புதன், 31 ஆகஸ்ட், 2011

அம்பலப்படுத்தப்பட வேண்டிய ஆன்மிக வியாபாரம்!

கவான் என்றும் பல மக்கள் நல திட்டங்களை செயல்படுத்திய நல்லவர் என்றும் அப்பாவி பக்தர்களால் ஒரு பக்கமும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி தந்திரங்கள் மூலம் அவர்களை ஏமாற்றித் தன்னை வளமாக்கியதோடு அரசியல்வாதிகளை வசியம் செய்து அதிகார தரகராக விளங்கியதாக மறுபக்கமும் பெரும் சர்ச்சைக்குள்ளான சாய்பாபா மரணமடைந்து சில மாதங்களாகியும் அவர் ஆசிரமத்தைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் திகில் படத்திற்கு ஒப்பாக உள்ளது.
சாய்பாபாவின் சகோதரி மகள் சைதன்யா சமீபத்தில் தன் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்றும் சாய் பாபா டிரஸ்டின் உறுப்பினர்களாலேயே தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும் கூறிய போது பாபாவை உண்மையான ஆன்மிகவாதியாக கருதிய அப்பாவி பக்தர்களுக்கு அதை நம்புவது கடினமாக இருந்திருக்கும். ஏனென்றால் உலக பற்றில் மூழ்கியிருப்பவர்களைப் பேராசை, பொறாமை போன்ற தீமையிலிருந்து விடுபட வைத்து உலக பற்றற்றவர்களாக மாற்றுவது தான் உண்மையில் ஆன்மிக வாதிகள் செய்ய வேண்டிய காரியம்.

ஆனால் நிலைமை என்னவென்றால், பக்தர்களை உலக பற்றிலிருந்து விடுபட்டு எளிய வாழ்க்கை வாழச் சொல்லும் சாமியார்கள் உலகின் மிகப் பெரும் கோடீஸ்வரர்களாய் மாறியுள்ளார்கள். பிரம்மச்சார்யமே முக்தி பெற சிறந்த வழி என்று உபதேசிப்பவர்கள் சாதாரண சம்சாரியையும் விஞ்சி தன் பக்தர்களையும் அடுத்தவர்களின் மனைவிகளையும் தன் ஆசை நாயகிகளாக அந்தப்புர தோழிகளாக மாற்றி கொள்ளும் நிலைமையையும் சர்வசாதாரணமாக பார்க்கின்றோம்.

ஏனென்றால் நவீன இந்தியாவில் ஆன்மிகம் என்பது காஸ்ட்லியான வியாபாரம் ஆகி வெகு நாட்களாக ஆகி விட்டது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி கண்ட பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்ட இந்தியர்களும், இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் உள்பட பல துறைகளிலும் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியும் ஒரு புதிய தலைமுறை மத்திய தர வர்க்கத்தை உற்பத்தி செய்தன. ஆம். ஒப்பீட்டளவில் பொருளாதார செழிப்புடன் காணப்பட்ட இவர்கள் அதற்காக எவ்வித ஓய்வும் இல்லாமல் மன உளைச்சல், டென்சன், பரபரப்பு, மனசிதைவு என உலா வந்தனர்.

இவர்களின் பலவீனத்தைப் புரிந்து ஆன்மிகத்தை இவர்களுக்கேற்ற வகையில் ஹைடெக்காக "வாழும் கலை" எனும் பெயரில் ஆரம்பித்த ரவி சங்கரின் வர்த்தக வருமானம் ஆண்டுக்கு 400 கோடியாகவும் கட்டி பிடி வைத்தியத்தைப் பிரபலமாக்கி தொலைக்காட்சி சேனல், கல்லூரி என தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய அமிர்தனாந்த மாயியின் சொத்து மதிப்பு 1200 கோடியாகவும் உள்ளது.

