்துகளின் மனதிலும் இன்றும் நரசிம்மராவ வாழ்கிறார். என்றும் அசோக் சிங்கால் கூறினார்.

ராமர் கோவில் கட்டுவதற்கான நடவடிக்கைகள் அமைதியான முறையில் மேற்க் கொள்ளப்படும் "எங்களின் கனவான பெரிய இராமர் கோவில் கட்டுவதற்காக கையெழுத்து இயக்கம், பொதுகூட்டங்கள் மற்றும் யாகங்களும் தொடங்கப்படும்." என்றும் அவர் கூறினார்.

"அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். இதற்காக அனுமான் சக்தி விழிப்புணர்வு இயக்கத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம்.ஆகஸ்ட் 16 ம் தேதி முதல் கிராம, தாலுகா, மாவட்ட அளவில் விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தெரியப்படுத்துவோம்.

இது தொடர்பாக நாடு முழுவதும் ஆயிரம் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். நாங்கள் தொடங்கியுள்ள அனுமான் சக்தி விழிப்புணர்வு இயக்கம் தேசிய அளவில் நடைபெறும். இதன் மூலம் இந்துக்கள் விழிப்புணர்வு பெறுவார்கள். இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும்

இந்துக்கள் எப்போதும் அமைதியையே விரும்புகிறார்கள். அயோத்தியில் இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் ராமர் கோவில் கட்டப்படும். இதற்காக நாங்கள் பாஜகவை சார்ந்து இருக்கவில்லை.

பேச்சுவார்த்தை மூலமோ சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டோ இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது.

நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து ராமர் கோவில் கட்டுவது குறித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்." என்றார்.

கஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க கஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவதற்காக பிரதமர் மன்மோகன்சிங் எடுக்கும் நடவடிக்கைகளை அவர் கண்டித்தார்.

"ஜம்மு-கஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவது பேரழிவுகளை உண்டாக்கும். காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி மேலும் கஷ்மீருக்கு சிறப்ப்பு அந்தஸ்து வழங்கும் காஷ்மீருக்கான சட்டத்தின் 370 வது பகுதியையும் நீக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

எல்லையோரப் பகுதிகளில் வாழும் ஹிந்துக்கள் வார்த்தைகளால் கூற முடியாத அளவு துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் மேலும் நான்கு லட்சம் ஹிந்துக்கள் ஜம்மு-கஷ்மீர் பகுதியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அவர் கூறினார்.

எல்லைப் பகுதிகளில் ஊடுருவல்களை தடுக்க இராணுவ கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.