வியாழன், 8 செப்டம்பர், 2011

10 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்- பேரவையில் மமக வலியுறுத்தல்

2011-12 ஆம் ஆண்டிற்கான சிறைத்துறை மானியக் கோரிக்கையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா சட்டபேரவையில் பேசியது:

முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, "The degree of civilization in a society can be judged by entering its prisons" என்று மேலைநாட்டு அறிஞர் சிறைச்சாலைகளைப் பற்றி குறிப்பிட்டார். இந்த அடிப்படையில் 'சிறைச்சாலைகள் மேலாண்மை' என்பது ஒரு ஜனநாயக நாட்டில் மிக முக்கிய பங்காக வகிக்கின்றன. இந்த மேலாண்மையை சிறப்பான முறையில் நம்முடைய முதலமைச்சர், தலைமையிலான இந்த ஆட்சியில் சிறப்பாகச் செய்து வருவதை சிறைத் துறை மானியக கோரிக்கையின் கொள்கை விளக்க குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.

தனது கைதிகளைச் கருணையுடனும், அன்புடனும் நடத்தாத ஒரு சமூகத்தை நாகரீக சமூகம் அங்கிகரிக்க இயலாது சிறைவாசிகளுக்குரிய அடிப்படை உரிமைகளையும், மனித உரிமைகளையும் வழங்காத வரையில் ஒரு சமூகம் தன்னை நாகரீக சமூகமாகக் கருத இயலாது. ஒரு சிறைவாசி, அவர் விசாரணைக் கைதியாக இருந்தாலும் சரி, தண்டனைக் கைதியாக இருந்தாலும் சரி, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் மனிதர் என்ற தகுதியை இழந்துவிடுகிறார் என்று கருதிவிடக் கூடாது. சிறையில் இருக்கும் ஒருவர் அரசியல் சாசன சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமைகளைத் தொடர்ந்து அனுபவிப்பதற்குத் தகுதியுடையவராகிறார்.

சிறைச்சாலை என்பது ஒரு சீர்திருத்த கூடம், அந்தக் சீர்திருத்தப் பள்ளியில் பல ஆண்டுகள் கழித்தவர்கள் வாழ்நாள் முழுவதும் அங்கேயே கழிக்க வேண்டுமென்று கருதுவது நியாயம் இல்லை எனவேதான், தமிழகத்தில் மட்டுமல்ல, மராட்டியம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மாநில அரசுகள் ஆயள் தண்டனைக் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலைச் செய்கின்றன. தமிழகத்திலும், பேரறிஞர் அண்ணா அவர்கள் உட்பட பெருந்தலைவர்களின் பிறந்தாளின்போது ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு அரசியல் சாசனச் சட்டத்தின் 161ஆம் பிரிவின் அடிப்படையில் தமிழக அரசு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் முந்தைய திராவிட முன்னேற்ற கழக அரசு அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு 1405 ஆயுள் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு அளித்து விடுதலைச் செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் ஒர் அறிவுரையை அதாவது மாநில அரசு கைதிகளை விடுதலைச் செய்யும் போது எந்தவிதமான பாரபட்சமும் காட்டக்கூடாது ஒரு கைதிக்கு ஒரு விதிமுறை வகுக்கப்பட்டால் அதுதான் எல்லா கைதிகளுக்கு பொருந்தும் என்று ஹரியானா அரசு தொடுத்த ஒரு வழக்கிலே உச்ச நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு ஒரு தீர்பை வழங்கியுள்ளது.

ஆனால் அந்தத் தீர்ப்பில் கொடுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கு மாறாக, மதுரையிலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சிறந்த கவுன்சிலராக விளங்கிய தோழி லீலாவதியை படுகொலை செய்தார்கள். அந்தப் படுகொலை வெறும் ஆயுதத்தால் செய்யப்பட்டாலும் கூட அதுவும் ஒரு பயங்கரவாத செயல்தான், அந்தப் படுகொலையை செய்த கைதிகளை விடுதலைச் செய்ய வேண்டுமென்பதற்காக, அதுவரை 10 ஆண்டுகள் சிறைத்துறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டார்கள் ஆனால், லீலாவதி அம்மையாரைக் கொன்றவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்பதற்காக 10 ஆண்டுகள் 7 ஆண்டுகளாகக் குறைத்து அவர்களையெல்லாம் விடுதலை செய்வதற்கு வழி வகுத்த தி.மு.க. அரசு, சிறுபான்மையின மக்களினுடைய பாதுகாவலன் நாங்கள்தான் என்று சொல்லக்கூடிய கருணாநிதி அரசு, இதேபோன்ற குற்றச்சாட்டுகளிலே கைதாகி 10 ஆண்டுகளல்ல 13 ஆண்டுகள் சிறையிலிருந்தவர்களை விடுதலை செய்ய முடியாது என்று பாரபட்சத்தை காட்டியது. இதற்கு எடுத்துக்காட்டாக நான் சொல்ல வேண்டுமென்றால், 2007 ஆண்டில் கூட 10 ஆண்டுகள் சிறையிலே இருந்தவர்களை தி.மு.க. அரசு விடுதலை செய்தது.

ஆனால் திருச்சி சிறையிலிருந்த ஜாகீர் உசேன், அபுதாஹீர் என்ற 2 பேர், 13 ஆண்டுகள் அப்போதே சிறைவாசம் அனுபவித்திருந்தாலுங்கூட, அவர்களை விடுதலை செய்ய மாட்டேன் என்ற பாரபட்சப் போக்கை தி.மு.க. அரசு கடைபிடித்தது என்பதை நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது ஒரு மனிதனை பல்வேறு வகையில் பக்குவப்படுத்திவிடும். இவர்களில் பலர் பல்வேறு கொடிய நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவைச் சிறையில் இருக்கும் அபுதாகீர் என்று கைதியின் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, டயாலிசிஸ் செய்து மோசமான நிலையில் இருக்கின்றார். 55 வயதைக் கடந்த பலர் இன்னும் பல நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் விஷயத்திலே வரலாற்று சிறப்புமிகுந்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நான் இந்த நேரத்திலே மிக முக்கியமான வேண்டுகோள் ஒன்றினை வைக்க விரும்புகிறேன்.

பேறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் தமிழக மக்களுக்கு பயனளிக்ககூடிய பல்வேறு சமூக நலத் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கான விழாக்களை இந்த அரசாங்கம் நடத்தப் போகின்றது. இந்த தருணத்திலோ அல்லது காந்தியடிகள் பிறந்த நாளிலோ அல்லது பாரத ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நாளிலோ 10 ஆண்டு சிறை தண்டனை முடித்திருக்கக்கூடிய அனைத்து கைதிகளையும் எந்தவிதமான பாரபட்சமும் பார்க்காமல் அவர்கள் எந்தச் சார்தவர்களாக இருந்தாலும் சரி, எந்தக் குற்றச்சாட்டுக்காக உள்ளேயிருந்தாலும் சரி, அவர்களை விடுதலைச் செய்தவற்கு இந்த அரசு ஆவன செய்ய வேண்டுமென்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பரோவில் செல்லும் சிறைவாசி தவிர்க்க இயலாத காரணங்களினால் குறிப்பிட்ட நாளில் சிறைக்குத் திரும்பி வர இயலாமல் ஒரிரு நாட்கள் தாமதம் ஏற்படுவிட்டடால் கூட பொது மன்னிப்பில் அவர்கள் விடுவிக்கப்படுவது கிடையாது. மனிதாபிமான அடிப்படையில் அவர்களையும் பொது மன்னிப்பில் விடுவிக்க இந்த அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நீதிமன்றத்திலே மேல் முறையீடு வழக்குகள் ஆண்டுக் கணக்கிலே நீடித்துக்கொண்டுப் போகக்கூடிய நிலையிலே, நீதிமன்றத்தில் விடுதலையாகக்கூடிய ஒருவருக்கு பரோவில் செல்ல அனுமதி கிடையாது. மேல் முறையீடு செய்திருக்கக்கூடிய ஒருவருக்கு கிடையாது என்பது நியாயமற்றதாகும். எனவே, அத்தகையாவர்களுக்கு பரோல் அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.(மணயடிக்கப் பெற்றது) மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்னும் இரண்டே நிமிடத்தில் உரையை முடித்துவிடுகிறேன்.