நம் தமிழகத்தையே எடுத்து கொள்வோம். மருத்துவமனை, கல்லூரி, உணவு விடுதிகள் என்று ஓர் ஊரையே தன் வசமாக்கி கொண்ட பங்காரு அடிகளார் ஆகட்டும், பிரம்மச்சார்யத்தை ஊருக்கு போதித்து பிரபலங்களுடன் கொஞ்சி குலவி, ‘கதவை திற காற்று வரும்’ என்று சொல்லி காற்றை மட்டுமல்ல அதை தாண்டியும் உள்ளே விட்ட நித்தியானந்தா ஆகட்டும், சங்கர்ராமன் கொலை வழக்கில் சிறைக்குச் சென்றாலும் இன்னும் மவுசு குறையாமல் இருக்கும் சங்கராச்சாரியாகட்டும், இவர்களனைவரும் சாதாரண பொதுமக்களை விட செல்வ, செழிப்புடன் உலாவருவதைப் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்.

ஆன்மிகத்தைப் போதிக்க வேண்டிய சாமியார்கள் தற்போது அரசியல் ரீதியாகவும் களம் இறங்கும் ஆபத்தைச் சந்தித்து வருகிறோம். ராஜீவ் காந்தி கொலையிலேயே சந்தேகிக்கப்பட்ட சந்திராசுவாமி முதல் 1200 கோடிக்கு மேல் சொத்து சேர்த்து தன் ஊழியர்களுக்கே சம்பளம் ஒழுங்காக தராமல் ஊழலுக்கு எதிராக போர் தொடுக்கும் ராம்தேவ் வரை இதற்கு உதாரணங்கள் நீளும். இச்சாமியார்களை இந்தளவு உச்சாணி கொம்புக்கு உயர்த்தியதில் ஊடகங்களின் பங்களிப்பையும் மறுக்க முடியாது.

தன் ரசிகர்களுக்கு ஆன்மீக பகுதியை வழங்குகிறோம் எனக் கூறி குமுதம், நக்கீரன், கல்கி போன்ற இதழ்கள் நித்யானந்தா, ஜக்கி வாசுதேவ் போன்றோரின் ஆன்மீக கட்டுரையை வெளியிட்டு ஒரு காலத்தில் நன்கு காசு பார்த்தன. காலம் மாறி காவி உடைகளின் பின்னணியிலுள்ள காமபைத்தியங்களின் முகம் வெளிச்சமானவுடன், அதே நித்யானந்தா - ரஞ்சிதா உல்லாச காட்சியைக் காண சிறப்பு சந்தா திட்டம் வெளியிட்டு வசூல் செய்தும் காசு சம்பாதித்தன சில ஊடகங்கள். எவ்வித சமூக நோக்குமின்றி தம் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அலையும் இதுபோன்ற கீழ்த்தர ஊடகங்களின் ஒத்துழைப்பின்றி, அப்பாவி மக்களை ஏமாற்றி கல்லா கட்டுவது ஆன்மீக வியாபாரம் புரியும் சாமியார்களுக்குச் சாத்தியமில்லை என்பதையும் கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது!

இப்போது சாய்பாபாவின் மறைவுக்குப் பின் சாய்பாபாவின் அறையினுள் கண்டெடுக்கப்பட்ட கிலோ கணக்கான தங்கங்களும், கோடிக்கணக்கான ரூபாய்களும், வண்டியில் கடத்தி செல்லப்பட்ட கோடிகளும் சாமியார்களின் வெளிப்படையற்ற தன்மையையும் அப்பாவி மக்களைப் பக்தி என்ற பெயரில் ஏமாற்றிக் கோடிகளைச் சுருட்டும் அவர்களின் உண்மையான முகத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. பக்தர்களிடமிருந்து முறைகேடாக இவர்களால் பிடுங்கப்பட்ட வரிகட்டப்படாத இந்தக் கறுப்புப் பணத்தை கைப்பற்ற வேண்டிய அரசாங்கங்களோ சாமியார்களின் ட்ரஸ்ட்களுக்கு அணுசரணையாய் நடந்து கொள்கிறது.

