தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஜனவரி, 2011

இறுதி வாக்காளர் பட்டியல்: தமிழகத்தில் 4 கோடியே 59 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள்!

சென்னை: தமிழக சட்டசபைக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 4 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 30 லட்சத்து 89 ஆயிரம் பேர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரம் பேர் ஆவர்.

இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறுகையி்ல்,

கடந்த அக்டோபர் 25ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 16 ஆயிரம் ஆகும்.

பின்னர் நடந்த திருத்தத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட 13.02 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 11.52 லட்சம் விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

வாக்காளர்களின் இடப் பெயர்ச்சி, இறப்பு மற்றும் வாக்காளர் பட்டியலில் ஒரே வாக்காளரின் பெயர் தவறாக பல்வேறு இடங்களில் இடம் பெற்றிருப்பது போன்ற காரணங்களால் 1.06 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. இறுதியாக 10.5 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் இப்போது 4 கோடியே 59 லட்சத்து 62 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 30 லட்சத்து 89 ஆயிரம் பேர். பெண் வாக்காளர்கள் 2 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரம் பேர்.

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் ர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு ஜனவரி 25ம் தேதி அந்தந்த வாக்குச் சாவடிகளில் நடைபெறும் விழாக்களில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

பொதுமக்கள் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றதா என்பதை மாநகராட்சிகளில் மண்டல அலுவலகங்களிலும், மற்ற பகுதிகளில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்றார்.

தமிழக மக்கள் தொகை 6.64 கோடியாகும். இதில் 4.59 கோடி பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநில மக்கள் தொகையில் சுமார் 71 சதவீதம் பேர் வாக்களர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் 65% வாக்குப்பதிவு:

இந் நிலையில் தமிழகத்தில் பல்வேறு உள்ளாட்சிகளில் நேற்று நடைபெற்ற இடைத் தேர்தலில் 65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையாளர் சையது முனீர் ஹோடா அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ளாட்சிகளில் 31.10.2010 வரை ஏற்பட்ட காலி இடங்களை நிரப்புவதற்கான இடைத் தேர்தல்கள் நேற்று நடைபெற்றன. ஊரக உள்ளாட்சிகளில் 114 காலி இடங்களுக்கும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 22 காலி இடங்களுக்கும் இந்த தேர்தல் நடத்தப்பட்டது.

வாக்குப்பதிவு எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சிகளில் 65 சதவீதமும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 69 சதவீதமும் வாக்குகள் பதிவாயின.

இரண்டும் சேர்த்து சராசரி வாக்குப்பதிவு 65 சதவீதம் ஆகும். ஈரோடு மாநகராட்சி 5வது வார்டில் 80 சதவீத வாக்குகள் பதிவாயின.

வாக்கு எண்ணிக்கை நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கும். ஊரக உள்ளாட்சிகளில் 89 மையங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 22 இடங்களிலும் வாக்குகள் எண்ணப்படும் என்று கூறப்பட்டுள்ளது

வியாழன், 15 ஜூலை, 2010

தமிழக அரசின் திட்டத்தால் உருது பேசும் மக்கள் கொந்தளிப்பு!

மெமொரியல் ஹாலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மெமொரியல் ஹாலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

சமச்சீர் கல்வி, கட்டாய மொழிச்சட்டம் போன்ற தமிழக அரசின் திட்டங்கள், உருது பேசும் சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட மொழிச் சிறுபான் மையினரை பெரும் கொந்தளிப் புக்குள்ளாக்கியுள்ளது.
சமச்சீர் கல்வி குறித்து முத்து குமரன் ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளில் ஒரே வகையான பாடத்திட்டம் என்பதை மட்டும் அரசு எடுத்துக்கொண்டு, உள்கட் டமைப்பு உள்ளிட்ட பல பரிந்து ரைகளை அனாதையாக விட்டு விட்டது.

பள்ளிகளில் பாகம் 1 (Part-1) எனப்படும் மொழிப்பாடத்தில் தமிழ், அல்லது அரபி, உருது, மலையாளம், கன்னடம். ஆகிய மொழிகளைப் படிக்கும் வாய்ப்பு இது வரை இருந்து வந்தது.

தமிழக அரசின் புதிய திட்டத்தில் பாகம்-1 தமிழ் மட்டுமே படிக்க முடியும், உருது, அரபி, மலையாளம் உள்ளிட்ட பிறமொழிகளைப் படி க்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.

பாகம்-1

மொழிப்பாடத்தின் நோக்கமே மாணவர்களுக்கு அவர்களின் தாய் மொழியை நன்கு பயிற்றுவிப்பது தான்.

உருது, மலையாளம், கன்னடம் இவற்றைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள், தாய்மொழி கற்ப தற்கு இருந்த வாய்ப்பைப் பறித்து, தமிழக அரசு தமிழைக் கட்டாயப் பாடமாக ஆக்கியுள்ளதால், மக்கள் பெரும் அதிர்ச்சியும், கொந்தளிப் பும் அடைந்துள்ளனர்.