விசாரணை சிறைவாசிகளின், உறவினர்கள் இறந்துவிடும்போது அவர்களது இறுதிச் சடங்கில் பங்கொள்வதற்காக, சிறைவாசிகள் நீதிமன்றத்தை நாடி பரோல் பெறும் நிலையுள்ளது. இதற்குச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, பரோல் வழங்கக்கூடிய அதிகாரத்தை சிறை கண்காணிப்பாளருக்கு வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

புழல் சிறைச்சாலையில் மூன்று அலகுகள்தான் இருக்கின்றன. அங்குள்ள கைதிகள், அதாவது அவர்களுக்கு உடல்நலம் குன்றிவிட்டால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு புதுப்பேட்டையிலிருந்து ஆயுத காவல் படை வர வேண்டிய நிலை இருக்கின்றது.

இதற்குமாறாக, ஆயுத காவல் படையினுடைய ஒரு பிரிவை புழல் சிறையில் அமைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

பள்ளிக்கூட மாணவர்களுக்கெல்லாம் கால்சட்டைப் பதிலாக, முழுகால் சட்டை வழங்கிய மனிதாபிமானம் மிகுந்த இந்த அரசு தண்டனை கைதிகளுக்கும் முழு கால்சட்டை வழங்குவதற்கு ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

1996ஆம் ஆண்டு நம்முடைய மாண்புமிகு முதல்வர் அவர்கள் சிறையில் இருந்தபோது, அவர்களுக்கு உதவி செய்தார்கள் என்பதற்காக வேண்டி மத்திய சிறைச்சாலை அலுவலர் ராஜேந்திரன் உட்பட பல அதிகாரிகளை தி.மு.க. அரசு பழி வாங்கியது. அவர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்திலே மின்தூக்கி (Lift) வசதியை ஏற்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, விடைபெறுகிறேன்.

ஈரானில் போதை மருந்து கடத்திய 184 பேருக்கு மரண தண்டனை!

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் போதை மருந்து கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்களுடன் சேர்த்து போதை மருந்து கடத்தியமைக்காக இந்த ஆண்டில் மட்டும் 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மரணதண்டனைக்கு உள்ளானோரின் பெயர் விவரம் ஹமீத் கே, காசிம் பி, உசைன் ஜே, சியாமக் எம் என்று அரசு தெரிவிக்கிறது. இந்த ஆண்டில் இதுவரை 184 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

உலகிலேயே சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில்தான் அதிகம் பேருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

கடந்த ஆண்டு இது 179 ஆக இருந்தது. ஆனால் இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் உண்மையல்ல இவற்றைவிட அதிகம் பேர் மரண தண்டனைக்கு உள்ளாகின்றனர் என்று மனித உரிமைகள் அமைப்பு கூறுகிறது.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட மரண தண்டனை அவசியம், எங்கள் நீதிமன்றங்களில் விரைவாகவும் விரிவாகவும் விசாரணை நடத்திய பிறகே மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது என்று ஈரானிய அரசு விளக்கம் அளிக்கிறது.

கொலை, பாலியல் பலாத்காரம், ஆயுதம் தாங்கியவர்கள் நடத்தும் கொள்ளை, போதை மருந்து கடத்தல், கள்ளத் தொடர்பு ஆகிய குற்றங்கள் புரிந்தால் நீதிமன்றத்தால் நன்கு விசாரிக்கப்பட்டு பிறகே மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்கிறது ஈரான்.

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

2.5 லட்சம் பொறியியல் மாணவர்களை வேலைக்கு எடுக்கும் ஐடி நிறுவனங்கள்- ஆளெடுப்பு தொடங்கியது

சென்னை: முன்னணித் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களின் கேம்பஸ் இன்டர்வியூக்கள் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டு 2.5 லட்சம் பேரை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலைக்கு எடுக்கப்பட்டனர். இந்த நிலையில் கூடுதலாக 50 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டு வேலை கிடைக்கவுள்ளது.

வழக்கமாக கடைசி செமஸ்டரின்போதுதான் கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்தமுறை 7வது செமஸ்டரிலேயே கேம்பஸ் இன்டர்வியூவை ஏற்பாடு செய்துள்ளன ஐடி நிறுவனங்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பல நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூக்களை தொடங்கி, பலருக்கு ஆபர் லெட்டர்களையும் கூட கொடுக்க ஆரம்பித்து விட்டனவாம்.

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 702 மாணவர்களுக்கு டிசிஎஸ்ஸில் வேலை கிடைத்து நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல வேலம்மாள் குழும பொறியியல் மாணவர்கள் 515 பேருக்கும் வேலை கிடைத்துள்ளது. சாய்ராம் குழும கல்லூரி மாணவர்கள் 500 பேர், ஆர்எம்கே கல்லூரி மாணவர்கள் 645 பேருக்கும் வேலை கிடைத்துள்ளது.

அதேபோல காக்னிஸன்ட் நிறுவனம், சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 807 பேரைத் தேர்வு செய்துள்ளது. அதேபோல கோவை பி.எஸ்ஜி கல்லூரி மாணவர்கள் 703 பேரையும் இது தேர்வு செய்துள்ளது.

சேலம் சோனா கல்லூரியைச் சேர்ந்த 417 பேருக்கு அசன்ஜரில் வேலை கிடைத்துள்ளது.

அமிட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 700 பேரை விப்ரோ வேலைக்கு எடுத்துள்ளது.

வழக்கமாக அதிக அளவிலான இளம் பொறியயாளர்கள் ஐடி வேலைகளில் சேருவது ஆந்திராவில்தான். அங்கு ஆண்டுக்கு 2 லட்சம் பேர் சேருகின்றனர். அடுத்த இடம் தமிழகத்துக்கு. தமிழகத்திலிருந்து ஐடி வேலையில் சேருவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 1.8 லட்சாகும். கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து ஆண்டுக்கு 80 ஆயிரம் பேர் வரை சேருகின்றனர்.

அதிக அளவில் ஆட்கள் எடுக்கப்படும்போதிலும் கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட சம்பள விகிதமே இந்த ஆண்டும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். ஆண்டுக்கு ரூ. 3 முதல் 3.25 லட்சம் குறைந்த சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புது மணப்பெண் மர்மமான முறையில் உடல் கருகி சாவு!

மன்னார்குடி: மன்னார்குடியில் திருமணமான ஓராண்டிற்குள் மணப்பெண் மர்மமான முறையில் தீயில் கருகி இறந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் நூர் முகம்மது (68). இவர் நூர் என்ற பெயரில் மளிகை கடை மற்றும் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் ஜாபர் அலிக்கு கடந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். திருமணம் ஆன 15 நாட்களில் அந்த பெண் ஜாபரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

இதனையடுத்து கடந்த ஓராண்டுக்கு முன் ஒரத்தநாட்டை சேர்ந்த ஷேக் அலாவுதின் என்பவரின் மகளான நஜிதாபேகம் (16) என்ற பெண்னை ஜாபர் அலிக்கு திருமணம் செய்து வைத்தனர். நேற்று காலை எட்டு மணியளவில் நஜீதாபேகம் பாத்ரூமில் தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடப்பதாக மாமனார் நூர் முகம்மது மன்னார்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மன்னார்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு திருமணமாகி ஓரு வருடமே ஆவதால் மன்னார்குடி ஆர்.டி .ஓ., சவுந்திரராஜன் இது குறித்து விசாரணை மேற்கொண்டார்.அப்போது நஜிதாபேகத்தின் தந்தை ஷேக்அலாவுதின், எனது மகளை அடித்து உதைத்து தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் எனது மகளின் மாமனார் நூர்முகம்மது ஈடுபட்டுள்ளார். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதறினார். இந்த வழக்கு குறித்து காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 5 செப்டம்பர், 2011

காவல் துறையினரின் அராஜகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தஃவா சென்டரில் சட்டத்திற்குட்பட்டு இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்று இஸ்லாமிய அடிப்படைக் கல்வியை கற்றுக் கொண்டிருந்த சகோதரி ஆயிஷா சித்திக்கா என்ற மாணவியை கடந்த 27-ந் தேதி (சனிக்கிழமை) ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் திரு. பார்த்திபன் அவர்கள் தலைமையில் வந்த காவல்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக இரவு நேரத்தில் தஃவா சென்டருக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்தது மட்டுமல்லாமல் தஃவா சென்டர் நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியும் அவர்கள் மீது அநியாயமாக F.I.R போட்டு விடுவேன் என்று மிரட்டியும் உள்ளார்,

மேலும் கண்ணியமாக ஃபர்தா அணிந்த அந்த மாணவியை பெண் போலீசார் நீ இதற்கு முன்னர் பர்தா போட்டிருந்தாயா? என்று ஆரம்பித்து தரக்குறைவாக நடத்தியுள்ளார். தற்போது அழைத்துச் சென்ற மாணவி ஆயிஷா சித்தீக்கா எங்கு உள்ளார்? அவர் என்ன ஆனார்? காவல்துறை அவரை எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்று விபரங்கள் இன்றுவரை வெளியிடவில்லை.