மத சார்பின்மை நாட்டின் அரசியல்வாதிகள் சாமியார்களின் காலில் விழுவதும், அவர்களின் விழாக்களில் அரசு விமானங்களைப் பயன்படுத்தி கலந்து கொள்வதும் நமக்கு தெரிந்த ஒன்றே. பகுத்தறிவு பேசும் பகலவன்களும் இதற்கு விதிவிலக்கில்லை என்பது தான் வேதனையான செயல். தங்களுக்குக் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களில் சில இலட்சங்களை தர்ம காரியங்களுக்குச் செலவு செய்து மக்களின் குறை தீர்க்கும் அவதாரங்களாக காட்டி கொள்கின்ற காரணத்தால் தான் இச்சாமியார்கள் மாட்டி கொண்டாலும் மவுசு குறையாமல் இருக்கின்றனர்.

மனிதனை நெறிப்படுத்த ஆன்மிகம் அவசியமே. அதே சமயம் மனிதனை நெறிப்படுத்துகிற ஆன்மிகத்தைப் பயன்படுத்தி வியாபாரம் செய்யும் போலி ஆன்மிகவாதிகள் அடையாளப்படுத்துப்படுவதும் அவசியம். வாயில் லிங்கத்தை எடுத்து மேஜிக் காட்டும் சாமியார்களானாலும், சாம்பிராணி புகை போட்டு குறை தீர்ப்பதாக சொல்லும் தர்கா பாபாக்களானாலும், மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம் அருளாசியினாலேயே குணமாக்கி விடுவேன் என்று சொல்லும் தினகரன்களானாலும், எம்மதத்தைச் சார்ந்தவர்கள் ஆனாலும் மக்கள் இவர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அரசியல்வாதிகளும் தங்கள் சுயநலத்துக்காக இவர்களை ஊக்குவிக்காமல் ஒரு அடி தள்ளி நிற்க வேண்டும். மக்களுக்காக பேனாவை கொண்டு போராட வேண்டிய ஊடகத்துறை, தங்கள் வியாபாரத்தை மையப்படுத்தி இயங்காமல் சமூக அக்கறையோடு இத்தகைய ஆன்மிக வியாபாரிகளின் உண்மையான முகத்தை மக்களிடத்தில் தோலுரிக்க வேண்டும். இவற்றிற்கு எல்லாம் மேலாக மக்களும் தங்கள் பிரச்னைகளை தங்களைப் போன்ற இன்னொரு மனிதனால் தீர்க்க முடியாது என்பதை உணர்ந்து உண்மையான ஆன்மிகத்தைக் கடைப்பிடித்தால் இத்தகைய களைகள் பிடுங்கியெறியப்படுவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

பரபரப்பான வாழ்க்கையில் லட்சக் கணக்கில் பணம் சம்பாதித்தும் நிம்மதி, மகிழ்ச்சி இல்லாமல் இது போன்ற பெண் பித்தர்களிடமும், மோசடிப் பேர்வழிகளிடமும் சென்று ஏமாறும் அப்பாவி பொதுமக்கள், அரசு மருத்துவமனையில் அடிபட்டு கிடப்பவனிடம் ஒரு கிலோ பழம் வாங்கிக் கொடுத்து அவனிடம் இன்முகத்துடன் நலம் விசாரிக்கும் போது அவன் முகத்தில் தெரியும் மலர்ச்சியில் கிடைக்காத நிம்மதியா, இந்தப் பெண்பித்தர்களிடமும் ஏமாற்றுப்பேர்வழிகளிடமும் கிடைத்து விடப் போகிறது என்பதைச் சிந்தித்து உணரவேண்டும்.

ஒரு ஏழை மாணவனின் கல்விக்கு உதவி; பசியோடு இருப்பவனுக்கு ஒருவேளை வயிறார உண்ண உணவு; சாலையில் அடிப்பட்டு கிடப்பவனுக்கு இயன்ற சிறு உதவி; இப்படி எண்ணற்ற அறக்காரியங்களில் கிடைக்கும் நிம்மதியினையும் மகிழ்ச்சியையும் அனுபவித்தறியாமல், நிம்மதியைத் தேடி என்ற பெயரில் ஆன்மிக வியாபார சாமியார்களைத் தேடிச்சென்று நம் பணத்தை வாரியிறைப்பதன்மூலம் அவனின் மோசடிப் பித்தலாட்டங்களுக்கு ஒரு வழியில் நாமும் காரணமாகிறோம் என்பதை மட்டும் மறந்து விடலாகாது!
தேங்க்ஸ் : http://www.inneram.com/2011062517493/religious-business

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

அன்னா அசாரே; பொறக்கும்போதே கிழவனாதான் பொறந்தாரோ!