“தமிழகத்தில் வசித்துக் கொண்டு தமிழ் படிக்க மாட்டோம் என்று நாங்கள் மறுக்கவில்லை. மாறாக தாய்மொழியின் வாய்ப்பைப்பறிப் பது தான் எங்களுக்கு சங்க டமாக உள்ளது. நாங்கள் தமிழை 4&ம் பாகமாக (Part-4) படிக்கத் தயாராக இருக்கிறோம்” என்கின்ற மொழிச் சிறுபான்மையினரின் குரலை எதிரொலித்தார் பேராசிரியர் அபுல்ஃ பாசல். மொழிச் சிறுபான் மையினரின் உரிமையை அரசியல் சாசனத்தின் 28, பிரிவுகள் உறுதி செய்திருக்க, தமிழக அரசு எடுத் துள்ள தடாலடி முடிவு மொழிச் சிறுபான்மையினரை அதிர வைத் துள்ளது.

மொழிச்சிறுபான்மையினரின் பிரதிநிதிகள் அரசிடம் தங்கள் பிரச்சினைகளை முன் வைத்தும் செவி சாய்க்கப்படவில்லை. இப் பிரச்சினை குறித்து கலந்தாய்வு நடத்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை திருவல்லிக்கேணி பார்ப்பியா மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டக் கூட்டத்தில் அனைத்து முஸ்லிம் அமைப் புகளின் பிரதிநிதிகள், அரசு தலைமை காஜி, ஷியா பிரிவு காஜி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

த.மு.மு.க சார்பில் கலந்து கொண்ட மாநிலச் செயலாளர் பேரா.ஹாஜாகனி மொழிச் சிறுபா ன்மையினர் மாநில மொழியா னத் தமிழை ஒரு பாடமாகப் படிக்க முன் வந்துள்ளபோது, அவர் களின் தாய்மொழியைப் படிக்கிற வாய்ப்பைத் தடுப்பது தவறானது, என்ற த.மு.மு.கவின் நிலைபாட்டை எடுத்துரைத்தார்.
பள்ளிகளில் உருது, அரபி, ஆகியன தாய் மொழிகளாய் பயில முடியா தெனில், கல்லூரி களிலும் பயில முடியாது. காலப் போக்கில் அரபி, உருது, ஆகிய மொழித்துறைகளை இழுத்து மூடுவதற்கு அரசின் திட்டம் அடி கோலியுள்ளது.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இந்து, இந்தி, இந்தியா என்ற கொள்கையைக் கொண்ட சங்பரி வார கும்பல் உருது மொழியை ஒழித்துக்கட்ட சகல சதிகளையும் செய்தனர்.



மெமொரியல் ஹாலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

மெமொரியல் ஹாலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

அல்லாமா இக்பாலின், சாரே ஜஹான்சே அச்சா, இந்தியாவின் தேசிய கீதமாக ஆகிவிடாமல் தடுத்தனர்.

இந்திப் படங்களில் உருது, வசனங்கள், பாடல்கள் வரக்கூ டாது என பால்தாக்கரே கும்பல் கலவரம் செய்தது.

உருதுவை மெல்ல நசுக்கி, ஒடுக்கும் வேலைகளை ஆரிய சக்திகள் செய்தபோது, திராவிட இயக்கங்கள் தான் மொழிச் சிறுபான்மையினருக்கு நிழல் கொ டுத்தன. இப்போது பா.ஜ.க செய்ய வேண்டிய வேலையை திமுக அரசு செய்திருப்பது மொழிச் சிறுபான்மையினரைப் பெரிதும் வேதனைபடுத்தியுள்ளது.

தி.மு.க அரசு மொழிச் சிறுபான்மையினரின் நியாயம் உணர்ந்து, காயம் அறிந்து மருந்து போடப் போகிறதா இல்லை மருத்துவம் செய்ய மறுத்துவிட்டு, வரும் தேர்தலில் காயப்படப்போகிறதா? பொறுத்திருப்போம்.

செவ்வாய், 22 ஜூன், 2010

600 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்க... தமுமுக கோரிக்கை

தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வெளியிட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
தமிழக அரசின் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் ஜூன் 27 வரை ஐந்து நாட்கள் கோவையில் நடைபெற உள்ள நிலையில் மிகமுக்கிய கோரிக்கை ஒன்றை தமிழக அரசுக்கு வைக்கின்றோம்.

தமிழக சிறைகளில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருகிறோம்.

1968ல் அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டின்போது ஆயுள் தண்டனைக் கைதிகள் முன்விடுதலை செய்யப்பட்டார்கள்.

அண்ணாவின் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறும் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இப்போது நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி 51 முஸ்லிம் கைதிகள் உட்பட 600 ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்விடுதலை செய்ய வேண்டுமென கோருகிறோம்.

அரசு சார்பில் விமர்சையோடு நடைபெறும் செம்மொழி மாநாட்டு மூலமாக இவர்கள் விடுதலையானால், மனிதநேயம் கொண்டோர் அனைவரும் தமிழக முதல்வரை வாழ்த்துவார்கள் என்பதையும் இத்தருணத்தில் கூறிக்கொள்கிறோம்.