எனவே காவல்துறையின் இதுபோன்ற அத்துமீறல்களை தடுத்து நிறுத்தி காயல்பட்டின பொதுமக்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் இந்த கோர சம்பவத்தால் கொந்தளித்துப் போயுள்ள நமதூர் மக்களின் நியாயமான உணர்வுகளை பிரதிபலிப்பதற்காகவும் இன்ஷா அல்லாஹ் (05/09/2011) திங்கள் கிழமை 4.30 மணியளவில் நமதூர் தபால் நிலையம் முன் காவல்துறையினரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஆயிஷா சித்திக்கா மகளிர் அரபிக் கல்லூரி நிர்வாகத்தினரின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டள்ளது.

எனவே இந்திய அரசியல் சாசனம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகள் நிலைநாட்டப்பட தாங்கள் உறுப்பினர்கள், ஜமாத்தார்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அவசியம் கலந்து கொண்டு தங்களின் நியாயமான உணர்வுகளை பிரதிபலிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

தஃவா சென்டர் நிர்வாகிகள்
(சமூக நல்லிணக்க மையம்)
காயல்பட்டினம்.

இஸ்ரேல் தூதர், அதிகாரிகள் வெளியேற்றம், ஒப்பந்தங்கள் ரத்து : துருக்கி அதிரடி

அங்காரா : காஸா முற்றுகையைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் காஸாவுக்கு நிவாரண பொருட்களை எடுத்துச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய மிருகத்தனமான தாக்குதலில் 9 துருக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அதை பற்றி ஐ.நா குழு விசாரணை நடத்தியது. இன்று வெளியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் இஸ்ரேல் அதீத பலத்தைத் தேவையற்ற வகையில் பயன்படுத்தியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ,நாவின் அறிக்கையைத் தொடர்ந்து துருக்கி இஸ்ரேலின் தூதர், முக்கிய இஸ்ரேல் அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதோடு ராணுவ ஒப்பந்தங்களை சஸ்பெண்ட் செய்துள்ளது. இஸ்ரேல் முறைப்படி மன்னிப்பு கேட்காததாலும் இறந்தவர்களுக்கு இழப்பீடு தராததாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துருக்கி வெளியுறவு துறை அமைச்சர் அஹ்மத் தவுடோக்லு கூறினார்.

"இரண்டாம் செயலாளர் அந்தஸ்துக்கு மேலுள்ள அனைத்து இஸ்ரேல் அதிகாரிகளும் புதன்கிழமைக்குள் துருக்கியை விட்டு வெளியேற்றப்படுவார்கள்" என்றும் கூறினார். காஸா பகுதிக்குள் யாரும் செல்ல முடியாமல் மூடியுள்ள இஸ்ரேலின் செயலைச் சரியானது என கூறியுள்ள ஐ,நாவின் கூற்றைத் தாம் ஏற்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். "அதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையில் இப்பிரச்னை எழுப்பப்படும்" என்றும் கூறினார்.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

உண்ணாவிரதம் நடத்தும் போலிகளும், நிஜங்களும்!

SEP 04, இம்பால்: அன்னா ஹசாரே உண்ணாவிரதம் செயற்கையான போராட்டம் என்று மணிப்பூர் மக்களுக்காக ராணுவத்துடன் போராடி வரும் மணிப்பூர் இரும்புப் பெண்மணி இரோம் சர்மிளா விமர்சித்துள்ளார்.

அவரை அணுகி அன்னா ஹசாரே போராட்டம் பற்றி கேட்டபோது, அவர் போராட்டம் செயற்கை தனமானது. அவர் மணிப்பூரில் உள்ள மக்களின் அவலநிலை குறித்து வெளி மாநிலங்களில் பலருக்கும் தெரியவில்லை. அவர் இங்கு வந்து எங்களுடன் போராடினால் வரவேற்பேன். பாதுகாப்புப் படையினர் நடத்தும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சிந்திக்கவும்: ஹிந்துத்துவாவால் தூண்டிவிடப்பட்ட அன்னா ஹசாரே உடைய ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு பெரும் ஆதரவு இருந்தது போல் பார்ப்பன நாளேடுகளால் சித்தரிக்கப்பட்டது. இவரின் போலி 13 நாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அரசு பணிந்து, நாடாளுமன்றத்தில் விசேஷ தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவரின் ஜன் லோக்பால் பரிசீலனைக்கு ஏற்கப்பட்டது.