இதெல்லாம் காந்தி காலத்திலேயே பாத்துட்டோம்.. புதுசா எதவாது ட்ரை பண்ணுங்கப்பா...

வே.மதிமாறன் பதில்கள்


அன்னா அசாரே பற்றி நீங்கள் எழுதவில்லையே?

-ஸ்ரீதர், சென்னை.

காங்கிரஸ் அரசின் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க சொல்லி எந்த பி.ஜே.பி ஆதரவு முதலாளி பணமாகவோ, பொருளாகவோ அல்லது புகழாகவோ (விளம்பரம்) லஞ்சம் கொடுத்திருப்பான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன், அதானாலதான் உடனே எழுத முடியல.

டிஜிட்டல் பேனர்கள் வந்ததுக்குப் பிறகு, ஒரு குறிப்பிட்ட பகுதியில் மூனே நாளில் ஒருத்தர் பிரபலமாகி, தலைவராகவும் ஆகிவிடுவதுப்போல், வெறும் ஊடகங்கள் மூலமாக மூனே மாசத்துல பெரிய தலைவராயிட்டாரு இந்த இந்தியன் தாத்தா.

என்னமோ இந்தியாவுல ஊழல் நாலுமாசமாத்தான் நடப்பதுபோல், இவ்வளவு நாள் சும்மா இருந்துட்டு, இப்போ தீடிருன்னு ஊழலுக்கு எதிராக சோர்ந்து படுத்திருக்கிறார் இந்த தாத்தா.

ஒரு வேளை நாலு மாசத்துக்கு முன்னாலதான் பொறந்தாரோ, அப்போ பொறக்கும்போதே கிழவனாவே பொறந்துட்டாருபோல.

குறிப்பு:

சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து தப்பிக்க நீதிபதியிடம் பேரம் பேசிய ஜெயெந்திரன், உண்ணாவிரதத்தை முடித்து வைத்தால் பொருத்தமாக இருக்கும்

நன்றி : வே.மதிமாறன்

http://mathimaran.wordpress.com/2011/08/25/431/

.

இராமநாதபுரம் பாதாளச் சாக்கடைத் திட்டம் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் சட்டபேரவையில் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கடந்த 25.08.2011 சட்டபேரவையில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா எழுப்பிய வினா

முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமநாதபுரம் நகரத்திற்குப் பாதாளச் சாக்கடைத் திட்டம், சென்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே, 2005ல் அந்த திட்டம் தொடங்கப்பட்டு, கடந்த திமுக ஆட்சியிலே பணிகள் சரிவர செய்யாத நிலையிலே, இப்போது மழை பெய்யக்கூடிய நேரத்திலே இராமநாதபுரம் போவதற்கே எனக்கு பயமாக இருக்கிறது. ஏனென்றால் நகரத்தில் பல்வேறு இடங்களிலே வெள்ளக்காடாக ஆகக்கூடிய ஒரு சூழல் இந்த பாதாளச் சாக்கடைத் திட்டம் போர்க்கால அடிப்படையிலே இராமநாதபுரம் நகரத்திலே விரைந்து முடித்தால் இந்த நிலை சீராகும் அதற்கு அரசு ஆவன செய்யுமா என்று உங்கள் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.

மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.பி.முனுசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இராமநாதபுரம் தொகுதியினுடைய மாண்புமிகு உறுப்பினர் அவர்கள், ஏற்கெனவே முன்தைய ஆட்சியிலே துவக்கப்பட்ட அந்த பாதாள சாக்கடைத் திட்டம் இன்னும் கூட முடிவு பெறவில்லை என்று சொன்னார்கள். அதோடுமட்டுமல்லாமல், அங்கு செல்வதற்கே பயமாக இருக்கிறது என்ற ஒரு கருத்தையும் மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் சொன்னார்கள். மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில் தமிழகத்தில் எல்லா இடத்திற்கும், எந்த நேரத்திலும் தைரியமாகச் செல்லாம், அதற்கேற்றத் திட்டங்களைத்தான் முதலமைச்சர் அவர்கள் கொண்டுவரயிருக்கிறார்கள்(மேசையைத் தட்டும் ஒலி) மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய உணர்வுகளுக்கு ஏற்றவாறு விரைவாக இராமநாதபுரம் நகரத்தினுடைய பாதாள சாக்கடைத் திட்டம் முடிக்கப்படும் என்பதை மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விவசாயக் கடனுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் - அஸ்லம் பாஷா எம்.எல்.ஏ



அ.அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நடத்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலே, புதிதாக உருவான ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பளித்த என் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். என் வெற்றிக்கு அயராது உழைத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும், மனிதநேய மக்கள் கட்சியினருக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் என் வெற்றிக்கு அயராது உழைத்த தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய குடியரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் முதலிய கட்சிகளின் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

2011-12 ஆம் ஆண்டு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மானியக் கோரிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளதை, மனிதநேய மக்கள் கட்சி மனதார வரவேற்கின்றது.

மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, கடந்த திமுக ஆட்சியிலே, ரமலான் மாதத்திலே பள்ளிவாசலில் கஞ்சி காய்ச்சுவதற்கு தேவையான அரிசி, ரமலான் நோன்பு ஆரம்பித்த 10 நாட்களுக்குப் பிறகுகூடப் கிடைத்துக் கொண்டிருந்தது. நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய நல்லாட்சியிலே நோன்பு ஆரம்பிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே அரிசி வழங்கவேண்டுமென்ற ஆணையைப் பிறப்பித்திருப்பதற்கு (மேசையைத் தட்டும் ஒலி) மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோன்று, நேற்றையதினம் நடைபெற்ற தொழில் துறை மானியக் கோரிக்கையிலே, ஆம்பூர் கூட்டுறவுச் சர்க்கரை ஆலையில் உள்ள இயந்திரங்களைப் பராமரிப்பதற்காக 48 இலட்சம் வழங்கியதற்கு என் சார்பாகவும், தொகுதி மக்களின் சார்பாகவும், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவிலே எங்கும் இல்லாத அளவிற்கு தமிழகத்திலே கடந்த 5 ஆண்டுகளாக ஒரு கோமா ஆட்சி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலே அந்த கோமா ஆட்சியை மக்கள் தூக்கியெறிந்துவிட்டு, இன்றைக்கு ஒரு நல்லாட்சியைத் தமிழகத்தில் தந்திருக்கின்றார்கள், சிறப்பான ஆட்சியை நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் தந்து கொண்டிருக்கிறார்கள். அவருடைய நல்ல ஆட்சியிலே இந்தக் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மிகச் சிறப்பாகச் செயலபடுகிறது என்பதை நான் வரவேற்கிறேன். அவற்றில் விவசாயிகளுக்குப் பயிர்க் கடன், தொடங்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் வழங்க 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கும், முதலீட்டுக் கடன் 300 கோடி ரூபாய் அளவிற்கும் வழங்கத் திட்டமிட்டுள்ளதை மனிதநேய மக்கள் சார்பாக வரவேற்கிறேன். விவசாயிகளுக்குக் கடன் அட்டை வழங்கும் திட்டம் 2011-12 ஆம் ஆண்டில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் தானிய ஈட்டுக் கடனாக 100 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளதை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரவேற்கிறேன். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் பூ வணிகம், காய்கறிகள், பழங்கள், பெட்டிக் கடை நடத்துதல் போன்ற தொழில்களைச் செய்ய சிறு வணிகர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க இத்திட்டத்தில் 125 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதை மனமார வரவேற்கிறேன்.

சுய உதவிக் குழுக்களுக்குக் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன் திட்டம், பணிபுரியும் மகளிர் கடன் திட்டம் போன்றவை வரவேற்கத்தக்கது. கொள்முதலை அதிகரிக்கும் நோக்கத்துடன் காவிரிப் பாசனப் பகுதியல்லாத இடங்களில் உள்ள விவசாயிகளின் நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்க உதவும் நோக்கத்துடன் காஞ்சிபுரம், வேலூர், மதுரை, இராமநாதபுரம்,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளதை வரவேற்கிறேன். விவசாயிகளுக்குத் தரமான விதை இன்றியமையாததைப்போல், இடுபொருளும் முக்கியமானதாகும். நெல்லை தவிர, பருப்புவகைகள் எண்ணெய் வித்துக்கள், தானிய வகைகள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றின் தரமான விதைகள் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் விற்க 41 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக வரவேற்கிறேன்.

அதேசமயம், தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள (Joint registrar, Deputy registrar Co-operative register) போன்ற பதவிகளை நிரப்பி, கூட்டுறவுச் சங்கங்கள், வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் சிறப்பாகச் செயல்பட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போது கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிலவள வங்கிகள் நகை; கடன்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இவ்வங்கிகளில் விவசாயத்திற்குக் கடன் வழங்க முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கிராமப்புறங்களில் இருக்கும் விவசாயிகள், கிராமப்புறங்களில் இருக்கும் இவ்வங்கிகளைச் சிறப்பாகப் பயன்படுத்த முன்வர வேண்டுமென்றால், அவர்களுக்கு விவசாயக் கடன் வழங்க வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயக் கடன்கள் பெறுவதற்குப் பதிலாக, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவதற்கு விவசாயிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும், நிலவள வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் இலாபத்தில் இயங்க, அதிக அளவில் விவசாயக் கடன்கள் கொடுக்கப்பட வேண்டும்.

பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிலவள வங்கிகளுக்குச் சொந்தக் கட்டடங்கள் இல்லை என தெரிவித்துக்கொள்கிறேன்.

போலி குடும்ப அட்டைகளை பறிமுதல் செய்ய வேண்டும்-ஆம்பூர் MLA அஸ்லம் பாஷா வலியுறுத்தல்



.அஸ்லம் பாஷா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முக்கிய குறிக்கோள் அனைவருக்கும் அனைத்துப் பொருட்களும் கிடைப்பதே, ஆனால் அரிசி, சர்க்கரை தவிர மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு வகைகள் அனைத்தும் குடும்ப அட்டைகளுக்குச் சரியாகக் கிடைப்பதில்லை. இதை சரிசெய்ய அரசு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

புதிய குடும்ப அட்டைகள் 2005ல் வழங்கப்பட்டன. ஆனால் 2009ல் ஆண்டு திமுக ஆட்சியிலே திடீரென்று ஆய்வு செய்கின்றோம் என்ற பெயரிலே உண்மையான குடும்ப அட்டைகளெல்லாம் இரத்து செய்யப்பட்டு போலியான குடும்ப அட்டைகளையெல்லாம் உண்மையான குடும்ப அட்டைகளாக இன்றைக்கு பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு திமுக கவுன்சிலர் வீட்டிலும் 100 கார்டுகள், 150 கார்டுகள் இன்றைக்கும் கூட இருக்கின்றன. ஆகவே தமிழக அரசு இந்தப் போலியான குடும்பக் கார்டுகளை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டுமென்று நான் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். போலி குடும்ப அட்டைகளைப்பற்றி தகவல் கொடுக்கின்றவர்களுக்கு தற்போது ரூ.500 சன்மானமாக வழங்கப்படுகிறது. அதை ரூ.1000 ஆக உயர்த்த வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

கிராமப்புறங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளை ஒருவரே கவனிக்கும் நிலை உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். ஒரு கடைக்கு ஒருவரே பொறுப்பு என்ற நிலையை கடைப்பிடிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். ரேஷன் பொருட்களின் எடை அளவைச் சரியாகப் பராமரிக்க அரசு ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.


