போபால் விஷ வாயு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போபால் விஷ வாயு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

போபால் விஷ வாயு சம்பவம் -பாதிக்கப்பட்டோருக்காக கூடுதலாக ரூ.72 கோடி நிதி

டெல்லி,செப்.28:போபால் விஷ வாயு சம்பவத்தில் பலியானோரின் குடும்பங்களுக்கு கூடுதலாக ரூ.72 கோடி இழப்பீட்டை வழங்க, போபால் சம்பவம் தொடர்பான அமைச்சர்கள் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பான அமைச்சர்கள் குழு நேற்று கூடி கூடுதல் இழப்பீடு குறித்து பரிசீலித்தது. இக்கூட்டத்தில் போபால் விஷ வாயு சம்பவ இழப்பீடு வழங்கும் பணிகள் குறித்தும், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும் போபால் விஷ வாயு சம்பவத்திற்குப் பிந்தைய நிலை குறித்தும் ஆராயப்பட்டது.

வாரன் ஆன்டர்சனை நாடு கடத்திக் கொண்டு வரும் பிரச்சினை குறித்தும் ஆராயப்பட்டது.

முன்னதாக, போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பான தீர்ப்பு வெளியானதும் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டது. வாரன் ஆன்டர்சன் மீது ஒரு சுண்டு விரல் கூட படாமல் வழக்கை முடித்த கொடுமையை நாட்டு மக்கள் பெரும் அதிருப்தியுடன் எதிர்நோக்கினர்.

இதையடுத்து அவசரம் அவசரமாக மத்திய அரசு ப.சிதம்பரம் தலைமையில் ஒரு அமைச்சர்கள் குழுவை நியமித்தது. இந்தக் குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கு 22 பரிந்துரைகளை அளித்தது. அதில் முக்கியமானதாக ஆன்டர்சனை நாடு கடத்திக் கொண்டு வர முயற்சிக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், இழப்பீடு மற்றும் மறு வாழ்வு நடவடிக்கைகளுக்காக ரூ.1265.56 கோடியை விடுவிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில் நேற்று நடந்த கூட்டத்தில் கூடுதலாக ரூ.72 கோடியை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் வீரப்பமொய்லி, குலாம் நபி ஆசாத், ஜெயபால் ரெட்டி, கமல்நாத், குமாரி செல்ஜா, மு.க.அழகிரி, ஜெயராம் ரமேஷ், பிருத்விராஜ் சவான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


thatstamil

திங்கள், 7 ஜூன், 2010

போபால் விஷ வாயு வழக்கில்தீர்ப்பு - 8 பேர் குற்றவாளி

Keshub Mahindra
போபால்: 26 வருடமாக நடந்து கொண்டிருந்த போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவர் கேசப் மகிந்திரா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகள் என போபால் முதன்மை நீதித்துறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1984ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்திலிருந்து வெளியேறிய மீத்தைல் ஐசோசயனேட் விஷ வாயு தாக்கி 15,000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுதொடர்பான வழக்கு போபால் கோர்ட்டில் கடந்த 26 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்தது. பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமும் கிடைக்காமல் பெரும் அவலமாக இருந்துவந்தது.

இந்த நிலையில் இந்தவழக்கில் இன்று நீதிபதி மோகன் திவாரி தீர்ப்பளித்தார். 85 வயதாகும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான மகிந்திரா மற்றும் 7 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தனதுதீர்ப்பில் தெரிவித்தார்.

அலட்சியப் போக்கால் மரணம் விளைவித்தல், கொலை அல்லாத மரணத்திற்குக் காரணமாக அமைந்தது, ஒட்டுமொத்த கவனக்குறைவு ஆகிய பிரிவுகளின் கீழ் 8 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டோர்

குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள கேசப் மகிந்திரா, மகிந்திரா அன்ட் மகிந்திரா நிறுவனத்தின் தலைவராக தற்போது இருக்கிறார்.

மகிந்திரா தவிர குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மற்ற 7 பேர் விவரம்...

1. விஜய் கோகலே, யூனியன் கார்பைடு நிறுவன நிர்வாக இயக்குநர்.

2. கிஷோர் காம்தார், யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் துணைத் தலைவர்.

3. ஜே.முகுந்த், முன்னாள் ஒர்க்ஸ் மேனேஜர், யூனியன் கார்பைடு.

4. ராய் செளத்ரி, உதவி ஒர்க்ஸ் மேனேஜர், யூனியன் கார்பைடு (ஏற்கனவே இறந்து விட்டார்).

5. எஸ்.பி.செளத்ரி, முன்னாள் உற்பத்தி மேனேஜர், யூனியன் கார்பைடு.

6. கே.வி.ஷெட்டி, முன்னாள் உற்பத்திக் கலன் கண்காணிப்பாளர், யூனியன் கார்பைடு.

7. ஷகீல் குரேஷி, முன்னாள் உற்பத்தி உதவியாளர், யூனியன் கார்பைடு.

ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் இல்லை!

எட்டு பேர் குற்றவாளிகள் என நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் யூனியன் கார்பைடு நிறுவன முன்னாள் தலைவரான அமெரிக்கரான வாரன் ஆண்டர்சன் குறித்து ஒரு வார்த்தையும் குறிப்பிடப்படவில்லை.

போபால் விஷ வாயு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டார் ஆண்டர்சன். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் தப்பி தலைமறைவாகி விட்டார். தலைமறைவுக் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.

23 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வழக்கில் இதுவரை ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு வரவில்லை.

இதில் கொடுமை என்னவென்றால், தற்போது குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள எட்டு பேருக்கும் அதிகபட்சம் 2 ஆண்டு தண்டனைதான் கிடைக்கும் என்பதே.