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை பெரிய அளவில் வெளிச்சம் போட்டு காட்டிய பார்ப்பன ஊடகங்கள் மணிப்பூரில் ஒரு பெண் அந்த மாநில மக்களுக்காக கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் வெறும் திரவ உணவுடன் பட்டினிப் போராட்டம் நடத்தி வருவது பற்றி இதுவரை கண்டுகொண்டதே இல்லை. இப்படி ஒரு போராட்டம் நடப்பதாக கூட மக்களுக்கு தெரியாது.

2000ஆம் ஆண்டில் இம்பால் (மணிப்பூர்) விமான நிலையம் அருகில் உள்ள மாலோம் என்ற கிராமத்தில் இந்திய  ராணுவத்தை சேர்ந்த பயங்கரவாத படையணி ஒன்று பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கிராமத்தினர் மீது கண்மூடித்தனமாக சுட்டதில்10 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண். அதற்குப் பிறகு மூன்று நாட்கள் கழித்து இதைக் கண்டித்து, இரோம் சர்மிளா தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் பட்டினிப் போராட்டத்தை தொடங்கினார்.

ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, அவர் நடத்தும் பட்டினிப் போராட்டம் 11 ஆண்டுகளை கடந்து விட்டன. இந்த சட்டத்தை பயன்படுத்தி, இந்திய ராணுவம், சாதாரண மக்களை கைது செய்யலாம், பிரிவினைவாதி என்று சொல்லி தண்டனை வாங்கி தரலாம். இதுபோலவே, பெண்களை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்வது செய்வது, பின்னர் அவர்களை கொலை செய்வது போன்ற மனித உரிமைக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த பெருமைக்கூரிய இந்த ராணுவம்தான் அமைதிப்படையாக சென்று ஈழத்து தமிழ் பெண்களை கற்பழித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொடூர ஆள்தூக்கி சட்டத்தை நீக்க கோரி இரோம் சர்மிளா, தொடர்ந்து போராடி வருகிறார். இதற்காக இவர் தொடங்கிய உண்ணா விரதம் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் ஆகியும் முடிவுக்கு வரவில்லை. இவரை வீட்டுக்காவலில் வைத்து இவருக்கு வலுக்கட்டாயமாக மூக்கின் மூலம் திரவ உணவுகளை காவல்துறையினர் செலுத்தி வருகின்றனர். இவரின் நியாயமான ஒரு கோரிக்கையை நிறைவேற்ற எந்த மத்திய அரசும் தயாராக இல்லை. அதே நேரம் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு அடிபணிந்தது.

அதுபோல் ஹரித்வாரில் நிகமானந்தா என்ற ஒரு 38 வயதான ஹிந்துமத சாமியார், ஹிந்துக்களின் புனித நதியான கங்கை நதியின் தூய்மைக்காக 68 நாள் உண்ணாவிரதம் இருந்து சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். ஆனால் இதை பற்றி எந்த பார்பன பத்திரிக்கைகளும் வாய்திறக்கவில்லை. இப்படி ஒரு ஹிந்துச்சாமியார் உண்ணாவிரதம் இருந்து இறந்துபோனார் என்று எத்தனை ஹிந்து மக்களுக்கு தெரியும்.

அதுபோல் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து பாரதிய ஜனதா, ஹிந்து முன்னணி, விஸ்வஹிந்து பரிசத், பஜ்ராங்க்தல், அகிலபாரதிய வித்யாதி பரிசத், பாரத மஸ்தூர் சங், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர சுவாமி, பாபா ராம் தேவ், ஹிந்து முன்னணி ராமகோபாலன், அத்வானி, வாஜ் பேய், முரளிமனோகர் ஜோசி, இப்படி ஹிந்துத்துவா சங்கபரிவார பயங்கரவாதிகளும், அவர்களின் பார்ப்பன அபிமாநிகளுமான துக்களக் சோ, தினமலர், தினமணி, இந்தியா டுடே,  இந்தியன் எக்ஸ்பிராஸ் போன்ற பத்திரிக்கைகள் கங்கை புனித நதிக்காக போராடிய ஹிந்து சாமியாரை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை, ஏன் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வில்லை.