மாண்புமிகு முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ரேஷன் கார்டுகள் பற்றி உணவுத் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது நடப்பில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிகிறது. தற்போது குடும்ப அட்டைகள் வழங்கும் முறையில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயரைப் பதிவு செய்தால்இ அதைக் கண்டுபிடிக்க வழிவகை இல்லை.

இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் குடும்ப அட்டைகளில் ஒரே நபர் பெயர் இடம் பெறும் நிலையும் போலி குடும்ப அட்டைகள் வழங்கப்படும் நிலையும் உள்ளது. மேலும் நியாய விலைக் கடைகளுக்கு பொருள் பெற வராத குடும்ப அட்டைகளுக்கும் கடைப் பணியாளர்கள் போலி பட்டியலிடும் நிலை உள்ளது.

இப்பிரச்னையைக் களைய தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக உடற்கூறு பதிவு முறையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பு மக்களின் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண் பாவையை பதிவு செய்து பிரத்யேக அடையாள எண் வழங்கும் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் அந்த தகவல் தொகுப்பைப் பயன்படுத்தி மின்னணு குடும்ப அட்டை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் தொகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும் முறை உள்ளதால் ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளில் பதிவு செய்யும் நிலை மற்றும் போலி குடும்ப அட்டைகள் வழங்குதல் போன்றவை களையப்படும்.

மேலும் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் பெற வரும் குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே பட்டியலிட முடியும். போலி பட்டியலிடுவது களையப்படும். எனவே தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாகஇ மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வரும் 2012-13ம் ஆண்டில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மசூதி இடிக்க இந்து முன்னணி முயற்சி: வகுப்பு கலவரம் மூளும் அபாயம்!

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மசூதி ஒன்றை இடிக்க முயற்சி நடப்பதால், அப்பகுதியில் வகுப்பு கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் என்ற கிராமம் உள்ளது. இங்கு 1950ம் ஆண்டுக்கு முன்னால் முஸ்லிம் சமுதாயத்தினர் பெருவாரியாக வசித்து வந்தனர். அந்த நேரத்தில் ஏற்பட்ட தொற்று நோயின் காரணமாக ஏராளமான முஸ்லிம்கள் ஊரைக் காலி செய்து பல்வேறு ஊர்களுக்க்ச் சென்று விட்டனர். அப்போது அவர்கள் விட்டுசென்ற 76 ஏக்கர் நிலம் தற்போது பெருவாரியாக அபகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்குச் சொந்தமான ஒரு மசூதியும் இப்பகுதியில் உள்ளது. இந்த மசூதி காலப்போக்கில் பாழ‌டைந்து போனது.

இந்நிலையில் அந்த ஊரில் தற்போது வசிக்கும் 6 முஸ்லிம் குடும்பத்தினர் மசூதியைப் புனரமைப்பதற்காக பஞ்சாயத்தில் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் பஞ்சாயத்து அனுமதி கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் பாப்புலர் ப்ரன்ட் என்ற இஸ்லாமிய இயக்க நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டனர். உடனடியாக பாப்புலர் ப்ரன்ட் அம்மசூதியை ட்ரஸ்டின் கீழ் பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மசூதி புனரமைக்கும் பணியில் ஈடுபடவே அப்பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் மசூதி இருக்கும் நிலத்தை உரிமை கொண்டாடினார். பஞ்சாயத்திடம் அனுமதி கேட்காமல் மசூதி கட்டப்பட்டுள்ளதால் உடனடியாக அதனை இடிக்க வேண்டும் என பஞ்சாயத்திடம் புகாரும் கொடுத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபருக்கு இந்து முன்னணி தன் ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது இப்பிரச்சினையை பூதாகரமாக்கவே அப்பகுதியில் வகுப்பு கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. "மசூதியினைப் பஞ்சாயத்து நிர்வாகம் இடிக்காவிட்டால் நாங்கள் இடிப்போம்" என இந்து முன்னணியினர் அறிவித்துள்ளதால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.