செவ்வாய், 10 ஜூன், 2014

மோடி ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்துவரும் என எச்சரிக்கிறார் நடிகை நந்திதா தாஸ்...!!



நரேந்திரமோடி ஆட்சியின் கீழ் கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அஞ்சுவதாக பிரபல நடிகையும் இயக்குநரும் எழுத்தாளருமான நந்திதா தாஸ் கூறினார். தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் தான் இதை கூறுவதாகவும் நந்திதா தாஸ்“அவுட் லுக்’’ பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். “நான் உடனே எதிர்பார்ப்பதும் மிகவும் பயப்படுவதும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் தான். மக்களின் மனதைமாற்றவும் அரசுகளை மாற்றவும் முடிகின்ற வகையில் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கவும் ஜனநாயக ரீதியிலும் கண்ணியத்துடனும் குரல் எழுப்பவும் வாய்ப்புஇருப்பதால் தான் ஜனநாயகம் நிலைபெற்றுள்ளது.

அருவெறுக்க தக்க தணிக்கைமூலமும் விஷமத் தனமான நடவடிக்கைகளின் மூலமும் விமர்சகர்களின் வாயை அடைக்கவே பாஜகவும் அவர்களை ஆதரிக்கின்றவர்களும் எப்போது முயன்று வந்துள்ளனர்’’. என்றும் நந்திதா தாஸ் சுட்டிக் காட்டுகிறார்.ஃபயர் திரைப்பட வெளியீட்டு விழாவின் போதும் வாட்டர் திரைப்பட படப்பிடிப்பின் போதும் இத்தகைய பிரச்சனைகளை நானே சந்திக்க வேண்டியதாயிற்று என்று அவர் தனது கட்டுரையில் நினைவு கூர்கிறார்.மதச்சார்பற்ற கட்சிகளை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தான் தெரிவித்த கருத்துகூட மோடி ஆதரவாளர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. “குழந்தையை தூக்கிக் கொண்டு பாகிஸ்தானுக்கு செல்’’ என்று அவர்கள் டுவிட்டர் மூலம் தன்னை மிரட்டினார்கள் என்றும் நத்திதா தாஸ் கூறுகிறார்.குஜராத் கலவரத்தை அடிப்படையாக வைத்து தான் தயாரித்த ஃபிராக் என்ற திரைப்பட விஷயத்திலும் இத்தகைய மிரட்டல்கள் வந்தன.

“ ஒரு கலைஞர் என்ற முறையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்கப்படலாம் அச்சுறுத்தப்படலாம், என்ற நிலைமை தான் இப்போது எனக்கு உள்ளது என்றுதோன்றுகிறது. ஊடகங்கள் தங்களுக்கு தாங்களே தணிக்கையை ஆரம்பித்து விட்டதாகவும் தோன்றுகிறது. பிரச்சனை எதுவும் வந்துவிட க் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

இது என்ன நேரப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும். கூடாது என்று சொல்கின்றவர்கள் குறைந்து வருகிறார்கள்’’. என்றும் நந்திதா தாஸ் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.குஜராத் மாடல் வளர்ச்சி குறித்த பிரச்சாரத்தின் போலித்தனத்தையும் நந்திதா தாஸ் சுட்டிக் காட்டுகிறார். சாதாரண பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலின் படி கூட மகாராஷ்டிராவும், பீகாரும், தமிழ்நாடும், குஜராத்தை மிஞ்சி நிற்கின்றன. வெற்றியின் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல “வளர்ச்சி’’ முழக்கத்தின் பின்னணியில் பிளவுவாத அரசியல் மறைந்திருப்பதை வெளிப்படுத்துவதாக இருந்தது பாஜக வின் தேர்தல் பிரச்சாரம்.அமித்ஷா, பிரவீன் தொகாடியா போன்றவர்களின் பேச்சுக்களும் தேர்தல் பிரச்சாரத்தின் போது மற்ற எல்லா தலைப்பாகைகளையும் அணிந்து கொண்ட மோடி, முஸ்லிம் தொப்பியை அணிய மறுத்ததும் இதைத் தெளிவாக்குகிறது என்றும் நந்திதா தாஸ் கூறுகிறார்.


நன்றி :Theekkathir Tamil Daily

கருத்துகள் இல்லை: